மனச்சோர்வு: எல்லாம் வெறும் மனக்கற்பனையா?
அந்த மனிதன் 200 வயதான தன்னுடைய வீட்டைப் புதுப்பிக்க ஆரம்பித்தவுடனேயே மிகவும் சோர்வடைந்துவிட்டான். அவன் சரியாக உறங்கவில்லை. உறுதிவாய்ந்த அவனுடைய மன ஆற்றல் வழக்கத்துக்கு மாறாக கடினமாக இருப்பதை உணர்ந்தான். வீட்டில் பேய் நடமாட்டமிருக்குமோ என்று குடும்பத்தார் யோசிக்க ஆரம்பித்தார்கள். ஒரு உட்புற மர வேலைப்பாட்டிலிருந்த பழைய வண்ணச் சாயத்தை சுரண்டி முடித்தப் பின்பு அடிவயிற்று வலி உட்பட மிக மோசமான நோய்க்குறிகள் தோன்றியதை அவன் கவனித்தான். அவன் சுரண்டி எடுத்த பழைய வண்ணச் சாயத்திலிருந்த ஈயத்தின் விஷமே சோர்வுக்கு காரணமாயிருந்ததை ஒரு மருத்துவர் கண்டுபிடித்தார்.
ஆம், சில சமயங்களில் நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்களுங்கூட சோர்வுக்கு காரணமாயிருக்கின்றன. உண்மையில், சரீர சம்பந்தமான பற்பல காரணங்கள்தாமே மனச்சோர்வை ஏற்படுத்தக்கூடும் என்பது உங்களுக்கு ஆச்சரிமூட்டுவதாக இருக்கும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, மனச்சோர்வு உட்பட மனநோய் சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்காக நகரிலுள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 100 நோயாளிகளை ஆய்வாளர்கள் கவனமாகக் கூர்ந்து ஆராய்ந்தார்கள். இவர்களில் 46 பேரின் விஷயத்தில், உணர்ச்சிப்பூர்வமான நோய்க்குறிகள் சரீர உபாதைகளோடு நேரடியாக சம்பந்தப்பட்டவையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்கன் ஜர்னல் ஆப் சைக்கியாட்டிரியின் ஒரு அறிக்கையின்படி சரீர உபாதைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட போது, 28 பேரின் “மன நோய்க் குறிகள் குறிப்பிடத்தக்க வகையிலும் வேகமாகவும் மறைந்தன.” 18 பேரின் நிலைமை “கணிசமான அளவு முன்னேறியது.”
என்றபோதிலும் மனச்சோர்வில் உடல் நோயின் பங்கு சிக்கலானதாகும். சோர்வுற்றிருக்கும் ஒரு ஆள் அவருடைய சோர்வுக்கு காரணமாயில்லாத உடலின் நோய்களையுங்கூட கொண்டிருந்து, ஆனால் இதுவே அவருடைய மனதில் மையப்புள்ளியாக இருப்பதையும் அநேக மருத்துவர்கள் அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள். என்றபோதிலும், அடிப்படையான மனச்சோர்வு கவனிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.
ஒரு சில உடல் நோய்களால் அநேகமாக உணர்ச்சிப்பூர்வமான கோளாறுகளை உண்டுபண்ணவோ தீவிரமாக்கவோ முடிந்தாலும் ஏற்கெனவே இருந்து வரும் பிணிக்கு பிரதிபலிப்பாக மனநோய்க்குறிகளுங்கூட தோன்றக்கூடும். உதாரணமாக, ஒரு பெரிய அறுவை சிகிச்சைக்குப் பின்பு விசேஷமாக இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்பு குணமடைந்து வரும் நோயாளிகள் எப்பொழுதும் சோர்வடைந்து விடுகின்றனர். அவர்கள் குணமடையும் போது பொதுவாக சோர்வு அதிகரித்து விடுகிறது. கவலைக்குரிய நோயினால் சரீரத்துக்கு ஏற்படும் அழுத்தமுங்கூட கோளாறு உண்டுபண்ணக்கூடும். மேலுமாக ஒரு சில உணவு வகைகள் அல்லது மற்ற பொருட்கள் சரீரத்துக்கு ஒவ்வாதிருப்பது சில ஆட்களுக்கு வெகுவாக சோர்வை உண்டுபண்ணக்கூடும்.
ஒரு சில வகை சோர்வு ஏற்படுவதற்கு பரம்பரை பண்புங்கூட காரணமாக இருக்கக்கூடும். மிதமிஞ்சிய சோர்வு எளிதில் ஏற்படக்கூடிய நிலைக்கு சிலரை ஆளாக்குவதாக கருதப்படும் பரம்பரையாக சுதந்தரித்துக் கொண்டுள்ள பிறப்பு மூல குறைபாட்டை ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் கண்டுபிடித்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
மேலுமாக 10-லிருந்து 20 சதவிகித புதிய தாய்மார்கள், மருத்துவ ரீதியில் கணிக்கக்கூடிய முழு வீச்சு சோர்வை அனுபவிப்பதாக சில மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். பிள்ளைப்பேற்றோடு சம்பந்தப்பட்ட சுரப்பிகளில் ஏற்படும் மாற்றங்களா அல்லது தாய்மையின் உணர்ச்சிப்பூர்வமான அழுத்தங்களா, எது இந்த கோளாறை உண்டுபண்ணுகிறது என்பதில் ஆய்வாளர்களிடையே கருத்து ஒற்றுமை இல்லை. மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பாகவும் குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகள் உட்கொள்ளும் போதும் சில பெண்களுக்கு சோர்வு ஏற்படுவதையுங் அண்மைக் கால ஆராய்ச்சிகள் சுட்டிக் காண்பிக்கின்றன.
ஒரு சில ஆட்கள், பருவ கால உணர்ச்சி சார்ந்த கோளாறு என்பதாக குறிப்பிடப்படும் பருவ கால மனநிலை சுழற்சியை அனுபவிப்பதாகவுங்கூட சமீப கால ஆராய்ச்சி காண்பித்திருக்கிறது. இவர்கள் இலையுதிர் காலத்திலும் மழைக்காலத்திலும் மிகவும் சோர்வாக இருக்கிறார்கள். இவர்கள் சோர்வுற்று, பொதுவாக நீண்ட நேரம் உறங்கி, நண்பர்களிடமிருந்தும் குடும்பத்தாரிடமிருந்தும் விலகிக் கொண்டு, பசியார்வத்திலும் உணவு விருப்பங்களிலும் மாற்றங்களை அனுபவிக்கிறார்கள். ஆனால் வசந்த காலமும் கோடை காலமும் வந்து விட்டால் அவர்கள் ஊக்கமடைந்து, சுறுசுறுப்பாகி, வலிமைப் பெற்று பொதுவாக நன்றாக செயலாற்றுகிறார்கள். சீரான செயற்கை ஒளியின் உபயோகத்தின் மூலமாக சிலருக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்க முடிந்திருக்கிறது.
ஆகவே சோர்வு எப்பொழுதும் “தலைக்குள்” இருப்பதில்லை. ஆகவே சோர்வான மனநிலை நீடிக்குமேயானால், முழுமையான ஒரு மருத்துவ சோதனை இன்றியமையாததாகும். ஆனால் சரீர சம்பந்தமான காரணத்தைக் கண்டு பிடிக்கமுடியாவிட்டால் என்ன?
(g87 10⁄22)