நரகம் வாதிக்கும் ஓர் இடமா?
சிலர் ஆம் என்கிறார்கள்; சிலர் இல்லை என்கிறார்கள்; மற்றவர்கள் வெறுமென தெரியாது என்கிறார்கள். ஒருசில நூற்றாண்டுகளுக்கு முன்பு, நரகம் நெருப்பு மிகுந்த இடம், வாதிக்கும் இடம் என்ற நம்பிக்கைக் கிறிஸ்தவ மண்டலம் முழுவதிலும் இருந்துவந்த நம்பிக்கை. இன்று அநேகர் இந்தக் கோட்பாட்டை வெறுத்து, “நரகம் இந்தப் பூமியிலேயே இருக்கிறது,” என்ற வீட்டில் நெய்யப்பட்ட தத்துவத்தை ஏற்றிருக்கின்றனர். உண்மைதான் என்ன? பொல்லாத மக்கள் உண்மையிலேயே நரகத்திற்குச் செல்கின்றனரா? அது வாதிக்கும் ஓர் இடமா?
நரகத்தைக் குறித்து அநேக விவாதங்கள் உண்டு. நரகம் கீழ் உலகில் ஓர் இடம் என்றும் அதில் மனந்திரும்பாத பாவிகள் நிரந்தர வேதனை அனுபவித்தனர் என்றும் இடைக்காலத்தில் நம்பப்பட்டு வந்தது. 13-ம் நூற்றாண்டில் பிறந்த பிரபல கவிஞர் டாம்டே நரகத்தின் பதினோரு வேதனைகள் (The Eleven Pains of Hell) என்ற நூலில் எழுதியதாவது:
“இந்த வாழ்க்கையில் சர்ச்சுக்கு செல்லாதவர்களின் ஆத்துமாக்கள் தொங்கப்படும் எரிந்து கொண்டிருக்கும் மரங்கள் இருக்கின்றன, . . .
“அங்கு ஒரு பெரும் அடுப்பு உள்ளது, அங்கே ஏழு பிசாசுகள் நின்று கொண்டு குற்றமுள்ள ஆத்துமாக்களை அந்தப் பேரடுப்பில் தூக்கி எறிகின்றன. . . .
“குற்றமுள்ள ஆத்துமாக்களுக்கு அமைதி இல்லை.”
இப்படிப்பட்ட ஒரு பயங்கரமான நரகத்தை மைக்கெலாஞ்சலோ, வத்திக்கன் ஸிஸ்டைன் ஆலயத்தில் வரைந்திருக்கிறான். அதை வரையச் சொன்ன போப் பால் III-க்கு அந்தச் சித்திரம் கடுமையான பயத்தை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
கேல்வினும் லூத்தரும் நரகத்தின் பேரில் கத்தோலிக்கர் கொண்டிருந்த கருத்தை ஏற்றனர். இன்றுங்கூட எரிநரகக் கோட்பாடு காக்கப்பட்டு வருகிறது. தி நியு கத்தோலிக்க என்சைக்ளோபீடியா பின்வருமாறு குறிப்பிடுகிறது: “நரகத்தின் முக்கியத் தன்மை, அதன் தாகங்த்தீர்க்காத . . . நித்திய நெருப்பு, ‘தாகந்தீர்க்காத தீ’ அல்லது ‘நித்திய நெருப்பு’ என்று சொல்வதில் என்ன பெருள் அடங்கியிருந்தாலும், அவை அர்த்தமற்றது என்று புறக்கணிக்கப்பட முடியாது.” அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல சுவிசேஷகராகிய பில்லி கிரஹாம் மேலுமாகக் கூறியதாவது: “சொல்லர்த்தமான ஒரு நரகம் குறித்த போதனை அநேகமாகப் பெரிய பெரிய சர்ச்சுகளின் விசுவாசப் பிரமாணங்களிலும் காணப்படுகிறது. . . . நரகம் உண்மையான ஒன்று என்பதாகக் கருதிய கடவுள் மனிதரை நரகத்திலிருந்து மீட்பதற்காகவே தம்முடைய ஒரே பேறான குமாரனை அனுப்பினார்.”
இன்றைய கருத்து என்னவென்றால், நரகத்தின் நெருப்பும் வாதனையும் சொல்லர்த்தமானதல்லவென்றும், ஒருவர் கடவுளிடமிருந்து நடுத்திரமாகக் காணாமற்போன அல்லது தூரமாகப் போன நிலைக்குள்ளாகக்கூடும் என்பதாகும். என்றபோதிலும், போப் ஜான் பால் II-ன் அங்கீகாரத்துடன் பிரசுரிக்கப்பட்ட ஒரு வத்திக்கான் கடிதம் இந்த நம்பிக்கையை மீண்டும் குறிப்பிட்டது, அதாவது, எரிந்து கொண்டிருக்கும் நரகத்திற்கே மனந்திரும்பாத பாவிகள் செல்வார்கள் என்று குறிப்பிட்டு, அதைக் குறித்த சந்தேகங்கள் பரவி வருவதைக் குறித்தும் எச்சரித்தது.
வாழ்க்கையில் பாதிப்புகள்
எரிநரகம் என்ற எண்ணமே ஏராளமான மனவேதனையைக் கொண்டுவந்திருக்கிறது. பில்கிரிம்ஸ் புராக்ரஸ் (யாத்திரிகர் பயணம்) என்ற நூலின் ஆசிரியர் ஜான் பன்யன் ஒன்பது அல்லது பத்து வயது சிறுவனாக இருக்கும்போது, “பயங்கரமான கனவுகளாலும் . . . எரிநரகத்தின் பயங்கரமான வாதனைகளை நினைத்தும் நடுநடுங்கியதாக” எழுதினார். மற்றும் அநேகர் இதுபோன்று பயந்திருக்கின்றனர். தென்னாப்பிரிக்காவின் டர்பிய மனிதன் ஒருவன் கூறுகிறான்: “நான் சிறுவனாயிருந்தபோது நரகம் சம்பந்தமான பயங்கரமான கனவுகளைக் காண்பேன், இரவுகளில் அலறிக்கொண்டு எழுந்திருப்பேன். என்னுடைய அன்புப் பெற்றோர் எனக்கு ஆறுதலளிக்க முயன்றும் பலன் இல்லை.”
எரிநரகம் கோட்பாடு பல நூற்றாண்டுகளாக இளம் மனதுகளில் திணிக்கப்பட்டிருக்கிறது. பிரசங்க பீடங்களிலிருந்து பொழியப்பட்டிருக்கிறது. இந்தக் கோட்பாடு தானே மக்களின் இருதயங்களில் என்ன விளைவை ஏற்படுத்தியுள்ளது. இது அவர்களை அதிக தயவானவர்களாக, அதிக அன்பானவர்களாக, பரிவுள்ளவர்களாக ஆக்கியிருக்கின்றனவா?
பயங்கரமான அந்த மதத் தண்டனைகளை நிறைவேற்றியவர்கள், தங்களுடைய செயலுக்கு பலியான மதப் பேதகர்கள் “இம்மைக்குரிய அக்கினியால் நித்திய அக்கினியிலிருந்து காக்கப்படலாம்” என்று உணர்ந்தனர் என்பதைக் குறிப்பிட்ட பின்பு சரித்திராசிரியரான ஹென்ரி C.லீ, இடைக்கால போப் மதப் புறக்கணிப்பாளர் மீது நடத்தப்பட்ட விசாரணை முறையின் ஒரு சரித்திரம் என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிட்டார்: “தமக்கு விரோதமாகச் செயல்பட்ட தம்முடைய சிருஷ்டிகளில் ஒருவர் மீது நீதியுள்ள சர்வவல்லமையுள்ள கடவுள் நியாயத்தீர்ப்பு நடவடிக்கை எடுப்பாரென்றால், அவருடைய நீதியான வழிகளை மனிதன் கேள்வி கேட்பதற்கில்லை. ஆனால், மனத்தாழ்மையுடன் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றி அப்படிச் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதைக் குறித்துக் களிகூர வேண்டும்.”
மற்றும், ஸ்பானிய சரித்திராசிரியர் பிலிப் பெர்னான்டஸ் ஆரமஸ்டோ கூறுகிறார்: “அத்தாட்சியைப் பெறுவதற்காக அந்த மதத்தலைவர்கள் வாதித்தலைக் கருவியாக பயன்படுத்தியது. கொடுமையான செயல் என்பது உண்மைதான்; ஆனால் மிருகத்தனமான வாதித்தல்களை மனந்திரும்பாத ஒரு மதப் பேதகன் நரகத்தில் அனுபவிக்கப்போகும் வாதனைகளுடன் ஒப்பிட்டு நிதானிக்க வேண்டும்.”—தடித்த எழுத்துக்கள் எங்களுடையது.
நித்திய வாதனை என்ற கோட்பாடு அநேக சர்ச் அங்கத்தினரை நாத்திகர்களாக மாற்றிவிட்டிருக்கிறது. “இது கிறிஸ்தவ போதனைகளிலேயே ஏற்றுக்கொள்வதற்கு மிகக் கடினமான ஒரு போதனை” என்று பில்லி கிரஹாம்கூட ஒப்புக்கொண்டார். ஆனால் இது உண்மையிலேயே பைபிள் ஆதாரம் கொண்ட ஒரு போதனையா?
ஒரு கிறிஸ்தவ மத போதனையா?
“ஆம், அது பைபிளில் இருக்கிறது,” என்று அநேகர் சொல்கிறார்கள். மனிதர்கள் நெருப்பில் எறியப்படுகிறார்கள் என்பதைக் குறித்து பைபிள் பேசுகிறது. ஆனால் பைபிளில் பல இடங்களில் அடையாள அர்த்தம் கொண்ட வார்த்தைகளும் தொடரும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, நெருப்பு சொல்லர்த்தமானதா அல்லது அடையாள அர்த்தம் கொண்டதா? அடையாள அர்த்தமுடையதாயிருப்பின் அது எதைக் குறிக்கிறது?
உதாரணமாக வெளிப்படுத்துதல் 20-ம் அதிகாரம் 15-ம் வசனம் கூறுவதாவது: “ஜீவ புத்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.” ஆனால் வசனம் 14 சொல்வதாவது: “அப்பொழுது மரணமும் பாதாளமும் [“நரகமும்,” ஆங்கிலம்] அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன.” ஒரே புதிராக இருக்கிறதே! நரகம்தானே வாதிக்கப்படுமா? மரணம் என்ற ஒரு நிலைமைதானே எப்படி சொல்லர்த்தமான அக்கினியில் அல்லது நெருப்பில் தள்ளப்படக்கூடும்? வசனம் 14-ன் எஞ்சிய பகுதி வாசிப்பதாவது: “இது [அக்கினிக் கடல்] இரண்டாம் மரணம்.” வெளிப்படுத்துதல் 21:8 இந்தக் குறிப்பை மீண்டும் உரைக்கிறது. “இரண்டாம் மரணம்” என்பது என்ன? “இரண்டாம் மரணம்” குறித்துக் கத்தோலிக்க ஜெருசலேம் பைபிள் பின்வரும் அடிக்குறிப்பைக் கொண்டிருக்கிறது. “நித்திய மரணம். அக்கினி . . . அடையாள அர்த்தமுடையது.” இது மிகவும் சரி, ஏனென்றால் அது முழுமையான அழிவை, அல்லது நிர்மூலத்தைக் குறிக்கிறது.
அக்கறையைத் தூண்டுவதாயிருக்கிறதே! “நரகம்” அழிக்கப்படப்போகிறது! என்றபோதிலும் இங்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை ஹேடீஸ் என்பதைக் கவனியுங்கள். ஸ்ட்ராங்-ன் வசனக் குறிப்பும் பட்டியல் நூலின்படி இது “கல்லறை” என்று அர்த்தம்கொள்கிறது. மரித்தவர்கள் நரகத்திலோ அல்லது ஹேடீஸிலோ உணர்வுள்ளவர்களாக இருக்கிறார்களா அல்லது வாதிக்கப்படுகின்றனரா? பைபிள் பதில் கொடுக்கிறது: “இறந்தவர்களோ ஒன்றும் அறியார்கள். நீ போகவிருக்கிற கல்லறையிலே [நரகத்திலே] செயலுமில்லை; அறிவுமில்லை; ஞானமுமில்லை; கல்வியுமில்லை.”—பிரசங்கி 9:5, 10. கத்தோலிக்கத் தமிழ் மொழிபெயர்ப்பு.
மரித்தவர்கள் ஹேடீஸில் இருந்துகொண்டேயிருப்பார்களா? இல்லை. இயேசுதாமே ஹேடீஸில் அல்லது நரகத்தில் இருந்தார். ஆனால், சர்ச் விசுவாசப் பிரமாணங்களும் பைபிளும் போதிப்பதுபோல அவர் “மூன்றாம் நாளில் உயிர்த்தெழுப்பப்பட்டார். (1 கொரிந்தியர் 15:4; அப்போஸ்தலர் 2:29-32; சங்கீதம் 16:10) மேலும் அவர் மூலமாக “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருக்கப்”போகிறார்கள். (அப்போஸ்தலர் 24:15) ஆக ஹேடீஸ் காலியாக்கப்பட்டு இல்லாமற் போகப்போகிறது.—“அக்கினிக்கடலிலே தள்ளப்படும்.”
என்றபோதிலும் சிலர் பின்வருமாறு கேட்கக்கூடும்: “பிசாசு அக்கினிக்கடலிலே வாதிக்கபடுவான் என்று ஏன் வெளிப்படுத்துதல் 20-ம் அதிகாரம் 10-ம் வசனம் சொல்லுகிறது? நாம் ஏற்கெனவே பார்த்தபடி, அக்கினிக்கடல் அடையாள அர்த்தமுடையது. ஏனென்றால், வாதித்தலுங்கூட அடையாள அர்த்தமுடையது.
பைபிள் காலங்களில் சிறைக்காவலர்கள் சிறைக்கைதிகளைக் கடுமையாக வாதித்தனர், எனவே அவர்கள் “வதைப்போர்” என்று அழைக்கப்பட்டனர். தம்முடைய உவமைகளில் ஒன்றில் இயேசு ஒரு கொடுமையான அடிமையைக் குறித்தும் அவன் ‘உபாதிக்கிறவர்களிடத்தில்’ (கிரேக்கு, பேசனிஸ்டஸ், இதன் அர்த்தம் “வதைப்போர்”; இப்படியாக கத்தோலிக்கத் தமிழ் மொழிபெயர்ப்பு போன்ற பல மொழிபெயர்ப்புகள் குறிப்பிடுகின்றன) ஒப்படைக்கப்பட்டதாகப் பேசினார். எனவே பிசாசும் மற்றவர்களும் “சதா காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்” என்று வெளிப்படுத்துதல் குறிப்பிடும்பொழுது, அவர்கள் முழுமையான அழிவாகிய இரண்டாம் மரணத்தில் நித்தியத்திற்கும் “சிறைப்பட்டிருப்பார்கள்” என்ற அர்த்தம் கொள்கிறது. பிசாசும், ஆதாமிலிருந்து சுதந்தரிக்கப்பட்ட மரணமும், மனந்திரும்பாத துன்மார்க்கரும் நித்தியமாக அழிக்கப்படுவார்கள்—அக்கினிக் கடலில் “சிறைப்படுத்தப்படுவார்கள்” என்று பேசப்படுகிறது.—எபிரெயர் 2:14; 1 கொரிந்தியர் 15:25; சங்கீதம் 37:38-ஐ ஒப்பிடவும்.
பைபிள் பயன்படுத்தும் அடையாள அர்த்தமுள்ள பகுதிகளை மதித்துணருவது தானே பாவிகள் “நரக அக்கினியிலே தள்ளப்படுவதை”யும், “அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்.” என்பதையும் புரிந்துகொள்ள நமக்கு உதவி செய்கிறது. (மாற்கு 9:47, 48) இங்கு “நரக அக்கினி” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தைகளுக்கான கிரேக்க வார்த்தைக் கெயென்னா அல்லது கெஹென்னா. எருசலேமுக்குப் புறம்பே இந்தப் பெயர்கொண்ட ஒரு பள்ளத்தாக்கு இருந்தது, இது ஒரு குப்பைக் கொட்டும் இடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. நகரத்தின் குப்பைக்கூளங்களை எரித்தழிப்பதற்காக அங்கு நெருப்பு எரிந்து கொண்டேயிருந்தது. மரியாதைக்குரிய சவ அடக்கத்திற்கு அல்லது உயிர்த்தெழுதலுக்குத் தகுதியற்றதாக எண்ணப்பட்ட குற்றவாளிகளின் மரித்த உடல்கள்கூட இங்கு எறியப்பட்டன. அழித்தொழிக்கும் ஏதுக்களாக இங்கு புழுக்களும் இருந்தன, ஆனால் அவைதாமே அழியாமையுள்ளவை அல்ல! மனந்திரும்பாத துன்மார்க்கர் நித்தியமாக அழிக்கப்படுவர் என்பதை யூதேய மக்களுக்குப் புரியும் வகையில் இயேசு விளக்க முறையில் உதாரணங்கொண்டு விவரித்துக் கொண்டிருந்தார். எனவே, கெஹென்னாவும் அக்கினிக் கடலுக்குரிய அதே அர்த்தத்தைதான் கொண்டிருக்கிறது—அது நித்திய அழிவாகிய இரண்டாம் மரணத்தை அர்த்தப்படுத்துகிறது.
நித்திய வாதனை என்ற மதக் கொள்கை ஆத்துமா அழியாமை என்ற கொள்கையின் அடிப்படையிலானது. என்றபோதிலும், “பாவஞ் செய்கிற ஆத்துமா சாகும்,” என்று பைபிள் விளக்கமாகக் குறிப்பிடுகிறது. (எசேக்கியேல் 18:4, 20; அப்போஸ்தலர் 3:23-ஐயும் பாருங்கள்) உண்மையான கடவுளாகிய யெகோவா, அன்பும் “இரக்கமும், கிருபையும் . . . மகா தயையு”முள்ள ஒரு கடவுளாக இருக்க, எரிநரகக் கொள்கையினர் அவரை ஒரு கொடூரப் பேயாக ஆக்கியிருக்கின்றனர்.—யாத்திராகமம் 34:6.
கடவுள் மனிதரை, வாதனையிலிருந்து அல்ல, ஆனால் அழிக்கப்படுவதிலிருந்து இரட்சிக்க அன்பானதோர் ஏற்பாட்டைச் செய்திருக்கிறார். இயேசு சொன்னார்: “தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல் [அழிக்கப்படாமல்] நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் இவ்வுலகத்தில் அன்பு கூர்ந்தார்.”—யோவான் 3:16. (g86 4/22)
[பக்கம் 25-ன் சிறு குறிப்பு]
தங்களுடைய பயங்கரமான வாதித்தல்கள் பாவிகளை அதிக மோசமான விதியிலிருந்து இரட்சிக்கிறது என்று மத தண்டனை நிறைவேற்றியவர்கள் நம்பினார்கள்
[பக்கம் 24-ன் படம்]
அன்மைக் காலம் வரை, கிறிஸ்தவ மண்டலம் முழுவதுமே இப்படிப்பட்ட ஓர் இடம் இருக்கிறது என்று நம்பினர்