உங்களுக்கு அறிவொளியூட்டி ஊக்கமளிக்கும் வீடியோ!
அது ஏப்ரல் 1951-ம் ஆண்டு. முன்னாள் சோவியத் யூனியனிலிருந்த ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகளை குடும்பம் குடும்பமாக ஒன்றுதிரட்டி சரக்கு வண்டிகளில் அடைத்து சைபீரியாவிற்கு நாடுகடத்தினார்கள். அவர்களை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்ட பலம் வாய்ந்த சோவியத் அரசாங்கம் ஏன் விடாப்பிடியாக உறுதிபூண்டிருந்தது? பல வருடங்களாக கொடிய துன்புறுத்துதலுக்கு ஆளானபோதிலும் நம் சகோதரர்கள் எப்படி வெற்றி பெற்று உயிர் தப்பினார்கள்? இதற்கான பதிலை சோதனைகளின் மத்தியிலும் உண்மையாயிருத்தல்—சோவியத் யூனியனில் யெகோவாவின் சாட்சிகள் என்ற ஆங்கில வீடியோவில் காணலாம். இதை பார்ப்பதன் மூலம் எந்த சந்தர்ப்பத்திலும் யெகோவாவுக்கு உண்மையுடன் நிலைத்திருக்க அறிவொளியூட்டும் இந்த விஷயங்கள் உங்களுக்கு உற்சாகமளிக்கட்டும்!
உங்களால் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமா? (1) ரஷ்யாவில் முதன்முறையாக யெகோவாவின் சாட்சிகள் எப்போது முறைப்படி அங்கீகாரம் பெற்றார்கள்? (2) இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்னும் பின்னும், ஆயிரக்கணக்கில் சாட்சிகளின் குடும்பங்கள் சோவியத் யூனியனில் பெருகியது எப்படி? (3) லெனினுடைய தத்துவத்தோடு அவர்களுடைய நம்பிக்கை எப்படி நேரடியாக முரண்பட்டது? (4) ஆப்பரேஷன் நார்த் (Operation North) என்றால் என்ன, இதன் மூலம் எதை நிறைவேற்றும் நம்பிக்கை ஸ்டாலினுக்கு இருந்தது? (5) சாட்சிகளுக்கு நாடுகடத்துதல் எதை அர்த்தப்படுத்தியது, அதை தவிர்க்க என்ன செய்யும்படி அவர்களிடம் சொல்லப்பட்டது? (6) சைபீரியாவிற்கு செல்லும் நீண்ட பயணத்தின்போது, நம் சகோதர சகோதரிகள் எவ்வாறு ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தினார்கள், அது அவர்களை சிறை பிடித்தவர்களை எவ்வாறு ஆச்சரியப்படுத்தியது? (7) சாட்சிகள் சைபீரியாவில் என்ன அவலநிலையை சகித்தார்கள்? (8) யெகோவாவின் மக்கள் எந்த ஆவிக்குரிய ஏற்பாட்டை உயர்வாக மதித்தார்கள், ஏன்? (9) பத்திரிகைகளை பெற்றுக் கொள்வதற்காக நம்முடைய சகோதரர்கள் ஏன் தங்கள் உயிரையும் பணயம் வைக்க துணிந்தார்கள், அதை தடுக்க உயர் அதிகாரிகள் எடுத்த இரக்கமற்ற செயல்களின் மத்தியிலும் எப்படி வெற்றி பெற்றார்கள்? (10) கடவுளுடைய மக்களை குரூஷ்செவ் எப்படி தொடர்ந்து தாக்கினான்? (11) சாட்சிகளுடைய பிள்ளைகளின் விசுவாசத்தை தகர்க்க அரசாங்க அதிகாரிகள் எவ்வாறு முயற்சி செய்தார்கள்? (12) ஏன் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதற்கான காரணத்தை நம்முடைய சகோதரர்கள் எவ்வாறு தெளிவாக புரிந்திருந்தார்கள்? (2002 இயர்புக், பக். 203-4) (13) கடவுளுடைய அமைப்பை பூண்டோடு அழிக்கும் எண்ணத்தில் கையாண்ட உபாயங்கள் துன்புறுத்தியவர்களையே திருப்பி தாக்கியது எவ்வாறு? (2002 இயர்புக், பக். 220-1) (14) முன்னாள் சோவியத் யூனியனில் இருந்த சாட்சிகளுக்கு ஒருகாலத்தில் வெறும் கனவாகவே இருந்த என்ன சம்பவம் இப்போது நிஜமானது? (15) சோதனைகளை சமாளிக்க நம்முடைய சகோதரர்களுக்கு எது உதவியது, வீடியோவில் பார்த்த கடைசி காட்சி எவ்வாறு எரேமியா 1:19-ன் உண்மைத்தன்மையை விளக்கியது? (16) பிரச்சினைகளின் மத்தியிலும் உண்மைத்தன்மையை காத்துக்கொண்ட நிஜ வாழ்க்கை சம்பவங்களிலிருந்து உங்களை கவர்ந்த ஓர் அனுபவத்தைக் கூறுங்கள்.