உங்களுக்கு நல்ல நண்பர்கள் வேண்டுமா?
பெரும்பாலோரின் விருப்பம் அதுதான். உங்களுடைய இன்ப துன்பங்களையெல்லாம் நெருங்கிய நண்பர்களிடம் மனம்விட்டுச் சொல்வது உங்கள் வாழ்க்கையை அதிக சுவாரஸ்யமானதாக ஆக்கலாம். ஆனால், உண்மையான நண்பர்களை நீங்கள் எப்படிக் கண்டடைய முடியும்? தன்னலமற்ற அன்புதான் எவ்வித உறவையும் செழிக்கச் செய்யும் என்பதை ஏறக்குறைய 2,000 வருடங்களுக்கு முன்னரே இயேசு காண்பித்தார். “மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என்று அவர் கற்பித்தார். (லூக்கா 6:31) பொன்விதி என்று அடிக்கடி அழைக்கப்படுகிற இவ்வசனம், நீங்கள் தன்னலமற்றவராகவும், தாராள குணமுடையவராகவும் இருந்தால்தான் உங்களுக்கு நண்பர்கள் கிடைப்பார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. சுருங்கச் சொன்னால், உங்களுக்கு ஒரு நண்பர் வேண்டுமானால், நீங்கள் ஒரு நண்பராக இருக்க வேண்டும். எப்படி?
நெருங்கிய நண்பர்களை ஒரே நாளில் பெற்றுவிட முடியாது. காரணம், பழகப்பழகத்தான் நெருக்கம் ஏற்படும். நெருக்கமான பந்தங்களை வளர்ப்பதற்கும் அவை முறிந்துவிடாமல் பார்த்துக்கொள்வதற்கும் முயற்சி தேவைப்படுகிறது. பொதுவாக, சொந்த சௌகரியங்களைப் பார்ப்பதற்குப் பதில், நண்பரின் தேவைகளுக்கு முதலிடம் கொடுப்பதே நல்ல நட்புக்கு அடையாளம். நண்பர்கள் ஒருவருக்கொருவர் சந்தோஷங்களை மட்டுமல்ல, துக்கங்களையும் பகிர்ந்துகொள்கிறார்கள்.
கஷ்ட காலங்களின்போது உணர்ச்சிப்பூர்வமாகவும் நடைமுறையாகவும் ஆதரவு தருவதும்கூட உண்மையான நட்புக்கு அடையாளம். “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்” என்று நீதிமொழிகள் 17:17 குறிப்பிடுகிறது. சொல்லப்போனால், குடும்ப அங்கத்தினர் சிலரோடுள்ள பிணைப்பைக் காட்டிலும், நண்பர்களோடுள்ள பிணைப்பு அதிக பலமாக இருக்கலாம். “கேடு வருவிக்கும் நண்பர்களுமுண்டு; உடன் பிறந்தாரைவிட மேலாக உள்ளன்பு காட்டும் தோழருமுண்டு” என நீதிமொழிகள் 18:24 (பொது மொழிபெயர்ப்பு) சொல்கிறது. அத்தகைய நல்ல நட்புறவுகளை எப்படி வளர்ப்பதென்று அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதில் பெயர்பெற்று விளங்கும் ஒரு தொகுதியினரின் பாகமாய் ஆக விரும்புகிறீர்களா? (யோவான் 13:35) ஆம் என்றால், உண்மையான நண்பர்களை எப்படிக் கண்டடையலாம் என்பதை உங்களுக்குக் காண்பிக்க நீங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.