மதத்தின் கடந்தகால கண்ணோட்டத்தில் அதன் எதிர்காலம்
பகுதி 10: பொ.ச.மு. 537 முதல் மேசியாவுக்காக இன்னும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்
“எதிர்காலத்தில் எந்த நம்பிக்கையுமில்லையென்றால் தன்னுறுதி வெறும் ஒரு கோஷமே.”
ஜான் எப். கென்னடி, ஐக்கிய மாகாணங்களின் 35-வது ஜனாதிபதி
எழுபது ஆண்டு பாபிலோனிய சிறையிருப்பு முடிந்தது! பாபிலோனை வெற்றிகொண்ட பெர்சியா மன்னன் கோரசு, யூதர்களைத் தங்கள் வீடு திரும்ப அனுமதித்துக்கொண்டிருந்தான். ஆனால் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குத் திரும்பிவந்தபோது (பொ.ச.மு. 537), ஒரு விடுதலைப் பெற்ற நாடாக சுய தீர்மான வாழ்க்கைப்பற்றிய அவர்களுடைய எதிர்பார்ப்பு கைகூடவில்லை. அவர்களுக்கு ஓர் அரசன் இல்லை, அவர்களுடைய ஆளுநர்களின் அரசியல் அதிகாரம் பிரதான ஆசாரியரின் அதிகாரத்தின் பின் அந்தகாரப்பட்டது, ஏனென்றால் இவர்களே தேசத்தின் தலைவர்களாக நோக்கப்பட்டனர்.
ஒரு மேசியானிய நம்பிக்கையைத் தொடர்ந்து பற்றியிருத்தல்
யூத கலைக்களஞ்சியத்தின் சிறிய பதிப்பு (The Concise Jewish Encylopedia) குறிப்பிடுகிறபடி, இந்தச் சமயத்தில்தானே ஒரு மேசியா நம்பிக்கை உருவானது, “வருங்கால நாட்களுக்கு உகந்த ஓர் அரசன், அவன் மற்றொரு ‘அபிஷேகம்பண்ணப்பட்ட’ அரசனாக இருக்க மாட்டான், ஆனால் இஸ்ரவேலரின் எதிரிகளை அழித்து, சமாதானமும் பரிபூரணமுமான ஒரு சகாப்தத்தை ஸ்தபிப்பான்.”
பொது சகாப்தத்திற்கு முன் நான்காவது நூற்றாண்டில், வெற்றிகொள்வதன் மூலம் மகா அலெக்சாந்தர் யூதர்களைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தான். அவனுடைய சாம்ராஜ்யம் அவர்களுடைய தேசத்தில், கலாச்சாரத்தில், மற்றும் மதத்தில் பலத்த செல்வாக்கைச் செலுத்திய போதிலும், அவன்தானே அவர்கள் காத்துக்கொண்டிருந்த அந்த மேசியாவாக இருக்கவில்லை.
அலெக்சாந்தரின் மரணத்துக்குப் பின்னர், பலஸ்தீனா கிரேக்கரின் கைகளுக்குள் இருந்தது. முதலாவது எகிப்திய தாலிமியரின் கீழும், பின்னர் சிரியன் செலூக்கியரின் கீழும் இருந்தது. இரண்டுமே அலெக்சாந்தரின் வாரிசாளர்களால் நிறுவப்பட்டனவாக இருந்தன. கிரேக்கரின் செல்வாக்கு அதிகரிக்கையில், பிரபலமான உயர்மட்ட யூதர்கள் யூத பாரம்பரியத்தையும் பழக்கவழக்கங்களையும் பழமையானதாக நோக்க ஆரம்பித்தனர். இதில் முன்னாலிருந்தது தோபிய குடும்பம். அவர்கள் செலூக்கிய அரசன் அன்டியாகஸ் IV எபிஃபேன்ஸ் ஆட்சியின்போது தங்களுடைய உறவினனாயிருந்த மெனெலாஸைப் பிரதான ஆசாரிய பதவிக்கு உயர்த்தினர். (பொ.ச.மு. 175–164) மெனெலாஸ் சாலொமோனின் ஆலயத்தில் பிரதான ஆசாரியனாயிருந்த சாதோக்கின் ஆசாரிய குடும்பத்தினனாயிராத போதிலும் இப்படிச் செய்தார்கள். கிரேக்க செல்வாக்கு அவ்வளவு பலமாகப் போனதால், யூத மத கொண்டாட்டங்கள் சட்டத்தால் தடைசெய்யப்பட்டு அவர்களுடைய ஆலயம் கிரேக்கர் புனித ஸ்தலமாக மாற்றப்பட்டது!
பொ.ச.மு. 167-ல் பொதுவாக மக்காபியர் அல்லது ஹாஸ்மோனியர் என்று அழைக்கப்பட்ட யூத ஆசாரியன் மத்தாத்தியசும் அவனுடைய ஐந்து குமாரர்களும் கலகத்தில் ஈடுபட்டனர். மக்காபியர் புரட்சி ஆரம்பத்தில் மத சம்பந்தப்பட்டதாக இருந்தபோதிலும், சீக்கிரத்திலேயே அது யூதர்களின் தன்னுறுதி வாழ்க்கைக்கான ஓர் அரசியல் போரட்டமாக மாறியது. பொ.ச.மு. 165-ல் ஆலயம் மீண்டும் வெற்றிகொள்ளப்பட்டு மறு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த வைபவத்தை இன்று உலகமுழுவதுமுள்ள யூதர்கள் ஹனுக்கா என்று அறியப்படும் வருடாந்தர ஜோதிகளின் எட்டு நாள் பண்டிகையின் போது கொண்டாடுகிறார்கள். ஆனால் ஒரு மேசியா இன்னும் வரவில்லை.
அசட்டைசெய்த மேய்ப்பர்களும் மத வேற்றுமையும்
இந்தச் சமயத்தில், “மக்களுடைய ஆவிக்குரிய மற்றும் சமுதாய ஆதிக்கம் ஆசாரியர்களின் கரங்களில் இருந்ததுமட்டுமின்றி, அவர்கள்தாமே எருசலேமில் அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் மிக வல்லமை வாய்ந்த வகுப்பினராக இருந்தனர்,” என்று யூதரின் படங்களைக் கொண்ட பைபிள் கலைக்களஞ்சியம் (Pictorial Biblical Encyclopedia) குறிப்பிடுகிறது. ஆசாரியர்கள் மேட்டிமையாகவும் தங்களுடைய மேய்க்கும் உத்தரவாதங்களை நிறைவேற்றுவதில் அந்தளவுக்கு அசட்டையாகவும் இருந்துவிட்டதால், சட்டத்தை விளக்குவதிலும் நீதி சம்பந்தப்பட்ட காரியங்களை நிறைவேற்றுவதிலும் ஆசாரியரல்லாதவர்கள் அவர்களுடைய இடத்தை எடுக்க ஆரம்பித்தனர். இவர்கள் வேதபாரகர் என்று அழைக்கப்பட்டார்கள். நியாயப்பிரமாணத்தை மீறிடுவதற்காக அவற்றில் இடைவெளி கண்டுபிடிப்பதில் இவர்கள் பெயர்பெற்றவர்கள்.
இதே காலப்பகுதியில், யூத மதம் பிரிவினைகளைக் கண்டது. கடவுள் இஸ்ரவேலருக்கு இரண்டு வகை பிரமாணத்தைக் கொடுத்திருக்கிறார், ஒரு பகுதி எழுத்திலும், மற்றொரு பகுதி வாய்மூலமும் என்று பரிசேயர் போதித்தனர். இந்த வாய்மூலப் பிரமாணத்தின் அடிப்படையில்தான், அவர்கள் சம்பிரதாயமான வம்சாவழி இடையில் முறிக்கப்பட்ட போதிலும், பிரதான ஆசாரிய வழியைப் பிரமாணத்துக்கு உட்பட்டதாக ஏற்றனர். மறுபட்சத்தில், சதுசேயர்கள் வாய்மூல பிரமாணத்தை மறுத்து, சாதோக்கின் வம்சாவழியில் நேரடியாக வரும் ஒருவர்தான் பிரதான ஆசாரியனாக சேவிக்க முடியும் என்றனர்.
“பரிசேயன்” என்ற பெயர் “பிரித்துக்கொண்ட” அல்லது “மதிப்புக்குரிய” என்று பொருள்படும் வார்த்தையிலிருந்து வருகிறது. அவர்களை எதிர்த்தவர்கள் அவர்களை முரண்கோட்பாட்டாளர் என்று குறிப்பிட பயன்படுத்திய பெயர் என்று சிலர் கூறுகின்றனர். அசுத்தமானவர்கள் என்று தாங்கள் கருதிய அம்ஹாரட்ஸ் (மக்களுடைய தேசம்) என்பதிலிருந்து தங்களைப் பிரித்து “மதிப்புக்குரிய” ஸ்தனத்தை எடுத்துக்கொண்டதைக் குறிக்கிறது என்று பிறர் கூறுகின்றனர். எழுதப்பட்ட பிரமாணத்தையும் வாய்மூல பிரமாணத்தையும் கைக்கொள்வதில் பரிசேயர்கள் அளவுக்குமிஞ்சி தங்களை நீதிமான்களாக எண்ணிக்கொண்டனர். எழுதப்பட்ட பிரமாணத்தைக் குறித்ததில் சதுசேயரின் அதே அளவு கண்டிப்பான மனநிலை “விசேஷமான மத உணர்ச்சிகளிலிருந்து அல்ல, ஆனால் பரிசேயரின் சட்டமன்ற அதிகாரத்துக்கு எதிராகப் பயன்படுத்திய அரசியல் ஆயுதமாக எழுந்தது,” என்று யூத எழுத்தாசிரியர் கால்யாஹு கார்ன்ஃபீல்டு எழுதுகிறார்.
மற்றொரு மத பிரிவினராகிய எஸனியரும் அதே காலப் பகுதியில்தான் தோன்றினர். அவர்கள் அதிகாரப்பூர்வமான ஆசாரித்துவத்திலிருந்து தங்களைப் பிரித்து, ஆலயத்தில் நடைபெற்ற மத ஆராதனைகளிலும் பலிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாதவர்களாயிருந்தனர், ஆனால் மற்ற விஷயங்களில் அவர்கள் நியாயப்பிரமாணத்திற்குச் செவிகொடுத்தார்கள். அவர்கள் பரிசேயருக்குப் பலவழிகளில் ஒத்திருந்ததால், பரிசேயரைப் போன்று கிரேக்கருடைய நம்பிக்கைகளின் செல்வாக்குக்கு இறையாகி, ஆத்துமா அழியாமையில் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தனர்.
இந்தப் பிரிவினரில் 4,000 உறுப்பினருக்கு மேல் இருக்கவில்லை, அவர்கள் எல்லாருமே ஆண்கள், பெரும்பான்மையினர் விவாகம் செய்துகொள்ளாதவர்கள். அவர்கள் பலஸ்தீனா முழுவதும் தனித்த சமுதாயங்களாக மத இல்லங்களில் வாழ்ந்தனர். அவர்களுடைய போராழிப்புக் கோட்பாடு என்னப்பட்டதைக் குறித்து “அது நவீன கால யெகோவாவின் சாட்சிகளுடையது போன்றது” என்று என்சைக்ளோபீடியா ஜுடைக்கா (Encyclopedia Judaica) குறிப்பிடுகிறது. ஆனால் இன்றைய யெகோவாவின் சாட்சிகள் கடைப்பிடித்துவரும் கண்டிப்பான நடுநிலைமையை அவர்கள் உண்மையில் கடைப்பிடிக்கவில்லை என்பது தெளிவாயிருக்கிறது. எஸனியர் “ரோமுக்கு எதிரான போரட்டத்தில் வீரப் போர் புரிந்தனர், தலைவர்களில் சிலர் இவர்களுடைய பிரிவினரிலிருந்து வந்தவர்கள்,” என்று படங்களைக் கொண்ட பைபிள் கலைக்களஞ்சியம் (Pictorial Biblical Encyclopedia) குறிப்பிடுகிறது. யூத சரித்திராசிரியனான ஜோசிஃபஸ் அப்படிப்பட்ட ஒரு தலைவனைக் குறித்து எழுதினான்—பொ.ச. 66-ல் யூத படைத் தலைவனாக சேவித்த “எஸனியனாகிய ஜான்.”
1947-ல் கண்டெடுக்கப்பட்ட சவக் கடல் சுருள்கள் கும்ரான் மதப் பிரிவினரைப் பற்றிய தகவல்களை அளிக்கிறது. இவர்கள் எஸனியரைப் போன்றவர்கள் என்று சில அறிஞர்கள் கருதினார்கள். ஆனால் முழுக்காட்டுபவனாகிய யோவனும் இயேசுவும் இந்தப் பிரிவினரைச் சேர்ந்தவர்கள், அல்லது அதன் செல்வாக்கிலிருந்தவர்கள் என்ற கருத்தின் பேரில் தி நியு என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா (The New Encyclopoedia Britannica) பின்வருமாறு கூறுகிறது: “முக்கியமான விவாதங்கள் . . . அந்த ஊகிப்புக்கு எதிராகப் பேசுகின்றன.” “கும்ரான் பிரிவினருக்கும் முழுக்காட்டுபவனாகிய யோவனுக்கும் அடிப்படையில் வித்தியாசங்கள் இருக்கின்றன . . . [மேலும்] இந்தப் பிரிவினரின் கருத்துகளுக்கும் இயேசுவின் ஊழியம், மீட்பு குறித்த அவருடைய செய்தி, கடவுளுடைய சித்தம் சம்பந்தமாக அவருடைய தெளிந்துணர்வு . . . விசேஷமாக, அவருடைய அன்பின் பிரமாணமும் பாவிகளுடனும் சமுதாயம் ஒதுக்கியவர்களுடனும் அவருடைய கூட்டுறவுமாகிய அந்த வித்தியாசமான தன்மைக்கும் முற்றிலுமான வித்தியாசங்கள் இருக்கின்றன.”
உண்மை என்னவெனில், யூத மதத்தின் எல்லாப் பிரிவும் முழுக்காட்டுபவனாகிய யோவனையும் மேசியாவாக அவன் அறிவித்தவரையும் எதிர்த்தன. யோவனின் செய்தியை மதிப்பதற்கு மாறாக, ஆசாரியர்களில் பலர் தன்னுறுதி வாழ்க்கையை வற்புறுத்திய, எதிர்த்த யூத வெறியர் குழுவினரை (Zealots) சேர்ந்தனர் என்று ஜோசிஃபஸ் குறிப்பிடுகிறார். பொ.ச.மு 63-ல் கிரேக்க வல்லரசை மேற்கொண்ட ரோமர் ஆதிக்கத்தை இது போன்ற தொகுதியினர் பல பத்தாண்டுகளாக எதிர்த்து, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுவந்தனர். கடைசியாகப் பொ.ச. 66-ல் அவர்கள் வெளிப்படையான புரட்சிப் போரட்டத்தில் இறங்கினர். இது யூத மதத்தினரின் ஆலயமும் அவர்களுடைய ஆசாரியத்துவமும் அழிக்கப்படுவதில் விளைந்தது. அந்த மேசியானிய நம்பிக்கை மங்கலாகிவிட்டது.
ஆலயமில்லாத, ஆசாரியத்துவமில்லாத ஒரு யூத மதம்
பாபிலோனிய சிறையிருப்புக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பும், அந்தச் சமயத்திலும், அதற்குச் சற்று பின்பும் நியாயப்பிரமாணத்தின் அறிவை அடைவது குறித்து அதிகமாக வற்புறுத்தப்பட்டது. யூதர்களின் ஜெபாலயங்கள் (synogogues) என்று அழைக்கப்பட்ட இடங்கள் போதனையின் மையங்களாகக் கட்டப்பட்டன, அதற்குப் பின்னர் விசேஷ சமயங்களில் பலிகளைச் செலுத்துவதற்கு மட்டுமே தேவாலயத்திற்குச் சென்றனர். எனவே பொ.ச. முதல் நூற்றாண்டில் கடவுளை ஜெபாலயங்களில் தொழுதுகொள்வது வழக்கமாகிவிட்டது. பின்பு பொ.ச. 70-ல் தேவாலயம் அழிக்கப்பட்ட பின்னர் அந்த ஜெபாலயங்கள் அதனிடத்தை எடுத்திருப்பதாகக் கருதப்பட்டது.
அப்பொழுது இல்லாதிருந்த ஆசாரியத்துவத்திலிருந்து ரபீகள் என்றழைக்கப்பட்ட போதகர்களுக்கு இப்பொழுது முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சதுசேயர் ஒரு திறம்பட்டத் தொகுதியினராக விளங்குவது நின்றுவிட்டது, எஸனியரும் இல்லாமற்போனார்கள், எனவே பரிசேயர்தாமே ஒருமனதாய் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர்களாகத் தலைதூக்கினர். எபிரெய யூனியன் கல்லூரியைச் சேர்ந்த எல்லிஸ் ரிவ்கின் அவர்கள் கொண்டிருந்த செல்வாக்கை விளக்கினார். “பரிசேயரின் வாய்மூலப் பிரமாணம் மிஷ்னா, பலஸ்தீனிய மற்றும் பாபிலோனிய தால்மூட்கள், முற்கால, இடைக்கால மற்றும் தற்கால பிரதிபலிப்புகளுக்கும் பல்வேறு யூதப் பிரமாணங்களின் விதிமுறைகளுக்கும் வழி வகுத்தது.” தி நியு என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா (The New Encyclopoedia Britannica) கூடுதலாகக் குறிப்பிடுவதாவது: “இன்றுங்கூட வித்தியாசமான யூத மதப் பிரிவினரும், அவர்கள் மரபுக்கோட்பாட்டுப் பிரிவினராக, அல்லது பழமைப் பேணுகின்ற பிரிவினராக அல்லது புரட்சிப் பிரிவினராக இருப்பவர்கள் எல்லாருமே நேரடியாகப் பரிசேயரின் மற்றும் ரபீக்களின் ஆவிக்குரிய வம்சத்தினராக உரிமைப்பாராட்டுகிறார்கள்.”
டயஸ்பொராவில் மேசியானிய நம்பிக்கை
பொ.ச. 70-க்கு முன்பு, இலட்சக்கணக்கான யூதர்கள் பலஸ்தீனாவுக்கு வெளியே முக்கியமாக சீரியாவில், சிறிய ஆசியாவில், பாபிலோனியாவில், மற்றும் எகிப்தில் வாழ்ந்தார்கள். என்றபோதிலும், பொ.ச. 70-க்குப் பின்பு, தப்பிப்பிழைத்த எந்த யூதரும் வேரோடு நீக்கப்பட்டனர், “சிதறுதல்” என்ற பொருள்படும் கிரேக்க வார்த்தை டயஸ்பொராவில் (diaspora) வாழ்வதற்காக சிதறிச்சென்றனர். அந்த இடத்திலுங்கூட அநேகர் வரக்கூடிய மேசியாவின் கீழ் தன்னுறுதி வாழ்க்கைக்குரிய நம்பிக்கையைக் காத்துவந்தனர். யூத தலைவனாயிருந்த பார் கோக்பா போலி மேசியாவாக நிரூபித்தான். பொ.ச. 132-ல் ரோமுக்கு எதிராக நடத்திய அவனுடைய போரட்டம் வெற்றிகாணவில்லை. யூதர் என்சைக்ளோபீடியா (The Jewish Encyclopedia) குறிப்பிடுகிறபடி, அந்தச் சமயத்திற்கும் பொ.ச. 1744-க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இப்படியாக 28 போலி மேசியாக்கள் தோன்றினார்கள்.
இப்படியாக, மேசியானிய நம்பிக்கை தாறுமாறாகிவிட்டது. என்சைக்ளோபீடியா ஜுடெய்க்கா (Encyclopedia Judaica) இப்படியாக விவரிக்கிறது: “இடைக்கால யூதரின் கொள்கை பூர்வத்திலிருந்து மேசியாவைப்பற்றிய ஓர் இணக்கமான, ஒற்றுமையான கருத்தைப் பெற்றிடவில்லை, . . . தால்மூட்டின் இலக்கியமும் வித்தியாசமான மித்ராஷிமும் வெவ்வேறு முரண்பட்ட கருத்துகளையே உட்படுத்திக்கொண்டன.” மேசியானிய ஆட்சி வெறுமென ஓர் உயர்ந்த சமுதாய முறையைச் சித்தரிக்கிறது என்று பன்னிரண்டாவது நூற்றாண்டிலேயே யூத தத்துவஞானி மோசஸ் மேய்மோனிதாஸ் விவாதித்தார். 19-வது நூற்றாண்டில் சீர்திருத்த யூதர்கள் “ஒரு தனிப்பட்ட மேசியாவில் நம்பிக்கை என்பதற்குப் பதிலாக ஒரு மேசியானிய சகாப்தத்தில் நம்பிக்கையை அமைத்தனர். . . . மேசியானிய நம்பிக்கை, சிறையிருப்பிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் சீயோனுக்குத் திரும்பிவந்ததுடன் பரம்பரையாக இணைந்திருந்த காரியத்திலிருந்து துண்டிக்கப்பட்டது.”
இதற்குச் சற்று முன்புதானே, ஐரோப்பாவில் ஏற்பட்ட ஹஸ்கலா (கருத்து வெளிச்சம்) அந்தப் பிரச்னையை மேலுமாகக் குழப்பிவிட்டது. மேற்கத்திய வாழ்க்கை முறையைத் தழுவத் தயாராயிருந்த ஒரு யூத மத முறைமையை அது உண்டுபண்ணியது. இது யூதர்களை, மேசியாவின் கீழ் திரும்பவும் நிலைநாட்டப்பட்ட தாயகத்தில் தன்னுறுதியை மேன்மையாகக் கருதும் யூதர்களாகவும், பிறந்த தேசத்தின் வாழ்க்கையில் இணைந்திருப்பதே முக்கியமானது என்று கருதும் யூதர்களாகவும் பிரித்தது.
இந்தக் காரியங்களும் செமித்திய எதிர்ப்பு அதிகரித்ததும் நவீன சீயோனிய மதப்பிரிவு தோன்றுவதற்கு வழிவகுத்தது. இதன் தந்தை 19-வது நூற்றாண்டின் முடிவில் வாழ்ந்த தியோடர் ஹெர்ஸல் என்பவர். இஸ்ரேல் தேசம் உருவாகி 42 ஆண்டுகள் கழித்து இன்று மே 1990-ல் அவர் முன்னோக்கிய யூதரின் தாயகத்தில் யூதர்கள் ஒரு யூத சமுதாயமாக தன்னுறுதி வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். அவர்களுடைய மேசியானிய எதிர்பார்ப்பு நிறைவேறிவிட்டதா?
அப்படியானால், லண்டன் தி டைம்ஸ் (The Times) பத்திரிகைபடி, சில யூதர்கள் “இஸ்ரேல் உருவானதிலிருந்து சீயோனிய மதத்தில் மெய்யான காரியமான ஒரு துப்புரவுக்கேட்டைப்” பார்த்ததற்குக் காரணம் என்ன? சரித்திராசியரான தியோடர் H. வைட் தாமே ஒரு யூதராயிருந்தும், “புராட்டஸ்டன்ட் மதத்தினர் போன்றே யூதர்களின் வித்தியாசமான பிரிவுகள் அத்தனை பலவாகவும் ஒன்றோடொன்று சண்டைப்போட்டுக்கொண்டுமிருக்கின்றன” என்று ஏன் நேர்மையுள்ளவராக ஒப்புக்கொண்டார்? இஸ்ரேலின் 120 உறுப்பினரடங்கிய நெசட் என்ற அரசியல் அமைப்பில் முடிவில்லா மதப் பேதங்களைக் குறித்து 1987-ல் டைம் (Time) பத்திரிகை, “இஸ்ரேல் . . . தன்னில்தானே பிளவுபட்ட ஒரு வீடாகாமலிருக்க வேண்டுமானால் நிலையான தீர்வு காணப்படவேண்டும்” என்று ஏன் குறிப்பிட்டது?
நவீன யூதரின் தன்னுறுதி எதிர்காலத்தைக் குறித்ததில் நம்பிக்கை அளிப்பதில்லை. தங்களுடைய மேசியானிய நம்பிக்கையின் எதிர்பார்ப்பைக் காண்பதற்கு மனித அரசியலை நம்பியிருப்பதன் மூலம், யூத மதம் அதன் சொந்த புனித எழுத்துக்களின் வார்த்தைகளை அசட்டைசெய்துவிட்டிருக்கிறது: “மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். . . . பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்.”—சங்கீதம் 118:8; 146:3, பரிசுத்த வேதாகமம், அமெரிக்காவின் யூத பிரசுர சங்கம் வெளியிட்டது.
தங்களுடைய மேசியானிய நம்பிக்கையை தெளிவுபடுத்திடுவதில் கஷ்டப்படும் யூதர்களின் விஷயத்திற்கு முரணாக, பொ.ச. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த அவர்களுடைய முன்னோரில் பலருக்கு அது கடினமாயிருக்கவில்லை. (யோவான் 1:41 பார்க்கவும்.) தாங்கள் மேசியாவாக ஏற்றுக்கொண்டவரை அவர்கள் பின்பற்றுகிறவர்களானார்கள். “விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பின் வழி,” என்று நாம் பொருத்தமாக அழைக்கக்கூடிய ஒரு மதத்தின் வைராக்கியமுள்ள ஆதரவாளர்களானார்கள். எமது அடுத்த இதழ் அதை விளக்கும். (g89 5/22)
[பக்கம் 21-ன் படம்]
மேற்கத்திய மதில், பொதுவாக புலம்பல் மதில் என்றழைக்கப்படுகிறது, பொ.ச. 70-ல் யூதர்களுடைய பரிசுத்த ஆலயம் அழிக்கப்பட்டபோது எஞ்சியிருந்தது இதுமட்டுமே