ஒரு பெரிய பொக்கிஷத்தைக்கண்டுணர மற்றவர்களுக்கு உதவிசெய்தல்
1 மற்றவர்களுக்கு நாம் ராஜ்யத்தின் நற்செய்தியைப்பற்றி பிரசங்கிக்கும்போது, நம்முடைய இலக்குகளில் ஒன்று கடவுளுடைய வார்த்தையின் மேம்பட்ட மதிப்பை நேர்மை இருதயமுள்ளவர்கள் மதித்துணருவதற்கு உதவிசெய்வதாக இருக்கவேண்டும். (பிலி. 3:8) பைபிள் அடிப்படையிலான நம்முடைய பிரசுரங்கள் ராஜ்ய செய்தியைப் பரப்புவதில் ஒரு முக்கியப் பாகத்தை வகிக்கிறது. உதாரணமாக, என்றும் வாழலாம் புத்தகம் லட்சக்கணக்கான மக்கள் தாங்கள் கற்றிருக்கிற பைபிள் சத்தியங்களின் பலனாக யெகோவாவை சேவிப்பதற்கு உதவியிருக்கிறது.
2 நம்முடைய ஊழியமானது, பிரசுரங்களை எடுத்துக்கொள்ள விருப்பமுள்ள எவரிடமும் வெறுமனே அவற்றை விட்டுவருவதைவிட அதிகத்தை உட்படுத்துகிறது. நாம் அந்தச் செய்தியைக் கவரத்தக்க விதத்தில் அறிமுகப்படுத்தவேண்டும்; வீட்டுக்காரர் சொல்வதற்குப் பகுத்துணர்வுடன் செவிகொடுத்துக் கேளுங்கள், பிறகு ‘வேதவசனங்களிலிருந்து நியாயங்களை எடுத்துக்காண்பிப்பதற்கு’ தயாராயிருங்கள்.—அப். 17:2.
3 இது எவ்வாறு செய்யப்படலாம்? நம்முடைய முன்னுரைகள், வீட்டுக்காரர் பைபிளிலும் அதன் செய்தியிலும் உண்மையிலேயே அக்கறையுள்ளவராய் இருக்கிறாரா என்பதைக் காட்டுவதற்கு வழியைத் திறக்கலாம்.
நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “இன்றைக்கு இந்த உலகத்தில் நம்மைச்சுற்றி நடந்துகொண்டிருக்கிற காரியங்களின் அர்த்தத்தைப்பற்றி கலந்துபேசுவதற்காக நாங்கள் சந்திக்கிறோம். அநேக மக்கள் மத்தியில், கடவுளிலும் பைபிளில் கொடுக்கப்பட்டுள்ளபடி வாழ்வதற்கான அவருடைய தராதரங்களிலும் உள்ள அக்கறையானது படிப்படியாகக் குறைந்துவந்திருக்கிறது. இது ஒருவரோடொருவரிடமாக உள்ள மக்களின் மனப்பான்மையைப் பெருமளவுக்குச் செல்வாக்குச் செலுத்தியிருக்கிறது. நீங்கள் இதைக் கவனித்திருக்கிறீர்களா? [குறிப்புக்காக அனுமதியுங்கள். திட்டவட்டமான சம்பவங்களை நீங்கள் குறிப்பிடலாம்.] தயவுசெய்து 2 தீமோத்தேயு 3:1-5-ல் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்களுடைய மனப்பான்மையைக் கவனித்து, இது இன்றைய உலகத்திலுள்ள மனப்பான்மையைப் போன்று இருக்கிறதா என்பதை எனக்குச் சொல்லுங்கள். [வாசிக்கவும்; குறிப்புகளுக்காக அனுமதியுங்கள்.] எதிர்காலத்தில் மேம்பட்ட நிலைமைகள் வரும் என்று எதிர்பார்ப்பதற்கு நல்ல காரணமிருக்கிறதா?” அக்கறை காட்டப்பட்டால், என்றும் வாழலாம் புத்தகத்தில் பக்கங்கள் 12 மற்றும் 13-ன் படத்தைக் குறிப்பிட்டு, பத்திகள் 12-க்கும் 13-க்கும் கவனத்தைத் திருப்புங்கள். அக்கறை மட்டுப்பட்டதாய் இருக்குமானால், சமாதானமான புதிய உலகம் துண்டுப்பிரதியை அளிக்கலாம்.
4 கதவருகில் ஒரு பெற்றோர் வருவாரானால், நம்முடைய சம்பாஷணையை நாம் இவ்வாறு தொடங்கலாம்:
◼ “குடும்ப வாழ்க்கைப் பிரச்னைகளை நாம் எவ்வாறு திறம்பட்ட விதமாகச் சமாளிக்கலாம் என்பதில் அக்கறையுள்ள மக்களிடம் நாங்கள் பேசிவருகிறோம். நாம் அனைவரும் நம்மால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்ய முயற்சிக்கிறோம், ஆனால் நமக்குப் பேரளவான வெற்றியைக் கொடுக்கக்கூடிய ஏதாவதொன்று இருக்குமானால், நாம் அக்கறையுள்ளவர்களாய் இருப்போம் அல்லவா? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] கொலோசெயர் 3:12-14-ல் காணப்படுகிறபடி, பைபிளானது இந்த விஷயத்தில் வழிநடத்துதலைக் கொடுக்கிறது. [வாசிக்கவும்.] ஆகவே, ஒரு வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையை அனுபவிப்பதற்கு என்ன தேவை? இந்தப் பிரசுரத்தில் ‘குடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல்’ என்று தலைப்பிடப்பட்ட இந்த அதிகாரத்தில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள்.” என்றும் வாழலாம் புத்தகத்தில் பக்கங்கள் 238-லுள்ள 3-வது பத்தியை வாசியுங்கள். வீட்டுக்காரர் வேலையாக இருப்பாராகில் அல்லது உடனடியாக பிரதிபலிக்கவில்லையென்றால், குடும்ப விஷயங்களைப்பற்றி கலந்தாலோசிக்கிற சமீபத்திய ஒரு பத்திரிகையையோ குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவியுங்கள் என்ற துண்டுப்பிரதியையோ அளிப்பதற்கு முயற்சிசெய்யுங்கள்.
5 நாம் ராஜ்யத்தைப் பற்றிய முழுமையான சாட்சி கொடுப்பதில் நம்முடைய நோக்கத்தின் காட்சியை ஒருபோதும் இழந்துவிட விரும்புகிறதில்லை. (மத். 24:14) பைபிளையும் நமக்கு கிடைக்கக்கூடிய தேவராஜ்ய பிரசுரங்களின் அருமையமான ஏற்பாடுகளையும் நன்றாகப் பயன்படுத்துவதன் மூலம், முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் காலங்களின்போது யெகோவாவுடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் அவருடைய ஆசீர்வாதத்திற்காக நாம் அவரை நம்பிக்கையோடு நோக்கியிருக்கலாம்.—கலா. 6:9.