நான் நேசித்ததை வெறுக்க கற்றுக்கொண்டேன்
சண்டை செய்வது என் வாழ்க்கையாக இருந்தது. என்னுடைய எல்லா பலத்தையும்கொண்டு எதிராளியைக் குத்தி, அவன் என் காலடியில் வந்து விழுவதைப் பார்ப்பதை நான் அனுபவித்து மகிழ்ந்தேன். குத்துச்சண்டை வளையத்தின் மையத்தில் நான் நின்றுகொண்டிருக்க, போட்டியில் வெற்றிபெற்றவரென என் பெயரை அறிவிப்பாளர் உரக்க கத்திச் சொல்வதைக் கேட்பது என்னைக் கிளர்ச்சியடையச் செய்தது. நான் குத்துச்சண்டையை நேசித்தேன்! இருப்பினும், இப்பொழுது வன்முறையின் எண்ணமே என்னை நிலைகுலையச் செய்துவிடுகிறது. வன்முறை இயல்புள்ள குத்துச்சண்டை விளையாட்டு என்று இப்பொழுது நான் அழைப்பதை வெறுக்க கற்றுக்கொண்டிருக்கிறேன்.
எனக்கு ஏழு வயதாயிருக்கையில், 1944-ல் பியூர்ட்டோ ரிகோவில் பிறந்த இடமாகிய லேர்ஸ்-ல் வாழ்ந்துகொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில்தானே என்னுடைய அம்மாவை மரணத்தில் இழக்கும் பயங்கரமான அதிர்ச்சி எனக்கு ஏற்பட்டது. அவர் 32 வயதாயிருக்கையில் புற்றுநோயினால் மரித்துப்போனார். விரைவிலேயே, நான் பள்ளியிலிருந்து வீடு திரும்புகையில் என் அப்பாவின் மடியில் ஒரு பெண் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தபோது வேதனை தாங்கமுடியாததாக ஆனது. அவர் என் மாற்றாந்தாயானார்.
நான் அவரை விரும்பாததை உணர்ந்துகொண்ட என் மாற்றாந்தாய் என்னைத் தொடர்ந்து கொடூரமாக நடத்தினார். ஆகவே வீட்டைவிட்டு ஓடிவிட்டேன். நிலக்கரியையும் ஆரஞ்சுகளையும் ஏற்றிவந்த ஒரு பாரக்கட்டை வண்டியில் திருட்டுத்தனமாக ஏறிக்கொண்டு பின்னர் உறங்கிப்போனேன். விழித்துக்கொண்டு தீவின் மறுபக்கமாகிய சான் ஜீவான் நகரில் என்னைக் கண்டபோது என்னே ஆச்சரியமடைந்தேன்!
தெரு சண்டைக்காரன்
எட்டு மாதங்களாக சான் ஜீவானின் தெருக்களில் வாழ்ந்தேன். மற்ற இளைஞர் என்னை ஓயாது எரிச்சலடையச் செய்தனர். ஆகவே நான் பிழைத்திருக்கும் பொருட்டு போராட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். எட்டு மாதங்களுக்குப் பிறகு காவல் துறையினர் என்னைக் கண்டுபிடித்து என்னை வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். மாற்றாந்தாயைக் கொண்டிருக்கும் ஓர் எண்ணத்துக்கு என்னால் ஒருபோதும் என்னை சரிசெய்துகொள்ள முடியாமல் பெரும்பாலும் என்னுடைய நேரத்தை தெருக்களிலேயே செலவழித்தேன். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சண்டையில் என்னை உட்படுத்திக்கொண்டுவிடுவேன். எனக்கு பத்து வயதானபோது, மறுபடியுமாக ஓடிவிட்டேன்.
ஒருசில வாரங்களுக்குப்பின், காவல் துறையினர் என்னை மறுபடியுமாக கண்டுபிடித்தனர். இந்த முறை என்னுடைய பெயரையும் எங்கிருந்து வந்தேன் என்பது பற்றியும் அவர்களிடம் சொல்ல மறுத்தேன். என்னுடைய குடும்பத்தைக் கண்டுபிடிப்பதில் தோல்வியடைந்த பின்னர், அவர்கள் கேநபோ நகரில் அரசால் நடத்தப்பட்டுவந்த ஓர் அனாதை இல்லத்துக்கு என்னை அனுப்பிவைத்தனர். அங்குதானே என்னுடைய முதல் ஜோடி குத்துச்சண்டை கையுறைகளை அணிந்துகொண்டேன். அங்குதானே என்னுடைய வாழ்க்கையில் முதல் முறையாக யெகோவா என்ற பெயரை ஓர் அறிவிப்பு பலகையில் பார்த்தேன். அதைப்பற்றி கேட்டேன், யெகோவா என்பது யூதர்களின் கடவுள் என்று எனக்குச் சொல்லப்பட்டது. அந்தப் பெயரை ஒருபோதும் மறக்கவில்லை.
எனக்கு 15 வயதானபோது, மறுபடியும் ஒருபோதும் அங்கு திரும்பிப் போகக்கூடாது என்ற எண்ணத்துடன் அனாதை இல்லத்தைவிட்டு வெளியேறினேன். பிழைப்புக்காக செய்தித்தாள்களை விற்க ஆரம்பித்தேன். இருப்பினும், ஒவ்வொரு தெருவும் குறிப்பிட்ட வேறு ஒருவரின் விற்பனைக்குரிய பகுதியாக இருந்தது. என்னுடைய சொந்த விற்பனைக்குரிய பகுதியை நிலைநாட்டிக்கொள்ள ஒரே ஒரு வழி மாத்திரமே இருந்தது: சண்டை! நான் சண்டைபோட்டேன்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு நான் ஐ.மா. படைத்துறையைச் சேர்ந்துகொண்டு அ.ஐ.மா., அர்கன்ஸாஸில் என்னுடைய அடிப்படை பயிற்சியைப் பெற்றேன். விரைவில் நான் குத்துச்சண்டை குழுவில் ஓர் உறுப்பினனானேன். பின்னர் நான் விசேஷித்த பணிப் பிரிவுக்கு மாற்றப்பட்டேன். என்னுடைய வேலை உடற்பயிற்சிக் கூடத்திலிருந்தது, என்னுடைய சார்ஜன்ட் குத்துச்சண்டை பயிற்சியாளராக இருந்தார்.
கொடுமையான ஒரு விளையாட்டு
என்னுடைய கைமுட்டியைப் பயன்படுத்தி என் எதிராளியை எவ்வாறு காயப்படுத்துவது என்பதன் பேரில் பயிற்சிபெற்றேன். வளையத்தில் நட்புறவுகளை கவனியாதிருக்க பயிற்றுவிக்கப்பட்டேன். மணி அடித்தவுடன், ஒரு நண்பன் கீழேத் தள்ளப்பட்டு கூடுமானால் வெளியே தள்ளிவிடப்படுவதற்கேதுவான ஒரு சத்துருவாக மாறிவிடுவான்.
நான் படையிலேயே இருக்க விரும்பினேன், ஆனால் என்னுடைய சார்ஜன்ட் இவ்வாறு என்னிடம் சொன்னார்: “உன்னால் முடிந்தவரை விரைவாக படையிலிருந்து ஓய்வுபெற்றுவிடு. குத்துச்சண்டைப்போடுவதை வாழ்க்கைத் தொழிலாகக் கொள். ஒருசில வருடங்களில், நான் உன்னை நியூ யார்க் நகர மாடிசன் ஸ்குவயர் கார்டனில் குத்துச்சண்டைப்போடுவதை தொலைக்காட்சியில் பார்ப்பேன்.” இது நம்புவதற்கு எனக்கு கடினமாக இருந்தது! நான்—ஏழையும் வீடுமில்லாத ஒரு பையன்—பிரபல குத்துச்சண்டை வீரனாவதா?
இரண்டு வருடங்களுக்குப் பிறகு படைத்துறையைவிட்டு வெளியேறி பியூர்ட்டோ ரிகோவுக்கு திரும்ப வந்தேன். ஒரு நாள் 1956-ல், கோல்டன் கிளவ்ஸ் நடத்திய ஒரு பொழுதுபோக்கு குத்துச்சண்டை விளையாட்டுப் போட்டிக்கான ஒரு விளம்பரத்தை பார்த்தேன். போட்டியில் கலந்துகொண்டு பியூர்ட்டோ ரிகோவின் கோல்டன் கிளவ்ஸின் குத்துச்சண்டை சாம்பியனாக ஆனேன். பின்னர் கோல்டன் கிளவ்ஸ் தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்குகொள்வதற்காக நியூ யார்க் நகருக்கு விமானத்தில் அழைத்துவரப்பட்டேன். அரையிறுதி ஆட்டம் வரைச்சென்றேன், ஆனால் சாம்பியனாக வெற்றிபெற இயலவில்லை. இருப்பினும், எதிர்கால மேலாளர்களிடமிருந்தும் பயிற்சியாளர்களிடமிருந்தும் வாய்ப்புகள் வந்தன. ஆகவே நியூ யார்க் நகரில் தங்கி தேர்ச்சிபெற்றவனாவதற்கு கிடைத்த வாய்ப்பை ஒப்புக்கொண்டேன்.
நான் 1958-ல் ஒரு தேர்ச்சிபெற்ற குத்துச்சண்டை வீரனாக ஆனேன். என்னுடைய சார்ஜன்ட் சரியாகவே சொல்லியிருந்தார். படையைவிட்டு வெளியேறி ஐந்து ஆண்டுகளான பின் 1961-ல், மாடிஸன் ஸ்குவயர் கார்டனில் குத்துச்சண்டைபோடுகையில் தேசிய தொலைக்காட்சியில் தோன்றினேன். என்னுடைய குத்துச்சண்டை போட்டிகளில் பல அந்தப் பிரபலமான விளையாட்டு அரங்கில்தானே நடைபெற்றன.
என்னுடைய குத்துகள் பல குத்துச்சண்டை வீரர்களின் வாழ்க்கைத் தொழிலை முடிவுக்கு கொண்டு வந்தன. முரட்டுத்தனமான என்னுடைய குத்துகளினால் மெக்ஸிகோவிலிருந்து வந்த ஒரு குத்துச்சண்டையாளர் தன் பார்வையை முழுவதுமாக இழந்தார். டொமினிகன் குடியரசுவிலிருந்து வந்த இடைநிலை எடையாளர் ஒருவரோடு செய்த மற்றொரு சண்டையும்கூட என்னுடைய மனச்சாட்சியின்மீது கடுஞ்சுமையை ஏற்படுத்தியது. சண்டை ஆரம்பமாவதற்கு முன்னால் நான் அவனைவிட அரை கிலோகிராம் அதிக எடையுள்ளவனாக இருப்பதை அவன் மிகவும் பெரிதுபடுத்திவிட்டான். அவனுடைய மனநிலை என்னை எரிச்சலடையச்செய்தது. என்னுடைய எதிராளி என்னைக்காட்டிலும் இப்படிப்பட்ட அற்பமான அனுகூலத்தைக் கொண்டிருந்தபோது நான் ஒருபோதும் அதை ஆட்சேபித்தது கிடையாது. நான் அவனிடம் சொன்னேன்: “சரி, ஆயத்தமாயிரு, ஏனென்றால் இன்று இரவு உன்னைக் கொன்றுவிடப் போகிறேன்!” வளையத்துக்குள் சென்றபோது, செய்தித்தாள் ஒன்று எனக்கு “சாத்தானிய தோற்றம்” இருப்பதாக குறிப்பிட்டது. இரண்டே நிமிடங்களுக்குள்ளேயே அந்த மனிதன் முரட்டுத்துணி விரிப்பின் மேல் நினைவிழந்துகிடந்தான். அவனுடைய உட்செவி அத்தனை மோசமாக காயமடைந்ததால் அவன் ஒருபோதும் மறுபடியும் குத்துச்சண்டை செய்யவே இல்லை.
நான் எவ்வாறு குத்துச்சண்டையை வெறுக்க கற்றுக்கொண்டேன்
என்னுடைய புகழ், நடிகர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் கவனத்தையும் நட்பையும் வசீகரித்தது. ஒரு சமயம் முன்னாள் உலக பாரஎடை சாம்பியன் ஜோ லூயிஸ்கூட என்னுடைய சண்டைகளில் ஒன்றுக்கு விளம்பரம் கொடுத்தார். அதிகமாக பிரயாணம் செய்தேன், சொகுசு கார்களைக் கொண்டிருந்து, மற்ற பொருள் சம்பந்தமான காரியங்களையும் அனுபவித்து மகிழ்ந்தேன். இருப்பினும், மற்ற குத்துச்சண்டையாளர்களுடையதைப் போலவே, என்னுடைய வெற்றியும் குறுகிய வாழ்வுடையதாய் இருந்தது. 1963-ல் பல சண்டைகளில் மோசமாக காயமடைந்து மறுபடியும் என்னால் சண்டைபோட இயலாமல் போனது.
இந்தச் சமயத்தில்தான் ஒரு பிரபல குத்துச்சண்டையாளர் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக மாறியதைப் பற்றி ஒரு செய்தித்தாள் கட்டுரையில் படித்தேன். கட்டுரையைப் படித்த பின்னர், ஏதோ ஒரு காரணத்துக்காக, யெகோவாவின் சாட்சிகளுடைய மதம் பணக்காரர்களுக்கு மட்டுமே என்ற அபிப்பிராயத்தை நான் தக்கவைத்துக்கொண்டேன்.
அடுத்த சில ஆண்டுகளினூடாக, நான் மிகப் பல மருத்துவ பிரச்னைகளை அனுபவித்தேன். கடும் சோர்வான காலங்களையும்கூட நான் அனுபவித்தேன். அப்படிப்பட்ட ஒரு சமயத்தில்தான், என்னுடைய இருதயத்துக்கு நேராக துப்பாக்கியை பிடித்து என்னை நானே சுட்டுக்கொண்டேன். ஒரு விலாவினால் துப்பாக்கிக் குண்டு திசை திரும்பிவிட என்னுடைய உயிர் காப்பாற்றப்பட்டது. நான் உயிரோடு இருந்தேன், ஆனால் மிகவும் மகிழ்ச்சியற்றவனாகவும் மிகவும் நோயுற்றும் இருந்தேன். இனி பணமுமில்லை, புகழுமில்லை, குத்துச்சண்டையும் இல்லை!
பின்னர், ஒரு நாள் என்னுடைய மனைவி டாரிஸ், தான் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்துக்கொண்டிருப்பதாகவும் தான் ராஜ்ய மன்றத்தில் கூட்டங்களுக்குச் செல்ல விரும்புவதாகவும் என்னிடம் சொன்னாள். “எனக்குத் தெரியாது, டாரிஸ், நாமோ ஏழைகள், யெகோவாவின் சாட்சிகள் பணக்காரரும் முக்கியமான ஆட்களுமாயிருக்கிறார்கள்,” என்று சொன்னேன். இது உண்மையல்ல என்றும் அவளோடு படித்துக்கொண்டிருந்த சாட்சி எங்களுடைய சுற்றுப்புறத்தில்தானே வாழ்பவள் என்றும் என்னிடம் சொன்னாள். ஆகவே கூட்டங்களுக்கு ஆஜராக அவள் செய்த முடிவை ஒப்புக்கொண்டேன். ஒரு சமயம் அவளுக்காக ராஜ்ய மன்றத்துக்கு வெளியே காத்துக்கொண்டிருந்தபோது, ஒரு சாட்சி என்னை உள்ளே வரும்படி அழைத்தார். அழுக்கடைந்த பணி உடைகளை உடுத்தியிருந்தேன், ஆனால் அவர் என்னை விடவில்லை. என்னுடைய தோற்றத்தின் மத்தியிலும் வரவேற்கப்பட்டேன். சிநேகப்பான்மையான அந்தச் சூழல் என் மீது ஆழமாக பதிந்துவிட்டது.
சீக்கிரத்தில் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தேன். எனக்கு சொல்லப்பட்டிருந்தவிதமாக யெகோவா என்பது வெறும் யூதர்களின் கடவுள் மாத்திரமல்ல, ஆனால் அவரே ஒரே மெய்க் கடவுள், சர்வவல்லமையுள்ளவர், அனைத்துக் காரியங்களின் படைப்பாளர் என்பதை கற்றுக்கொண்டேன். யெகோவா தேவன் வன்முறையை வெறுக்கிறார் என்பதையும்கூட கற்றுக்கொண்டேன். சங்கீதம் 11:5-ல் பைபிள் சொல்கிறது: “கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் [வன்முறையில், NW] பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.” ஆகவே குத்துச்சண்டை சம்பந்தப்பட்ட அனைத்திலிருந்தும் விலகிக்கொண்டேன். அது எத்தனை வன்முறையான விளையாட்டு என்பதை அனுபவத்தில் நான் அறிந்திருந்தேன். கடவுள் அதை எவ்வாறு கருதுகிறார் என்பதைக் கற்றறிந்தப் பின்பு, குத்துச்சண்டை எத்தனை பொல்லாத, வன்முறை இயல்புள்ள ஒரு விளையாட்டு என்பதைப் பற்றியதில் என்னுடைய மனதில் எந்த ஒரு சந்தேகமுமிருக்கவில்லை. ஆம், நான் நேசித்த விளையாட்டை வெறுக்க கற்றுக்கொண்டேன்.
மிகப் பெரிய சிலாக்கியம்
யெகோவாவுக்கு என்னுடைய வாழ்க்கையை 1970-ல் ஒப்புக்கொடுக்க தீர்மானித்தேன். டாரிஸும் நானும் அந்த வருடம் அக்டோபரில் முழுக்காட்டுதல் பெற்றோம். அப்போது முதற்கொண்டு மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கும் சிலாக்கியத்தை அனுபவித்து வருகிறேன். ஒரு முழுநேர சுவிசேஷகனாக, சுமார் 40 பேர் யெகோவாவின் வணக்கத்தாராக ஆவதற்கு உதவிசெய்வதில் பங்குகொண்டிருக்கிறேன்.
வருந்தத்தக்கவிதமாக, என்னுடைய வன்முறையான வருடங்களின்போது எனக்கு ஏற்பட்ட காயங்களின் காரணமாக இப்பொழுது துன்பப்படுகிறேன். தலையில் நான் பெற்றுக்கொண்ட நூற்றுக்கணக்கான குத்துகள் என்னுடைய மூளைக்கு நிரந்தரமான சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. குறுகிய கால நினைவாற்றலோடும் உட்செவியோடும் எனக்கு இருக்கும் பிரச்னை என்னுடைய சமநிலையைப் பாதித்திருக்கிறது. என்னுடைய தலையை அதிக வேகமாக ஆட்டினால், எனக்குத் தலைசுற்றுகிறது. மேலும், என்னுடைய மனச்சோர்வு பிரச்னைகளுக்காக ஒழுங்காக மருந்துகளை எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் என்னுடைய உடன் கிறிஸ்தவர்கள் என்னைப் புரிந்துகொண்டு சமாளிக்க எனக்கு உதவிசெய்கின்றனர். யெகோவாவுடைய பெயரையும் நோக்கங்களையும்பற்றி மற்றவர்களுக்கு அறிவிப்பதில் ஒழுங்காக பங்குகொள்வதற்கு எனக்கு பலத்தைக்கொடுப்பதற்காக அவருக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
எல்லா சிலாக்கியங்களிலும் மிகப் பெரியதொன்றை நான் அனுபவிக்கிறேன்—அதாவது சர்வவல்லமையுள்ள கடவுளாகிய யெகோவாவோடு ஒரு தனிப்பட்ட உறவைக் கொண்டிருப்பது. குத்துச்சண்டையாளனாக இருந்தபோது, ஒவ்வொரு சண்டையிலும் நான் யெகோவாவின் இருதயத்தை விசனப்படுத்தினேன். இப்பொழுது நான் அவருடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்தலாம். அவர் பின்வருமாறு சொல்லும்போது தனிப்பட்டவிதமாக என்னிடம் பேசுவதுபோல உணருகிறேன்: “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருயத்தைச் சந்தோஷப்படுத்து.”—நீதிமொழிகள் 27:11.
சீக்கிரத்தில் யெகோவா எல்லா வன்முறையையும் அதை ஊக்குவிப்பவர்களையும் உட்பட, சாத்தானுடைய கிரியைகளுக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவார். நன்மையானதை நேசிக்க மட்டுமல்லாமல் தீமையை வெறுக்கவும்கூட எனக்குக் கற்றுக்கொடுத்திருப்பதற்காக யெகோவாவுக்கு எத்தனை நன்றியுள்ளவனாக இருக்கிறேன்! அது வன்முறை இயல்புள்ள குத்துச்சண்டைப் போட்டியை வெறுப்பதை உட்படுத்துகிறது. (சங்கீதம் 97:10)—ஒப்டிலியோ நுனியஸ் சொன்னபடி.
[பக்கம் 13-ன் படம்]
ஒப்டிலியோ நுனியஸ்