இளைஞர் கேட்கின்றனர்
என் ஜெபங்களுக்குக் கடவுள் பதிலளிக்கிறாரா?
“யெகோவா என் ஜெபங்களுக்கு பதிலளிக்கிறாரா என்பதை நான் அறியவேண்டும்,” என்று 11 வயது சான்ரா சொல்கிறாள், “ஏனென்றால் அவர் அப்படிச் செய்கிறாரா என்பது எனக்கு நிச்சயமாக இல்லை. இதே பிரச்னையை உடைய அநேக மற்ற இளைஞரையும் எனக்குத் தெரியும்.” பதினைந்து வயதுடைய அலிஸா ஒரு சமயத்தில் ஜெபத்தைப்பற்றி இதே பிரச்னையை உடையவளாக இருந்தாள். “நான் அடிக்கடி என்னோடேயே பேசிக்கொண்டிருப்பது போல் உணர்ந்தேன்,” என்று அவள் ஒத்துக்கொள்கிறாள்.
ஒரு 1988-ன் பொதுக் கணக்கெடுப்பின் (Gallup survey) பிரகாரம், ஐக்கிய மாகாணங்களில் பதின்மூன்று முதல் பத்தொன்பதுவரை வயதுடையவர்களில் 87 சதவிகிதம் பேர் எப்பொழுதாவது ஒரு சமயம் ஜெபித்திருக்கின்றனர், ஆனால் அவர்களில் பாதிக்கும் குறைந்த எண்ணிக்கையினர் ஒழுங்காக அவ்வாறு செய்கிறார்கள். வெளிப்படையாகவே சிலர் தங்களுடைய ஜெபங்கள் பதிலளிக்கப்படுவதேயில்லை என உணருகிறார்கள். இது போலவே, சில சமயங்களில் நீ ஒருவேளை உன்னுடைய ஜெபங்களுக்கு எவரும் செவிசாய்த்துக்கொண்டில்லை என உணரலாம். ஆனாலும் பைபிள் நமக்கு, விசுவாசமுள்ள ஒரு மனமார்ந்த ஜெபத்தை ஒருவர் செய்யும்போது, “ஜெபத்தைக்கேட்கிறவ”ர் செவிகொடுக்கிறார் என்ற உறுதிமொழியைத் தருகிறது! (சங்கீதம் 65:2) ஆனால் அவர் வெறுமென மந்தமாக கேட்பவராக அதாவது அமைதலாகக் கேட்டு ஆனால் பிரதிபலிக்கும் வகையில் மிகச்சிறிதே செய்பவராக அல்லது ஒன்றுமே செய்யாதவராக இல்லை என்பதை நீ எவ்வாறு தெரிந்துகொள்வது?
ஜெபங்களைக் கேட்கிறவர் என்று கடவுளை அழைத்தப்பின்பு சங்கீதக்காரன் சொன்னான்: “எங்கள் இரட்சிப்பின் கடவுளே, பயங்கர செயல்களினால் எங்களுக்கு நீதியாய் உத்தரவு அளிக்கிறீர்.” (சங்கீதம் 65:5, தி.மொ.; ஒப்பிடவும்: சங்கீதம் 66:19, 20.) பின்பு ஏன் சிலர், அவர்களுடைய ஜெபங்கள் பதிலளிக்கப்படாமல் போகிறது என்று உணருகிறார்கள்?
ஜெபங்களுக்குத் தடைகள்
காரணம் ஒருவேளை கடவுளுடன் உள்ள ஓர் உண்மையான உறவு குறைவுபடுவதாக இருக்கலாம். சில இளைஞர் அவர் இருப்பதையே சந்தேகிக்கின்றனர். மற்றவர்களுக்கு நம்பிக்கையிருக்கிறது ஆனால் ஒரு தூரமான, புரியாத நபராக அவரைக் காண்கிறார்கள். ஒரு விசைஏணியின் (an elevator) நிறுத்தும் பொத்தானைப் போல—கொடிய அவசரத்தேவைகளில் ஒரு கடைசித் தெரிவாக ஜெபம் ஆகிறது. ஒரு கத்தோலிக்க இளைஞன், “நான் கடவுள் இருப்பதை நம்புகிறேன்,” என்று உரிமைபாராட்டுகிறான். “நான் கஷ்டத்தில் இருக்கும்போது, எனக்கு உதவி தேவையாக இருக்கும்போது, நான் எப்பொழுதும் அவருடைய உதவிக்காக கேட்பேன்.” மற்றொரு இளம் பெண் ஒளிவுமறைவின்றி சொன்னாள்: “நான் சில சமயங்களில் எனக்கு ஏதாவது உண்மையில் தேவையாக இருக்கும்போது மட்டும்தான் ஜெபிக்கிறேன்.”
எப்படியாயினும், ஜெபம், விசுவாசம், பயபக்தி, கடவுள்பற்று, நம்பிக்கை ஆகியவற்றின் ஓர் உயிர்ப்பண்பாக இருக்கவேண்டும்—வெறுமென நம்பிக்கையற்ற தன்மையின் இறுதிகட்ட நிலையாக அல்லது சுய ஆசையின் வெளிப்பாடாக இருக்கக்கூடாது. மேலும் கடவுள் ஒருவர் ஒருவேளை இருப்பார் என்று நீங்கள் நினைப்பதால் ஜெபம் செய்வது போதாது. “தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்,” என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 11:6) சந்தேகப்படுபவர்களுடைய ஜெபங்கள் பதிலளிக்கப்படுவதில்லை. (யாக்கோபு 1:6-8) தம்மைப் பற்றி அறியவும் தன்மீது அன்புசெலுத்தவும் முன்வந்தவர்களுக்கு யெகோவா செவிசாய்க்கிறார்; இவர்கள் அவசரநிலைகள் வரும் வரை ஜெபத்தைச் சேர்த்துவைப்பவர்களாக இல்லை. இவர்கள் 1 தெசலோனிக்கேயர் 5:17 எச்சரிக்கிறப் பிரகாரம், “இடைவிடாமல் ஜெபம்பண்ணு”கிறார்கள், அல்லது ஆன் அமெரிக்கன் டிரான்ஸ்லேஷன் சொல்கிறப் பிரகாரம், அவர்கள் “ஜெபம் செய்ய எப்பொழுதும் தவறுவதில்லை.”
மிகவும் வருந்ததக்க விஷயமானது, சில கிறிஸ்தவ இளைஞர் யெகோவாவைப் பற்றி அறிய வந்திருந்தும், அவரோடு ஒரு நல்ல நெருக்கமான நட்பை உண்மையில் வளர்த்து வருவதில்லை. (சங்கீதம் 25:14) இவர்களுடைய ஜெபங்கள் எப்போதாவது செய்யப்படுவதாகவும் குறிக்கோள் இல்லாததாகவும், ஆகவே இறுதியில் பதில் கொடுக்கப்படாதவையாகவும் பெரும்பாலும் இருக்கின்றன. உங்களுடைய ஜெபங்களைப் பற்றியும் இதுவே ஒருவேளை உண்மையாக இருக்கிறதா? அவ்வாறெனில், அவரை அறியவருவதன் மூலம் “தேவனிடத்தில் சேருங்கள்.” (யாக்கோபு 4:8) முன்பு குறிப்பிடப்பட்ட, இளம்பெண் அலிஸா, யெகோவாவைப் பற்றிய தன்னுடைய சொந்த சந்தேகங்களை உடையவளாக இருந்தாள். ஆனால் ஓர் ஒழுங்கான தனிப்பட்ட பைபிள் படிப்பு அவளுடைய சந்தேகங்களைப் படிப்படியாக நீக்கி, கடவுளோடு ஒரு நெருங்கிய கூட்டுறவை வைத்துக்கொள்ள அவளுக்கு உதவிசெய்திருக்கிறது.
ஒருவருடைய மனநிலையும் நடத்தையும்கூட ஜெபத்திற்கு பெரிய தடைகளாக இருக்கலாம். சங்கீதக்காரன் சொன்னார்: “என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.” (சங்கீதம் 66:18; நீதிமொழிகள் 15:29) கடவுளுக்கு வெறுப்பு உண்டாக்கிய காரியங்கள்—போதைமருந்துகளைப் பயன்படுத்துவது, புகைப்பிடிப்பது, தரங்கெட்ட இசைகளைக் கேட்பது, அல்லது இன ஒழுக்கங்கெட்ட செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றை—நீங்கள் தொடர்ந்து செய்துகொண்டிருந்துவிட்டு அவர் உங்களுடைய ஜெபங்களுக்குப் பதிலளிப்பார் என்று நினைப்பது நியாயமானதாக இருக்கிறதா? இல்லவே இல்லையே. ஆகவே, யெகோவா, மாய்மாலமாக “வஞ்சகராக” செயல்படும் இரட்டை வாழ்க்கை நடத்துபவர்களின் ஜெபங்களை ஏற்றுக்கொள்வதில்லை. (சங்கீதம் 26:4) “உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவ”னுக்கு மட்டுமே அவர் செவிசாய்க்கிறார். (சங்கீதம் 15:1, 2) எனவே நீங்கள் ஜெபம் செய்யும்போது உங்களிடமே நீங்கள் பேசுவதுபோல் உணர்ந்தால், உங்கள் வாழ்க்கை முறையைச் சோதித்துப்பாருங்கள். ஒருவேளை நீங்கள் சில மாற்றங்களைச் செய்யவேண்டியதாக இருக்கும்.
ஜெபத்தைத் தவறாகப் பிரயோகித்தல்
கடவுளிடமிருந்து எப்படிப்பட்டக் காரியங்களை நீங்கள் கேட்கலாம்? இயேசு நமக்கு இவ்வாறு உறுதியளித்தார்: “நீங்கள் தந்தையிடம் எதைக் கேட்டாலும், அதை என் பெயரால் உங்களுக்குத் தருவார்.” (யோவான் 16:23, கத். பை.) அந்த ஏங்க வைக்கும் வார்த்தை—எதை! என்பதே. இது கூப்பிட்டவுடன் வந்து பணிபுரியும் ஒரு வேதாளப் பூதம்போல் கடவுள் இருக்கிறார் என்பதைக் குறிக்கிறதா? அவர் உங்களுடைய வேண்டுதல்கள் அனைத்தையும் அற்பமானவைகளும் உட்பட நிறைவேற்றுவாரா? தன்னுடைய வேதனையான மரணத்திற்குச் சில மணிநேரங்களுக்கு முன்பு தான் இயேசு அவருடைய வார்த்தைகளைச் சொல்லியிருந்தார். உண்மையாகவே அவர் எப்படிப்பட்ட மடத்தனமான காரியங்களையும் மனதில் கொண்டில்லையே! இதன் காரணமாகவே, யாக்கோபு 4:3, ஜெபத்தைத் துர்ப்பிரயோகம் செய்வதைப் பற்றி எச்சரிக்கிறது. அது சொல்கிறது: “நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.”
இன்று அநேகர் ஜெப சிலாக்கியத்தை துர்ப்பிரயோகம் செய்கின்றனர். பள்ளியின் ஒரு கூடைப்பந்தாட்டக் குழு ஆட்ட களத்தின் மையத்தில் மண்டியிட்டு ஒரு ஜெபத்தை ஒவ்வொரு ஆட்டத்தின் பிறகும் ஒப்பிக்கும். ஆனால் நீங்கள், கடவுள் ஒரு கூடைப்பந்தாட்ட ரசிர் அல்லது அவர் போட்டிவிளையாட்டுகளில் தலையிட்டு ஆட்களை வசீகரிக்கும் நபர் என்றா உண்மையில் நினைக்கிறீர்கள்? (கலாத்தியர் 5:26-ஐ ஒப்பிடவும்.) அல்லது அறிக்கை காண்பிக்கிறப் பிரகாரம் செருப்புக்காக ஜெபிக்கிற ஒரு பெண்ணைப் பற்றி எவ்வாறு உணருகிறீர்கள்? அவள் சொல்கிறாள்: “சில சமயங்களில் ஒரு செருப்புக்கடையில் என் கால்அளவிற்கு ஒருவேளை வெறுமனே ஒன்றோ அல்லது இரண்டோ ஜோடிகள் மட்டும் தான் இருக்கலாம், அந்தச் சமயத்தில் என்னிடத்தில் பணம் இல்லாவிட்டால், நான் திரும்பி அதை வாங்க வரும்போது அது அங்கேயே இருக்கும்படி பார்த்துக்கொள்ள கடவுளிடம் நான் கேட்டுக்கொள்ளுவேன்.” இந்தச் சமயத்தில், உண்மையான தேவைக்காக ஜெபிப்பது வேறு—உங்களுடைய கடைக்குப் போகும்வேலையைக் கடவுள் செய்யும்படி எதிர்பார்ப்பது மற்றொன்று.
இதைப் போலவே, நீங்கள் செய்த தவற்றிற்கு தண்டனையை அல்லது கண்டிப்பைத் தவிர்க்கும்படி கடவுளிடம் ஜெபம் செய்வது, முறையற்றதும், வீணானதும் ஆகும். (எபிரெயர் 12:7, 8, 11) இதைப்போலவே, நீங்கள் சிறிது தயாரித்து அல்லது ஒருபோதும் தயாரித்திராது இருந்துவிட்டு, அந்தத் தேர்வில் நான் ஒரு நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்று கடவுளிடம் கேட்பது ஒருவிதத்திலும் நல்ல தேர்ச்சியை உங்களுக்குத் தரப் போவதில்லை.—கலாத்தியர் 6:7-ஐ ஒப்பிடவும்.
“அவருடைய சித்தத்தின்படி” ஜெபங்கள்
அப்போஸ்தலனாகிய யோவான் ஜெபத்தைப் பற்றிய ஒரு முக்கியமான குறிப்பை விளக்குகிறார்: “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.” (1 யோவான் 5:14) இயேசுவின் மாதிரி ஜெபம் (கர்த்தரின் ஜெபம்), இந்த மாதிரியான ஒரு ஜெபம் எதையெல்லாம் உட்படுத்தலாம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. அவர், (1) கடவுளுடைய பெயர் பரிசுத்தப்படுதல், (2) கடவுளுடைய அரசாங்கம் வருவது, (3) கடவுளுடைய விருப்பம் முழுமையாக நிறைவேறுதல், (4) உடல் சார்ந்த மற்றும் ஆவிக்குரிய தேவைகளைக் கொடுப்பது, இறுதியாக (5) சாத்தானுடைய கண்ணியில் சிக்காமல் இருப்பதற்கான உதவிகள், ஆகியவற்றிற்காக ஜெபம் செய்தார்.—மத்தேயு 6:9-13.
இந்த வரைக்கோட்டுக்குள், ஜெபம் செய்வதற்கான நியாயமான பல காரியங்கள் உள்ளன. உண்மையாகவே, 1 பேதுரு 5:7 கிறிஸ்தவர்களை “அவர் (கடவுள்) உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்,” என்று சொல்கிறது. அப்படியென்றால், நம்முடைய வாழ்க்கைகளின் ஒவ்வொரு காரியங்களைக் குறித்தும் உண்மையாக ஜெபிப்பது நியாயமானதே. பள்ளி படிப்பு முறையில் எந்தப் பிரிவை தேர்ந்தெடுப்பது என்பதைப் போன்ற, ஒரு தீர்மானத்தை நீங்கள் எடுக்கவேண்டுமா? தெய்வீக ஞானத்திற்காக ஜெபியுங்கள். (யாக்கோபு 1:5) மடத்தனமான ஒரு தவறை நீங்கள் செய்தீர்களா? அப்படியென்றால், கடவுளுடைய மன்னிப்பிற்காக மன்றாடுங்கள்.—ஏசாயா 55:7; 1 யோவான் 1:9.
ஆனால், உங்களுடைய ஜெபத்திற்கு இசைவாக செயல்பட வேண்டும். இளம் பையனாகிய கிளின்ட்-ஐ நாம் எடுத்துக்கொள்வோம். இவன் உயர் (மேல்நிலை) பள்ளி படிப்பில் தேர்ச்சியடைந்த பின்பு ஒரு முழுநேர பிரசங்கியாக ஆனான். பல மாதங்களாக, பைபிளைப் படிப்பதில் பிரியமுள்ள ஒருவரையும் அவன் கண்டுபிடிக்கவில்லை. இதற்காக, தன்னுடைய பங்கில் எந்தவொரு முயற்சியும் எடுக்காமல் அற்புதவிதமாக ஒரு பைபிள் மாணாக்கனை காணவேண்டும் என்று அவன் காத்திருக்கவில்லை. அவன் விடாமுயற்சியுடன் வீட்டுக்கு வீடு சென்று பிரசங்கிப்பதில் தொடர்ந்து ஈடுபட்டான், சிறிது காலத்தில் பைபிளைப் படிக்க ஆர்வம் கொண்டுள்ள அநேகரை அவன் கண்டுபிடித்தான்.
கடவுள் எப்படி பதிலளிக்கிறார்
சில சமயங்களில் வெறும் ஜெபம் செய்யும் செயல்தானே உதவியளிப்பதாக இருக்கிறது. இளம் பெண், சேன்டி, தற்புணர்ச்சி பழக்கத்தோடு போராடிக்கொண்டிருந்தாள். அவள் சொல்கிறாள்: “ஜெபிப்பதும் யெகோவாவிடம் மன்றாடுவதும் எனக்கு உதவியாக இருக்கிறது, ஏனென்றால் நான் தற்புணர்ச்சியில் ஈடுபடாமல் இருப்பதற்கான உதவிக்காக அவரிடம் ஜெபித்தப் பின்பு நான் அதில் ஈடுபடாமல் இருப்பது மேலானது என்று நான் உணர்ந்தேன்.”
இருந்தபோதிலும், சில சமயங்களில், கடவுள் ஜெபங்களுக்குப் பதிலளிக்கும்போது காரியங்களை ஏய்க்கும் பாங்குடன் செய்வதாக தோன்றலாம். ஒரு சமயம் சிறுவன் கென், ராஜ்ய மன்றத்தில் அவனுக்காக நியமிக்கப்பட்ட சிறு பைபிள் பேச்சைக் கொடுப்பதற்காக யெகோவாவின் சாட்சிகளின் ராஜ்ய மன்றத்திற்கு அவன் போக வேண்டியிருந்தது. எதிர்பாராதவிதமாக, அவனைக் கூட்டிக்கொண்டுப் போக அங்கு யாரும் இல்லை. இந்தக் காரியத்தைக் குறித்து மிகவும் மன உருக்கத்துடன் ஜெபம் செய்தான். ஒருசில நிமிடங்களில் அவனுடைய அக்கா, மிகவும் அபூர்வமாக பார்க்க வருபவர், அங்கு வந்தார். இவனுடைய மதத்தில் அக்கறையில்லாதவராக இருந்தாலும் அவனைக் கூட்டிக்கொண்டுச் சென்றார். இவனுடைய ஜெபத்திற்கு ஒரு நேரடியான பதிலா இது? ஒருவேளை இருக்கலாம். காரியங்கள் எப்படி நடந்தாலும், நம்முடைய நன்மைக்காக நிகழ்ச்சிகள் நடக்கும்போது நாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவது எப்போதும் சரியானதே. பவுல் எச்சரிக்கிறார்: “எவ்விஷயத்திலும் நன்றிசெலுத்துங்கள்.”—1 தெசலோனிக்கேயர் 5:17, தி.மொ.
எனினும், உங்களுடைய ஜெபங்களுக்குக் கடவுள் ஒருவித நாடக பாணியில் பதிலளிக்க நினைக்காதீர்கள். அதே சமயத்தில், உங்களுக்கு நடக்கிற ஒவ்வொரு சிறு காரியமும் தெய்வ சித்தம் என்று உரிமை பாராட்டாதீர்கள். பெரும்பாலும் நம்முடைய ஜெபங்கள் இரகசியமாக நமக்கு பதிலளிக்கப்படுகின்றன: நீங்கள் பைபிளில் அல்லது பைபிள் பிரசுரங்களில் எதையோ வாசிக்கும்போது; பெற்றோரோ அல்லது உடன் கிறிஸ்தவனோ உங்களுக்கு நல்ல புத்திமதி கொடுக்கும்போது. மறுப்புக்கு இடமில்லாமல், உங்களைக் குறித்த கடவுளுடைய சித்தம் என்ன என்பதை வெறுமென தெரிந்துகொள்வதற்கு நல்ல ஞானம் தேவையாக இருக்கிறது. காலப்போக்கில், பிரச்னைகள் பொதுவாக தீர்க்கப்படுகின்றன.
ஆம், காலம்! நீங்கள் நினைக்கும் காலத்தில் கடவுள் பதிலளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். “கடவுள் [யெகோவா, NW] நம்மை மீட்பாரென்று, அமைதியாய்க் காத்திருத்தல் நல்லது,” என்று எரேமியா எழுதினான். (புலம்பல் 3:26, கத்.பை) மேலும், நீங்கள் எதிர்பார்க்கும் பதிலைப் பெறுவீர்கள் என்றும் உங்களுக்கு உறுதிமொழி கொடுக்கப்பட்டில்லை. அப்போஸ்தலன் பவுல் “மாம்சத்திலே ஒரு முள்” என்று அழைத்த தன்னுடைய பிரச்னையை நீக்கும்படி கடவுளிடம் மூன்று முறை விண்ணப்பம் செய்தார். கடவுளுடைய பதில் நீக்க மாட்டேன் என்பதாகும். (2 கொரிந்தியர் 12:7-9) எனினும் ஜெபம் செய்யும் சிலாக்கியத்திற்கு தன்னுடைய போற்றுதலை அவர் இழக்கவில்லை, மாறாக, யெகோவாவின் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்பவராக இருந்தார். அவர்தான் இவ்வாறு எழுதினார்: “ஜெபத்தில் தரித்திருங்கள்.” (கொலோசெயர் 4:2, தி.மொ.) எனவே, “தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருங்கள், . . . தொடர்ந்து தேடிக்கொண்டே இருங்கள், மேலும் . . . தொடர்ந்து தட்டிக்கொண்டே இருங்கள்.” (மத்தேயு 7:7, NW) இவ்வாறு செய்வதினால் நீங்கள் கடவுளோடு நெருங்கி வருவீர்கள், மேலும் கூடுதலாக, உங்களுடைய ஜெபங்களுக்கு நீங்கள் ஒருவேளை பதில்களையும் பெற முடியும். (g92 9/22)
[பக்கம் 16-ன் படங்கள்]
ஜெபங்கள் பொருள் சம்பந்தமான அற்ப விண்ணப்பங்களையுடையதாக இருக்கக்கூடாது