ஆவி உலகில் நமது மிகச்சிறந்த நண்பர் இருக்கிறார்
ஆவி உலகில் வாழ்வோரைப் பற்றிய தெளிவான விவரத்தை பைபிள் நமக்கு அளிக்கிறது. யெகோவா தேவன் பரலோகத்தில் உன்னதராக இருக்கிறார். வல்லமையிலும் அதிகாரத்திலும் இயேசு கிறிஸ்து யெகோவாவிற்கு அடுத்ததாக இருக்கிறார். கடவுளுடைய உண்மையுள்ள தூதர்கள் கடவுளுக்கும் பூமியிலுள்ள அவரது ஜனங்களுக்கும் ஊழியக்காரர்களாக சேவிக்கின்றனர். சாத்தானும் அவனது பேய்களும் கடவுளை எதிர்த்து, மனிதர்களை மோசம்போக்குகின்றனர். இறந்தவர்கள், கடவுள் மறுபடியும் உயிர்த்தெழுப்பும்வரை மரணத்தில் தூங்கிக்கொண்டிருக்கின்றனர்.
பேய்கள் நமது வணக்கத்தைப் பெற விரும்புகின்றன
இறந்தவர்கள் உயிரற்று இருப்பதன் காரணமாக, அவர்களை வணங்குவதால் நமக்கு எந்த இலாபமும் இல்லை. இறந்தவர்களுக்கு பலிகளை செலுத்துவது, சாத்தான் மற்றும் அவனது பேய்களின் பொய்களைத்தான் முன்னேற்றுவிக்கிறது.
கடவுளுடைய தூதர்கள் நமது வணக்கத்தைப் பெற விரும்புகின்றனரா? நிச்சயமாகவே இல்லை! உண்மையுள்ள தூதர்கள் கடவுளை மகிமைப்படுத்துகின்றனர், மனிதர்களையும் அவ்வாறே செய்யும்படி உற்சாகப்படுத்துகின்றனர். அப்போஸ்தலனாகிய யோவான் இரண்டு முறை தேவதூதர்களை வணங்க முயற்சி செய்தார், ஆனால் அவர்கள் அவரை கண்டித்து, இவ்வாறு சொன்னார்கள்: “நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார். . . . தேவனைத் தொழுதுகொள்.”—வெளிப்படுத்துதல் 19:10; 22:8, 9.
உண்மையுள்ள தேவதூதர்களுக்கு எதிர்மாறாக, சாத்தானும் அவனது பேய்களும் வணக்கத்தையும் மகிமையையும் பெற விரும்புகின்றன. இயேசு பூமியில் மனிதனாக இருந்தபோது சாத்தான் அவரை சோதித்ததிலிருந்து இது தெளிவாக தெரிந்தது. பைபிள் இவ்வாறு விவரிக்கிறது: “பிசாசு அவரை [இயேசுவை] மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.”—மத்தேயு 4:8, 9.
“அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே,” என்று இயேசு பதிலளித்தார். (மத்தேயு 4:10) இயேசு யெகோவாவின் சட்டத்தை அறிந்திருந்தார், அதை மீற மறுத்துவிட்டார்.—உபாகமம் 6:13.
தன்னை வணங்கும்படி இயேசுவை இணங்கவைப்பதில் சாத்தான் தோல்வியடைந்தாலும் மற்றவர்களை இணங்கவைப்பதில் அவன் வெற்றிகண்டிருக்கிறான். சந்தேகமில்லாமல், சில ஜனங்களே சாத்தானை வேண்டுமென்றே வணங்குகின்றனர். இருந்தபோதிலும், வஞ்சித்தல், ஏமாற்றுதல், பொய், பயம் ஆகியவற்றின் மூலம் சாத்தானும் பேய்களும் அத்தனை அநேக ஜனங்களை யெகோவாவின் உண்மை வணக்கத்திலிருந்து விலக்கியிருப்பதால் அப்போஸ்தலனாகிய யோவான் இவ்வாறு எழுதினார்: ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.’ (1 யோவான் 5:19) கடவுளுடைய வார்த்தைக்கு முரணான வழிகளில் வணக்கம் செலுத்துபவர்கள், யெகோவாவை அல்ல ஆனால் சாத்தானையே கனப்படுத்துகின்றனர். பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: ‘அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்கள்.’—1 கொரிந்தியர் 10:20.
வணக்கம் யெகோவாவிற்கு உரியது
நாம் கடவுளை மாத்திரமே வணங்க வேண்டும். யெகோவா மோசேயிடம் இவ்வாறு சொன்னார்: ‘என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவன்.’—யாத்திராகமம் 20:3-5.
யெகோவா மலைப்பூட்டும் விதத்தில் மாட்சிமையுள்ளவராய் இருந்தாலும், நாம் அவரை அணுக முடியும். சீஷனாகிய யாக்கோபு இவ்வாறு சொன்னார்: “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்.” (யாக்கோபு 4:8) அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு எழுதினார்: “அவர் [கடவுள்] நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.” (அப்போஸ்தலர் 17:27) அப்போஸ்தலனாகிய யோவான் இவ்வாறு எழுதினார்: “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப்பற்றி [யெகோவாவைப்பற்றி] நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.”—1 யோவான் 5:14, 15.
“அவருடைய சித்தத்தின்படி” நாம் கேட்டால் யெகோவா நமது வேண்டுதல்களை அளிப்பார் என்பதாக யோவான் எழுதியதை கவனியுங்கள். கடவுளுடைய சித்தம் என்னவென்பதை அறிந்துகொள்ள, பைபிள் என்ன கற்பிக்கிறது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். பைபிளைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவுவதில் யெகோவாவின் சாட்சிகள் சந்தோஷப்படுவார்கள்.
நீங்கள் யெகோவாவைப் பற்றி அதிகமாக கற்றுக்கொள்ளும்போது, ஆவி உலகில் வாழ்வோரைக் குறித்து அதிக அறிவை பெற்றுக்கொள்வீர்கள். இந்த அறிவு, மக்களை பயத்திலும் அடிமைத்தனத்திலும் பிடித்துவைப்பதற்காக சாத்தான் பயன்படுத்தும் மூடப்பழக்கங்கள், நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரியங்களிலிருந்து விடுதலை அளிக்கிறது. கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவின் மூலம், வாழ்க்கையின் தினசரி பிரச்சினைகளை தவிர்த்திடவோ மேற்கொள்ளவோ உங்களுக்கு உதவும்படி கடவுள்பேரில் நம்பிக்கை வைக்க நீங்கள் கற்றுக்கொள்வீர்கள். நீங்கள் கடவுளுடைய நண்பராகலாம். கடவுள் உங்களுக்கு ‘அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமாக’ நிரூபிப்பார்.—சங்கீதம் 46:1.
பொல்லாத ஆவி சக்திகள் அழிக்கப்படவிருக்கின்றன
பொல்லாத ஆவி சக்திகளை நல்ல ஆவி சக்திகள் வெல்லும் என்பதை ஒருபோதும் சந்தேகிக்காதீர்கள். ஏற்கெனவே, சாத்தானையும் அவனது கெட்ட கூட்டாளிகளையும் நீக்கி பரலோகத்தை சுத்திகரித்திருக்கும் ஒரு போர் ஆவி உலகில் நடைபெற்றிருக்கிறது. வெளிப்படுத்துதல் புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் [உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்து] அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று. உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.”—வெளிப்படுத்துதல் 12:7-9.
அந்தப் போரின் விளைவு என்ன? அந்த அறிக்கை இவ்வாறு தொடர்கிறது: “ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன்.” (வெளிப்படுத்துதல் 12:12) பரலோகத்தில் இருந்தவர்களால் சந்தோஷப்பட முடிந்தது, ஏனெனில் தொந்தரவு உண்டுபண்ண சாத்தானும் அவனது பேய்களும் இனியும் அங்கில்லை. எனினும், அவன் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டதானது, பூமியிலுள்ளவர்களுக்கு கடுந்துயரத்தை, பெரும் துன்பத்தை, உண்டாக்கியிருக்கிறது. கடுந்துயர்மிக்க அந்தக் காலத்தில் நாம் இப்போது வாழ்ந்துவருகிறோம்.—2 தீமோத்தேயு 3:1-5.
தீமை இல்லாத ஓர் எதிர்காலம்
ஆயினும், பைபிள், நம்பிக்கையையும் அளிக்கிறது. பிசாசை செயலற்றவனாக ஆக்குவதற்கு “கொஞ்சக்காலமாத்திரம்” உண்டென்று அது நமக்கு உறுதியளிக்கிறது. அது நடக்கும்போது, யெகோவா, அவரது நட்பை நாடும் பூமியிலுள்ள அனைவர்மீதும் அருமையான ஆசீர்வாதங்களைப் பொழிவார். எதிர்காலத்தைப் பற்றிய அவரது சில வாக்குறுதிகளை கவனியுங்கள்:
“தேசத்தில், மலையின் உச்சியிலும், திரள் தானியமிருக்கும்.”—சங்கீதம் 72:16, திருத்திய மொழிபெயர்ப்பு.
“நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அனுபவிப்பார்கள். அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை.”—ஏசாயா 65:22, 23.
“வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.”—ஏசாயா 33:24.
“அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்.”—ஏசாயா 35:5, 6.
“அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.”—வெளிப்படுத்துதல் 21:4.
“நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:29.
உண்மையான கடவுளாகிய யெகோவாவால் மாத்திரமே இப்படிப்பட்ட மகத்தான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். அவரது நோக்கத்தை நிறைவேற்றுவதிலிருந்து எதுவுமே அவரை தடைசெய்யாது. “தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை.”—லூக்கா 1:37.
[பக்கம் 9-ன் படங்கள்]
நீங்கள் கடவுளுடைய நண்பராகிவிட்டால், வாழ்க்கையின் பிரச்சினைகளைக் கையாள அவர் உங்களுக்கு உதவுவார்