கடவுளைப் பிரியப்படுத்த மனிதரின் தீராத தாகம்
“அண்டத்தைக் கட்டுப்படுத்தும் சக்தியாக அல்லது படைப்பாளராக கடவுள் மீது நம்பிக்கை வைக்காத மனித சமுதாயமே கிடையாது. மதச் சார்பற்று பிரிந்திருக்கும் சமுதாயங்களிலும் இதுவே உண்மை.” கடவுள்—சுருக்கமான ஒரு வரலாறு என்ற ஆங்கில நூலில் இப்படித்தான் ஜான் புக்கர் கூறுகிறார். ஏதோவொரு விதத்தில், கடவுளைத் தேடவும் அவருடைய அனுக்கிரகத்தை அடையவும் வேண்டுமென்ற தீராத தாகம் மனித நடத்தை எனும் ஆடையில் ஓர் நூலிழை போல் இழைந்தோடியே வந்திருக்கிறது. உலகெங்கிலும் வாழும் அநேகருடைய இதயத்தில், கடவுளைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற உள்ளார்ந்த ஆசைத் தீ கனன்று கொண்டிருக்கிறது. ஆனால், இதைச் செய்ய முயலும் வழிகள் அவர்களுடைய நம்பிக்கைகளுக்கு ஏற்ப வேறுபட்டிருக்கலாம்.
நெறிமுறை வழுவாத சுத்தமான வாழ்க்கை—கடவுளின் அனுக்கிரகத்தைப் பெற அவசியமானதெல்லாம் இதுவேதான் என சிலர் நம்புகின்றனர். ஏழைகளுக்குத் தானதர்மம் செய்தாலே கடவுளின் அங்கீகாரத்தைப் பெற்றுவிடலாம் என வேறு சிலர் கருதுகின்றனர். அதோடு, சமயச் சடங்குகளுக்கும் ஆசாரங்களுக்கும் லட்சோபலட்சம் மக்கள் முக்கியத்துவம் தருகின்றனர்.
மறுபட்சத்தில், கடவுள் என்பவர் அணுக முடியாதவர், அதாவது சாதாரண ஜனங்களுடைய வேண்டுகோளுக்கு கவனம் செலுத்தாத அளவுக்கு மிகவும் ஒதுங்கியிருப்பவர் அல்லது பிற வேலைகளில் மூழ்கியிருப்பவர் என்று நம்புகிறவர்களும் இருக்கின்றனர். ‘மனிதருடைய விஷயங்களில் தலையிட முடியாத அளவுக்கு கடவுட்கள் ஒட்டுதலில்லாதவர்கள்’ என பூர்வ கிரேக்க நாட்டைச் சேர்ந்த எப்பிகியுரஸ் என்ற தத்துவஞானி சொன்னதாக நம்பப்படுகிறது. இருந்தபோதிலும், இப்படிப்பட்ட கருத்துக்களை உடையோர் அநேகர் மதப் பற்றுடையோரே ஆவர். இறந்த மூதாதையரை சாந்தப்படுத்தும் நம்பிக்கையில் சிலர் பலிகள் செலுத்தி சடங்குகள்கூட செய்கின்றனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கடவுளுடைய அனுக்கிரகத்தைப் பெற நாம் எடுக்கும் முயற்சிகளை அவர் உண்மையிலேயே கவனிக்கிறாரா? கடவுளுடைய இதயத்தைத் தொடவும் அவரைப் பிரியப்படுத்தவும் நம்மால் முடியுமா?
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
அட்டைப்படம்: Courtesy of ROE/Anglo-Australian Observatory, photograph by David Malin