‘என் வார்த்தைகளைக் கடைப்பிடியுங்கள்’
“நீங்கள் எப்போதும் என் வார்த்தைகளைக் கடைப்பிடித்தால் நிஜமாகவே என் சீஷர்களாக இருப்பீர்கள்; சத்தியத்தைத் தெரிந்துகொள்வீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.”—யோவான் 8:31, 32.
இதன் அர்த்தம்: ‘வார்த்தைகள்’ என்று இயேசு சொன்னது அவருடைய போதனைகளைக் குறிக்கிறது. அந்தப் போதனைகள் கடவுளிடமிருந்து வந்தது. ஏனென்றால், “நான் சொந்தமாகப் பேசவில்லை, நான் எதைப் பேச வேண்டுமென்றும் எதைக் கற்பிக்க வேண்டுமென்றும் என்னை அனுப்பிய தகப்பனே எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்” என்று இயேசு சொன்னார். (யோவான் 12:49) பரலோகத்தில் இருக்கிற தன்னுடைய தகப்பன் யெகோவாவிடம் ஜெபம் செய்தபோது, “உங்களுடைய வார்த்தைதான் சத்தியம்” என்று அவர் சொன்னார். தன்னுடைய போதனைகளுக்கு ஆதாரமாக அடிக்கடி அவர் கடவுளுடைய வார்த்தையைத்தான் மேற்கோள் காட்டினார். (யோவான் 17:17; மத்தேயு 4:4, 7, 10) உண்மையான கிறிஸ்தவர்கள், பைபிளைக் கடவுளுடைய வார்த்தை என்றும், “சத்தியம்” என்றும் நம்புகிறார்கள். எல்லா விஷயத்திலும் அதில் சொல்லியிருக்கிற மாதிரியே நடந்துகொள்கிறார்கள். இப்படிச் செய்வதன் மூலமாக அவர்கள் ‘இயேசுவின் வார்த்தைகளைக் கடைப்பிடிக்கிறார்கள்.’
ஆரம்பகால கிறிஸ்தவர்கள் கடவுளுடைய வார்த்தையை மதித்தார்கள்: நிறைய பைபிள் புத்தகங்களை எழுதின அப்போஸ்தலன் பவுல், இயேசு மாதிரியே கடவுளுடைய வார்த்தையை மதித்தார். “வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவை . . . பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன” என்று அவர் எழுதினார். (2 தீமோத்தேயு 3:16) கிறிஸ்தவ சபையில் மற்றவர்களுக்குப் போதிக்கும் பொறுப்பில் இருந்தவர்கள், ‘சத்திய வார்த்தையை [நம்பகமான வார்த்தையை, அடிக்குறிப்பு] உறுதியோடு பிடித்துக்கொண்டிருக்க’ வேண்டியிருந்தது. (தீத்து 1:7, 9) ஆரம்பகால கிறிஸ்தவர்கள் ‘தத்துவங்களையும் வஞ்சனையான வீண் கருத்துகளையும்’ தவிர்க்க வேண்டியிருந்தது. ஏனென்றால், “அவை மனித பாரம்பரியங்களையும் இந்த உலகத்தின் அடிப்படைக் காரியங்களையும்தான் சார்ந்திருக்கின்றன, கிறிஸ்துவின் போதனைகளைச் சார்ந்தில்லை.”—கொலோசெயர் 2:8.
இன்று யார் பைபிளை மதிக்கிறார்கள்? “பரிசுத்த வேதாகமத்தை வைத்து மட்டுமே [கத்தோலிக்க] சர்ச் அதன் போதனைகளைத் தீர்மானிப்பதில்லை. அதனால், பரிசுத்த வேதாகமத்தை மட்டுமல்ல, புனித பாரம்பரியத்தையும் நாம் விசுவாசத்தோடும் பயபக்தியோடும் ஏற்றுக்கொண்டு மதிக்க வேண்டும்” என்று கத்தோலிக்க சர்ச்சின் திருமறை (ஆங்கிலம்) சொல்கிறது. கனடாவைச் சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் ஒருவர், “இன்று நம்மை வழிநடத்துவதற்கு இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் ஒலித்த ‘புரட்சியின்’ குரல் எதற்கு? நம்மிடம் அருமையான கருத்துகள் இருக்கின்றன. ஆனால், இந்தக் கருத்துகளை எப்போது பார்த்தாலும் இயேசுவோடும் பைபிளோடும் இணைக்க வேண்டியிருப்பதால் அவற்றின் வலிமையே போய்விடுகிறது” என்று சொன்னதாக மெக்லீன்ஸ் பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருந்தது.
அதேசமயம், “[யெகோவாவின் சாட்சிகளுடைய] நம்பிக்கைகள் எல்லாமே பைபிள் அடிப்படையில்தான் இருக்கின்றன. அதில் சொல்லியிருக்கிற மாதிரிதான் அவர்கள் நடந்துகொள்கிறார்கள்” என்று புதிய கத்தோலிக்க என்ஸைக்ளோப்பீடியா (ஆங்கிலம்) சொல்கிறது. சமீபத்தில், கனடாவில் யெகோவாவின் சாட்சியாக இருக்கும் ஒரு பெண் தன்னை ஒருவரிடம் அறிமுகப்படுத்தியபோது அவர் குறுக்கிட்டு, “நீங்கள் யார் என்று எனக்கு ஏற்கெனவே தெரியும்” என்று சொன்னார். அந்தப் பெண் பைபிளைப் பயன்படுத்திப் பேசுவதைப் பார்த்தே அவர் ஒரு யெகோவாவின் சாட்சி என்று புரிந்துகொண்டார்.