உங்கள் மணவாழ்க்கைக்கு பைபிள் கைகொடுக்கும்
மணவாழ்க்கை—இந்த வார்த்தையைக் கேட்டவுடன் சிலருக்கு இனிய நினைவுகள் மனதில் சிறகடித்துப் பறக்கும். வேறு சிலருக்கோ இதயம் சுக்குநூறாக நொறுங்கிய நினைவுகளே மனதில் வந்து மோதும். “உணர்ச்சி ரீதியில் நான் விவாகரத்து செய்யப்பட்டதைப் போல் இருக்கிறேன். ஒதுக்கப்பட்டதைப் போல், எப்பொழுதும் தனிமையில் வாடுவது போல் உணருகிறேன்” என புலம்புகிறாள் ஒரு மனைவி.
பூமியில் வாழும் காலமெல்லாம் நேசித்தும் அருமையானவராக ஆதரித்தும் வருவேன் என ஒருகாலத்தில் உறுதிமொழி எடுத்த இருவருக்கு இடையே பாசமும் நேசமும் மறைந்துபோவது ஏன்? திருமணத்தில் எவையெல்லாம் உட்பட்டுள்ளன என்பதைப் பற்றிய போதனைகள் இல்லாதிருப்பது ஒரு காரணமாகும். “எந்தப் பயிற்சியுமில்லாமல் திருமணத்திற்குள் காலடி எடுத்து வைக்கிறோம்” என கூறுகிறார் மருத்துவ இதழாசிரியர் ஒருவர்.
இத்தகைய போதனைகள் அநேகருக்கு இல்லை என்பதை த நேஷனல் மேரேஜ் புராஜக்ட் நடத்திய ஆய்வு நிரூபிக்கிறது; இது அ.ஐ.மா., நியு ஜெர்ஸியிலுள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஓர் ஆய்வு திட்டமாகும். “இந்த ஆய்வு செய்யப்பட்டவர்களில் அநேகர் சந்தோஷமில்லா மணவாழ்க்கை வாழ்ந்த பெற்றோர்களுடன் அல்லது விவாகரத்தான பெற்றோர்களுடன் வளர்ந்து வந்திருக்கிறார்கள்” என அந்தப் புராஜக்ட் இயக்குநர்கள் எழுதுகின்றனர். “மகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை என்றால் எப்படியிருக்கும் என்பதை அவர்கள் துல்லியமாக அறிந்திருக்கிறார்கள், ஆனால் மகிழ்ச்சியான மணவாழ்க்கை என்றால் எப்படியிருக்கும் என்பதைப் பற்றி நிச்சயமில்லாமல் இருக்கிறார்கள். ‘என் பெற்றோருடைய மணவாழ்க்கைக்கு எதிரிடையானதே’ மகிழ்ச்சியான மணவாழ்க்கை என்று மட்டுமே சிலரால் வர்ணிக்க முடியும்.”
தாம்பத்திய பிரச்சினைகளுக்கு கிறிஸ்தவர்கள் விதிவிலக்கானவர்களா? இல்லை. சொல்லப்போனால், மணவாழ்க்கை எனும் கட்டிலிருந்து “அவிழ்க்கப்பட வகை தேடாதே” என முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் சிலருக்கு நேரடியாக அறிவுரை கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. (1 கொரிந்தியர் 7:27) அபூரண மனிதர் இருவர் இணைந்த இல்லற வாழ்வில் சண்டை சச்சரவுகள் எழத்தான் செய்யும். ஆனால் நமக்கு உதவி இருக்கிறது. கணவன்மாரும் மனைவிமாரும் பைபிள் நியமங்களைப் பொருத்திப் பயன்படுத்துவதன் மூலம் தங்களுடைய உறவை பலப்படுத்த முடியும்.
உண்மைதான், பைபிள் என்பது மணவாழ்க்கை பற்றிய கையேடு அல்ல. இருந்தாலும், திருமண ஏற்பாட்டை ஏற்படுத்தி வைத்தவரால் ஏவப்பட்டு எழுதப்பட்டதால், அதிலுள்ள நியமங்கள் பயனுள்ளவையாக இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம். ஏசாயா தீர்க்கதரிசியின் வாயிலாக யெகோவா தேவன் இவ்வாறு குறிப்பிட்டார்: “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் [யெகோவா] நானே. ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப் போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப் போலும் இருக்கும்.”—ஏசாயா 48:17, 18.
உங்களுக்கும் உங்களுடைய துணைவருக்கும் இடையே ஒருகாலத்தில் பொங்கிய அன்பு தணிய ஆரம்பித்துவிட்டதா? அன்பற்ற திருமணத்தில் சிக்கித் தவிப்பதாக நீங்கள் உணருகிறீர்களா? மணமாகி 26 வருடங்களான ஒரு மனைவி இவ்வாறு கூறுகிறாள்: “இத்தகைய உறவினால் வரும் வேதனையை விவரிக்கவே முடியாது. அது எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும், போகவே போகாது.” உங்கள் கனவுகளை நனவாக்காத மணவாழ்வை வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அதில் எழும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நீங்கள் ஏன் உறுதிபூண்டிருக்கக் கூடாது? ஒரு குறிப்பிட்ட அம்சத்தில், அதாவது திருமண கட்டு அல்லது ஒப்பந்தம் எனும் விஷயத்தில், பைபிள் நியமங்கள் எவ்வாறு உதவும் என்பதை கணவன்மாருக்கும் மனைவிமாருக்கும் பின்வரும் கட்டுரை காண்பிக்கும்.