முயற்சி திருவினையாக்கும்!
பிள்ளைச் செல்வங்களை ‘யெகோவாவுக்கு ஏற்ற முறையில் கண்டித்து, அவருடைய சிந்தையை அவர்களுடைய மனதில் பதிய வைக்கும் விதத்தில் வளர்க்க’ வேண்டும்; இதற்கு, குடும்ப வழிபாடும் பைபிள் படிப்பும் இன்றியமையாதவை. (எபே. 6:4) பிள்ளைகளுக்கு எவ்வளவு சீக்கிரத்தில் சலிப்பு தட்டிவிடும் என்பது பெற்றோரான உங்களுக்கு நன்றாகவே தெரியும். அப்படியானால், அவர்களுடைய கவனத்தைச் சிதறவிடாமல் ஈர்த்துப் பிடிப்பது எப்படி? பெற்றோர் சிலர் எடுத்த முயற்சிகள் இதோ:
“எங்க பிள்ளைகள் சிறியவர்களாக இருந்த சமயத்தில், குடும்பப் படிப்பு சுவாரஸ்யமாக இருப்பதற்கு நானும் என் மனைவியும் வித்தியாச வித்தியாசமான முறைகளைப் பயன்படுத்தினோம்” என்று அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜார்ஜ் சொல்கிறார். “சில சமயம் என்னுடைய பைபிள் கதை புத்தகத்திலிருந்து ஒரு கதையை வாசிக்கும்போது பைபிள் கதாபாத்திரங்களைப் போல ‘டிரஸ்’ போட்டுக்கொண்டு அதை நடித்துக் காட்டுவோம். நாடகத்திற்காக வாள், செங்கோல், கூடை எல்லாம் நாங்களே செய்வோம். ‘நான் யார் தெரியுமா?’ விளையாட்டில், பைபிள் கதாபாத்திரங்களை ஊமையாக நடித்துக் காட்டி கண்டுபிடிக்கச் சொல்வோம். பைபிள் போர்ட் கேமில் சுலபமான... கடினமான... கேள்விகளைக் கேட்போம். நோவா கட்டிய பேழையின் ஒரு ‘மாடலை’ உண்டாக்குவது அல்லது பைபிள் நிகழ்வுகளை காலவரிசைப்படி வரைவது போன்ற ‘புராஜெக்ட்களை’ செய்தோம். சில நேரங்களில் பைபிள் கதாபாத்திரங்களை அல்லது கதைகளைப் படமாக வரைவோம். இப்போது, எபேசியர் 6:11-17-ல் விவரிக்கப்பட்டுள்ள ஆன்மீகக் கவசத்தை வரையும் ‘புராஜெக்ட்’ வைத்திருக்கிறோம்; ஒவ்வொரு கவசமும் எதைக் குறிக்கிறது என்று நாங்கள் ஒவ்வொருவரும் விளக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்ததால் எங்கள் குடும்ப படிப்பு சுவாரஸ்யமாக இருந்திருக்கிறது.”
அமெரிக்காவில் மிக்சிகனைச் சேர்ந்த டெபி என்ற ஒரு தாய் ஆர்வம் பொங்க இவ்வாறு சொல்கிறார்: “எங்கள் மகளுக்குக் கிட்டத்தட்ட மூன்று வயது இருந்தபோது, அவளைக் கவனித்துக் கேட்க வைப்பதற்காக நானும் என் கணவரும் ரொம்ப சிரமப்பட்டோம். ஒரு நாள், என்னுடைய பைபிள் கதை புத்தகத்திலிருந்து ஈசாக்கு - ரெபேக்காள் கதையைச் சத்தமாக வாசித்தபோது, இரண்டு பொம்மைகளைக் கையில் வைத்துக்கொண்டு அவை பேசிக்கொள்வதைப் போல ஆட்டி காண்பித்தேன். இப்போதெல்லாம் ஒவ்வொரு வார்த்தையையும் அவள் நன்கு கவனிக்கிறாள்! அதற்குப் பிற்பாடு அந்த இரண்டு பொம்மைகளும் பல்வேறு பைபிள் கதாபாத்திரங்களாக மாறின. நாங்கள் ஒரு கதையை வாசித்த பின்பு, அந்தக் கதைக்காக அவள் வீடு முழுக்க தேடி பொம்மைகளையும் மற்ற பொருட்களையும் கொண்டுவருவாள். அது ஒரு புதையல் வேட்டை போல் இருந்தது! ஒரு ‘ஷூ பாக்ஸும்’ ஒரு சிகப்பு ‘ரிப்பனும்’தான் ராகாபின் வீடு! ஐந்து அடி நீளமுள்ள பாம்பு பொம்மையைச் செய்து, துடைப்பக்கட்டையில் சுற்றி வைத்தால் அதுதான் எண்ணாகமம் 21:4-9-ல் உள்ள வெண்கலப் பாம்பு. இந்தப் பொருட்களையெல்லாம் ஒரு பெரிய பையில் வைப்போம். என் மகள் நடு வீட்டில் உட்கார்ந்து அந்த ‘பைபிள் கதை பையில்’ உள்ள பொம்மைகளையெல்லாம் தேடித்தேடி எடுப்பதைப் பார்ப்பதே அலாதி இன்பம்தான்! அந்தப் பொம்மைகளை வைத்து அவளுடைய மழலை மொழியில் நடித்துக் காட்டுவதைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துப்போவோம்.”
பிள்ளைகளை வளர்ப்பது சாமானிய விஷயமல்ல. ஆகவே, யெகோவாவைச் சேவிக்க வேண்டுமென்ற ஆசையை அவர்களுக்கு ஊட்டி வளர்க்க வாராவாரம் படிப்புகள் நடத்தினால் மட்டும் போதாது. ஆன்மீக விஷயங்களை கூடுதலாய்க் கற்றுக்கொடுக்க குடும்ப வழிபாடும் பைபிள் படிப்பும் அவர்களுக்கு அஸ்திவாரமாய் இருக்கும். ஆம், முயற்சி திருவினையாக்கும்!