“சோதனைகளின் மத்தியிலும் உண்மையாயிருத்தல்”
ஏப்ரல் 1951-ன் ஆரம்பத்தில், பலம்படைத்த சோவியத் அரசாங்கம் மேற்கு சோவியத் யூனியனில் இருந்த பழிபாவமற்ற ஒரு கிறிஸ்தவப் பிரிவினர் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. அவர்கள் யெகோவாவின் சாட்சிகள். குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் சரக்கு வண்டியில் அடைக்கப்பட்டு சைபீரியாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்; உண்டு இல்லை என்று ஆக்கிவிடும் 20 நாள் ரயில் பயணம் அது. எவ்வித வசதிகளும் இல்லாத கொடூரமான சூழலில் நிரந்தரமாக வாழ வைக்க அவர்கள் நாடுகடத்தப்பட்டனர்.
இந்த சரித்திர நிகழ்ச்சியின் 50-ம் ஆண்டை நினைவுகூரும் வகையில், ஏப்ரல் 2001-ஆம் ஆண்டு மாஸ்கோவில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது; முன்னாள் சோவியத் யூனியனில் பல பத்தாண்டுகளாக யெகோவாவின் சாட்சிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை இந்த வீடியோ படம்பிடித்துக் காட்டுகிறது. கடுமையான அழுத்தத்தின் கீழும் யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு உறுதியாக நிலைத்திருந்து, தழைத்தோங்கினார்கள் என்பதை வரலாற்று ஆசிரியர்களும் கண்கண்ட சாட்சிகளும் இந்த டாக்குமெண்டரியில் விவரிக்கிறார்கள்.
சோதனைகளின் மத்தியிலும் உண்மையாயிருத்தல்—சோவியத் யூனியனில் யெகோவாவின் சாட்சிகள் என்ற டாக்குமெண்டரியை ரஷ்யாவிலும் மற்ற இடங்களிலும் உள்ள லட்சக்கணக்கானோர் பார்த்திருக்கிறார்கள். பொது மக்களிடமிருந்தும் சரித்திர ஆசிரியர்களிடமிருந்தும் பெரும் பாராட்டை இது பெற்றிருக்கிறது. பெரும்பாலான சாட்சி குடும்பங்கள் நாடுகடத்தப்பட்ட இடத்தில் இப்போது வசித்துவரும் இரண்டு ரஷ்ய அறிஞர்கள் இவ்வாறு சொல்கிறார்கள்:
“இந்தப் படத்தை நான் வெகுவாக ரசித்தேன். உங்களுடைய மதப் பிரதிநிதிகளை எனக்கு எப்பவுமே ரொம்ப பிடிக்கும். அந்தப் படத்தை பார்த்த பிறகு உங்கள் மீதுள்ள மதிப்பு கூடிவிட்டது. அது மிகவும் உயர்தரமான படம்! ஒவ்வொருவரையும் ஒரு தனிப்பட்ட நபராக நீங்கள் காட்டிய விதம் எனக்கு பிடித்திருந்தது. ஒரு ஆர்த்தடாக்ஸாக, என்னுடைய மதத்தை மாற்றிக்கொள்ளும் எண்ணம் இல்லாத போதிலும், சாட்சிகளைக் குறித்து நான் அதிக சந்தோஷப்படுகிறேன். எங்களுடைய ஆசிரியர் குழுவுக்காக இப்படத்தின் ஒரு காஸட்டை வைத்துக்கொள்ள விரும்புகிறேன். இதை மாணவர்களுக்குக் காண்பிக்கவும் அவர்களுடைய பாடத் திட்டத்தில் சேர்க்கவும் நானும் மற்ற ஆசிரியர்களும் தீர்மானித்திருக்கிறோம்.”—பேராசிரியர் ஸியிர்கியே நிக்கலேயிவிச் ரூப்ட்ஸாஃப், ஸ்டேட் பெடகாகிகல் யுனிவர்சிட்டியின் வரலாற்றுத் துறைத் தலைவர், இர்குட்ஸ்க், ரஷ்யா.
“இந்தப் படத்தை நான் வரவேற்கிறேன். சாதாரணமாக, ஒடுக்குமுறையைப் பற்றி படமெடுக்கையில் தர்க்க ரீதியாக கதையை அமைப்பது ரொம்ப கஷ்டம். ஆனால் நீங்கள் அதை சாதித்துவிட்டீர்கள். உங்களுடைய மற்ற படங்களையும் தயவுசெய்து என்னிடம் தயங்காமல் காட்டுங்கள்.”—பேராசிரியர் ஸியிர்கியே இல்யிக் கூஸ்நெட்சாஃப், ரஷ்யாவில் உள்ள இர்குட்ஸ்க் ஸ்டேட் யூனிவர்சிட்டியின் வரலாற்றுத் துறைத் தலைவர்.
சைபீரியாவில் வசிக்கும் யெகோவாவின் சாட்சிகளும் இந்த டாக்குமெண்டரியை வெகுவாக பாராட்டினார்கள். அதைப் பின்வரும் குறிப்புகளில் காணலாம்:
“இப்படத்தில் காட்டப்பட்டிருக்கும் சம்பவங்கள் நிகழ்ந்த காலப்பகுதியில், ரஷ்யாவில் இருந்த அநேகர் யெகோவாவின் சாட்சிகளுடைய நடவடிக்கைகளைப் பற்றி தவறாக புரிந்துகொண்டிருந்தனர். ஆனால் இப்போது இந்தப் படத்தை பார்த்த பிறகு, அவர்கள் நினைத்தது போல நம் அமைப்பு வெறும் ஒரு மதப் பிரிவு அல்ல என்பதை அவர்களால் காண முடிகிறது. சமீபத்தில் அங்கு சாட்சிகளாக ஆகியிருக்கும் சிலர் இவ்வாறு சொல்கிறார்கள்: ‘இந்தளவு சகிப்புத்தன்மை காட்டிய கிறிஸ்தவ சகோதரர்களோடு நாங்கள் வாழ்ந்து கொண்டும், வேலை செய்து கொண்டும் இருக்கிறோம் என்பதை நாங்கள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டோம்!’ யெகோவாவின் சாட்சி ஒருவர் இப்படத்தை பார்த்த பிறகு, முழுநேர பயனியராக சேவை செய்ய விரும்புவதாகக் குறிப்பிட்டார்.”—அன்னா வாவ்சுக், சைபீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டவர்.
“ரகசிய போலீஸ் ஒரு சாட்சியின் வீட்டுக் கதவை தட்டுவதை அப்படத்தில் பார்த்தபோது நான் திடுக்கிட்டேன். எங்கள் வீட்டு கதவை போலீஸ் தட்டியது ஞாபகத்திற்கு வந்தது. ‘எங்கேயாவது தீ பிடிச்சிருக்கும்’ என அம்மா அப்போது சொன்னதுகூட எனக்கு நினைவிருக்கிறது. அதேசமயத்தில், அநேக சாட்சிகள் என்னைவிட மோசமாக கஷ்டப்பட்டார்கள் என்பதையும் அந்தப் படம் எனக்கு நினைப்பூட்டியது. இந்த எல்லா தகவலும் யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்ய இன்னுமதிக பலத்தையும் உத்வேகத்தையும் அளிக்கிறது.”—ஸ்டியிபான் வாவ்சுக், சைபீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டவர்.
“நாடுகடத்தப்பட்ட சாட்சிகளின் மகன் நான். எனவே அந்த சமயத்தைப் பற்றி ஏற்கெனவே அதிகமாக கேள்விப்பட்டிருக்கிறேன் என்று நினைத்தேன். ஆனால் இப்படத்தை பார்த்த பிறகு எனக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றுமேயில்லை என்பதை உணர்ந்தேன். பேட்டிகளைக் கேட்டபோது என் கண்கள் குளமாயின. அந்த அனுபவங்கள் எல்லாம் இப்போது எனக்கு வெறும் கதைபோல் இல்லை, அவற்றை நிஜ சம்பவங்களாக என்னால் பார்க்க முடிகிறது. கடவுளோடு கொண்டுள்ள என்னுடைய உறவை இப்படம் பலப்படுத்தியிருக்கிறது. எதிர்காலத்தில் வரவிருக்கும் எந்தக் கஷ்டத்தையும் சகிப்பதற்கு என்னை தயார்படுத்தியிருக்கிறது.”—விளாடிமிர் கவாஷ், இர்குட்ஸ்க்.
“என்னைப் பொறுத்தவரை, அனுபவங்களை எழுத்தில் வாசிப்பதைவிட படமாகப் பார்த்தபோது ரொம்பவே நெகிழ்ந்துபோனேன். அதில் சகோதரர்களுடைய பேட்டிகளைக் கேட்டபோது, அவர்களுடன் சேர்ந்து நானும் சோதனைகளை அனுபவித்தது போல் உணர்ந்தேன். சிறையில் இருந்தபோது தன்னுடைய சிறு மகள்களுக்காக போஸ்ட் கார்டுகளை வரைந்த சகோதரருடைய அனுபவம், நானும் என்னுடைய பிள்ளைகளுடைய இருதயத்தில் பைபிள் சத்தியங்களை பதியவைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்தது. ரொம்ப நன்றி! இந்தப் படம், யெகோவாவின் உலகளாவிய அமைப்பின் பாகமாக தாங்கள் இருப்பதை ரஷ்ய யெகோவாவின் சாட்சிகளுக்கு முன்னொருபோதும் இல்லாத அளவில் உணர்த்தியிருக்கிறது.”—டாடியானா காலினா, இர்குட்ஸ்க்.
“ஒரு தடவை பார்ப்பது நூறு தடவை கேட்பதைவிட சிறந்தது” என்ற பழமொழி இப்படத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது. அது எங்களுக்கு அதிக உயிரோட்டமுள்ளதாக, மிக தத்ரூபமாக, நெருங்கிய சம்பந்தமுள்ளதாக இருக்கிறது. அதைப் பார்த்த பின்பு, ரொம்ப நேரம் யோசனையில் மூழ்கிவிட்டேன். நாடுகடத்தப்பட்ட சாட்சிகளின் வாழ்க்கையைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்க்க இப்படம் எனக்கு உதவியது. இப்போது என்னுடைய சூழ்நிலையை அவர்களுடைய சூழ்நிலையோடு ஒப்பிட்டு பார்க்கையில், தற்போதைய பிரச்சினைகளை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்க முடிகிறது.”—லிடியா பீடா, இர்குட்ஸ்க்.
இதுவரை 25 மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கும் சோதனைகளின் மத்தியில் உண்மையாயிருத்தல் படத்திற்கு உலகமெங்கும் உற்சாக வரவேற்பு கிடைத்திருக்கிறது.a இந்த டாக்குமெண்டரி செ. பீட்டர்ஸ்பர்க், ஓம்ஸ்க், இன்னும் பிற ரஷ்ய நகரங்களிலும், வின்னெடஸ்யா, கெர்ச், மெலிட்டாபால், லெவிஃப் ஆகிய உக்ரேனிய நகரங்களிலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டிருக்கிறது. சர்வதேச பட ஆய்வு வாரியங்களிடம் விருதுகளையும் பெற்றிருக்கிறது.
பல்லாண்டுகளாக தொடர்ந்த சித்திரவதைகளின் மத்தியிலும் வியக்கத்தக்க விதத்தில் தைரியத்தையும் ஆன்மீக பலத்தையும் வெளிக்காட்டிய ஆயிரக்கணக்கான சாதாரண நபர்களுடைய அனுபவங்கள் இப்படத்தின் செய்திக்கு வலிமையூட்டுகின்றன. சோவியத் யூனியனில் உள்ள யெகோவாவின் சாட்சிகள் சோதனைகளின் மத்தியிலும் தங்கள் விசுவாசத்தை உண்மையிலேயே நிரூபித்தார்கள். நீங்கள் இந்தப் படத்தைப் பார்க்க விரும்பினால், யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு அந்த வீடியோவை அளிப்பதில் மகிழ்வார்கள். உங்களுடைய பகுதியில் வசிக்கும் சாட்சி ஒருவரை தயவுசெய்து அணுகுங்கள்.
[அடிக்குறிப்பு]
a இந்த வீடியோ ஆங்கிலம், இத்தாலியன், இந்தோனேஷியன், ஃபின்னிஷ், கான்டோனீஸ், கிரேக்கு, கொரியன், செக், டச், டேனிஷ், நார்வீஜியன், பல்கேரியன், பிரெஞ்சு, போலிஷ், மான்டரின், ரஷ்யன், ருமேனியன், லித்துவேனியன், ஜாப்பனீஸ், ஜெர்மன், ஸ்பானிஷ், ஸ்லோவாக், ஸ்லோவேனியன், ஸ்வீடிஷ், ஹங்கேரியன் ஆகிய மொழிகளில் கிடைக்கிறது.
[பக்கம் 8-ன் படத்திற்கான நன்றி]
ஸ்டாலின்: U.S. Army photo
[பக்கம் 9-ன் படத்திற்கான நன்றி]
ஸ்டாலின்: U.S. Army photo