இளைஞர் கேட்கின்றனர்
ஒரு விளையாட்டு அணியில் நான் சேரவேண்டுமா?
“ஒரு அணியில் இருப்பதில் அந்த அளவுக்கு விசேஷம் என்ன?” என்பதாக செவன்டீன் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரை கேட்டது. அதற்கு பதிலளிக்கும் விதமாக அந்தக் கட்டுரை சொன்னது: “ஒரு பொதுவான இலக்கை நோக்கி நீங்கள் ஒன்றுசேர்ந்து வேலை செய்கிறீர்கள், ஆகவே நீங்கள் உண்மையிலேயே நெருங்கிய நண்பர்களாகிறீர்கள். மற்ற நபர்களோடு எவ்வாறு செயலாற்றுவது என்பதையும் கற்றுக்கொள்வீர்கள். அதாவது ஒரு குழுவோடு எவ்வாறு பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வது, எவ்வாறு வளைந்து கொடுப்பவர்களாகவும் கரிசனையுள்ளவர்களாகவும் இருப்பது, எவ்வாறு இணங்கிப்போவது போன்றவற்றை கற்றுக்கொள்வீர்கள்.”
இவ்வாறு, ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டுகள் பயன் தருபவையாக தோன்றுகின்றன, வேடிக்கையும் உடற்பயிற்சியும் அந்தப் பயன்களில் முக்கியமானவை.a அணி விளையாட்டுகளில் ஈடுபடுவது ஒருவருடைய குணாதிசயத்தை முன்னேற்றுவிக்கும் என்பதாகவும் சிலர் சொல்கின்றனர். வாலிபர் தளக்கட்டுப் பந்தாட்ட அணி ஒன்று இந்தக் குறிக்கோள்-வாசகத்தைக் கொண்டிருக்கிறது, “குணாதிசயம், தைரியம், உண்மைப் பற்றுறுதி.”
பிரச்சினை என்னவென்றால், ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டுகள் எப்போதுமே அப்படிப்பட்ட உயர்ந்த இலக்குகளுக்கு ஏற்ப இருப்பதில்லை. கிட்ஸ்போர்ட்ஸ் என்ற புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “சில சந்தர்ப்பங்களில் எளிதில் பாதிக்கப்படும் இளைஞர்கள் ஒழுக்கக்கேடான வார்த்தைகளை பயன்படுத்தவும், ஏமாற்றவும், சண்டை போடவும், பயமுறுத்தி சம்மதிக்கச்செய்யவும், மற்றவர்களை புண்படுத்தவும் கற்றுக்கொள்கின்றனர்.”
என்னவானாலும் வெற்றி பெறுவதா?
செவன்டீன் பத்திரிகையில் ஒரு கட்டுரை இவ்வாறு ஒப்புக்கொண்டது: “விளையாட்டுகளில் இருள் நிறைந்த பக்கம் இருக்கிறது, அங்கே வெற்றி பெறுவதற்கு ஜனங்கள் மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.” இது பைபிளின் கீழ்க்கண்ட வார்த்தைகளுக்கு நேரெதிராக இருக்கிறது: “வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்.” (கலாத்தியர் 5:26) சிறிதளவு சிநேகபான்மையான போட்டி, ஆர்வத்தையும் சந்தோஷத்தையும் ஒரு விளையாட்டுக்கு கூட்டுவதாய் இருந்தாலும், மிதமிஞ்சிய போட்டி மனப்பான்மை விரோதத்தை வளர்த்து விளையாட்டிலிருக்கும் வேடிக்கையை எடுத்துப்போடும்.
“எங்களுக்கு இருந்த பயிற்சியாளர் ஒரு உண்மையான வெறியர்; எப்போதுமே எங்களைப் பார்த்து உரத்திக் கத்தி கூச்சலிடுபவர் . . . பயிற்சிக்கு செல்ல நான் பயப்பட்டேன். . . . நான் ஒரு சித்திரவதை முகாமில் இருந்ததைப்போல் உணர்ந்தேன்,” என்பதாக ஜான் என்ற ஒரு உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் கால்பந்து விளையாட்டுவீரர் நினைவுபடுத்திப் பார்க்கிறார். எல்லா பயிற்சியாளர்களும் துர்ப்பிரயோகிக்கிறவர்களாக இல்லாதபோதிலும், அநேகர் வெற்றிபெறுவதன்பேரில் மிக அதிக அழுத்தத்தை கொடுக்கின்றனர். ஒரு எழுத்தாளர் இவ்வாறு முடித்தார்: “அநேக விளையாட்டு வீரர்கள் . . . போட்டியிடுவதன் சந்தோஷத்திலிருந்து வெற்றிபெறவேண்டும் என்ற தாங்கமுடியாத பாரத்திற்கு இடங்கொடுக்கும் ஒரு நிலையை எட்டுகிறார்கள்.” என்ன விளைவடையக்கூடும்?
கல்லூரி கால்பந்து மற்றும் கூடைப்பந்து ஆட்டக்காரர்கள் மத்தியில், “12 சதவீதத்தினர் கீழ்க்கண்ட ஐந்து அம்சங்களில் இரண்டிலாவது பிரச்சினைகளை அறிக்கை செய்திருக்கின்றனர்: மனதுயரம், உடல்வேதனை, போதைப்பொருட்கள் அல்லது மதுபானத்தை தவிர்ப்பதில் கடினம், மன மற்றும் உடல் துர்ப்பிரயோகம், மேலுமாக கல்வி சம்பந்தமான செயலாற்றத்தில் தரக்குறைவு,” என்பதாக வெளிப்படுத்தின ஒரு சுற்றாய்வின் பேரில் ஸைன்ஸ் நியூஸ் அறிக்கை செய்தது. அதே விதமாக, ஆன் தி மார்க் என்ற புத்தகம் அறிக்கை செய்கிறது: “ஒழுங்கமைக்கப்பட்ட போட்டி விளையாட்டுகளோடு சம்பந்தப்பட்டிருக்கும் கிட்டத்தட்ட அனைவருமே விளையாட்டுகளின் எல்லா மட்டங்களிலும் பெரும் போதைப்பொருள் துர்ப்பிரயோகப் பிரச்சினை இருப்பதாக ஒப்புக்கொள்கின்றனர்.”
ஒழுக்க சம்பந்தமாக இணங்கிப்போதல்
வெற்றிபெற வேண்டும் என்ற அழுத்தம் ஒரு இளவயது ஆட்டக்காரரை, உண்மை மற்றும் நேர்மையின் நியாயமான தராதரங்களை விட்டுக்கொடுக்கும்படிகூட செய்விக்கும். விளையாட்டுகளில் உங்கள் பிள்ளை (ஆங்கிலம்) என்ற புத்தகம் தெரிவிக்கிறது: “விளையாட்டுகளின் நவீன உலகத்தில், வெற்றி பெறுவது நல்லது மாத்திரம் அல்ல; இதுதான் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரே ஒரு காரியம். தோல்வி அடைவது மோசமானது மாத்திரமல்ல, அது மன்னிக்க முடியாதது.”
மற்றொரு கொடூரமான உண்மை: தங்களுக்கெதிராக போட்டியிடுபவர்களை காயப்படுத்துமாறு ஆட்டக்காரர்களை பயிற்சியாளர்கள் அடிக்கடி அதிகமான அழுத்தத்துக்கு உள்ளாக்குகிறார்கள். ஸைக்காஸஜி டுடே-ல் ஒரு கட்டுரை இவ்வாறு சொன்னது: “விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதற்கு, நீங்கள் மோசமாக இருக்கவேண்டும். அல்லது இதைத்தான் அநேக விளையாட்டு வீரர்களும் பயிற்சியாளர்களும் விளையாட்டு அபிமானிகளும் நம்புகின்றனர்.” கால்பந்து தொழில்முறை ஆட்டக்காரர் ஒருவர் தன்னுடைய இயல்பான ஆள்தன்மையை “மிருதுவாக பேசுபவர், கரிசனையுள்ளவர், சிநேகபான்மையுள்ளவர்” என்பதாக விளக்குகிறார். ஆனால் விளையாட்டு மைதானத்தில், முழுமையாக மாறிவிடுகிறார். மைதானத்தில் தன்னுடைய ஆள்தன்மை எவ்வாறு இருக்கும் என்பதை விவரிப்பவராய், அவர் சொல்கிறார்: “நான் கீழ்த்தரமாகவும் அசிங்கமாகவும் அப்பொழுது நடந்துகொள்வேன். . . . நான் அவ்வளவு பயங்கர கொடூரமானவன். நான் குத்தப்போகும் ஆளுக்கு முழுமையான அவமதிப்பை கொண்டிருக்கிறேன்.” பயிற்சியாளர்கள் அடிக்கடி அப்படிப்பட்ட ஒரு மனச்சாய்வை உற்சாகப்படுத்துகின்றனர்.
கிறிஸ்தவர்களை பைபிள் இவ்வாறு உற்சாகப்படுத்துகிறது: ‘உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொள்ளுங்கள்.’ (கொலோசெயர் 3:12) உங்களுக்கெதிராக போட்டியிடுபவர்களை காயப்படுத்தவும், அடக்கவும், ஊனமாக்கவும் துரிதப்படுத்தும் சுருக்கமான பேச்சுகளை தினந்தோறும் பெற்றுவந்தீர்களானால் இப்படிப்பட்ட குணாதிசயங்களை உங்களால் வளர்த்துக்கொள்ள முடியுமா? பதினாறு வயதுள்ள ராபர்ட் இவ்வாறு ஒப்புக்கொள்கிறார்: “நான் ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டுகளை விளையாடியுள்ளேன். நாம் யாரை காயப்படுத்தினாலும் அதைப் பற்றி கவலையில்லை, வெற்றிபெற்றால் போதும்.” இப்பொழுது அவர் ஒரு முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவராயிருப்பதன் காரணமாக, அவருடைய கருத்துகள் மாறியிருக்கின்றன. அவர் சொல்கிறார்: “நான் மீண்டும் அதைச் செய்யவே மாட்டேன்.”
சரீர பயிற்சியா அல்லது சரீர புண்படுத்துதலா?
சரீர ஆபத்துகளும் கவனிக்கப்படாமல் விடப்படக்கூடாது. வேடிக்கைக்கென்றே நண்பர்களோடு விளையாடினாலும்கூட விளையாட்டுகள் ஆபத்தை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால், தொழில்முறை ஆட்டக்காரர்களுடைய திறமைக்கு கிட்டத்தட்ட ஒப்பானதாக விளையாட முயற்சி செய்யும்படி இளைஞர்கள் பயிற்றுவிக்கப்படும்போது ஆபத்துகள் மிக அதிகமாக அதிகரிக்கின்றன.
விளையாட்டுகளில் உங்கள் பிள்ளை என்ற புத்தகம் குறிப்பிடுகிறது: “தொழில்ரீதியான விளையாட்டு வீரர்கள் காயப்படுத்தப்படலாம். ஆனால் அவர்கள் அதிக திறமைவாய்ந்தவர்கள், உடல்நலம் குன்றாதிருக்கிறவர்கள், காயப்படுத்தப்படுவதை மனப்பூர்வமாக துணிந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய முதிர்ச்சியுள்ள வயதுவந்தவர்கள், அவ்வாறு செய்வதற்காக நல்ல ஊதியம் பெறக்கூடியவர்கள். மேலுமாக, அவர்கள் சிறந்த, மிகக் கைதேர்ந்த விதமான பயிற்சியையும், சிறந்த சாதனங்களையும், மிகக் கவனமான, முதல் தரமான மருத்துவ பராமரிப்பையும் பொதுவாக பெற்றுக்கொள்கிறார்கள். . . . பள்ளி சிறுவர்களுக்கு அப்படிப்பட்ட அனுகூலங்கள் இல்லை.” ‘சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று,’ கிறிஸ்தவர்கள் சொல்லப்பட்டிருக்கின்றனர். (ரோமர் 12:1) தேவையற்ற மற்றும் நியாயமற்ற ஆபத்துகளுக்கு உங்களுடைய சரீரத்தை கீழ்ப்படுத்த வேண்டுமா என்பதை குறித்து நீங்கள் கவனமாக சிந்திக்க வேண்டுமல்லவா?
கவனிக்கப்பட வேண்டிய மற்ற காரணக்கூறுகள்
உடல்ரீதியான ஆபத்துகள் குறைவாய் இருப்பதாகத் தோன்றினாலும்கூட, ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் விளையாட்டுகள் அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதாய் இருக்கின்றன. பயிற்சி வகுப்புகள் உங்களுடைய சமூக வாழ்க்கையை குறைப்பது மாத்திரமல்லாமல் படிப்பிற்கும் வீட்டுப்பாடத்திற்கும் ஒதுக்கப்பட வேண்டிய நேரத்தில் அதிகத்தையும் எடுத்துக்கொள்ளக்கூடும். மற்ற நடவடிக்கைகளில் கலந்துகொண்ட மாணவர்களைப் பார்க்கிலும் கல்லூரி விளையாட்டு வீரர்கள் “சற்று குறைவான கிரேடுகளை” பெற்றிருப்பதாக ஸைன்ஸ் நியூஸ் அறிக்கை செய்தது. அதிக முக்கியமாக, “அதிமுக்கியமான காரியங்கள்” என்பதாக பைபிள் சொல்லக்கூடிய ஆவிக்குரிய அக்கறைகளை நாடுவதை, ஒரு அணியில் விளையாடுவது கடினமாக்கும். (பிலிப்பியர் 1:10, NW) ‘ஒரு அணியில் சேருவது கிறிஸ்தவ கூட்டங்களை தவறவிடுவதை என்னிடத்தில் தேவைப்படுத்துமா, அல்லது பிரசங்க வேலையில் என்னுடைய பங்கை குறைக்குமா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.
மேலுமாக, ஒழுக்கத்தின்பேரிலும், சுத்தமான பேச்சின்பேரிலும், போட்டியின்பேரிலும் உள்ள உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளாத இளைஞர்களோடும் வயதுவந்தோரோடும் பல மணிநேரங்களை செலவிடுவதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் கவனமாக மதிப்பிடுங்கள். “ஆகாத கூட்டுறவு நல்லொழுக்கங்களை கெடுக்கும்,” என்பதாக பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 15:33, NW) உதாரணத்திற்கு, தி நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாளில் தலையங்கத்திற்கு எதிர்ப்புறத்திலிருக்கும் பக்கத்தில் வெளியான ஒரு கட்டுரையை கவனியுங்கள்: “லாக்கர் ரூம் என்பது . . . பெண்களுடைய உடலைப் பற்றி ஆண்கள் விளக்கமான பால் சம்பந்தமான பதங்களில் விவரித்துக்கொண்டும், பாலுறவு கொள்வதில் அவர்கள் வெற்றிபெறுவதைக் குறித்து பெருமையுடன் சொல்லிக்கொண்டும், பெண்களை அடிப்பதை குறித்து கேலியாக பேசிக்கொண்டும் இருக்கும் ஒரு இடமாக இருக்கிறது.” அப்படிப்பட்ட ஒரு சுற்றுச்சூழலில் இருப்பதை நீங்கள் தேர்ந்தெடுத்தால் ஆவிக்குரிய பிரகாரமாக நீங்கள் எவ்வாறு முன்னேறுவீர்கள்?—யாக்கோபு 3:18-ஐ ஒப்பிடுக.
ஒரு ஞானமான தீர்மானத்தை எடுப்பது
ஒரு விளையாட்டு அணியில் சேரவேண்டும் என்பதாக யோசித்திருக்கிறீர்களா? அப்படியிருந்தால் மேலே குறிப்பிடப்பட்டவை ஒருவேளை அவ்வாறு செய்வதன் விளைவுகளை எண்ணிப்பார்ப்பதற்கு உதவும். தீர்மானத்தை எடுப்பதற்கு முன்பு மற்றவர்களுடைய மனச்சாட்சியை கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். (1 கொரிந்தியர் 10:24, 29, 33) நிச்சயமாகவே, எந்தவொரு கண்டிப்பான கட்டளையையும் ஏற்படுத்தமுடியாது, ஏனென்றால் உலகமுழுவதுமாக சூழ்நிலைகள் மாறுபடுகின்றன. சில இடங்களில், மாணவர்கள் விளையாட்டுகளில் பங்குகொள்வது ஒருவேளை கட்டாயமான ஒன்றாகவும் இருக்கலாம். ஆனால் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால், உங்களுடைய பெற்றோர்களிடத்தில் அல்லது ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவரிடத்தில் காரியங்களைக் குறித்து பேசுங்கள்.
அநேக கிறிஸ்தவ இளைஞர்கள் அணி விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது என்ற கடினமான தீர்மானத்தை எடுத்திருக்கின்றனர். நீங்கள் ஒரு விளையாட்டு வீரராக விளையாட்டுகளை உண்மையிலேயே மகிழ்ந்து அனுபவிக்கக்கூடியவர்களாக இருந்தால் இது சுலபமானது இல்லை! ஆசிரியர்களிடமிருந்தும், பயிற்சியாளர்களிடமிருந்தும், பெற்றோர்களிடமிருந்தும் வரும் அழுத்தம் மனமுறிவை அதிகப்படுத்தலாம். வாலிபன் ஜிம்மி இவ்வாறு ஒப்புக்கொள்கிறான்: “விளையாடாமல் இருப்பது எனக்குள் ஒரு போராட்டமாய் இருப்பதாக காண்கிறேன். விசுவாசத்தில் இல்லாத என்னுடைய தகப்பன் அவருடைய மேல்நிலைப் பள்ளி நாட்களில் ஒரு தலைசிறந்த விளையாட்டு வீரராய் இருந்தார். ஒரு அணியில் சேராமல் இருப்பது சிலசமயங்களில் எனக்கு மிகவும் கடினமாய் ஆகிவிடுகிறது.” அப்படியிருந்தாலும், விசுவாசத்திலுள்ள பெற்றோர்களின் ஆதரவும், சபையிலுள்ள முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களின் ஆதரவும், தீர்மானத்தை நீங்கள் பற்றிக்கொண்டிருக்க உங்களுக்கு அதிகமாக உதவும். ஜிம்மி இவ்வாறு சொல்கிறான்: “என்னுடைய தாய்க்கு நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். சில சமயங்களில் விளையாட்டுகளை விளையாடுவதன்பேரில் வரும் அழுத்தத்தினால் நான் மனச்சோர்வடைகிறேன். ஆனால் வாழ்க்கையில் என்னுடைய உண்மையான இலக்குகளைக் குறித்து ஞாபகப்படுத்த அவர் எப்போதுமே இருக்கிறார்.”
ஒத்துழைப்பை குறித்தும் பிரச்சினையை தீர்ப்பதைக் குறித்தும் ஆட்டக்காரர்களுக்கு அணி விளையாட்டுகள் கற்றுக்கொடுக்கலாம். ஆனால் கிறிஸ்தவ சபைக்குள் வேலை செய்வதன் மூலமாக அப்படிப்பட்ட காரியங்களை கற்றுக்கொள்வதற்கு ஏராளமான வாய்ப்பு இருக்கிறது. (ஒப்பிடுக: எபேசியர் 4:16.) அணி விளையாட்டுகள் வேடிக்கையாகவும் இருக்கலாம், ஆனால் அவற்றை அனுபவிப்பதற்கு நீங்கள் ஒரு அணியில் இருக்கவேண்டியதில்லை. சில விளையாட்டுகளை கிறிஸ்தவ நண்பர்களோடு கொல்லைப்புறத்தில் அல்லது உள்ளூர் பூங்கா ஒன்றில் அனுபவிக்கலாம். குடும்பமாக உல்லாச பயணம் செய்வது ஆரோக்கியமான விளையாட்டுகளுக்கு கூடுதலான வாய்ப்புகளை கொடுக்கக்கூடும். “உங்களுடைய சபையிலுள்ள மற்றவர்களோடு விளையாடுவது அவ்வளவு மேலான ஒன்றாயிருக்கிறது,” என்பதாக 16 வயதான கரெக் சொல்கிறான். “அது வெறுமனே வேடிக்கைக்காக செய்யப்படுகிறது, நீங்கள் உங்களுடைய நண்பர்களோடும் இருக்கிறீர்கள்!”
உங்களுடைய நண்பர்களோடு விளையாடுவது ஒரு வெற்றிபெரும் அணியில் இருப்பதைப் போன்ற அதே கிளர்ச்சியை ஒருவேளை உண்டாக்காது என்பது உண்மைதான். ஆயினும், அதிக சாதகமான சூழ்நிலைகளில் “சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது . . . எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது,” என்பதை எப்போதுமே மறவாதிருங்கள். (1 தீமோத்தேயு 4:8) தேவபக்தியை வளர்த்துக்கொள்ளுங்கள், கடவுளுடைய பார்வையில் உண்மையிலேயே நீங்கள் ஜெயம் கொண்டவராக இருப்பீர்கள்!
[அடிக்குறிப்பு]
a பிப்ரவரி 22, 1996, பிரதியில் காணப்படும் “இளைஞர் கேட்கின்றனர் . . . அணி விளையாட்டுகள்—எனக்கு அவை நல்லவையா?” என்ற கட்டுரையை காண்க.
[பக்கம் 22-ன் சிறு குறிப்பு]
“எங்களுக்கு இருந்த பயிற்சியாளர் ஒரு உண்மையான வெறியர்; எப்போதுமே எங்களைப் பார்த்து உரத்திக் கத்தி கூச்சலிடுபவர் . . . பயிற்சிக்கு செல்ல நான் பயப்பட்டேன்”
[பக்கம் 23-ன் சிறு குறிப்பு]
வெற்றிபெறுவது மற்றவர்களை காயப்படுத்துவதை அர்த்தப்படுத்தினாலும்கூட, அடிக்கடி, பயிற்சியாளர்கள் அதற்கு அழுத்தம் கொடுக்கின்றனர்