யெகோவாவுடைய படைப்பின் மகத்துவம்
‘யெகோவாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது!’
நாம் பட்டிக்காட்டில் வாழ்ந்தாலும் சரி, பட்டணத்தில் வாழ்ந்தாலும் சரி, மலை பிரதேசத்தில் வாழ்ந்தாலும் சரி, கடலருகே வாழ்ந்தாலும் சரி, நம்மைச் சுற்றியுள்ள படைப்பின் ஜாலங்கள் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. பொருத்தமாகவே, 2004 யெகோவாவின் சாட்சிகளுடைய காலண்டர் யெகோவா தேவனின் மலைக்க வைக்கும் கைவண்ணத்தைச் சிறப்பித்துக் காட்டுகிறது.
போற்றுதலுள்ள மனிதர்கள் கடவுளுடைய கிரியைகளில் எப்போதும் அக்கறை காட்டியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு, சாலொமோனை எடுத்துக்கொள்ளுங்கள். ‘சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தைப் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது.’ அவரைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “லீபனோனில் இருக்கிற கேதுரு மரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டு வரைக்குமுள்ள மர முதலிய தாபரங்களைக் குறித்தும், மிருகங்கள் பறவைகள் ஊரும் பிராணிகள் மச்சங்கள் ஆகிய இவைகளைக் குறித்தும் வாக்கியங்களைச் சொன்னான்.” (1 இராஜாக்கள் 4:30, 33) சாலொமோனின் தகப்பன் தாவீது ராஜாவும், கடவுளுடைய கைதேர்ந்த வேலைப்பாடுகளைப் பற்றி அடிக்கடி தியானித்தார். எனவே, தன்னை உண்டுபண்ணினவரை நோக்கி அவர் இவ்வாறு வியந்துரைத்தார்: ‘[யெகோவாவே], உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.’—சங்கீதம் 104:24.a
நாமும்கூட படைப்பைக் கூர்ந்து கவனித்து அதைப் பற்றி தியானிக்க வேண்டும். உதாரணத்திற்கு, நம் ‘கண்களை ஏறெடுத்துப் பார்த்து’ நம்மை நாமே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: “அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்?” ஆம், ‘மகா பெலமும்’ ‘மகா வல்லமையும்’ படைத்த யெகோவா தேவனே அவற்றைச் சிருஷ்டித்தார்.—ஏசாயா 40:26.
கடவுளுடைய படைப்புகளைப் பற்றி தியானிப்பது நம்மை என்ன செய்ய வைக்கும்? குறைந்தபட்சம் மூன்று காரியங்களைச் செய்ய வைக்கும். (1) நம் வாழ்க்கையை நெஞ்சார நேசிக்க நமக்கு நினைப்பூட்டும், (2) படைப்பிலிருந்து கற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவ நம்மைத் தூண்டும், (3) நம் படைப்பாளரை இன்னும் முழுமையாக தெரிந்துகொள்ளவும் போற்றவும் நம்மை உந்துவிக்கும்.
‘புத்தியற்ற மிருக ஜீவன்களைவிட’ பன்மடங்கு உயர்ந்த மனிதர்களாகிய நம்மால் படைப்பின் அதிசயத்தைக் கூர்ந்து கவனிக்க முடிகிறது, அதைப் பொக்கிஷமாக போற்றவும் முடிகிறது. (2 பேதுரு 2:12) நம் கண்களால் எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகளைப் பார்க்க முடிகிறது. காதுகளால் பறவைகளின் இன்னிசைப் பாடல்களைக் கேட்க முடிகிறது. அதுமட்டுமல்ல, நேரத்தைக் குறித்தும் இடத்தைக் குறித்தும் நமக்குள்ள உணர்வுகள் நம்முடைய மனதில் ஆழமாகப் பதிந்து, பிற்காலத்தில் இனிய நினைவுகளாக மலருகின்றன. தற்போது நாம் அபூரணர்களாக இருந்தாலும், நாம் வாழும் வாழ்க்கை நிச்சயம் வாழத் தகுந்ததே!
பிள்ளைகள் இயல்பாகவே படைப்பை ரசிப்பதைப் பார்த்து பெற்றோர்கள் ரசிக்கிறார்கள். கடற்கரையில் சிப்பிகளைக் கண்டெடுக்க, செல்லப்பிராணியை வளர்க்க, மரத்தில் ஏற, அப்பப்பா . . . பிள்ளைகளுக்குத்தான் எவ்வளவு ஆசை! படைப்பிற்கும் படைப்பாளருக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்ள பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உதவ வேண்டும். யெகோவாவின் படைப்பைக் குறித்து பிள்ளைகளுக்கு ஏற்படுகிற பிரமிப்பும் பயபக்தியும் வாழ்நாள் முழுக்க அவர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுவிடும்.—சங்கீதம் 111:2, 10.
ஆனால் படைப்புகளை மட்டும் நன்றாக ரசித்துவிட்டு, அதைப் படைத்தவருக்குப் போற்றுதல் காண்பிக்காவிட்டால் நாம் குறுகிய கண்ணோட்டமுள்ளவர்களாய் ஆகிவிடுவோம். இந்தக் குறிப்பை ஆழ்ந்து யோசிக்கும்படியே ஏசாயாவின் தீர்க்கதரிசனம் நமக்கு உதவுகிறது. அது இவ்வாறு வாசிக்கிறது: “பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்து போவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது.”—ஏசாயா 40:28.
ஆம், யெகோவாவுடைய ஒப்பற்ற ஞானத்திற்கும், நிகரற்ற வல்லமைக்கும், ஆழமான அன்பிற்கும் அவருடைய படைப்புகள் சாட்சி பகருகின்றன. நம்மைச் சூழ்ந்திருக்கும் அழகு மிளிரும் படைப்புகளைப் பார்த்து, அவை அனைத்தையும் உண்டாக்கினவரின் குணங்களை நாம் புரிந்துகொள்கிறோம்; அவ்வாறு புரிந்துகொள்ளும்போது, “ஆண்டவரே, . . . உமக்கு நிகருமில்லை; உம்முடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை” என்று தாவீது சொன்னது போலவே நாமும் சொல்லத் தூண்டப்படுகிறோம்.—சங்கீதம் 86:8.
கீழ்ப்படிதலுள்ள மனிதர்களை யெகோவாவின் படைப்புகள் தொடர்ந்து கவர்ந்திழுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நித்தியத்திற்கும் யெகோவாவைப் பற்றி அதிகமதிகமாய் கற்றுக்கொள்ள ஏராளமான வாய்ப்புகள் நமக்கு இருக்கும். (பிரசங்கி 3:11) படைப்பாளரைப் பற்றி எந்தளவு அதிகம் கற்றுக்கொள்கிறோமோ அந்தளவு அதிகம் அவர் மீது நமக்குள்ள அன்பு பெருகும்.
[அடிக்குறிப்பு]
a 2004 யெகோவாவின் சாட்சிகளுடைய காலண்டரில் நவம்பர்/டிசம்பர் மாதத்தைப் பார்க்கவும்.
[பக்கம் 9-ன் பெட்டி]
படைப்பாளருக்குப் புகழ்மாலை
போற்றுதலுள்ள அநேக விஞ்ஞானிகள் படைப்புகளில் கடவுளுடைய கைவண்ணம் இருப்பதை ஒத்துக்கொள்கிறார்கள். இதோ சில உதாரணங்கள்:
“என்னுடைய வேதியியல் துறையில் புதிதாக ஏதோவொன்றை கண்டுபிடிக்கும் அரிய தருணங்களில்தான் அர்த்தமும் சந்தோஷமும் எனக்குக் கிடைக்கிறது. ‘ஓஹோ, இப்படித்தான் கடவுள் செய்திருக்கிறாரா’ என்று அப்போது எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். கடவுளுடைய திட்டத்தில் ஒரு துளியையாவது புரிந்துகொள்ள வேண்டும் என்பதே என் இலட்சியம்.”—ஹென்றி ஷேஃபர், வேதியியல் பேராசிரியர்.
“இந்தப் பிரபஞ்சம் விரிவாகிக்கொண்டே போவதற்குக் காரணம் என்ன என்பதற்கான பதில் வாசகர்களிடமே விடப்படுகிறது; ஆனால், எங்களைப் பொறுத்தவரை அவரில்லாமல் [கடவுளில்லாமல்] அதற்கான பதில் நிறைவுறாது.”—எட்வர்ட் மில்ன், பிரிட்டன் நாட்டு பிரபஞ்சவியல் வல்லுநர்.
“மிகச் சிறந்த கணித வல்லுநர் ஒருவரால்தான் இயற்கை ஒழுங்கமைக்கப்பட்டிருக்க வேண்டும், அந்த வல்லுநர், கடவுளைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.”—அலெக்ஸாண்டர் பாலியாகாவ், ரஷ்ய நாட்டு கணிதவியல் நிபுணர்.
“இயற்கையைப் பற்றி நாம் ஆராய்கையில், படைப்பாளருடைய எண்ணங்களை நாம் அதிகமதிகமாக தெரிந்துகொள்கிறோம்; அவருடைய கருத்துகளைப் புரிந்துகொள்கிறோம்; அதுமட்டுமல்ல, நமக்குச் சொந்தமான ஓர் ஏற்பாட்டைப் பற்றி அல்ல, அவருக்குச் சொந்தமான ஓர் ஏற்பாட்டைப் பற்றியே ஆராய முயலுகிறோம்.”—லூயிஸ் அகாஸிஷ், அமெரிக்க உயிரியலாளர்.
[பக்கம் 8, 9-ன் படம்]
ஜென்டூ பென்குயின்கள், அண்டார்க்டிக் தீபகற்பம்
[பக்கம் 9-ன் படம்]
கிராண்ட் டிட்டான் தேசிய பூங்கா, வயோமிங், அ.ஐ.மா.
[படத்திற்கான நன்றி]
Jack Hoehn/Index Stock Photography