சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!
“நூ ற்றுக்கு நூறு உண்மை இருக்க முடியுமா?” போலந்தில் நடைபெற்ற ஒரு தேசிய கட்டுரைப் போட்டியின் தலைப்பே இது. கட்டுரைக்கான அறிவுரைகளில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது: “நூற்றுக்கு நூறு உண்மை நமக்குத் தேவையில்லை. அது யாருக்குமே தேவையில்லை. சொல்லப்போனால், நூற்றுக்கு நூறு உண்மை என்ற ஒன்று இல்லவே இல்லை.” உயர்நிலைப் பள்ளி மாணவியான 15 வயது ஆகாடா, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தன் மத நம்பிக்கைகளை மற்றவர்களுக்குத் தெரிவிக்க முடிவு செய்தாள்; அவள் ஒரு யெகோவாவின் சாட்சி.
இக்கட்டுரையைத் தயாரிப்பதற்காக, ஆகாடா முதலில் யெகோவா தேவனிடம் உதவிகேட்டு ஜெபித்தாள்; பிறகு இந்தப் பொருளின்பேரில் தகவலைச் சேகரிக்கத் துவங்கினாள். ஜூலை 1, 1995 தேதியிட்ட காவற்கோபுரத்தில் இது சம்பந்தமான தகவல் இருந்ததைப் பார்த்தாள். “உண்மையா? அது என்ன?” என்று பொந்தியு பிலாத்து இயேசுவிடம் கேட்ட கேள்வியை அவள் மேற்கோள் காட்டினாள். (யோவான் 18:38, பொது மொழிபெயர்ப்பு) அவர் நக்கலாக அந்தக் கேள்வியைக் கேட்டார். ‘உண்மையா? அது என்ன? அப்படியொன்று கிடையவே கிடையாது!’ என்று சொல்வதுபோல் அது இருந்தது என அவள் குறிப்பிட்டாள். பிலாத்துவின் கேள்வி கட்டுரைக்கான அறிவுரைகளில் கொடுக்கப்பட்டுள்ள கேள்வியை எனக்கு நினைப்பூட்டுகிறது” என்று அக்கட்டுரையில் ஆகாடா எழுதினாள்.
அடுத்ததாக, ரிலேடிவிஸம் என்ற கொள்கையின் வளர்ச்சியை அவள் விவரித்தாள்; ஒருவருக்கு உண்மையாகப் படும் விஷயம் மற்றொருவருக்கு உண்மையாகப் படாதிருக்கலாம், அதே சமயத்தில் இரண்டுமே “சரியானதாக” இருக்கலாம் என்பதே இக்கொள்கையின் கருத்து. “வாயுக்களின் இயக்கம் பற்றிய விஞ்ஞானச் சட்டங்கள் நூற்றுக்கு நூறு உண்மையாக இல்லாவிட்டால் நம்மில் யாராவது விமானத்தில் பறக்கத் துணிவோமா?” என்பது போன்ற கேள்விகளை அவள் கேட்டாள். பிறகு பைபிளின் பக்கம் கவனத்தைத் திருப்பி அவள் இவ்வாறு குறிப்பிட்டாள்: “கடவுளுடைய வார்த்தையில் நம்பிக்கை வைப்பதற்கு ஆணித்தரமான ஆதாரங்கள் உள்ளன.” நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்கும் விஷயங்களை மனதார தேடுகிறவர்கள் அதைக் கண்டடையும்வரை பொறுமையாக இருந்தால் நல்லது என்ற தன் விருப்பத்தையும் அவள் தெரிவித்தாள்.
ஆகாடா விசேஷ சான்றிதழைப் பரிசாகப் பெற்றாள்; அதோடு வகுப்பிலுள்ள அனைவருக்கும் முன்பு அதைப் பேச்சாக கொடுக்கும் வாய்ப்பையும் பெற்றாள். தன்னுடன் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியருக்கு பைபிள் படிப்பைக் குறித்து அவள் தெரிவித்தாள்; அவர்களில் பலர் அதை ஏற்றுக்கொண்டார்கள். தன் நம்பிக்கைகளை அநேகரிடம் சொல்வதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியதற்காக ஆகாடா நன்றியில் பூரிக்கிறாள். ஆம், உங்களுடைய நம்பிக்கையைப்பற்றி பேசுவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்த கவனமாக இருந்தால் நீங்களும் நற்பலன்கள் பெறலாம். இவ்வாறு செய்வதற்கு உங்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன?