இந்த மதங்களிடம் விடை இருக்கிறதா?
கருக்கலைப்பைப்பற்றிய கேள்வியின்பேரில் ஏற்பட்டிருக்கும் ஒழுக்கசம்பந்தமான ஒரு குழப்பநிலையில், அநேகர் தங்கள் மதத் தலைவர்களின் வழிநடத்துதலை நாடுகின்றனர். இவர்கள் எவ்வாறு பிரதிபலிக்கின்றனர்?
கத்தோலிக்க சர்ச் கருக்கலைப்புக்கு எதிராக உறுதியான ஒரு நிலைநிற்கையை எடுத்து, உயிர் கருத்தரிப்பின்போது தொடங்குகிறது என போதிக்கிறது. சில பாதிரிமார்கள் அரசியல்பூர்வமாக ஈடுபாடு கொண்டிருந்து, கருக்கலைப்புக்கு ஆதரவாக வாக்களிக்கும் கத்தோலிக்க அரசியல்வாதிகளைத் திருச்சபையிலிருந்து விலக்கும்படி போப்பைக் கேட்டிருக்கின்றனர். இருப்பினும், அநேக கத்தோலிக்கர்கள் கருக்கலைப்புக்கு ஆதரவு கொடுத்து, கொள்கைகளைத் தளர்த்தும்படி கோரிவருகின்றனர்.
பாதிரிகளில் 46 சதவீதத்தினர் “கருக்கலைப்புத் தவறென பைபிள் போதிக்கிறதென்று நம்புகிறதில்லை,” என்பதாக ப்ரிஸ்பிட்டேரியன் சர்ச் (அ.ஐ.மா.) அறிக்கை செய்கிறது. சர்ச்சின் அதிகாரப்பூர்வமான நிலைநிற்கை கருக்கலைப்புக்கு ஆதரவாகவே இருக்கிறது.
யுனைட்டட் சர்ச் ஆஃப் க்றைஸ்ட்டின் 16-வது பொதுப்பேரவை ‘போதுமான குடும்பக் கட்டுப்பாட்டுச் சேவைகளைப் பெறவும், ஒரு தெரிவாக, சட்டப்பூர்வமாக ஆபத்தில்லாத கருக்கலைப்பைச் செய்துகொள்வதற்கான ஆண்கள் மற்றும் பெண்களின் உரிமையை ஆதரிப்பதாகவும்’ தீர்மானம் எடுத்துள்ளது.
கருக்கலைப்பு “ஓர் இறுதி தெரிவாகவே இருக்கவேண்டும்” என்று இவாஞ்சலிகல் லூதரன் சர்ச்சின் கோட்பாடு சொல்லுகிறது; ஆனாலும் இது கருக்கலைப்பை ஒரு “பாவம்” என்றழைக்கவோ, “உயிர் கருத்தரிப்பின்போது தொடங்குகிறது” என்று கூறவோ மறுக்கிறது.
தி ஸதர்ன் பேப்டிஸ்ட் கன்வென்ஷன் கருக்கலைப்பைக் கடுமையாக எதிர்க்கிறது. ஆனால் அமெரிக்கன் பேப்டிஸ்ட் சர்ச் இவ்வாறு கூறுகிறது: “கருக்கலைப்பின்பேரில் அரசாங்கத்துக்குக் கொடுக்கவேண்டிய சர்ச்சின் தகுந்த கோட்பாட்டு அறிக்கைச் சம்பந்தமாக நாங்கள் முரண்படுகிறோம். இதன் காரணமாக, அவனுடைய அல்லது அவளுடைய நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கக்கூடிய ஒரு பொதுக் கோட்பாட்டை ஆதரிக்க, ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களுக்கும் உள்ள சுயாதீனத்தை ஒப்புக்கொள்கிறோம்.”
யூத மதம் பிளவுபட்டிருக்கிறது, பழமை கோட்பாட்டு (orthodox) கிளையினர் பெரும்பாலும் கருக்கலைப்புக்கு எதிராகவும், சீர்திருத்தவாதி (reformation) கிளையினரும், மாற்றங்களை விரும்பாத யூதர்களும் கருக்கலைப்பை ஆதரித்தும் வருகின்றனர்.
இஸ்லாம் மதம் எந்தக் காரணமாயிருந்தாலும் உயிரின் முதல் 40 நாட்களுக்குள் கருக்கலைப்புச் செய்துகொள்வதை அனுமதிக்கிறது. ஆனால் தாயின் உயிருக்கு அபாயம் வருமானால் மட்டும் அதற்குப் பிறகு அனுமதிக்கிறது. கரு “40 நாட்களுக்கு ஒரு விதையின் உருவில் இருக்கிறது, அதன் பிறகோ அவன் அதே காலத்திற்கு உறைந்த ரத்தமாகவும், அதன் பிறகு அதே காலப் பகுதிக்கு ஒரு மாம்ச துண்டாகவும் இருக்கிறான், பின்னர் . . . அவனுக்குள் உயிரின் சுவாசத்தை ஊதுவதற்கு அவனிடம் ஒரு தேவதூதன் அனுப்பப்படுகிறான்,” என்பதாக ஹேடித் சொல்லுகிறது.
ஷிண்டோ மதம் எந்தவித அதிகாரப்பூர்வமான நிலைநிற்கையையும் கொள்ளவில்லை. கருக்கலைப்பைத் தனிப்பட்டவர்களின் தெரிவுக்கு விட்டுவிடுகிறது.
இந்துக்களும், புத்த மதத்தினரும், சீக்கியர்களும் உயிருக்கான ஒரு பொதுவான மரியாதையைக் கற்பிக்கின்றனர். அவர்கள் மறு அவதாரத்தில் நம்பிக்கை கொள்வதன் காரணமாக, கருக்கலைப்புப் பிரச்னையின்பேரில் உள்ள விவாதத்தில் அவர் சிக்கிக்கொண்டிருக்கவில்லை; கருக்கலைப்புப் பிறவாக் குழந்தையை வெறுமனே மற்றொரு வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கிறது. (g93 5/22)