வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
இஸ்ரவேலின் தலைவராயிருந்த மோசே, ‘இனி தன்னால் நடமாட இயலாது’ என கூறியதாக உபாகமம் 31:2-ல் மற்ற மொழிபெயர்ப்புகள் சொல்லியிருக்கையில், புதிய உலக மொழிபெயர்ப்பு, “போகவும் வரவும் அனுமதிக்கப்படவில்லை” என ஏன் சொல்கிறது?
கேள்வியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தையை இரண்டு விதங்களிலும் மொழிபெயர்க்கலாம். என்றாலும், தன் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருந்ததால் மோசே தளர்ந்து போயிருக்கலாம், ஒரு தலைவருக்குரிய பொறுப்புகளை சுமக்க முடியாதளவு அவர் பலவீனமாகியிருக்கலாம் என சில பைபிள் மொழிபெயர்ப்புகள் சொல்கின்றன. உதாரணமாக, தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு இவ்வாறு சொல்கிறது: “இன்று நான் நூற்றிருபது வயதுள்ளவன்; இனி நான் போக்கும் வரத்துமாயிருக்கக்கூடாது.” அதைப்போல, கத்தோலிக்க பைபிள் இவ்வாறு சொல்கிறது: “இனி என்னால் போகவர இயலாது.”
மோசே வயது முதிர்ந்தவராக இருந்தாலும் பலவீனமடையவில்லை என உபாகமம் 34:7 நமக்குக் காட்டுகிறது. அவ்வசனம் இவ்வாறு சொல்கிறது: “மோசே மரிக்கிறபோது நூற்றிருபது வயதாயிருந்தான்: அவன் கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை.” எனவே, மோசேயால் ஜனங்களை வழிநடத்த உடல்ரீதியாக முடிந்தது. ஆனால், அப்படி அவர் தொடர்ந்து செய்வது யெகோவாவின் சித்தமல்ல. இது மோசே சொன்னதிலிருந்தே தெளிவாகிறது. அவர் இப்படிச் சொன்னார்: “இந்த யோர்தானை நீ கடந்துபோவதில்லை என்று கர்த்தர் என்னோடே சொல்லியிருக்கிறார்.” தெளிவாகவே, மேரிபாவின் தண்ணீருக்கு அருகில் யெகோவா என்ன சொன்னாரோ அதைத்தான் இங்கேயும் சொல்லியிருக்கிறார்.—எண்ணாகமம் 20:9-12.
மோசே நீண்டகாலம் வாழ்ந்தார்; அவருடைய வாழ்க்கை தனிச்சிறப்பானது. அதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். முதல் 40 ஆண்டுகள் எகிப்தில் வாழ்ந்தார், அங்கே ‘எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவரானார்.’ (அப்போஸ்தலர் 7:20-22) அடுத்த 40 ஆண்டுகள், மீதியானில் வசித்தார். அங்கே கடவுளுடைய மக்களை வழிநடத்துவதற்குத் தேவையான ஆன்மீக குணங்களை வளர்த்துக்கொண்டார். இறுதி 40 வருடங்களில் அவர் இஸ்ரவேலர்களின் தலைவராக அவர்களை வழிநடத்தினார். இருந்தாலும், இப்பொழுது மோசேக்கு பதிலாக யோசுவாவே இஸ்ரவேலரை யோர்தான் நதியைக் கடந்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்கு வழிநடத்தி கொண்டுபோவாரென யெகோவா முடிவு செய்திருந்தார்.—உபாகமம் 31:3.
ஆக, மோசே இஸ்ரவேலின் தலைவராக இனியும் இருக்க மாட்டார் என்பதற்குக் காரணம் அவருடைய உடல் பலம் குன்றியதால் அல்ல, யெகோவா அனுமதிக்காததினாலேயே. எனவே, புதிய உலக மொழிபெயர்ப்பு உபாகமம் 31:2-ன் சரியான அர்த்தத்தையே தெரிவிக்கிறது.