பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு!
நீங்கள் நினைத்துக்கூடப் பார்க்காத இடத்தில் ஒரு பொக்கிஷத்தைக் கண்டுபிடித்திருக்கிறீர்களா? மார்ச் 27, 2005-ல், எஸ்டோனியாவைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சியான ஈவோ லாட் என்பவருக்கு அந்த அனுபவம் கிடைத்தது. ஆல்மா வார்டியா என்ற முதிய சகோதரியின் வீட்டில், சாமான்கள் வைக்கப்படுகிற பழைய ஷெட் ஒன்றை இடிக்க அவர் உதவி செய்துகொண்டிருந்தார். அந்த ஷெட்டின் வெளிச் சுவரை அவர்கள் இடித்தபோது, அங்கிருந்த தூண் ஒன்றின் ஒரு பக்கம் பலகையால் மூடப்பட்டிருந்ததைக் கவனித்தார்கள். அந்தப் பலகையை அகற்றியபோது தூணுக்குள் சுமார் 1.25 மீட்டர் உயரத்திலும், சுமார் 10 சென்டிமீட்டர் அகலத்திலும், 10 சென்டிமீட்டர் ஆழத்திலும் ஒரு சிறிய அலமாரி இருந்தது; கச்சிதமான மரத் துண்டால் அது மூடப்பட்டும் இருந்தது. (1) அலமாரி நிறையப் பொக்கிஷங்கள்! என்ன பொக்கிஷங்கள்? யார் அவற்றை மறைத்து வைத்தார்கள்?
அந்த அலமாரிக்குள் கெட்டியான பேப்பர்களால் சுற்றப்பட்டிருந்த ஏராளமான பாக்கெட்டுகள் இருந்தன. (2) அந்த பாக்கெட்டுகளில் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்கள் இருந்தன; பெரும்பாலானவை காவற்கோபுர படிப்புக் கட்டுரைகள். அவற்றில் சில 1947-ல் வெளிவந்தவை. (3) அவை எஸ்டோனியன் மொழியில் கஷ்டப்பட்டுக் கையாலேயே எழுதப்பட்டிருந்தன. அவற்றை யார் அங்கே மறைத்து வைத்தார்கள் என்பதற்கான துப்புகள் அந்த பாக்கெட்டுகள் சிலவற்றில் கிடைத்தன. ஆல்மாவின் கணவர் வில்லெம் வார்டியாவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளைப் பற்றிய பதிவுகள் அவற்றில் இருந்தன. அவர் எத்தனை வருடங்கள் சிறைச்சாலையில் கழித்தார் என்ற தகவலும் அவற்றில் இருந்தது. அவர் ஏன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்?
வில்லெம் வார்டியா, யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் பொறுப்பான ஸ்தானத்தில் இருந்தார். எஸ்டோனியாவில் இருந்த டார்ட்டூ சபையில் அவர் ஆரம்பத்தில் சேவை செய்தார்; பின்னர் அங்கிருந்த ஓட்டிப்பா சபையில் சேவை செய்தார். அவர் ஒருவேளை இரண்டாம் உலகப் போர் ஆரம்பிப்பதற்குக் கொஞ்சக் காலம் முன்பு சத்தியத்தைக் கற்றிருக்க வேண்டும். சில வருடங்களுக்குப் பிறகு, மத சம்பந்தமான காரியங்களில் ஈடுபட்டதற்காக கம்யூனிஸ அரசு, சகோதரர் வார்டியாவை டிசம்பர் 24, 1948-ல் கைதுசெய்தது. மற்ற சகோதரர்களைப் பற்றிய விஷயங்களை அவரிடமிருந்து கறப்பதற்காக ரகசிய போலீசார் அவரை விசாரணை செய்தார்கள், படுமோசமாக நடத்தினார்கள். தன் சார்பாக வாதாட அவருக்கு வாய்ப்பே கொடுக்காத நீதிமன்றம் அவருக்குப் பத்தாண்டு சிறைத் தண்டனை விதித்து ரஷ்யச் சிறை முகாம்களுக்கு அனுப்பியது.
மார்ச் 6, 1990-ல் அவர் இறக்கும்வரை யெகோவாவுக்கு உண்மையோடு இருந்தார். பிரசுரங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த விஷயம் அவருடைய மனைவிக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒருவேளை தன் மனைவி விசாரணை செய்யப்பட்டால் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காக அவர் அந்த விஷயத்தைச் சொல்லாமல் இருந்திருக்க வேண்டும். அது சரி, அவர் பிரசுரங்களை மறைத்து வைக்க வேண்டிய அவசியம்? கேஜிபி என அழைக்கப்பட்ட சோவியத் நாட்டுப் பாதுகாப்புக் குழுவினர், மத சம்பந்தமான பிரசுரங்களைக் கைப்பற்றுவதற்காக யெகோவாவின் சாட்சிகளுடைய வீடுகளில் அதிரடி சோதனைகளை நடத்திவந்தனர். ஒருவேளை கேஜிபி அதிகாரிகள் எல்லாப் பிரசுரங்களையும் கைப்பற்றிவிட்டாலும், சக விசுவாசிகளுக்கு ஆன்மீக உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காகச் சகோதரர் வார்டியா அவற்றை மறைத்து வைத்திருக்கலாம். இதற்குமுன், 1990-ன் கோடைகாலத்தில் இதுபோன்ற மறைவிடங்களிலிருந்து பிரசுரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் ஒன்று எஸ்டோனியாவின் தென்பகுதியில் அமைந்துள்ள டார்ட்டூ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அதையும் சகோதரர் வார்டியாதான் மறைத்து வைத்திருந்தார்.
இந்தக் கண்டுபிடிப்புகளை நாம் ஏன் பொக்கிஷங்கள் என அழைக்கிறோம்? கஷ்டப்பட்டுக் கையாலேயே எழுதப்பட்டு, கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்தப் பிரதிகள், அன்றைய யெகோவாவின் சாட்சிகள் ஆன்மீக உணவுக்கு எந்தளவு போற்றுதல் காண்பித்தார்கள் என்பதற்கு அருமையான எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. (மத். 24:45) உங்களுக்குக் கிடைத்து வருகிற ஆன்மீகப் பிரசுரங்களுக்கு நீங்கள் போற்றுதல் காட்டுகிறீர்களா? அத்தகைய ஆன்மீகப் பொக்கிஷங்களில் காவற்கோபுர பத்திரிகையும் அடங்கும்; இந்தப் பத்திரிகை தற்போது எஸ்டோனியன் மொழி உட்பட 170 மொழிகளுக்கும் மேலாக வெளிவருகிறது.