உலக சமாதானம்—எப்பொழுது? எப்படி?
மனிதவர்க்கம் காண வாஞ்சிக்கும் கனவுகளில் ஒன்று மனித சமாதானம். ஆனால் அதை மனித அரசாங்கங்கள் சாதிக்க முடியும் என்பது ஒரு போலி நினைவு. பைபிள் உண்மையிலேயே உறுதிபடுத்தும் இந்தக் காரியத்துடன் சரித்திர பாடங்கள் ஒத்திருக்கின்றன: “மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்ல, தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல.”—எரேமியா 10:23.
சர்வலோகத்தின் சிருஷ்டிகராகிய யெகோவா தேவன் மட்டுமே நிரந்தர சமாதானத்தைக் கொண்டுவர முடியும். தாம் அப்படிச் செய்யப்போவதாக வாக்கு கொடுத்திருக்கிறார். எப்படி? மனித முயற்சிகளால் அல்ல, ஆனால் இயேசு கிறிஸ்து தம்முடைய போதனையின் பொருளாகக் கொண்டிருந்த காரியத்தின் மூலம்—கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் மூலம். (மத்தேயு 6:9, 10) அந்த ராஜ்யத்தின் அரசராகிய கிறிஸ்து இயேசு, தீர்க்கதரிசனத்தில் உண்மையான “சமாதானப் பிரபு” என்று அழைக்கப்படுகிறார். (ஏசாயா 9:6) கடவுளுடைய வாக்குறுதி என்னவென்றால், அந்த ராஜ்ய ஆட்சியின் கீழ் பூமியெங்கும் “மிகுந்த சமாதானம்” இருக்கும்.—சங்கீதம் 72:7.
என்றபோதிலும், இது சம்பவிப்பதற்கு முன்பு, இன்றைய போரிடும் காரிய ஒழுங்குமுறை வழியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்று பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. (1 யோவான் 2:15-17) அதன் அழிவு அண்மையிலிருக்கிறது என்று பைபிள் தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறது.—மத்தேயு 24:3-14, 22, 34; லூக்கா 21:25-28; 2 தீமோத்தேயு 3:1-5.
எனவே இது “பொய் சொல்லக்கூடாத” கடவுளின் மாறாத நோக்கமாயிருக்கிறது. (தீத்து 1:3, NW) மதத் தலைவர்கள், விசேஷமாகக் கிறிஸ்தவ மண்டலத்தின் மதத் தலைவர்கள் இந்த நோக்கத்திற்கிசைவாக ஜெபித்திருக்க வேண்டாமா? அந்த நோக்கத்திற்கிசைவாக அவர்கள் செயல்பட்டிருக்க வேண்டாமா? என்றபோதிலும், அஸிஸியிலுள்ள அந்த மத பிரதிநிதிகள் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த ஒழுங்குமுறையின் முடிவைக் குறித்தும் வந்துகொண்டிருக்கும் கடவுளுடைய ராஜ்ய ஆட்சி குறித்தும் எந்தவித குறிப்பையும் கூறவில்லை; ஆனால் இதுதானே இயேசுவின் மற்றும் கடவுளுடைய வார்த்தையின் அடிப்படை செய்தியாகும்.
இதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை, ஏனென்றால், அந்த மதங்கள், கடவுளுடைய நோக்கத்தின் உண்மையைத் தங்கள் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. மாறாக, அவர்கள் சாத்தானின் கீழிருக்கும் இந்த உலகின் பாகமாக இருக்கிறார்கள், அதை நிலைநிறுத்துவதற்காக தங்கள் முயற்சிகளை ஒருமுகப்படுத்துகின்றனர். இதன் விளைவாக, அந்த மக்கள் பிரிந்து, கடவுளுடைய ராஜ்யத்தில் நம்பிக்கை வைப்பதற்கு பதிலாக, தேசபற்றில்தானே அதிக விசுவாசம் கொள்கின்றனர். இது அவர்களை உலகில் நடக்கும் போர்களில் ஒருவரையொருவர் கொல்லும்படியாக வழிநடத்தியிருக்கிறது. எனவே பின்வரும் வார்த்தைகள் அம்மதங்களுக்குப் பொருந்துகின்றன: “விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.”—யாக்கோபு 4:4.
எனவே இந்த மதங்களின் சமாதானத்துக்கான அரைகூவல்கள் செவிடர்களின் காதுகளில் விழுகின்றன. எரேமியாவின் காலத்தில் இருந்த நிலைமையை அது ஞாபகத்துக்குக் கொண்டுவருகிறது. அக்காலத்தில் பொய்மத தீர்க்கதரிசிகள், “சமாதானம், சமாதானம்” என்று அறிக்கை செய்தார்கள். ஆனால் உண்மையில் அவர்களுக்கு “சமாதானமில்லாதிருந்தது.”—எரேமியா 6:14.
உலகளாவிய கல்விக்குரிய வேலை
என்றபோதிலும், கடவுளுடைய நோக்கம் நிச்சயமாக நிறைவேறும். (ஏசாயா 55:11) எனவே இன்று பைபிள் போதனை சார்ந்த ஓர் உலகளாவிய வேலை நடைபெறுகிறது. இது மத்தேயு 24:14-லுள்ள தீர்க்கதரிசனத்துக்கு இசைவாக நடைபெறுகிறது: “ராஜ்யத்தினுடைய இந்த சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்பொழுது முடிவு வரும்.”
உண்மை வணக்கத்தின் இந்தப் பூகோள இயக்கத்தின் பாகமாக இருப்பவர்கள் கடவுளுடைய தகுதிகளுக்குத் தங்களைக் கீழ்ப்படுத்தியிருப்பதால், தங்களிடையே பிரிவினையுண்டாக்கும் தேசப்பற்றின் செல்வாக்கை அறவே ஒழித்துவிட்டனர். ஒருவரையொருவர் நேசிக்கும் ஒரு சமாதானமான மக்கள் சமுதாயமாகவும் கடவுளுடைய ராஜ்யத்துக்காக வாழ்கிறவர்களாகவும் ஆகியிருக்கிறார்கள். இதன் பலனாக, மீகா 4-லுள்ள அந்த கிளர்ச்சி மிகுந்த தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறார்கள். அது சொல்லுவதாவது:
“யெகோவாவின் ஆலயமுள்ள பர்வதம் [அவருடைய உண்மை வணக்கம்] பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தபிக்கப்பட்டு மலைகளுக்கு [மற்ற எல்லா வணக்கமுறைகளுக்கு] மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதனிடத்திற்கு ஓடிவருவார்கள். பல ஜாதிகள் புறப்பட்டு வந்து: நாம் யெகோவாவின் பர்வதத்துக்கும் யாக்கோபின் கடவுளுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள், அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம். . . . அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை கலப்பைக் கொழுக்களாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயமெடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தம் கற்பதுமில்லை.”—மீகா 4:1-3, தி.மொ.
இந்தத் தீர்க்கதரிசனம் அஸிஸியில் கூடின கூட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டிருக்க முடியாது. தூய்மையான வணக்கமாகிய அந்த அடையாள அர்த்தமுள்ள பர்வதத்துக்கு ஓடிவருகிறவர்கள் யெகோவாவின் சமாதானத்தை நேசிக்கும் வழிகளில் போதிக்கப்படுகிறவர்களும், அவருடைய நோக்கத்தின்படியும் தகுதிகளின்படியும் நடக்கிறவர்களுமாக இருக்கிறார்கள். அவர்கள் முரண்பட்ட கோட்பாடுகளாலும் பழக்க வழக்கங்களாலும் பிளவுபட்ட தங்களுடைய பழைய மதங்களில் நிலைத்திருப்பவர்கள் அல்லர். மாறாக, மீகா 2:12 முன்னறிவித்தபடி ஒன்றாகக் கூட்டிச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்: “தொழுவத்தில் ஆடுகளைப்போல் . . . நான் அவர்களை ஒரே கூட்டமாக்குவேன்.”
இந்தக் கல்விக்குரிய வேலையின் பலனாக உலகமுழுவதும் முப்பது இலட்சத்துக்கும் அதிகமான ஆட்கள் “ராஜ்யத்தின் நற்செய்தியை” அறிவிப்பவர்களாக ஆகியிருக்கிறார்கள். அவர்கள் சமாதானமுள்ளவர்களாக மாறியிருக்கிறார்கள். எந்த சூழ்நிலையிலும் அவர்கள் தங்களுடைய உடன் மனிதரின் உயிரைக் கொல்லமாட்டார்கள். மீகா முன்னறிவித்ததுபோல், அவர்கள் ஏற்கெனவே “தங்கள் பட்டயங்களைக் கலப்பைக் கொழுக்களாக” அடித்துவிட்டிருக்கிறார்கள். “இனி அவர்கள் யுத்தம் கற்பதுமில்லை.” பூமி முழுவதும் இன்னும் அநேக இலட்சக்கணக்கானோர் இவர்களால் கற்பிக்கப்பட்டு வருகிறார்கள்.
மனிதவர்க்கம் சார்பாக மீகா 4:4 நிறைவேற்றமடையும் அந்த ஒற்றுமையான புதிய உலகத்துக்காக யெகோவாவின் சாட்சிகள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்: “அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; [பரலோக] சேனைகளின் யெகோவாவினுடைய வாய் இதைச் சொல்லிற்று.” அடுத்து, வசனம் 5-ல், மீகா, பொய்மத பலதெய்வ வணக்கத்தில் ஈடுபட்டு வருகிறவர்களுக்கும் ஒரே உண்மையான தேவனை வணங்கிவருகிறவர்களுக்கும் இடையே இருக்கும் நிலைமையை முரண்படுத்திக் காண்பிக்கிறான்: “சகல தேசத்தாரும் தங்கள் தங்கள் தெய்வத்தின் நாமத்தில் நடப்பார்கள்; நாங்களும் எங்கள் கடவுளாகிய யெகோவாவின் நாமத்திலே என்றென்றுமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.” தெளிவாகவே அஸிஸியில் கடவுளுடைய பெயர்கூட குறிப்பிடப்படவில்லை. என்றபோதிலும், பைபிளின் இந்தக் கடவுளைக் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள ஆவலாயிருப்பீர்கள், அல்லவா? இதில் உங்களுக்கு உதவியளிக்க யெகோவாவின் சாட்சிகள் பெருமகிழ்ச்சி கொள்வார்கள். (g87 6⁄8)
[பக்கம் 12-ன் படம்]
உண்மையிலேயே தங்களுடைய பட்டயங்களைக் கலப்பைக் கொழுக்களாக அடித்திருப்பது யார்?