சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சொந்தமாக்கிக் கொள்வார்கள்
“தற்போதைய இயற்கைச் சூழலில் நல்ல மாற்றம் ஏற்படும் என நினைக்கிறேன். . . . அது நாளைக்கே வராவிட்டாலும் ரொம்ப காலத்திற்குப் பின் வரும். அப்போது புதிய வானமும் புதிய பூமியும் இருக்கும்.”—ஸான் மரி பெல்ட், பிரெஞ்சு சுற்றுச்சூழல் வல்லுநர்.
பூமியின் சுற்றுச்சூழலாலும் சமுதாய சூழ்நிலையாலும் அவதிப்படுகிற அநேகர், நம்முடைய கிரகம் ஒரு பரதீஸாக மாறுவதைக் காணத் துடிக்கிறார்கள். ஆனால் இது ஒன்றும் இன்றைய கனவல்ல. இந்தப் பூமி மீண்டும் ஒரு பரதீஸாக, அதாவது ஒரு பூங்காவனமாக, மாறப்போவதைப் பற்றி பல்லாண்டுகளுக்கு முன்பே பைபிள் வாக்குறுதி அளித்துள்ளது. ‘சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்,’ அதாவது, சொந்தமாக்கிக் கொள்வார்கள் என்றும் ‘உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக’ என்றும் பைபிளில் இயேசு கூறியிருப்பது மிகவும் பிரபலமான வார்த்தைகள். (மத்தேயு 5:5; 6:10) எனினும், சாந்தகுணமுள்ளவர்கள் பரதீஸான ஒரு பூமியில் குடியிருப்பார்கள் என்ற நம்பிக்கை இன்று அநேகருக்கு இல்லை. கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொள்கிற அநேகருக்குக்கூட பரதீஸ் வரும் என்ற எதிர்பார்ப்பே இல்லை.
ல வி என்ற பிரெஞ்சு வாராந்தர பத்திரிகை சொல்லுகிறபடி, பரதீஸ் என்பது பரலோகத்தில் இருந்தாலும் சரி பூமியிலிருந்தாலும் சரி, அதைப் பற்றிய நம்பிக்கை கத்தோலிக்க மதத்தினருக்கு இல்லாதிருக்கிறது; அதற்கான காரணத்தை அது இவ்வாறு விளக்குகிறது: “சுமார் 19 நூற்றாண்டுகள்வரை கத்தோலிக்க போதனைகளின் முக்கிய பாகமாயிருந்த பரதீஸ் [பற்றிய கருத்து], ஜெபம், தியானம் ஆகிய ஆன்மீக விஷயங்களிலிருந்தும் ஞாயிறு பிரசங்கங்களிலிருந்தும் இறையியல் பாடங்களிலிருந்தும் வேதபாட வகுப்புகளிலிருந்தும் மறைந்துவிட்டது.” அந்த வார்த்தையே “புதிர், குழப்பம்” என்ற “அடர்ந்த மூடுபனிக்குள்” மறைந்துவிட்டதென சொல்லப்படுகிறது. சில பிரசங்கிமார்கள் வேண்டுமென்றே இந்த வார்த்தையைப் பயன்படுத்தாததற்குக் காரணம், “பூமியில் சந்தோஷமாக வாழ்வது சம்பந்தமான அநேக கருத்துகளை இது அளிக்கிறதென” அவர்கள் நினைப்பதுதான்.
மத விஷயங்களைப் பற்றி நன்கு அறிந்த சமூகவியலாளரான ஃப்ரெட்ரிக் லன்வார் என்பவருக்குப் பரதீஸைப் பற்றிய கருத்துகள் எல்லாம் “புளித்துப்போய்விட்டன.” அவ்வாறே, சரித்திராசிரியரும் இந்தப் பொருளின் அடிப்படையில் பல்வேறு புத்தகங்களை எழுதியவருமான ஷான் டெலுயுமோ என்பவரும்கூட பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் அடையாள அர்த்தமுடையதென நினைக்கிறார். அவர் இவ்வாறு எழுதுகிறார்: “‘பரதீஸைப் பற்றி வேறென்ன சொல்கிறார்கள்?’ என்ற கேள்விக்கு கிறிஸ்தவ போதனை இவ்வாறு பதில் அளிக்கிறது: இரட்சகர் உயிர்த்தெழுப்பப்பட்டிருப்பதால், ஒரு நாள் நாம் அனைவரும் ஒன்றுசேருவோம், அப்போது நம் கண்கள் சந்தோஷத்தைக் காணும்.”
பரதீஸ் பூமியைப் பற்றிய செய்தி நம் காலத்திற்கும் பொருந்துகிறதா? உண்மையில் நமது கிரகத்தின் எதிர்காலம் என்ன? பூமியின் எதிர்காலம் இருண்டு கிடக்கிறதா அல்லது ஒளிமயமான எதிர்காலம் வருமா? இக்கேள்விகளுக்குப் பின்வரும் கட்டுரை பதில் அளிக்கும்.
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
COVER: Emma Lee/Life File/Getty Images