அந்தப் புதிர் விடுவிக்கப்பட்டது!
மரணம் மானிட வாழ்க்கையின் முடிவு அல்ல, சரீரம் மரித்த பின்னர் ஏதோ ஒன்று தொடர்ந்து உயிர்வாழ்கிறது என்று அநேகர் நினைக்கின்றனர். பொதுவாக இந்த ஒன்று ஆத்துமா என்று விளக்கப்படுகிறது.
“உடல் கல்லறையில் இருக்கும்போது ரூ [ஆத்துமா] உடலைவிட்டு பிரிந்து செல்கிறது என்பது நமக்கு எப்படித் தெரியும்?” என்ற கேள்விக்கு நேர் பாதை (The Straight Path) என்ற பத்திரிகை பதில் கூறுகிறது: “ஆத்துமா உடலைவிட்டு பிரிந்துவிடுவதுதானே மரணம். ஒருமுறை ஆத்துமா உடலை விட்டுப் பிரிந்துவிடுகிறது என்றால், அது பர்ஜாக்குக்கு (மரணம் கடந்த காலப் பகுதி) மாற்றமாகிவிடுகிறது. . . . கல்லறை உடலுக்கு மட்டுமே ஒரு சேமக் களஞ்சியம், ஆத்துமாவுக்கு அல்ல.” இவை முகமதியரின் கருத்துக்கள், ஆனால் அவை கிறிஸ்தவமண்டலத்தின் போதனைகளிலிருந்து அவ்வளவாக வித்தியாசப்படவில்லை.
உதாரணமாக, பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்படும் பிரிட்டிஷ் ரோமன் கத்தோலிக்க பிரசுரமாகிய கிறிஸ்தவ கோட்பாட்டு வினா விடை ஏடு (A Catechism of Christian Doctrine) என்ற சமய நூலின் இந்த இரண்டு வினாக்களை எடுத்துக்கொள்ளுங்கள்:
வினா: “உன்னுடைய ஆத்துமா எப்படி கடவுளுக்கு ஒத்திருக்கிறது?”
விடை: “என்னுடைய ஆத்துமா கடவுளுக்கு ஒத்திருக்கிறது, ஏனென்றால் அது ஓர் ஆவி, அழியாமையுடையது.”
வினா: “உன்னுடைய ஆத்துமா அழியாமையுடையது என்று நீ என்ன அர்த்தத்தில் சொல்கிறாய்?”
விடை: “என்னுடைய ஆத்துமா அழியாமையுடையது என்று சொல்லும்போது, என்னுடைய ஆத்துமா ஒருபோதும் சாகாது என்பதை அர்த்தப்படுத்துகிறேன்.”
பிள்ளைகள் இதை நம்பும்படியாகக் கற்பிக்கப்படக்கூடும் என்றாலும், வலியுறுத்தப்படும் காரியங்களுக்கு ஆதாரமளிக்க இந்தப் புத்தகம் முற்படுவதில்லை.
என்றபோதிலும் ஆத்துமா என்றால் என்ன என்பதை சரியாக எடுத்துக்கூறும் ஒரு தகவல் ஊற்றுமூலம் உண்டு. அதுதான் பைபிள், மனிதன் அறிந்திருக்கும் நூல்களிலேயே மிகப் பழமையான நூல். அது கொடுக்கும் தகவலைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
ஆத்துமா—பைபிள் விளக்கம்
பைபிளின் முதல் புத்தகமாகிய ஆதியாகமம் நம்முடைய கோளத்தில் வாழும் மனிதனும் மற்ற சிருஷ்டிகளும் படைக்கப்பட்டதைக் குறித்த ஒரு விவரப்பதிவைக் கொடுக்கிறது. அது எபிரெய மொழியில் எழுதப்பட்டது. அதன் முதல் இரண்டு அதிகாரங்களில் “ஆத்துமா” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் நெபெஷ் என்ற வார்த்தை நான்கு முறை தோன்றுகிறது; என்றபோதிலும் ஒருமுறைதான் அது மனுஷனைக் குறிப்பிடுகிறது.a மற்ற இடங்களில் வரும் அந்த வார்த்தை எதைக் குறிப்பிடுவதாயிருக்கிறது? அதைப் பார்ப்போம்.
“தேவன் மகா மச்சங்களையும் ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர்வாழும் ஜந்துக்களையும் (ஆத்துமாவையும் [நெபெஷ்], NW), சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார்.”—ஆதியாகமம் 1:21.
“பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் (ஆத்துமாவாக [நெபெஷ்], உயிருள்ளவை, NW) எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன்.”—ஆதியாகமம் 1:30.
“தேவனாகிய கர்த்தர் [யெகோவா, NW] வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு (ஆத்துமாவுக்கு [நெபெஷ்], NW) ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று.”—ஆதியாகமம் 2:19.
இந்த மூன்று வசனங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நெபெஷ் என்ற பதம் எல்லா வகையான விலங்கின உயிர் வகைகளையும் விவரிக்க பயன்படுத்தப்படுகிறது என்று தெரிகிறது.
இதை முதல் மனிதனாகிய ஆதாமைப் பற்றிய விவரப்பதிவுடன் ஒப்பிட்டுப்பாருங்கள்:
“தேவனாகிய கர்த்தர் [யெகோவா, NW] மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான் [நெபேஷ்].”—ஆதியாகமம் 2:7.
இதன் பேரில் குறிப்புரை அளிக்கும் விதத்தில், அமெரிக்காவின் யூத பிரசுரிப்பு சங்கம், எபிரெய வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்களாகிய டோராவின் ஒரு மொழிபெயர்ப்பில் பின்வருமாறு கூறுகிறது: “நமக்கு ஓர் ஆத்துமா இருக்கிறது என்று பைபிள் சொல்லவில்லை. ‘நெஃபெஷ்’ [நெபெஷ்] அந்த மனிதனாகவே, உணவுக்கான தேவையில் இருப்பவனாக, அவனுடைய நாளங்களில் ஓடும் இரத்தமாக, அவனாகவே இருக்கிறான். (தடித்த எழுத்துக்கள் எங்களுடையது.) நியாயமாகவே, “ஆத்துமா” என்று விவரிக்கப்படும் மற்ற எல்லா வகை உயிரினங்களைக் குறித்ததிலும் அது உண்மையாக இருக்கிறது. அவை ஆத்துமாக்களை உடையவை அல்ல. அனைத்துமே ஆத்துமாக்களாக இருக்கின்றன.
ப்ளேட்டோவும் ஆத்துமாவும்
மரணத்தில் ஆத்துமா உடலைவிட்டுப் பிரிகிறது என்ற கருத்து எங்கிருந்து வந்தது? ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட யூதரின் என்சைக்ளோபீடியா பின்வருமாறு சொல்லுகிறது: “பெர்சியர் மற்றும் கிரேக்கரின் கருத்துடன் தொடர்பு இருந்ததால்தானே, தன்னுடைய சொந்த ஆள்தன்மை கொண்ட ஆத்துமா உடலைவிட்டு பிரிந்து வாழ்கிறது என்ற கருத்து யூத மதத்தில் வேர் கொள்ள ஆரம்பித்தது.”
மனித ஆத்துமா அழியாமையுடையது, மரித்திருக்கும் அதன் உடலை அது மீண்டும் சந்திக்க வருகிறது என்று மனித சரித்திரத்தில் எகிப்தியர்கள் அதற்கு முன்னமே நம்பினார்கள். இந்தக் காரணத்தினிமித்தமே எகிப்தியர் தங்கள் மரித்தோரின் உடலுக்கு நறுமணமூட்டி அவற்றைப் பாதுகாத்தனர்.
அக்கறைக்குரியவிதத்தில், புதிய ஜெர்மன் லூத்தரன் பெரியவர்களுக்குச் சுவிசேஷக வினாவிடை ஏடு (Ebangelischer Erwachsenenkatechismus), மனித ஆத்துமா அழியாதது என்ற போதனையின் மூல ஆதாரம் பைபிள் அல்ல, ஆனால் “உடலுக்கும் ஆத்துமாவுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்று திட்டவட்டமாக நம்பிய கிரேக்க தத்துவஞானி ப்ளேட்டோ (பொ.ச. 427-347)” என்று அது வெளிப்படையாகவே ஒப்புக் கொள்கிறது. அது தொடர்ந்து கூறுவதாவது: “தற்கால சுவிசேஷக இறைமையியல் வல்லுநர்கள் இந்தக் கிரேக்க பைபிள் கருத்துக்கள் இணைந்த நம்பிக்கையின் உண்மைத்தன்மையை சவாலிடுகின்றனர். . . . மனிதனை உடலும் ஆத்துமாவுமாக பிரிப்பதை அவர்கள் மறுக்கிறார்கள்.”
அப்படியென்றால் மரணத்தில் மனித ஆத்துமாவுக்கு என்ன நேரிடுகிறது? இந்தக் காரியத்தில் நம்முடைய சிறந்த அதிகாரப்பூர்வமான நூல் பைபிள், கடவுளுடைய ஆவியினால் ஏவப்பட்ட வார்த்தை. அது தெளிவாகவே பின்வருமாறு கூறுகிறது: “உயிரோடிருப்பவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்கள்; மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.” (பிரசங்கி 9:5) “உயிர்த்தெழுதலைக்” குறித்து பேசுகையில் இயேசு பின்வருமாறு சொன்னார்: “ஞாபகார்த்த கல்லறையிலுள்ள அனைவரும் அவருடைய [இயேசுவுடைய] சத்தத்தைக் கேட்டு வெளியே வருவார்கள்.”—யோவான் 5:28, 29.
எனவே மரித்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்? கல்லறையில், “ஞாபகார்த்த கல்லறையில்,” அதாவது உயிர்த்தெழுதலுக்குக் காத்திருப்பவர்களாய்க் கடவுளுடைய ஞாகத்தில்.b ஓர் உயிர்த்தெழுதலா? அதன் அர்த்தம் என்ன? அந்த நம்பிக்கை எந்தளவுக்கு உண்மையானது? இங்கிலாந்தில் அண்மையில் நிகழ்ந்த ஒரு பெரிய விபத்து பற்றிய இந்தத் தொடரின் முடிவு கட்டுரை இந்த நம்பிக்கை எந்தளவுக்கு உண்மையாக இருக்க முடியும் என்பதைக் காண்பிக்கிறது. (g88 7⁄8)
[அடிக்குறிப்புகள்]
a “ஆத்துமாக்கள்,” பன்மை, ஆதியாகமம், அதிகாரம் 1, வசனங்கள் 20-லும் 24-லும் காணப்படுகிறது.
b லூத்தரன் மத வினா-விடை பாடமுறை பின்வருமாறு சொல்லுவதில் பைபிளுடன் ஒத்திருக்கிறது: “மனிதன் மொத்தத்தில் ஒரு பாவியாக இருப்பதால், மரணத்தில் அவன் முழுமையாக சரீரத்துடனும் ஆத்துமாவுடனும் மரிக்கிறான் (முழுமையான மரணம்). . . . மரணத்துக்கும் உயிர்த்தெழுதலுக்குமிடையே ஓர் இடைவெளி இருக்கிறது; அந்தத் தனி நபர் கடவுளுடைய ஞாபகத்தில் தொடர்ந்து வாழ்கிறான்.”
[பக்கம் 8-ன் பெட்டி]
உங்களுக்குத் தெரியுமா?
பைபிளில் எந்த இடத்திலுமே “ஆத்துமா அழியாமை”
குறித்து நாம் வாசிப்பதில்லை. அந்த இரண்டு வார்த்தைகளும் எந்தச் சமயத்திலுமே ஒன்றாக வருவதில்லை. “அழியாமை” அல்லது “சாவாமை” என்ற வார்த்தை ஆறு முறைகள் மட்டுமே வருகிறது, எல்லாமே அப்போஸ்தலனாகிய பவுலின் எழுத்துக்களில். மனிதருக்குப் பொருத்தப்படுகையில், சாவாமை என்பது பரலோகத்தில் கிறிஸ்து இயேசுவுடன் ஆட்சிபுரிவதற்காகப் பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்படும் 1,44,000 பேருக்கு மட்டுமே கொடுக்கப்படும் பரிசாக விளக்கப்படுகிறது.—1 கொரிந்தியர் 15:50–54; வெளிப்படுத்துதல் 5:9, 10; 14:1–4; 20:6.
[பக்கம் 9-ன் பெட்டி]
எந்த அதிகாரப்பூர்வமான நூலின் அடிப்படையில்?
“தி கன்சைஸ் ஆக்ஸ்போர்டு டிக்ஷனரி” (The Concise Oxford Dictionary) ஆத்துமாவுக்குப் பின்வரும் விளக்கத்தைத் தருகிறது: “மனிதனின் ஆன்மீக அல்லது உடல் சாராத பாகம், மரணத்தைக் கடந்து வாழ்வதாக நம்பப்படுகிறது.” “ஆத்துமா” மூலம் மரணத்துக்குப் பின் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்ற நம்பிக்கை ஒரு மத உரிமைப்பாராட்டலாக அமைகிறது என்ற உண்மையை இந்த விளக்கம் குறிப்பாகக் காண்பிக்கிறது. இதை யாரும் நிரூபிக்க முடியாது. அதற்கு மாறாக, மிக உயர்ந்த அதிகாரப்பூர்வ நூலாகிய பைபிள் பின்வருமாறு கூறுகிறது: “பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்.”—எசேக்கியேல் 18:4.
[பக்கம் 9-ன் படம்]
மனித தலைகொண்ட பருந்தாக சித்தரிக்கப்பட்டிருக்கும் எகிப்திய வேதபாரகனின் “ஆத்துமா” ‘கல்லறையிலுள்ள தன்னுடைய சரீரத்தைத் திரும்பவந்து சந்திப்பதாகக்’ கருதப்பட்டது