வாழ்க்கைப் புயலை தாக்குப்பிடிக்க முடியும்
ஆபத்தான இந்தக் காலக்கட்டத்தில், அநேகர் கடும் புயலைப் போன்ற இன்னல்களில் சிக்கித் தவியாய் தவிக்கின்றனர். ஆனால் கிறிஸ்தவர்களோ, கடவுள்மீது அன்பு காட்டுவதாலும், அவர் கொடுத்திருக்கும் நெறிமுறைகளை உண்மையோடு கடைப்பிடிப்பதாலும் இவற்றையெல்லாம் சமாளிக்கிறார்கள். எப்படி? இயேசு கிறிஸ்து சொன்ன ஒரு உவமையில் இதற்கான பதிலைக் காணலாம். அவர் தம்முடைய கீழ்ப்படிதலுள்ள சீஷர்களை, “கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு” ஒப்பிட்டார். “பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது” என்று இயேசு சொன்னார்.—மத்தேயு 7:24, 25.
இந்த உவமையில் குறிப்பிடப்பட்ட மனிதர் புத்தியுள்ளவராக இருந்தபோதிலும், அவரும்கூட பெரும் துயரங்களை அனுபவிக்கிறார் என்பதைக் கவனியுங்கள். இத்தகைய துயரங்களே கடும்மழை, பெருவெள்ளம், நாசகரமான காற்று என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, தம்முடைய சீஷர்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது என்றும் எப்போதுமே நிம்மதியான, அமைதியான வாழ்க்கை வாழ்வார்கள் என்றும் இயேசு குறிப்பிடவில்லை. (சங்கீதம் 34:19; யாக்கோபு 4:13-15) மாறாக, தம்முடைய உண்மையுள்ள ஊழியர்கள் இத்தகைய கடுமையான துன்பங்களையும் நெருக்கடிகளையும் சந்திக்கத் தயாராயிருப்பார்கள் என்றும் அதை வெற்றிகரமாகச் சமாளிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
இயேசு தம்முடைய உவமையை இவ்வாறு ஆரம்பித்தார்: “நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.” வீட்டை எப்படிக் கட்டுவது என்பதைக் குறித்து இயேசு பேசிக் கொண்டிருக்கவில்லை. மாறாக, வாழ்க்கையை எப்படிக் கட்டுவது என்பதைக் குறித்தே பேசிக்கொண்டிருந்தார்; அதாவது, கிறிஸ்தவருக்குரிய சரியான உள்ளெண்ணங்களை வளர்த்து அதைச் செயல்படுத்துவதைக் குறித்தே பேசிக்கொண்டிருந்தார். இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிசாய்ப்பவர்கள் பகுத்தறிந்து செயல்படுவார்கள்; நன்கு சிந்தித்து தீர்மானம் எடுப்பார்கள். கற்பிக்கப்பட்ட விஷயங்களை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் மூலம் கிறிஸ்துவின் போதனைகள் என்ற உறுதியான கற்பாறையின்மீது அவர்கள் தங்களுடைய சரியான உள்ளெண்ணங்களையும் செயல்களையும் கட்டுவார்கள். ஆர்வத்துக்குரிய விஷயம் என்னவென்றால், கிறிஸ்துவின் போதனைகள் என்ற இந்தக் கற்பாறை மேற்பரப்பில் காணப்படுவதில்லை. இயேசுவின் உவமையில் வரும் அந்த மனிதர், ‘ஆழத்திற்கு’ சென்று தோண்ட வேண்டியிருந்தது. (லூக்கா 6:48) அதுபோலவே, கடவுளிடம் நெருங்கிச் செல்வதற்கு உதவுகிற நிலையான குணங்களை வளர்த்துக்கொள்ள இயேசுவின் சீஷர்கள் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும்.—மத்தேயு 5:5-7; 6:33.
இயேசுவைப் பின்பற்றுகிறவர்களுடைய கிறிஸ்தவ அடித்தளத்தையே ஆட்டம்காணச் செய்யுமளவுக்கு கடும்புயலைப் போன்ற துன்பங்கள் வரும்போது என்ன செய்வது? இத்தகைய சமயத்தில், இயேசுவின் போதனைகளுக்கு அவர்கள் மனமுவந்து கீழ்ப்படிய வேண்டும், அதோடு கிறிஸ்தவ பண்புகளையும் காட்ட வேண்டும்; இவையே இத்தகைய துயரங்களைச் சமாளித்து நிற்பதற்குப் பலமளிக்கும். மிக முக்கியமாக, வரவிருக்கும் அர்மகெதோன் புயலையும் தாக்குப்பிடிக்க உதவும். (மத்தேயு 5:10-12; வெளிப்படுத்துதல் 16:15, 16) ஆம், இயேசுவின் போதனைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் அநேகர் கடும்புயலைப் போன்ற துன்பங்களையும் தாங்கி நிற்பதில் வெற்றி கண்டுள்ளனர். நீங்களும் அவ்வாறே செய்ய முடியும்.—1 பேதுரு 2:21-23.