சிறந்த பதில்களுக்கான தேடல்
என் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எப்படி?
என் குடும்பத்தைச் சந்தோஷமாக வைத்துக்கொள்வது எப்படி?
என் வேலையைத் தக்கவைத்துக்கொள்வது எப்படி?
நீங்கள் எப்போதாவது இதுபோன்ற கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்களா? உங்களுக்கு உண்மையிலேயே பலனளித்த பதில்களை நீங்கள் கண்டுபிடித்திருக்கிறீர்களா? இவற்றிற்கும் இன்னும் பல முக்கிய விஷயங்களுக்கும் ஆலோசனை தருகிற சுமார் 2,000 புத்தகங்கள் ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படுகின்றன. வாழ்க்கையின் பிரச்சினைகளைச் சமாளிக்க உதவும் ஆலோசனைகளை அள்ளித்தருகிற புத்தகங்களுக்காக பிரிட்டனில் மட்டுமே வாசகர்கள் ஓர் ஆண்டில் எட்டு கோடி பவுண்டுகள்வரை (சுமார் 15 கோடி அமெரிக்க டாலர்கள்) செலவு செய்கிறார்கள். அமெரிக்காவில், ஓர் ஆண்டில் சுமார் 60 கோடி டாலருக்கு சுய உதவி புத்தகங்கள் விற்பனையாகின்றன. இதிலிருந்து, அன்றாட பிரச்சினைகளைச் சமாளிக்க சிறந்த ஆலோசனையைத் தேடுவது நீங்கள் மட்டுமல்ல என்பது தெளிவாகிறது.
கணக்குவழக்கில்லாமல் கிடைக்கும் இத்தகைய பிரசுரங்களில் காணப்படுகிற ஆலோசனையைக் குறித்து ஒரு நூலாசிரியர் இவ்வாறு சொன்னார்: “புதிது புதிதாய் வந்துகொண்டிருக்கும் அநேக புத்தகங்கள், ஏற்கெனவே எழுதப்பட்டுள்ள விஷயங்களையே திரும்பவும் எடுத்துரைக்கின்றன.” ஆம், இப்புத்தகங்களில் காணப்படுகிற பெரும்பாலான ஆலோசனைகள், உலகிலுள்ள மிகப் பழமையான ஒரு புத்தகத்திலுள்ள ஞானமான ஆலோசனைகளையே எடுத்துரைக்கின்றன. இது உலகிலேயே மிக அதிகமாக விநியோகிக்கப்படுகிற புத்தகம் என்பதில் சந்தேகமில்லை. இது முழுமையாகவோ பகுதியாகவோ சுமார் 2,400 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உலகளவில் 460 கோடிக்கும் அதிகமான பிரதிகள் அச்சிடப்பட்டிருக்கின்றன. இப்புத்தகம் பைபிளே.
பைபிள் தெளிவாகவே இவ்வாறு குறிப்பிடுகிறது: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; . . . அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16, 17) இந்த பைபிள், சுய உதவி புத்தகமாக எழுதப்படவில்லை என்பது உண்மைதான். மனிதரைக் குறித்த கடவுளுடைய சித்தத்தை வெளிப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம். இருந்தாலும்கூட, மனிதர் எதிர்ப்படுகிற பொதுவான பிரச்சினைகளைச் சமாளிப்பது பற்றிய நிறைய விஷயங்களும் இதில் உள்ளன; அதோடு, இதிலுள்ள ஆலோசனைகளின்படி நடப்பவர்கள் நன்மை அடைவார்கள் எனவும் அது வாக்குக் கொடுக்கிறது. (ஏசாயா 48:17, 18) ஒருவருடைய இனம், கலாச்சாரம், கல்வித்தகுதி எதுவாக இருந்தாலும், இதிலுள்ள நடைமுறையான ஆலோசனைகளைப் பின்பற்றும்போது கைமேல் பலன் கிடைக்கிறது. அப்படியானால், ஆரோக்கியம், குடும்பம், வேலை போன்ற விஷயங்களின் பேரில் பைபிள் கொடுக்கிற ஆலோசனைகள் பயனுள்ளவையா என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ள அடுத்த கட்டுரையைப் பார்க்கலாமே?