பழைய ஜெர்மன் பைபிளில் கடவுளின் பெயர்
யெகோவா என்பது கடவுளுடைய தனிப்பட்ட பெயர்; 1971-ல், ஜெர்மன் மொழியில் வெளியான பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் ஆயிரக்கணக்கான தடவை இந்தப் பெயர் காணப்படுகிறது.a ஆனால் கடவுளுடைய பெயரை உபயோகப்படுத்திய முதல் ஜெர்மானிய பைபிள் இதுவல்ல. பிரபல ரோமன் கத்தோலிக்க இறையியல் வல்லுநரான யோஹான் எக் என்பவரால் சுமார் 500 வருடங்களுக்கு முன் பிரசுரிக்கப்பட்ட ஜெர்மானிய பைபிள்தான் முதன்முதலில் யெகோவாவின் பெயரை உபயோகப்படுத்தியதாகத் தெரிகிறது.
யோஹான் எக் 1486-ல் தெற்கு ஜெர்மனியில் பிறந்தார். 24 வயதிற்குள்ளேயே இங்கல்ஸ்டாட் பல்கலைக்கழகத்தில் இறையியல் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1543-ல் சாகும்வரை பேராசிரியராகவே இருந்தார். இவர் மார்ட்டின் லூத்தர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர். இருவரும் சில வருடங்களுக்கு நண்பர்களாக இருந்தார்கள். பிறகோ, லூத்தர் மத சீர்திருத்த இயக்கத்தின் பெரும்புள்ளியாக ஆனார். ஆனால் எக், கத்தோலிக்க சர்ச்சின் ஆதரவாளராக ஆனார்.
ஜெர்மன் மொழியில் பைபிளை மொழிபெயர்க்குமாறு எக்கிடம் பவரியா நாட்டு அரசர் கேட்டுக்கொண்டார். அதன்படி, அவர் மொழிபெயர்த்த பைபிள் 1537-ல் பிரசுரிக்கப்பட்டது. எக்கின் மொழிபெயர்ப்பு மூலப்பிரதியோடு ரொம்பவே ஒத்துப்போனது என்றும் இந்த மொழிபெயர்ப்பு “இதுவரை பெற்றிராத அளவுக்கு அதிக அங்கீகாரத்தைப் பெற வேண்டும்” என்றும் கிர்க்லைக்ஸ் ஹான்டுலேக்ஸிகோன் என்ற என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. எக்கின் மொழிபெயர்ப்பில், யாத்திராகமம் 6:3 இவ்வாறு வாசிக்கிறது: ‘நானே கர்த்தர், ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமான சர்வவல்லமையுள்ள தேவன்: என் பெயர் அதோனாயி, என் பெயரை அவர்களுக்கு நான் வெளிப்படுத்தவில்லை.’ இந்த வசனத்திற்கான ஓரக்குறிப்பு இவ்வாறு சொல்கிறது: “அதோனாயி என்பது யெகோவா என்ற பெயர்.” கடவுளுடைய பெயரை உபயோகப்படுத்திய முதல் ஜெர்மன் பைபிள் இதுதான் என்பது அநேக பைபிள் அறிஞர்களுடைய கருத்து.
என்றாலும், பல ஆயிர வருடங்களுக்கு முன்பே அநேகர் கடவுளுடைய தனிப்பட்ட பெயரை அறிந்திருந்தார்கள், அதை உபயோகித்துக்கொண்டும் இருந்தார்கள். ஒரே மெய்க் கடவுளின் பெயர் யெகோவா என முதன்முதலில் எபிரெய மொழியில் பதிவு செய்யப்பட்டது. (சங்கீதம் 68:4) சுமார் 2,000 வருடங்களுக்கு முன்னர், கடவுளுடைய பெயரை மனிதர்களுக்குத் தாம் தெரியப்படுத்தியதாக இயேசு சொன்ன வார்த்தைகள் கிரேக்க மொழியில் பதிவு செய்யப்பட்டன. (யோவான் 17:6) அதுமுதல், கடவுளுடைய பெயர் எண்ணிலடங்கா மொழிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. வெகு சீக்கிரத்திலேயே சங்கீதம் 83:17-ன் நிறைவேற்றமாக, யெகோவா என்ற பெயரையுடைய கடவுள் ஒருவரே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர் என்று எல்லோரும் தெரிந்துகொள்ளப்போகிறார்கள்.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் 1961-ல் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டது. இப்பொழுது 50-க்கும் அதிகமான மொழிகளில் முழுமையாகவோ பகுதியாகவோ கிடைக்கிறது.
[பக்கம் 32-ன் படம்]
எக் என்பவரின் 1558-ம் ஆண்டு பைபிள் பதிப்பு, யாத்திராகமம் 6:3-ன் ஓரக்குறிப்பில் யெகோவா என்ற பெயரைக் குறிப்பிடுகிறது