“தாராள குணமுள்ளவன் ஆசீர்வதிக்கப்படுவான்”
பலிகள் செலுத்துவது, ரொம்பக் காலமாகவே உண்மை வணக்கத்தின் ஒரு முக்கியமான பாகமாக இருந்திருக்கிறது. இஸ்ரவேலர்கள் மிருக பலிகளைச் செலுத்தினார்கள். ஆனால், கிறிஸ்தவர்கள் எப்போதும் “புகழ்ச்சிப் பலியை” செலுத்திவருவது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். இருந்தாலும், கடவுளுக்குப் பிரியமான மற்ற பலிகளும் இருக்கின்றன. (எபி. 13:15, 16) இந்தப் பலிகளைச் செலுத்தும்போது சந்தோஷமும் ஆசீர்வாதங்களும் கிடைப்பதைப் பின்வரும் உதாரணங்கள் காட்டுகின்றன.
அன்று கடவுளுக்கு உண்மையோடு சேவை செய்த அன்னாள், தனக்கு ஒரு மகன் வேண்டுமென்று ஆசைப்பட்டாள். ஆனால், அவளுக்குக் குழந்தை பாக்கியம் இல்லாததால் அவள் யெகோவாவிடம், “ஒரு ஆண்குழந்தையைக் கொடுங்கள். யெகோவாவே, அவனை வாழ்நாள் முழுக்க உங்களுக்கே அர்ப்பணித்துவிடுகிறேன்” என்று நேர்ந்துகொண்டாள். (1 சா. 1:10, 11) பிற்பாடு, அன்னாள் கர்ப்பமாகி, சாமுவேல் என்ற மகனைப் பெற்றெடுத்தாள். சாமுவேல் தாய்ப்பால் மறந்தவுடனே, அன்னாள் தன்னுடைய நேர்த்திக்கடனைச் செலுத்துவதற்காக அவனை வழிபாட்டுக் கூடாரத்துக்குக் கொண்டுபோய் விட்டாள். அன்னாள் செய்த அந்தத் தியாகத்துக்காக யெகோவா அவளை ஆசீர்வதித்தார். அவளுக்கு இன்னும் ஐந்து பிள்ளைகள் பிறந்தார்கள். சாமுவேல் ஒரு தீர்க்கதரிசியாகவும் பைபிள் எழுத்தாளர்களில் ஒருவராகவும் ஆனார்.—1 சா. 2:21.
அன்னாளையும் சாமுவேலையும் போல இன்று கிறிஸ்தவர்களுக்கும், தங்களுடைய வாழ்க்கையைக் கடவுளுடைய சேவைக்காக அர்ப்பணிக்கும் பாக்கியம் இருக்கிறது. யெகோவாவின் வணக்கத்துக்காக நாம் எப்படிப்பட்ட தியாகங்களைச் செய்தாலும் அதற்கான ஆசீர்வாதங்கள் ஏராளமாகக் கிடைக்கும் என்று இயேசு வாக்குக் கொடுத்தார்.—மாற். 10:28-30.
முதல் நூற்றாண்டில், தொற்காள் என்ற ஒரு கிறிஸ்தவப் பெண் “நிறைய நல்ல காரியங்களையும் தானதர்மங்களையும் செய்துவந்தாள்.” அதாவது, மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக நிறைய தியாகங்கள் செய்தாள். “ஒருநாள் அவள் உடல்நிலை சரியில்லாமல் இறந்துபோனாள்.” அப்போது, சபையில் இருந்தவர்கள் மிகவும் வேதனைப்பட்டார்கள். பேதுரு அந்தப் பகுதியில் இருந்ததை சீஷர்கள் கேள்விப்பட்டபோது, அவரைச் சீக்கிரமாக வரச் சொன்னார்கள். பேதுரு வந்து தொற்காளை உயிரோடு எழுப்பியபோது அவர்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்! ஒரு அப்போஸ்தலர் செய்த உயிர்த்தெழுதலைப் பற்றிய முதல் பதிவு இதுதான்! (அப். 9:36-41) தொற்காள் செய்திருந்த தியாகங்களைக் கடவுள் மறக்கவில்லை. (எபி. 6:10) அவள் காட்டிய தாராள குணத்தை நாம் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான் அதைப் பற்றிக் கடவுளுடைய வார்த்தையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மற்றவர்களுக்காகத் தாராளமாக நேரம் செலவிடுவதிலும், அவர்கள்மேல் அக்கறை காட்டுவதிலும் அப்போஸ்தலன் பவுல்கூட நமக்கு அருமையான முன்மாதிரி வைத்திருக்கிறார். கொரிந்துவிலிருந்த தன்னுடைய கிறிஸ்தவ சகோதரர்களுக்கு எழுதியபோது, “என்னிடம் இருப்பவற்றை உங்களுக்காகச் சந்தோஷமாய்ச் செலவு செய்வேன், என்னையே முழுவதும் உங்களுக்காக அர்ப்பணிப்பேன்” என்று சொன்னார். (2 கொ. 12:15) மற்றவர்களுக்காகத் தங்களையே தியாகம் செய்பவர்களுக்கு, மனத்திருப்தி மட்டுமல்ல, அதைவிட முக்கியமாக யெகோவாவின் ஆசீர்வாதமும் அங்கீகாரமும் கிடைக்கிறது என்பதை பவுல் தன்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டார்.—அப். 20:24, 35.
கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்காகவும், சகோதர சகோதரிகளுக்காகவும் நம்முடைய நேரத்தையும் சக்தியையும் பயன்படுத்தும்போது யெகோவா சந்தோஷப்படுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், ஊழிய வேலைக்கு ஆதரவு தருவதற்கு வேறு வழிகளும் இருக்கின்றன. அன்பான செயல்களைச் செய்வதோடு, மனப்பூர்வமாக நன்கொடைகள் கொடுப்பதன் மூலமும் நாம் கடவுளை மகிமைப்படுத்தலாம். உலகம் முழுவதும் நடக்கிற ஊழிய வேலையை ஆதரிக்க அந்த நன்கொடைகள் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணத்துக்கு, மிஷனரிகளையும் மற்ற விசேஷ முழுநேர ஊழியர்களையும் ஆதரிப்பதற்கு அவை பயன்படுத்தப்படுகின்றன. அதோடு, பிரசுரங்கள் மற்றும் வீடியோக்களைத் தயாரிக்கவும் மொழிபெயர்க்கவும், நிவாரண வேலைகளைக் கவனித்துக்கொள்ளவும், புதிய ராஜ்ய மன்றங்களைக் கட்டவும் அவை பயன்படுத்தப்படுகின்றன. “தாராள குணமுள்ளவன் ஆசீர்வதிக்கப்படுவான்” என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நம்முடைய மதிப்புமிக்க பொருள்களை யெகோவாவுக்குக் கொடுக்கும்போது நாம் அவரை மகிமைப்படுத்துகிறோம்.—நீதி. 3:9; 22:9.
a இந்தியாவில், “Jehovah’s Witnesses of India” என்ற பெயரில் நன்கொடைகளை அனுப்ப வேண்டும்.
b இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கிறவர்கள், www.jwindiagift.org வெப்சைட்டைப் பயன்படுத்தி நன்கொடை கொடுக்கலாம்.
c முடிவான தீர்மானத்தை எடுப்பதற்கு முன்பு உங்கள் நாட்டின் கிளை அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுங்கள்.
d ‘மதிப்புமிக்க பொருள்களால் யெகோவாவை கனம்பண்ணுங்கள்’ என்ற ஆவணம் இந்தியாவில் ஆங்கிலம், கன்னடம், குஜராத்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கிடைக்கிறது.