பெற்றோரே—உங்கள் பிள்ளையின் ஆலோசகராயிருங்கள்
பெற்றோர் தங்களுடைய மகன்களுக்கும் மகள்களுக்கும் மிகச் சிறந்ததை விரும்புகின்றனர். உண்மையில், தங்களுடைய பிள்ளைகளைக் கடவுளுடைய சிட்சையில் வளர்க்கும்படி கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் தகப்பன்மார்களுக்கு அறிவுரை கூறினார். (எபேசியர் 6:4) பூர்வகாலத்து சாலொமோன் ராஜா: “உன் தந்தையும் தாயும் சொல்வதைக் கவனித்துக்கேள். அவர்களுடைய போதனை உன்னுடைய நடத்தையை மேம்படுத்தும்,” என்று இளைஞருக்கு அறிவுரை வழங்கினார்.—நீதிமொழிகள் 1:8, 9, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்.
அப்படியானால், பெற்றோரால் புகட்டப்படும் கல்விக்கான ஏற்பாட்டில் பள்ளிகள் எவ்வாறு பொருந்துகின்றன? பெற்றோருக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள உறவுமுறை என்னவாக இருக்கவேண்டும்?
பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பங்கு
“தங்களுடைய சொந்த பிள்ளைகளின் மிக முக்கியமான ஆசிரியர்கள் . . . பெற்றோர்தாமே,” என்று அடித்துக்கூறுகிறார் வீட்டுச் சூழலின்மீது பள்ளி செலுத்தும் செல்வாக்கைப் பற்றிய ஆராய்ச்சியின் ஆராய்ச்சியாளர் டாரீன் க்ரான்ட். ஆனால் ஒரு பெற்றோராக அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்வதை நீங்கள் கடினமாகக் காணலாம்.
நீங்கள் பள்ளியில் படித்த காலத்திலிருந்து போதனாமுறைகள் வெகுவாக மாற்றமடைந்திருப்பதை நீங்கள் ஒருவேளை கவனித்திருக்கலாம். இந்நாட்களில், பள்ளிகள் தகவல்தொடர்பு கல்வி, சுகாதாரக் கல்வி, மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் போன்ற இதுவரை அறிந்திராத பாடங்களைச் சிறப்புப் பாடங்களாகக் கொண்டிருக்கின்றன. இது சில பெற்றோர் பள்ளியோடு மிகக் குறைவான தொடர்பையே கொண்டிருக்கும்படி செய்திருக்கிறது. “தங்களுடைய பிள்ளையின் ஆசிரியர்களிடத்தில் பேசுவது, அதிகமான தன்னம்பிக்கை மிக்க வயதுவந்தோரைக்கூட ஐந்து வயது மூத்தவர்களாகவும் நான்கு அடி அதிக உயரமானவர்களாகவும் உணரவைக்கும்,” என்று டாக்டர் டேவிட் லூயிஸ் பள்ளியில் உங்கள் பிள்ளைக்கு உதவுங்கள் (Help Your Child Through School) என்ற புத்தகத்தில் எழுதுகிறார். “கஷ்டங்களையோ கவலைகளையோ ஆசிரியர்களோடு சரிசமமாக கலந்தாலோசிக்காமல், சிலர் குழந்தைத்தனமாக நடந்துகொள்கிறார்கள்.”
உண்மையில், சிக்கலான பிரச்சினைகள் ஏற்பட்டால் மட்டுமே சில பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளின் ஆசிரியர்களைச் சென்று சந்திக்கின்றனர். அதுவும் பெரும்பாலும் குறைகூறுவதற்காகவே. இருந்தபோதிலும், ஆசிரியர்களோடு ஒத்துழைப்பதன் மூலம் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளின் கல்விக்குக் குறிப்பிடத்தக்க பங்கைச் செலுத்தமுடியும், பலர் அவ்வாறு செய்தும்வருகின்றனர்.
பள்ளியில் உங்கள் பிள்ளை எதைப் படிக்கிறான் என்பதை கவனிப்பதையும் அதில் அக்கறை காட்டுவதையும் பெற்றோரின் உத்தரவாதம் தேவைப்படுத்துகிறது. ஏன்? ஏனென்றால் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என்ற ஸ்தானத்திலிருந்து உங்களுடைய ஒழுக்க தராதரத்தின் பிரதிநிதிகளாக செயல்படுகின்றனர். பிள்ளைகள் ஆசிரியர்களை இலட்சிய மாதிரிகளாக (role models) நோக்குவதால், ஆசிரியர்கள் என்ன மதிப்பீடுகளைக் கொண்டிருக்கின்றனரோ அது அவர்களுடைய மாணவர்களைப் பாதிக்கிறது. பெரும்பாலான ஆசிரியர்கள், தங்களுடைய பாகத்தில், தங்களுடைய மாணவர்களின் பெற்றோரிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பை வரவேற்கின்றனர்.
தெற்கத்திய ஜெர்மனியிலுள்ள ஒரு தலைமையாசிரியர் பெற்றோருக்கு இவ்வாறு எழுதினார்: “எங்களுடைய மாணவர்களில் அனைவருமே, குறிப்பாக [ஜெர்மனியில் ஆறு வயதில்] பள்ளிப் படிப்பைத் தொடங்குகிறவர்கள், இப்போதே இரக்கமற்றவர்களாயும், உணர்ச்சியற்றவர்களாயும், மோசமான விதத்தில் வளர்க்கப்பட்டவர்களாயும் இருக்கின்றனர் என்பது ஆசிரியர்களாகிய எங்களுக்கு, முன்பு எந்தவொரு வருடத்திலும் இருந்ததைவிட தெட்டத்தெளிவாக தெரிகிறது. அநேகர் அறவே கட்டுக்கடங்காமலும், நடத்தையை வரையறுக்கத் தெரியாமலும்; குற்றவுணர்ச்சி சிறிதுமில்லாமலும்; முழுக்க முழுக்க தன்னலவாதிகளாகவும், சமூகவிரோதிகளாகவும்; ஒன்றுமில்லாததற்கெல்லாம் வம்புச் சண்டைக்கிழுப்பவர்களாகவும், கழுத்தை நெறிப்பவர்களாகவும் [மற்றவர்களை] உதைப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.”
இந்த ஆசிரியர் தொடர்ந்து கூறினார்: “இதன் விளைவாக ஆசிரியர்களாக இருக்கும் எங்களுக்கு மிக அதிக கஷ்டங்கள் ஏற்படுகின்றன, இருப்பினும் நாங்கள் குறைகூற விரும்பவில்லை. ஆனால் எல்லா முயற்சிகளையும் எடுத்தபோதிலும் பள்ளி தானாகவே பிள்ளைகளைக் கற்பித்து வளர்க்க முடியாது என்பதை நாம் உணரவேண்டும். பிள்ளைகளின் ஆளுமையை உருவாக்குவதற்கும், நடத்தையின் தராதரங்களைப் படிப்பிப்பதற்கும் உள்ள உங்களுடைய [பொறுப்பின்] பங்கு உண்மையில் என்னவாக இருக்கிறதோ அதை தொலைக்காட்சியோ சூழ்நிலைமைகளோ எடுத்துக்கொள்ளும்படி விட்டுவிடாமல், நீங்களே அதிகத்தைச் செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கும்படி அன்பார்ந்த பெற்றோராகிய உங்களை நாங்கள் உற்சாகப்படுத்த விழைகிறோம்.”—தடித்த எழுத்துக்கள் எங்களுடையவை.
ஒத்துழைப்புக்கான அத்தகைய வேண்டுகோளை ஆசிரியர்கள் விடுத்தாலும், அநேக பெற்றோர் உதவுவதற்கு இன்னும் தயங்குகின்றனர். “அவர்களுக்குக் கரிசனை இல்லை, அதிக வேலையாயிருக்கிறார்கள், நம்பிக்கையில்லை என்பதனால் அல்ல. ஆனால் ஒரு பிள்ளை வகுப்பில் எவ்வளவு நன்றாக அல்லது மோசமாக படித்தாலும் அது வளர்ப்போடு சம்பந்தப்பட்டில்லாமல் அவர்களுடைய ஜீன்கள்மீதே முழுமையாக சார்ந்திருக்கிறது என்ற அசையாத நம்பிக்கையினாலே ஆகும்,” என்று உறுதியாகக் கூறுகிறார் டேவிட் லூயிஸ். ஆனால் இந்த நம்பிக்கை உண்மையே அல்ல.
வீட்டில் ஏற்படும் பிரச்சினைகள் எவ்வாறு ஒரு பிள்ளையின் வகுப்புப் பாடத்தை பெரும்பாலும் பாதிக்கிறதோ, அதேபோல நல்ல ஒரு குடும்ப வாழ்க்கை ஒரு பிள்ளை பள்ளியிலிருந்து மிகச் சிறந்ததைப் பெறுவதற்கு உதவலாம். கல்வியில் பெறும் வெற்றிக்கும் தோல்விக்கும் பள்ளியைவிட குடும்பமே மாபெரும் காரணமாக இருக்கிறது,” என்று ஒரு கல்விச் சுற்றாய்வு முடிவுக்கு வருகிறது. பள்ளியில் உங்கள் பிள்ளைக்கு எவ்வாறு உதவுவது என்ற புத்தகம் இவ்வாறு ஒப்புக்கொள்கிறது: “பெற்றோருடைய மனப்பான்மை—அவர்கள் காட்டும் அக்கறையும் உற்சாகமும், அவர்கள் கொடுக்கும் ஆதரவும்—அவர்கள் தொலைவில் இருந்தாலும், பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு மிக அத்தியாவசியமானதாக இருக்கக்கூடும் என்பதை அதிக வேலையாய் இருக்கும் பெற்றோரும்கூட உணரவேண்டும்.”
அப்படியானால், உங்களுடைய பிள்ளையின் ஆசிரியர்களுடைய நல்ல ஒத்துழைப்பை நீங்கள் எவ்வாறு பெறமுடியும்?
உங்கள் பிள்ளையின் ஆலோசகராயிருங்கள்
(1) பள்ளியில் உங்கள் பிள்ளை எதைப் படிக்கிறதோ அதில் மிகுந்த அக்கறைகொள்ளுங்கள். இதைத் தொடங்குவதற்கான மிகச் சிறந்த காலம் எதுவென்றால் உங்கள் குழந்தை பள்ளிக்குப் போக ஆரம்பிக்கும்போதேயாகும். பொதுவாகவே வளரிளமைப் பருவத்தினரைவிட இளம் பிள்ளைகள் பெற்றோரின் உதவியை நல்லமுறையில் ஏற்றுக்கொள்ளுகின்றனர்.
உங்களுடைய பிள்ளையோடு சேர்ந்து வாசியுங்கள். டேவிட் லூயிஸ் சொல்கிறபடி, “முறைப்படி அமையாத கல்வியில் சுமார் 75 சதவீதம் வாசித்தலின் மூலம் கிடைக்கிறது.” இவ்வாறு உங்களுடைய பிள்ளையின் சரளமாக வாசிக்கும் திறனை வளர்ப்பதில் நீங்கள் ஒரு முக்கிய பங்கை வகிக்கலாம். வீட்டில் வாசிக்க உதவிசெய்யப்பட்ட பிள்ளைகளின் முன்னேற்றம், பெரும்பாலும் பள்ளியில் வாசிப்பதில் விசேஷ பயிற்சியளிக்கும் ஆசிரியர்களால் போதிக்கப்படும் இளைஞரின் முன்னேற்றத்தைவிட அதிகமாக இருக்கிறது என்று ஆராய்ச்சி கருத்துத் தெரிவிக்கிறது.
அதைப்போலவே, உங்களுடைய பிள்ளைக்கு எழுதுவதிலும், ஆம், கணக்குப் போடுவதிலும் உதவியளிக்கலாம். “அடிப்படை கணக்குகளைச் சொல்லிக்கொடுக்க நீங்கள் ஒன்றும் கணிதமேதையாக இருக்கவேண்டிய அவசியமில்லை,” என்று குறிப்பிடுகிறார் கல்வி நிபுணர் டெட் ரேக். சந்தேகமேயின்றி, இந்த அம்சங்களில் உங்களுக்கே உதவி தேவைப்படுமானால், உங்களுக்குப் போதிய திறமையில்லாதிருப்பது உங்கள் பிள்ளை என்ன கற்றுக்கொள்கிறதோ அதில் உண்மையான அக்கறை காட்டுவதிலிருந்து உங்களைத் தடுத்து நிறுத்த அனுமதியாதேயுங்கள்.
(2) பாடத்திட்டத்தைப்பற்றி உங்கள் பிள்ளையின் ஆசிரியரோடு ஆலோசியுங்கள். பள்ளியின் தகவல் தொகுப்பேட்டை (prospectus) வாசிப்பதன்மூலம் உங்களுடைய பிள்ளை எதையெல்லாம் கற்றுக்கொள்ளப்போகிறது என்று அறிந்துகொள்ளுங்கள். பள்ளி ஆண்டுகள் தொடங்குமுன் இதைச் செய்வது பிரச்சினை ஏற்படும் அம்சங்களுக்கு உங்களை விழிப்புள்ளவர்களாக வைத்திருக்கும். பின்னர், ஆசிரியரை நேரில்கண்டு பெற்றோராகிய உங்களுடைய விருப்பங்களை எவ்வாறு மதித்துணரலாம் என்பதன்பேரில் ஆலோசனை நடத்துவது நல்லதொரு ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும். ஆசிரியர்கள் பெற்றோரோடு பழகுவதற்காக பள்ளி ஏற்பாடு செய்யும் கூட்டங்களை அனுகூலப்படுத்திக் கொள்ளுங்கள். வகுப்பறை பாடத்தின்போது பெற்றோரை அனுமதிக்கும் தினங்களில் பள்ளிக்குச் செல்லுங்கள்; உங்கள் பிள்ளையின் ஆசிரியர்களிடம் பேசுங்கள். அத்தகைய தொடர்புகள், விசேஷமாக பிரச்சினைகள் எழும்போது, விலையேறப்பெற்றதாய் இருக்கும்.
(3) விருப்பப் பாடங்களைத் தெரிந்தெடுக்க உங்கள் பிள்ளைக்கு உதவுங்கள். உங்களுடைய பிள்ளையின் விருப்பு வெறுப்புகளைத் தெரிந்து வைத்திருங்கள். பிரயோஜனமான இலக்குகளைப்பற்றிப் பேசுங்கள். தெரிந்தெடுப்பதற்காக உள்ள அனைத்துப் பாடங்களைப்பற்றி அறிந்துகொள்ள ஆசிரியர்களோடு ஆலோசனை நடத்துங்கள். பாடங்களைத் தெரிந்தெடுப்பதுபற்றி அவர்களால் அறிவுரை கொடுக்கமுடியும்.
தெளிவான பேச்சுத்தொடர்பினால், மனக்கசப்பை தவிர்க்கலாம். மேற்படிப்பைத் தொடரும்படி அநேக பள்ளிகள் புத்திசாலி மாணவர்கள்மேல் அழுத்தங்களைக் கொண்டுவருகின்றன. ஆனால் கிறிஸ்தவ ஊழியத்தைத் தங்களுடைய வேலையாகத் தெரிந்துகொள்ளும் மாணவர்கள் பொதுவாக நீண்டகால பல்கலைக்கழக படிப்பு மேற்கொள்வதைத் தவிர்க்கின்றனர். அதற்குப்பதிலாக, அவர்கள் துணைக்கல்வியைத் (supplementary education) தெரிந்தெடுப்பார்களேயானால், தங்களைத் தாங்களே ஆதரித்துக்கொள்ள ஆயத்தப்படுத்தும் பாடங்களைத் தெரிந்தெடுக்கிறார்கள். இதை தாங்கள் படித்துக்கொடுக்க முயன்ற எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிடுவதாக மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்ட ஆசிரியர்கள் சிலவேளைகளில் தவறாக நினைத்துக்கொள்கின்றனர். உங்கள் பிள்ளை தெரிந்தெடுத்திருக்கும் துறையில் கூடுதலான கல்வியைப்பெற உங்கள் பிள்ளைக்கு இருக்கும் வாய்ப்புகளைப்பற்றி ஆசிரியர்களிடம் பொறுமையாக விவரிப்பது, தங்களுடைய பிள்ளைகள் தொடர்ந்து கற்றுவருவதைத்தான் கிறிஸ்தவ பெற்றோர் விரும்புகின்றனர் என்ற நம்பிக்கையை ஆசிரியர்களுக்குக் கொடுக்கும்.a
சரியான அணுகுமுறை
வெற்றிகரமான கூட்டாண்மைகள் நல்ல பேச்சுத்தொடர்பின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகின்றன என்பதை நினைவில் வைத்திருப்பதால், உங்களுடைய பிள்ளையின் கல்விசம்பந்தமாக வரும் அதிக கவலையையும் மனவேதனையையும் நீங்கள் தவிர்க்கலாம்.—“நல்ல பெற்றோர்-ஆசிரியர் பேச்சுத்தொடர்புக்கான படிகள்,” என்று தலைப்பிடப்பட்டுள்ள பெட்டியைப் பாருங்கள்.
குறைகூறி குற்றம் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, ஆசிரியர்களோடு செய்யும் ஆலோசனை மூலமும் ஒத்துழைப்பு மூலமும் உங்களுடைய பிள்ளையின் ஆலோசகராயிருங்கள். இவ்வாறு செய்வதால், பள்ளியிலிருந்து மிகச் சிறந்ததைப் பெற உங்கள் பிள்ளைக்கு உதவுவீர்கள்.
[அடிக்குறிப்புகள்]
a கிறிஸ்தவ ஊழியத்தைத் தங்களது தொழிலாக தெரிந்தெடுத்து முழுநேர ஊழியர்களாக ஊழியம் செய்யும் யெகோவாவின் சாட்சிகளுக்கு, பயனியர் ஊழியப் பள்ளியில் இரண்டுவார பயிற்சிபெறும் வாய்ப்பு இருக்கிறது. சிலர் பிற்காலத்தில் தங்களை மிஷனரிகளாக ஆக்கிக்கொள்ள உவாட்ச்டவர் பைபிள் ஸ்கூல் ஆஃப் கிலியட்-ல் கொடுக்கப்படும் ஐந்து மாத மிஷனரி பயிற்சியைப் பெறுவதற்கான தகுதியடைகிறார்கள்.
[பக்கம் 10-ன் பெட்டி]
நல்ல பெற்றோர்-ஆசிரியர் பேச்சுத்தொடர்புக்கான படிகள்
1. உங்களுடைய பிள்ளையின் ஆசிரியர்களைத் தெரிந்துவைத்திருங்கள்.
2. எந்தக் குறையையும்பற்றி சொல்லுமுன் உங்களுடைய உண்மைகளை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளுங்கள்.
3. குழப்பமடைந்திருந்தாலோ கோபமடைந்திருந்தாலோ, ஆசிரியரிடம் பேசுமுன் எப்போதுமே சாதாரண மனநிலைக்குத் திரும்புங்கள்.
4. ஆசிரியரைச் சந்திப்பதற்கு முன், நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை எழுதிவைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் நிறைவேற்ற நினைக்கும் குறிக்கோள்களைப் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள்.
5. உங்களுடைய நிலைநிற்கையை உறுதியாகவும் தெளிவாகவும் தெரியப்படுத்துங்கள்; அதன்பிறகு எந்தப் பிரச்சினைகளையும் மேற்கொள்வதற்கு என்ன நடைமுறையான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பதை கவனிக்க ஆசிரியருடன் ஒத்துழையுங்கள்.
6. உங்களையே ஆசிரியரின் நிலைமையில் வைத்துப் பாருங்கள். நீங்கள் அவருடைய நிலைமையில் இருந்திருந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டுக்கொள்ளுங்கள். இது திருப்திகரமான விளைவைப் பேசி வரவழைப்பதற்கு உதவும்.
7. கவனமாக செவிகொடுத்து கேட்டு, அதற்குப்பின் பேசுங்கள். நீங்கள் எதையாவது புரிந்துகொள்ளவில்லை என்றால் கேள்விகள் கேட்க பயப்படாதீர்கள். சொல்லப்படுவது உங்களுக்கு ஏற்றுக்கொள்ளப்படாததாக இருக்குமானால், உள்ளதை உள்ளபடி சொல்லி, ஏன் என்று கனிவோடு விளக்குங்கள்.
—டாக்டர் டேவிட் லூயிஸால் எழுதப்பட்ட பள்ளியில் உங்கள் பிள்ளைக்கு உதவுங்கள் புத்தகத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது.
[பக்கம் 9-ன் படம்]
உங்களுடைய பிள்ளையோடு சேர்ந்து வாசியுங்கள்
[பக்கம் 9-ன் படம்]
பள்ளிப் பாடத்திட்டத்தைப்பற்றி ஆலோசிக்க ஆசிரியர்களைச் சென்று சந்தியுங்கள்
[பக்கம் 9-ன் படம்]
விருப்பப் பாடங்களைத் தெரிந்தெடுக்க உங்கள் பிள்ளைக்கு உதவுங்கள்