வீண்பேச்சின் வலிமை
இளம் பெண்ணின் தற்கொலை அமைதியான இங்கிலாந்து நகரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிண ஆய்வாளருடைய ஜுரியின் முடிவு அதைவிட அதிகமாக திடுக்கிடச் செய்வதாக இருந்தது: ‘பயனற்ற வீண்பேச்சினால் அவள் கொல்லப்பட்டாள்!’ இளம் பெண்ணின் பெயர், அவள் புகழ், கடைசியாக அவளுடைய வாழ்க்கையே நகரின் கெட்ட எண்ணமுள்ள பயனற்ற பேச்சினால் நாசமாக்கப்பட்டது.—வதந்தியும் வீண்பேச்சும்—ஊர்ச்செய்தியின் சமூக உளவியல், ரால்ஃப் L. ராஸ்நோ மற்றும் கேரி ஆலன் ஃபைன் எழுதியது.
விளைவுகள் அபூர்வமாகவே இத்தனை துயரமாக இருந்த போதிலும், வீண்பேச்சுக்கு பிரமிக்கச் செய்யும் வலிமை இருப்பது குறித்து எந்தச் சந்தேகமுமில்லை. ஒரு பக்கத்தில், பயனுள்ள தகவலை பரிமாற்றம் செய்துகொள்ள ஒரு பொதுவான முறையாக அது ஏற்றுக்கொள்ளப்படலாம். மறுபக்கத்தில், அது அரசாங்க குழப்பங்களுக்கும், குடும்பங்களில் பிளவுக்கும், வாழ்க்கைப்பணி பாழாக்கப்படுவதற்கும் காரணமாக கருதப்படலாம்.
தூக்கமில்லா இரவுகள், மனநோவு மற்றும் உணவுச் செரிமானமின்மைக்கு வீண்பேச்சு காரணமாயிருக்கிறது. ஏதாவது ஒரு சமயத்தில் அது உங்களுக்குத் தனிப்பட்ட விதமாக வேதனையை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. உண்மையில் வியாபார உலகில், “உங்கள் வாழ்க்கைப்பணியின் வழியில் எவரேனும் ஒருவர் நயவஞ்சகமான முறையின் மூலமாக உங்கள் முயற்சியை அழிக்க முற்படும் வாய்ப்பிருப்பதை நீங்கள் ஒப்புக்கொண்டாக வேண்டும்,” என்பதாக எழுத்தாளர் வில்லியம் M. ஜோன்ஸ் எச்சரிக்கிறார்.
எதிர்மறையான வீண்பேச்சு குறித்து பெரும்பாலும் அனைவருமே முகம் சுளிப்பர். ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஃபுளோரிடாவின் அமெரிக்க-இந்தியர்கள் மத்தியில், “எவரைப் பற்றியாவது தவறாகப் பேசுவது,” என்பது பொய் மற்றும் திருட்டுக்கு சமமாக வைக்கப்படுகிறது. ஒரு மேற்கு ஆப்பிரிக்க சமுதாயத்தில், பழிகூறுகிறவர்களுக்கு அவர்கள் உதடுகள் வெட்டப்படும் அல்லது அதைவிட மோசமாக தூக்கிலிடப்படும் அபாயம் இருந்தது! ஆம் சரித்திரம் முழுவதுமாக வீண்பேச்சை தடைசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்திருக்கின்றன.
இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும், பின்னர் ஐக்கிய மாகாணங்களிலும் 15-ம் மற்றும் 18-ம் நூற்றாண்டுகளுக்கிடையே, வீண்பேச்சு பேசுபவர்களை அவமானப்படுத்தி அவர்களுடைய தீங்கிழைக்கும் பயனில்லாப் பேச்சை நிறுத்தச் செய்வதற்காக, குற்றவாளியை நீரில் மூழ்கி எடுக்க உதவும் நீளமான கழியுடன் இணைக்கப்பட்ட இருக்கைகள் பிரபலமாகப் பயன்படுத்தப்பட்டன. குற்றமுள்ளவராக காணப்படுகிறவர் ஒரு நாற்காலியோடு சேர்த்து கட்டப்பட்டு திரும்பத் திரும்ப தண்ணீரில் அமிழ்த்தப்படுவார்.
தண்டனைக் கட்டையையும், தொழுமரத்தையும் போல, குற்றவாளியை நீரில் மூழ்கடிக்க உதவும் இருக்கையும் வெகு காலத்துக்கு முன்பே மறைந்துவிட்டிருக்கையில், நவீன காலங்களிலும்கூட வீண்பேச்சுக்கு எதிராக யுத்தம் தொடுக்கப்பட்டே வருகிறது. உதாரணமாக 1960-களின் போது வதந்தி-கட்டுப்பாடு மையங்கள் என்றழைக்கப்பட்டவைகள் அரசாங்க நடவடிக்கைகளுக்குக் கெடுதி விளைவிக்கக்கூடிய வதந்திகளுக்கு பதிலளிக்க ஐக்கிய மாகாணங்களில் ஸ்தாபிக்கப்பட்டன. அதேப் போன்ற சேவை, வட ஐயர்லாந்திலும் இங்கிலாந்திலும் இருந்திருக்கின்றன. ஒரு சில நிதி நிறுவனங்களுக்கு பொருளாதார சேதத்தை விளைவிக்க வடிவமைக்கப்பட்ட வீண்பேச்சை தடைசெய்வதற்கு சட்டங்களும்கூட இயற்றப்பட்டுள்ளன.
இப்படிப்பட்ட முயற்சிகள் இருந்தாலும் வீண்பேச்சு தொடர்ந்திருக்கிறது. அது உயிர்த்துடிப்புடன் தழைத்தோங்கிக் கொண்டுமிருக்கிறது. சட்டமோ அல்லது வேறு எந்த மனித முறையோ இதுவரையாக வாட்டுகின்ற அதன் வலிமையை ஒழிப்பதில் வெற்றியடையவில்லை. வீண்பேச்சு எல்லா இடங்களிலுமிருக்கிறது. சுற்றுவட்டார வீண்பேச்சு, அலுவலக வீண்பேச்சு, கடை வீண்பேச்சு, விருந்து வீண்பேச்சு, குடும்ப வீண்பேச்சு இருக்கிறது. அது அனைத்துக் கலாச்சாரங்கள், இனங்கள் மற்றும் நாகரீகங்களின் எல்லைகளையும் கடந்து சமுதாயத்தில் ஒவ்வொரு நிலையிலும் தழைத்தோங்கியிருக்கிறது. நிபுணர் ஒருவர் சொன்னார்: “ஏறக்குறைய சுவாசிப்பதைப் போன்றே வீண்பேச்சு அத்தனை சாதாரணமாக இருக்கிறது.” அவர் மேலும் சொன்னார்: ‘அது ஆழமாக மனித இயல்பின் ஒரு பாகமாக இருக்கிறது.’
உண்மைதான், வீண்பேச்சு மனித இயல்பின் மிக இருண்ட பக்கத்தை அடிக்கடி வெளிப்படுத்துகிறது. நற்பெயரை களங்கப்படுத்துவதில், உண்மையை திரித்துக்கூறுவதில், வாழ்க்கையை நாசப்படுத்துவதில் மகிழ்ச்சி காணும் ஒரு பக்கமாக இது இருக்கிறது. இருந்தபோதிலும், வீண்பேச்சு உள்ளியல்பில் தீங்கானதாக இல்லை. திட்டமிடப்படாத பேச்சுக்கு உடன்பாடான ஒரு பக்கம் இருக்கிறது. தீங்கான மற்றும் தீங்கற்ற வீண்பேச்சுக்குமிடையே எல்லைக்கோட்டை நிர்ணயிப்பதை அறிந்திருப்பதே மற்றவர்கள் பலியாவதை தவிர்ப்பதற்கும்—நீங்களே பலியாவதை தவிர்ப்பதற்கும்— திறவுகோலாக இருக்கிறது. (g91 6/8)
[பக்கம் 4-ன் படம்]
உள்ளூர் அரசாங்கங்கள் வீண்பேச்சாளர்களைக் கையாள முயற்சி செய்த ஒரு வழி, நீரில் மூழ்கி எடுக்க உதவும் நீளமான கழியுடன் இணைக்கப்பட்ட இருக்கைகளின் உபயோகமாக இருந்தது