‘கர்த்தருக்குள் கடினமாய் உழைக்கும் பெண்கள்’
1 இந்த வார்த்தைகளிலேயே பவுல், திரிபேனாளையும் திரிபோசாளையும் விவரித்தார். அவர்கள் ரோம சபையைச் சேர்ந்த கடின உழைப்பாளிகளாயிருந்த இரண்டு சகோதரிகள். “கர்த்தருக்குள் மிகவும் பிரயாசப்பட்ட” பெர்சியாள் என்ற மற்றொரு சகோதரியைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார். பெபேயாள் என்ற மற்றொரு சகோதரிக்கு, ‘அநேகருக்கு ஆதரவாயிருந்தவள்’ என்று சர்டிபிகேட் கொடுத்தார். (ரோ. 16:2, 12) தொற்காள், “நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள்” என்று பைபிள் அவரைப் பற்றி உயர்வாக பேசுகிறது. (அப். 9:36) ஆவிக்குரிய பெண்களால் ஒரு சபைக்குத்தான் எவ்வளவு ஆசீர்வாதம்!
2 நம் சபையிலுள்ள கடினமாய் உழைக்கும் சகோதரிகளை நாம் பாராட்டுகிறோமா? பிரசங்க வேலையில் பெரும்பகுதியை செய்வதும், பைபிள் படிப்புகளில் பெரும்பாலானவற்றை நடத்துவதும், புதியவர்களில் அநேகருக்கு உதவுவதும் இவர்களே. பிள்ளைகள் ஆவிக்குரிய முன்னேற்றம் செய்வதற்கும் இவர்கள் அதிகமான நேரத்தை செலவிடுகின்றனர். சபையில் அன்பு, சந்தோஷம், சமாதானம், வைராக்கியம் போன்ற கனிகளை வளர்க்க கிறிஸ்தவ பெண்கள் பெரிதும் உதவுகின்றனர். இவர்களுடைய கணவன்மார்களும் குடும்பத்திலுள்ள மற்றவர்களும் யெகோவாவின் சேவையில் அதிகத்தை செய்ய இவர்கள் அநேக விதங்களில் ஆதரவளிக்கின்றனர்.
3 முழுநேர ஊழியத்திலுள்ள சகோதரிகள்: கர்த்தருக்குள் கடினமாய் உழைப்பவர்களுள் பயணக் கண்காணிகளின் மனைவிகளும் அடங்குவர். இவர்களில் அநேகர் தாங்கள் செல்லும் சபைகளில் ஊழிய வேலை வேகமாக முன்னேற அதிகம் உதவியிருக்கின்றனர். அவர்களுடைய கணவன்மார்கள் சந்திக்கும் சபைகளில் இவர்கள் ஊழியத்தில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு அநேக சகோதரிகளை உற்சாகப்படுத்துகின்றனர். பெத்தேலில் சேவைசெய்யும் சகோதரிகளையும் நாம் மறந்துவிடக்கூடாது. யெகோவாவின் அமைப்பை ஆதரிக்க அவர்கள் வைராக்கியத்தோடு பரிசுத்த சேவை செய்கின்றனர். ஒழுங்கான பயனியர்களாக சேவிக்கும் நம் சகோதரிகளும் கடவுளைத் துதிக்க உண்மையான முயற்சி எடுப்பதால் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள ஆயிரக்கணக்கானோருக்கு உதவுகின்றனர்.
4 உண்மையுள்ள இந்தப் பெண்கள் சுயதியாக வாழ்க்கை வாழ்கின்றனர், அதன் காரணமாக பேரளவான மன திருப்தியையும் அடைகின்றனர். (1 தீ. 6:6, 8) அவர்கள் நம் பாராட்டுக்குரியவர்கள். தேவையான உற்சாகத்தையும் நம்முடைய ஆதரவையும் பெறுவதற்கும் அவர்கள் தகுதியானவர்களே.
5 கிறிஸ்தவ பெண்கள் யெகோவாவின் அமைப்பிற்கு விலையுயர்ந்த ஒரு சொத்து. அவர்களுடைய உண்மையுள்ள சேவை அனைவருக்கும் ஆசீர்வாதமாக உள்ளது. இப்படிப்பட்ட பெண்களை நாம் தொடர்ந்து போற்றுவோமாக. இவர்கள் ‘கர்த்தருக்குள் கடினமாய் உழைக்கையில்’ யெகோவா இவர்களை தொடர்ந்து ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போமாக.