சிறுவர் சிறுமியருக்கு முக்கியப் பாடங்கள்
கிளாடீஸ் என்பவர் அர்ஜென்டினாவில், மென்டோஜா என்ற நகரிலுள்ள ஒரு பள்ளியில் வேலை செய்கிறார். ஒரு நாள் வகுப்பறை அருகே அவர் நடந்துபோகும்போது நான்காம் வகுப்பு மாணவ மாணவியருக்கு என்னுடைய பைபிள் கதை புத்தகம் என்ற புத்தகத்திலிருந்து ஓர் ஆசிரியை வாசித்துக் காட்டுவதைக் கவனித்தார்.a அப்போது, அந்த ஆசிரியையிடம் தன்னை யெகோவாவின் சாட்சியென கிளாடீஸ் அறிமுகப்படுத்திக்கொண்டு, அந்தப் புத்தகத்திலிருந்து முழுமையாய்ப் பயனடைவதற்கான வழியை விளக்கிக் காட்டுவதாகச் சொன்னார். கிளாடீஸ் விளக்கிய விதம் அந்த ஆசிரியைக்குப் பிடித்திருந்ததால் பள்ளிப் பாடத்திட்டத்தில் அந்தப் புத்தகத்தைத் தொடர்ந்து பயன்படுத்த ஆசைப்பட்டார். ஆனால், அதற்குப் பள்ளி நிர்வாகத்திடமிருந்து அனுமதி பெற வேண்டியிருந்தது. அனுமதி கிடைத்தபோதோ அந்த ஆசிரியைக்குச் சந்தோஷம் தாளவில்லை.
பின்னர், படிக்கும் பழக்கத்தைத் தூண்டுவிப்பதற்காக அந்தப் பள்ளியில் புத்தக தின நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது அந்த ஆசிரியை, பள்ளியிலுள்ள எல்லாரும் கேட்பதற்கு வசதியாக, தன் மாணவ மாணவியர் அந்தப் புத்தகத்திலிருந்து ஓர் அதிகாரத்தைச் சத்தமாய் வாசித்துக்காட்டச் செய்தார். இந்த நிகழ்ச்சி நல்ல பலனைத் தந்ததால், அந்த நகரிலுள்ள தொலைக்காட்சி நிலையம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள அந்த ஆசிரியை அழைப்பைப் பெற்றார். பள்ளிப் பிள்ளைகளின் நடத்தையைப் பற்றிய பேச்சு எழுந்தபோது, அந்த நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்துகொண்ட ஒருவர் அந்த ஆசிரியையிடம், “உங்கள் வகுப்பிலுள்ள பிள்ளைகள் ஒழுங்காக நடந்துகொள்ளுவதற்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார். என்னுடைய பைபிள் கதை புத்தகம் என்ற புத்தகத்தைப் பயன்படுத்துவதாக அவர் சொன்னார். வகுப்பில் மாணவ மாணவியருக்கு மதத்தைக் கற்றுக்கொடுப்பதற்குப் பதிலாக, இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தி மரியாதை காட்டுவது, பொறுமையாய் நடந்துகொள்வது, ஒற்றுமையாய் இருப்பது, ஒத்துழைப்பது, கீழ்ப்படிவது, அன்பு காட்டுவது போன்ற நன்னெறிகளை அவர்களுடைய மனதில் பதிய வைப்பதாகக் கூறினார். இவை, சிறுவர் சிறுமியர் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியப் பாடங்கள் என்பதை எல்லாரும் ஏக மனதாய் ஆமோதித்தார்கள்.
இத்தகைய நன்னெறிகளை உங்களுடைய பிள்ளைகளின் மனதிலும் பதிய வைக்க நீங்கள் விரும்புகிறீர்களா? என்னுடைய பைபிள் கதை புத்தகம் என்ற கருத்தைக் கவரும் இந்தப் பிரசுரம் ஒன்றை யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து நீங்கள் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.