அனைவருக்கும் பூரண ஆரோக்கியம்
நடத்தை, சுற்றுச்சூழல், உடல்நலப் பராமரிப்பு ஆகியவற்றைப் போலவே, நம்முடைய உயிரியல்சார்ந்த உருவமைப்பும் நம் உடல்நலத்தைப் பாதிக்கிறது. அந்த உருவமைப்பானது பிறப்பிலிருந்தே பெற்ற குணங்களாலும், நோய்நொடிகளுக்கான மரபியல்சார்ந்த மனநிலையைக் கொண்டிருப்பதால் பின்னர் நமக்கு வரும் நோய்நொடிகளாலும் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது.
“நீங்கள் இந்த உலகில் எந்த உயிரியல்சார்ந்த அமைப்போடு பிறந்தீர்களோ அதுவே, நீங்கள் ஆரோக்கியத்துடன் வாழ்வீர்களா, நெடுநாள் வாழ்வீர்களா, அல்லது உயிரோடுதான் இருப்பீர்களா என்பதை மொத்தத்தில் தீர்மானிக்கிறது,” என்று உடல்நல வல்லுநர் ஒருவர் கூறுகிறார்.
எவ்வழியில் நாம் அவற்றைப் பெற்றிருந்தாலும், தலைவலி, விறைத்துப்போன தசைகள், தளர்ந்துபோன நரம்புகள், முறிந்துபோன எலும்புகள், நின்றுபோன இருதயங்கள் போன்றவையும் மற்ற நோய்களும், பழுதுபட்ட உடலாலும் மனதாலும் நம்முடைய உடல்நலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அனுதினமும் நமக்கு நினைப்பூட்டுகின்றன. எங்கும் பரவலாக இருக்கும் இந்த உடல்நலப் பிரச்சினைகளுக்கான மூல காரணம்தான் என்ன?
மூல காரணம்
பொ.ச. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த லூக்கா என்ற பெயருள்ள ஒரு மருத்துவர், ஏவப்பட்டு இயேசு கிறிஸ்துவைப்பற்றி எழுதிய வரலாற்றில் இந்தக் கேள்விக்கான பதிலை அளிக்கிறார். ஒரு நாள் திமிர்வாதக்காரன் ஒருவன் குணப்படுத்தப்படும் எதிர்பார்ப்புகளோடு இயேசுவிடம் கொண்டுவரப்பட்டான் என்று லூக்கா எழுதுகிறார். இயேசுவோ திமிர்வாதக்காரனை நோக்கி: “மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது” என்றார். பின்னர், பாவங்களை மன்னிக்க தமக்கு உண்மையிலேயே வல்லமையுண்டு என்பதைக் காண்பிக்க, இயேசு அந்த மனிதனை நோக்கி: “நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ,” என்று கட்டளையிட்டார். அவனும் அவ்வாறே செய்தான்! இதன் விளைவாக, குணப்படுத்துதலைக் கண்ட “எல்லாரும் ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.”—லூக்கா 5:17-26.
இயேசு எந்தப் பாவத்தைப்பற்றி பேசினார்? இந்தப் பதிலானது நமக்கு ஏன் வியாதி வருகிறது, ஏன் வயதாகி மரிக்கிறோம் என்பவற்றையெல்லாம் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது. “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது,” என்று நாம் உறுதியளிக்கப்பட்டிருப்பதால், அந்தப் பதிலுக்காக நாம் பைபிளை நோக்கியிருக்கலாம். (2 தீமோத்தேயு 3:16; 2 பேதுரு 1:21) முதல் மனிதனாகிய ஆதாம் பூரண ஆரோக்கியத்தோடு படைக்கப்பட்டான் என்று அது நமக்குச் சொல்லுகிறது. தன்னுடைய படைப்பாளருக்குக் கீழ்ப்படிந்திருந்ததுவரை அவன் துடிதுடிப்பான ஆரோக்கியத்தை அனுபவித்து வந்தான்.
இருப்பினும், கடவுளின் சட்டத்தை மீறுவதை ஆதாம் தெரிவு செய்துகொண்டான். கீழ்ப்படிதலைக் காண்பிக்காததனாலும், வேண்டுமென்றே தன்னுடைய படைப்பாளரை எதிர்த்ததனாலும் அவன் பாவம் செய்தான். அதன் விளைவாக, அபூரணனாகி, வியாதிக்கு ஆளாகி, காலப்போக்கில் மரித்தும்போனான். ஆதலால் ஆதாமின் வியாதிக்கும் மரணத்திற்கும் பாவமே காரணமாக இருந்தது.
மரபியல் விதிகளின் செயல்பாடாக சில நோய்கள் பெற்றோர்களிலிருந்து பிள்ளைகளுக்குக் கடத்திவிடப்படுவதைப் போலவே அபூரணமும் அதனால் ஏற்பட்ட வியாதிகளும் ஆதாமிலிருந்து மனிதவர்க்கமாகிய அவனுடைய சந்ததிக்குக் கடத்திவிடப்பட்டன. இவ்வாறு அனைத்து நோய்களும் ஆதாம் செய்த முதல் பாவத்தின் விளைவாக ஏற்பட்டவையாய் இருக்கின்றன. (ஆதியாகமம் 2:17; 3:1-19; ரோமர் 5:12) இதிலிருந்து தப்பித்துக்கொள்ள வழியே இல்லையா?
தப்பித்துக்கொள்ளும் வழி
பூரணமான ஆரோக்கியம் மோசமான உடல்நலமாக மாறியதற்கான காரணம்—கடவுளுடைய சட்டத்தை ஆதாம் மீறியதான—பாவமே. மோசமான உடல்நலத்திலிருந்து பூரண ஆரோக்கியத்திற்கான மாற்றம் பாவத்தை நீக்கிப் போடுவதனால் மட்டுமே சாத்தியமாகும். (ரோமர் 5:18, 19) எப்படி? ஆதாம் பரிபூரணனாயிருந்தபோது இருந்ததற்கு சரிசமமான மற்றொரு பரிபூரண மனிதன் தன்னுடைய ஜீவனை மீட்கும்பொருளாகத் தியாகம் செய்ய வேண்டும். “ஜீவனுக்கு ஜீவன்” என்பதே கடவுளுடைய சட்டமாக இருக்கிறது; அதாவது, இழந்த ஒரு ஜீவனுக்கு ஈடாக வேறொரு ஜீவன் கொடுக்கப்படவேண்டும்.—உபாகமம் 19:21.
இருப்பினும், பாவிகளாயிருக்கிற ஆதாமின் சந்ததியினர் யாராலுமே அப்படிப்பட்ட மீட்கும்பொருளைக் கொடுக்கமுடியாது. இதன் காரணமாக யெகோவாதாமே தம்முடைய குமாரனாகிய இயேசுவை ஒரு பரிபூரண மனிதனாக, ‘அவராலே நாம் பிழைத்திருக்கும்படிக்கு,’ “அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்க” அன்புடன் அனுப்பிக் கொடுத்தார்.—மத்தேயு 20:28; 1 யோவான் 4:9; சங்கீதம் 49:7.
இயேசு பூமியில் இருந்த சமயம் திமிர்வாதக்காரனை நோக்கி “உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது,” என்று சொன்னார்; குணமாக்கப்பட்ட அந்த மனிதனும் எழுந்து தன் வீட்டுக்குப் போனான். இச்சம்பவத்தின் மூலம் தமது பிதா, யெகோவா பாவங்களை நீக்கிப் போடுவதற்கான அதிகாரத்தைத் தமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை இயேசு காண்பித்தார். குருடர்களையும் செவிடர்களையும் மற்றுமநேக நோய்கள் உள்ளவரையும் உடனடியாக குணமாக்குவதன்மூலம் கடவுளிடமிருந்து வரும் இந்தச் சக்தியை இயேசு திரும்பத்திரும்ப பயன்படுத்தினார்.
இயேசு இவ்வாறு அற்புதமாக குணமாக்கியதைப்பற்றி பைபிள் சொல்வதாவது: “அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர், முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்தில் வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தமாக்கினார். ஊமையர் பேசுகிறதையும், ஊனர் சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு”ப்போனார்கள். (மத்தேயு 15:30, 31) அதைவிட இன்னும் ஆச்சரியம் இயேசு மரித்தவர்களை உயிருக்குக் கொண்டுவர முடிந்ததுதான். இப்படிப்பட்ட அநேக உயிர்த்தெழுதல்களைப்பற்றி பைபிள் கூறுகிறது.—லூக்கா 7:11-16; 8:49-56; யோவான் 11:14, 38-44.
எந்த நோயையும் குணப்படுத்துவது இயேசுவின் வல்லமைக்கு அப்பாற்பட்டதல்ல என்றே அதிசயமான இந்தச் சுகமளிப்புகள் நமக்கு உறுதியளிக்கின்றன. கடவுளால் கொடுக்கப்பட்ட இந்தச் சக்தியை அவர் மீண்டும் உபயோகிப்பாரா? நம்மால் பயனடைய முடியுமா?
பூரண ஆரோக்கியம் நிச்சயம்
இயேசு பரலோகத்தில் ஏற்கெனவே கடவுளுடைய பரலோக அரசாங்கத்தின் ராஜாவாக ஆட்சி செய்துகொண்டிருக்கிறார் என்று பைபிள் தீர்க்கதரிசனங்கள் காண்பிக்கின்றன. தற்போது இருக்கும் மனித ராஜ்யங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு, முழு பூமியின்மீதும் ஆட்சி செய்வதற்கான அதிகாரத்தைக் கடவுள் அவருக்குக் கொடுத்திருக்கிறார். (சங்கீதம் 110:1, 2; தானியேல் 2:44) இயேசு தம் சீஷர்களுக்குக் கற்றுக் கொடுத்த இந்த ஜெபம் நிறைவேறியதாயிருக்கும்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:10) இந்தப் பரலோக ராஜ்ய ஆட்சியின்கீழ், கடவுளுடைய சித்தத்தின் ஒரு பாகமானது, மனித குடும்பத்தின் ஆரோக்கியத்தை வியக்கத்தக்கவண்ணம் முன்னேற்றுவதே ஆகும்.
அப்பொழுது, சொல்லர்த்தமாகவும் ஆவிக்குரிய வகையிலும், “குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்.” “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.”—ஏசாயா 33:24; 35:5, 6.
கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின்கீழ், பூரண ஆரோக்கியம் என்பது நாம் இப்பொழுது மரிப்பதைப்போன்று மக்கள் மரிக்கத் தேவையில்லை என்பதை அர்த்தப்படுத்தும். ‘அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் நித்திய ஜீவனை அடைவான்,’ என்று கடவுளுடைய வார்த்தை உறுதியளிக்கிறது. “தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.” (யோவான் 3:16; ரோமர் 6:23) ஆம், ஏவப்பட்டு எழுதப்பட்ட சங்கீதம் வெகுகாலத்திற்கு முன்பே, “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்” என்று வாக்களித்தது. (சங்கீதம் 37:29) தாம் பூமியில் இருந்தபோது செய்ததைப்போலவே, இயேசு அப்பொழுதும் மரித்தவர்களை உயிர்த்தெழுப்பி, பூரண ஆரோக்கியத்திலிருந்து பயனடைவதற்கான வாய்ப்பை அவர்களுக்குக் கொடுப்பார். “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று,” பைபிள் வாக்குறுதியளிக்கிறது.—அப்போஸ்தலர் 24:15.
இராஜ்ய ஆட்சியின்கீழ் பூமிதானே செழித்தோங்கும். ஆகவே மோசமான உடல்நலத்திற்குக் காரணமாயிருக்கும் பசி இனி ஒருபோதும் இருக்கவே இருக்காது. பைபிள் தீர்க்கதரிசனங்கள் நமக்கு இவ்வாறு கூறுகின்றன: “வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத்தரும்; பூமி தன் பலனைக்கொடுக்கும்; அவர்கள் தங்கள் தேசத்தில் சுகமாயிருப்பார்கள்.” (எசேக்கியேல் 34:27) “பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.” (சங்கீதம் 67:6) “பூமியின்மீது அபரிமிதமான தானியம் விளையும்.” (சங்கீதம் 72:16, NW) “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும்.”—ஏசாயா 35:1.
கடவுளுடைய புதிய உலகில் நிலவியிருக்கும் நிலைமையைச் சுருங்கக் கூறுவதாய் பைபிளின் கடைசி தீர்க்கதரிசன புத்தகம் இவ்வாறு அறிவிக்கிறது: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை.”—வெளிப்படுத்துதல் 21:4.
‘அதை நம்புவது கடினம்’ என்கிறீர்களா? அப்படியானால் இதைப்பற்றி யோசித்துப் பாருங்கள். பாவம் செய்யுமுன் ஆதாம் பூரண ஆரோக்கியம் உடையவனாய் இருந்தான். அவனோடு யாருக்காவது பேச முடிந்திருந்து, ஒரு நாள் பூமி வேதனை அனுபவிக்கும், வியாதியாய் கிடக்கும், வயதாகும் ஆட்களால் நிறைந்திருக்கும் என்று அப்பொழுது அவனிடம் சொல்ல முடிந்திருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை நம்புவது ஆதாமுக்கு அவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கவில்லையா? இருப்பினும் இப்பொழுது இது உண்மையாய் இருக்கிறது.
அதற்கு நேர்மாறாக, கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் பூரண ஆரோக்கியம் உண்மையில் நடக்கக்கூடியதாக இருக்கும். “இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள்,” என்று யெகோவாவின் வார்த்தை நமக்கு உறுதியளிக்கிறது. (வெளிப்படுத்துதல் 21:5) என்ன நடக்கும் என்று கடவுள் சொல்கிறாரோ அது நடந்தேதீரும், ஏனென்றால் “பொய் சொல்வது தேவனால் முடியாத காரியமாயிருக்கிறது.”—எபிரெயர் 6:18, NW.
வரவிருக்கும் இந்த ஆசீர்வாதங்களை அனுபவிப்பதைப்பற்றி நிச்சயமாக இருக்க நீங்கள் இப்போது என்ன செய்யலாம்? பூரண ஆரோக்கியத்திற்கும் நித்திய ஜீவனுக்குமான வழி, இயேசு தம்முடைய பிதாவிடம் செய்த ஜெபத்தில் சொன்னவற்றின்மூலம் தெளிவாக கூறப்பட்டது: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.”—யோவான் 17:3.
உங்கள் வீட்டில் இலவச பைபிள் படிப்பை நடத்தும்படி யெகோவாவின் சாட்சிகளைக் கேளுங்கள். கடவுளுடைய ஆச்சரியகரமான வாக்குறுதிகளைப்பற்றி அறிந்துகொள்ள உங்களுக்கு உதவ அவர்கள் சந்தோஷப்படுவார்கள். அது பூரண ஆரோக்கியத்திற்கான பாதையில் நீங்கள் எடுத்துவைக்கும் முதல் அடியாக இருக்கும்!
[பக்கம் 14-ன் படம்]
கடவுளின் புதிய உலகில் அனைத்து மனிதர்களும் பூரண ஆரோக்கியத்தை அனுபவிப்பார்கள்