பத்திரிகை ஊழியத்தில் கலந்துகொள்கிறீர்களா?
1 இந்தியாவில் 18 கோடிக்கும் அதிகமானோர் பத்திரிகைகளையும் செய்தித்தாள்களையும் தவறாமல் வாங்குகின்றனர். இன்னும் கோடிக்கணக்கானோர் அவற்றை வாசிக்கின்றனர். இவர்கள் எல்லாருமே காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளையும் தவறாமல் வாசித்தால் எவ்வளவாக பயனடைவார்கள்! எனவே நாம் பத்திரிகை ஊழியத்தில் ஆர்வத்துடன் கலந்துகொள்ள வேண்டும்.
2 நமது 2004-ம் வருட காலண்டரில் சனிக்கிழமைதோறும் பத்திரிகை ஊழியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கேற்ப, அநேக சபைகள் பத்திரிகை ஊழியத்திற்கென்றே ஒரு நாளை ஒதுக்கியுள்ளன. பத்திரிகை ஊழியத்தின்போது பிராந்தியத்தில் பெருமளவு ஊழியம் செய்ய வாய்ப்பு கிடைக்கிறது; ஒவ்வொரு மாதமும் நம் ராஜ்ய ஊழியத்தில் ஆலோசனையாக கொடுக்கப்பட்டுள்ள பிரசங்க அளிப்புகளுக்கு இசைய சுருக்கமாக பேசுவதால் இது சாத்தியமாகிறது. மற்ற நாட்களில் வீட்டுக்காரர்களுடன் உரையாடுவதற்கு அதிக நேரத்தை நாம் செலவிடலாம்; அப்போது இந்த உலக நிலைமைகளைக் குறித்து பேசி அந்த மாத பிரசுர அளிப்பைக் கொடுக்கலாம்; அல்லது தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில் நடத்தப்படும் பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி சொல்லலாம்.
3 பத்திரிகை ஊழியத்திற்கு சபை ஏற்பாடு செய்கையில் எப்படி ஆதரவளிக்கலாம்?
◼ பத்திரிகைகளை வாசியுங்கள்: தன் வட்டாரத்திலுள்ள பிரஸ்தாபிகளில் சராசரியாக 20 பேரில் ஒருவரே காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் ஒவ்வொரு பிரதியையும் தவறாமல் முழுமையாக வாசித்து வருவதாக பயணக் கண்காணி ஒருவர் அறிக்கை செய்தார். நீங்களும் அப்படி வாசிக்கிறீர்களா? ஒவ்வொரு கட்டுரையையும் வாசிக்கும்போது, ‘இந்தத் தகவல் யாருக்கு அதிக பிரயோஜனமாய் இருக்கும்? ஒரு தாய்க்கா, இந்துவாக இருக்கும் ஒரு பிஸினஸ்மேனுக்கா, ஒரு முஸ்லிம் இளைஞனுக்கா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். பத்திரிகையை அளிக்கும்போது பேசுவதற்கு வசதியாக ஓரிரு குறிப்பை உங்கள் பிரதியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு, அக்குறிப்பின் பேரில் ஆர்வத்தை தூண்டும் ஓரிரு வாக்கியங்களை யோசித்து வையுங்கள்.
◼ திட்டவட்டமான அளவில் பத்திரிகைகளை ஆர்டர் செய்யுங்கள்: பத்திரிகைகளின் ஒவ்வொரு இதழிலும் உங்களுக்கு நிஜமாகவே எத்தனை பிரதிகள் தேவைப்படும் என்பதைக் கணக்கிட்டு, பத்திரிகைகளைக் கையாளும் சகோதரர் மூலம் ஆர்டர் செய்யுங்கள். இப்படிச் செய்வதால், போதுமான அளவு பத்திரிகைகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தவறாமல் கிடைக்கும்.
◼ பத்திரிகை ஊழியம் செய்வதற்காக ஒரு நாளை ஒதுக்குங்கள்: பத்திரிகை ஊழியத்திற்கென்றே சபை ஒதுக்கியிருக்கும் நாட்களில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தினங்களில் ஊழியம் செய்ய தீர்மானித்து, தவறாமல் அதில் கலந்துகொள்ளுங்கள். அவ்வாறு கலந்துகொள்ள உங்களால் முடியாதபோது, வெளி ஊழிய நேரத்தில் சிறிது நேரத்தைத் தெரு ஊழியத்தில் பத்திரிகைகளை அளிப்பதற்காக செலவிடுங்கள்; வீட்டுக்கு வீடு ஊழியத்திலும் சரி, பத்திரிகை மார்க்கத்திலும் சரி, உங்களுக்கு எப்போதெல்லாம் வசதிப்படுமோ அப்போதெல்லாம் பத்திரிகைகளை அளியுங்கள்.
◼ சுருக்கமாக பேசி பத்திரிகைகள் அளிக்க பழகிப் பாருங்கள்: “பத்திரிகைகளைப் பற்றி என்ன சொல்வது” என்ற பகுதியில் ஒவ்வொரு மாதமும் மாதிரி பிரசங்கங்கள் தரப்படுகின்றன. உங்களிடம் பழைய இதழ்களோ, மற்ற மொழிகளில் வெவ்வேறு இதழ்களோ இருந்தாலும்கூட, அந்தந்த மாதத்திற்குரிய இதழ்களை முதலில் அளிக்க திட்டமிடுங்கள்; கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளைப் பின்பற்றி சரளமாக பேசப் பழகிக்கொள்ளுங்கள்.
◼ “காவற்கோபுரம்,” “விழித்தெழு!” பத்திரிகைகளை அளிக்கும் சந்தர்ப்பத்திற்கு காத்திருங்கள்: பயணம் செய்யும்போதோ ஷாப்பிங் செல்லும்போதோ சில பத்திரிகைகளையும் எடுத்துச் செல்லுங்கள். உங்களுடன் வேலை பார்ப்பவர்கள், அக்கம்பக்கத்தார், சக மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் பேசும்போது அவற்றைக் கொடுங்கள்.
4 சபை மூப்பர்கள் எப்படி உதவலாம்?
◼ பத்திரிகை ஊழியத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்: பிராந்தியத்தின் எல்லா பகுதிகளிலும் பத்திரிகை ஊழியத்திற்கென ஏற்பாடு செய்கையில் அநேகரால் அதில் கலந்துகொள்ள முடியும்.
◼ மேய்ப்பு சந்திப்புகளின் மூலம் உதவுங்கள்: சுருக்கமாக பேசி பத்திரிகைகளை அளிக்க குடும்பங்கள் முன்கூட்டியே தயாரிப்பதற்கும் பழகிப் பார்ப்பதற்கும் புத்தகப் படிப்பு கண்காணிகள் மேய்ப்பு சந்திப்புகளின்போது உதவலாம். பத்திரிகை அளிப்பிற்காக நன்கு பழகிப் பார்த்த பிரசங்கம்தான் அநேக பிரஸ்தாபிகளுக்கு முதன்முதலில் ஊழியத்தின்போது பேச உதவியிருக்கிறது.
◼ வெளி ஊழியக் கூட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்: பத்திரிகை ஊழியத்திற்குச் செல்லும் முன், சமீப இதழ்களை அளிக்கும் விதத்தை அனைவருமாக சேர்ந்து 10, 15 நிமிடங்களுக்கு மறுபார்வை செய்யுங்கள்.
◼ பிரஸ்தாபிகளுடன் சேர்ந்து ஊழியம் செய்யுங்கள்: அப்படி செய்யும்போது பத்திரிகைகளை எப்படி திறம்பட அளிக்கலாம் என்பதை அவர்களுக்குக் காண்பிக்க முடிகிறது; புதிய பிரஸ்தாபிகளுக்கு பலன்தரும் பயிற்சியாகவும் அமைகிறது.
5 கோடிக்கணக்கானோருக்கு இன்னும் நற்செய்தி சென்றெட்டவே இல்லை. யாருக்குத் தெரியும், சத்தியத்திடம் அவர்களை வழிநடத்துவதற்குத் தேவையான ஒரு விஷயம் இந்தப் பத்திரிகைகளின் ஒரு பிரதியில் இருக்கலாம்! ஜனங்களிடம் அறிவிக்க அருமையான ஒரு செய்தியை யெகோவா நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார்; இச்செய்தியை அறிவிப்பதில் நம் பத்திரிகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வரும் காலங்களில் இன்னும் அதிகளவில் பத்திரிகைகளை அளிப்பதில் குறியாக இருப்பீர்களா? கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை இந்த வார இறுதியிலேயே பயன்படுத்திப் பார்ப்பீர்களா? அப்படி செய்தால் நீங்கள் அளவிலா ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள்.