உரோமத்தாலான சட்டை பக்தியை வளர்க்குமா?
பிரான்சு மன்னர் ஒன்பதாம் லூயி ஒருவிதமான சட்டையை அணிந்திருந்தார். சர் தாமஸ் மார் தன்னுடைய வாலிப பருவத்தில் சட்டக் கல்வியை படித்துக்கொண்டிருந்தபோது இதே வகை உடையை அணிந்திருந்தார்; அதனால்தான் அவர் மாதக்கணக்காக 19 அல்லது 20 மணிநேரம் தினசரி விழித்திருக்க முடிந்தது. கிட்டத்தட்ட அவருடைய வாழ்நாளின் பெரும்பகுதியை இந்த உடையோடுதான் கழித்தார் என்பதாக சொல்லப்படுகிறது. கான்டர்பரியின் பேராயர் தாமஸ் பெகட் என்பவர் கான்டர்பரி பேராலயத்தில் கொலை செய்யப்பட்டார்; அவர் வைத்திருந்த ஆடைகளுக்கு அடியில் தற்செயலாக இந்த வகையான உடை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சரித்திர நாயகர்கள் வைத்திருந்த உடையில் அப்படி என்னதான் விசேஷம்? அவர்கள் வைத்திருந்தது உரோமத்தால் செய்யப்பட்ட சட்டை. இதை அணிவதன் மூலம் தங்கள் உடலை அடக்கி ஒடுக்க அவர்கள் வழிதேடினார்கள்.
இந்தச் சட்டை ஆட்டு உரோமத்திலிருந்து தயாரிக்கப்பட்டது. இது சொரசொரப்பாக இருக்கும். உடலில் படும்படியாக இதை அணிவார்கள். அப்போதுதான் அது உடலை உறுத்தும்; தோலோடு உராயும்; அதிக எரிச்சலை ஏற்படுத்தும். சீக்கிரத்தில் அது பேன்களின் புகலிடமாக மாறிவிடும். தாமஸ் பெகட் இந்தச் சட்டையும் அதே ரகத்தில் அரைக்கால் சட்டையும் “பேன்கள் மொய்க்கும்வரை” அணிந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. 16-ம் நூற்றாண்டுக்குப் பிறகு, ஆட்டு உரோமத்திற்குப் பதிலாக உடலைக் குத்தும் கூர்மையான முட்களையுடைய கம்பிகளால் உடைகள் செய்யப்பட்டன. இதுபோன்ற சட்டைகளை போட்டுக்கொள்வோருக்கு இவை இன்னுமதிக அசௌகரியத்தை ஏற்படுத்தின.
உடலை ஒடுக்கி வைக்க பல முறைகள் கையாளப்பட்டன. அவற்றைப் போலவே இந்த உரோம சட்டைகளும் “மாம்ச இச்சைகளை அடக்கி, கடவுள் விரும்பும் குணங்களை வளர்த்து, பக்தியாக வாழ்வதற்காக” அணியப்பட்டன என்று ஓர் அகராதி கூறுகிறது. துறவிகள்தான் இவற்றை அணிந்தார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். சாமானியர்கள் முதல் அதிகாரிகள்வரை எல்லா தரப்பினரும் இந்த உடைகளை பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இன்றும், சில மதங்கள் இப்பழக்கத்தை பின்பற்றுகின்றன.
இப்படி உரோம சட்டைகளை அணிவதோ தன்னைத்தானே வருத்திக்கொள்வதோ ஒருவரை பக்தியுள்ளவராக மாற்றுகிறதா? இல்லை, இப்படிப்பட்ட பழக்கங்கள் ஒருவரை ஆன்மீகவாதியாக மாற்றிவிடுவதில்லை. சொல்லப்போனால், அப்போஸ்தலன் பவுல் இப்படி ‘சரீரத்தை ஒடுக்குவதை’ எதிர்த்தார். (கொலோசெயர் 2:23)a ஆகவே, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை உள்ளார்வத்தோடு படித்து கடவுளைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும்; கற்றுக்கொண்டதை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்; இதுதான் உண்மையில் ஒருவரை ஆன்மீக நபராக மாற்றும்.
[அடிக்குறிப்பு]
a இதைப் பற்றி கூடுதலாக தெரிந்துகொள்ள அக்டோபர் 8, 1997 விழித்தெழு! இதழில் “பைபிளின் கருத்து: துறவறம் ஞானத்திற்கு திறவுகோலா?” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 32-ன் படங்களுக்கான நன்றி]
மேலே, மன்னர் ஒன்பதாம் லூயி: From the book Great Men and Famous Women; நடுவில், தாமஸ் பெகட்: From the book Ridpath’s History of the World (Vol. IV); கீழே, தாமஸ் மார்: From the book Heroes of the Reformation, 1904