இளைஞர் கேட்கின்றனர். . .
மாற்றுவகை ராக் இசை—அது எனக்குரியதா?
“இளைஞர்களாகிய நாங்கள் எதிர்ப்படும் வித்தியாசமான பிரச்சினைகள், அனுபவங்கள் ஆகியவற்றைப் பற்றிய பாடல்களைப் புரிந்துகொண்டு அவற்றுக்குப் போற்றுதல் தெரிவிக்க என்னால் முடியும்.”—15 வயது ஜார்ஜ். a
“பாப் இசைக்கும் ஹெவி மெட்டல் இசைக்கும் இடைப்பட்ட நிலையில் அது உள்ளது.”—19 வயது டாண்.
“அது புதியது. அது வித்தியாசமானது. அது பிரபலமான இசையல்ல, பெரும் அளவில் உற்பத்தி செய்யப்படும் இசையுமல்ல.”—17 வயது மரியா.
மாற்றுவகை ராக். பல இளைஞர்கள் இதைக் கேட்டு திளைக்கின்றனர். பெரியவர்களில் சிலருக்கு இது தொந்தரவாயுள்ளது. பெற்றோரில் பெரும்பாலோருக்கு அது என்னவென்றே தெரியவில்லை.
மாற்றுவகை ராக் என்றால் என்ன என்று திட்டவட்டமாக விளக்கம் தருவது எளிதல்ல என்பது ஒத்துக்கொள்ளத்தக்கதே. ஆரம்பத்தில் அது, வித்தியாசமான ஒன்றை, ரேடியோவில் கேட்கும் பிரபலமான, பிரசித்தி பெற்ற இசைக்கு பதிலாக வேறுவகை இசையை விரும்பிய இளைஞர்களின் இசையாய் இருந்தது. உள்ளூர் கல்லூரியைச் சேர்ந்த வானொலி நிலையங்கள், பிரபலமாய் இராத இசைக் குழுவினருக்கு—தாங்கள் பணத்துக்காக இசைக்கும் கலைஞர்கள் அல்லவென்று பெருமையுடன் கூறிக்கொள்ளும் இசைக் குழுவினருக்கு—ஒலிபரப்புவதற்கான அனுமதியைக் கொடுத்த சமயத்திலிருந்துதான் அது ஆரம்பித்தது என்று சிலர் கூறுகின்றனர். புதிதாய்த் தோன்றிய இசைக் கலைஞர்கள், இசை வீடியோக்களைப் போன்று, பெரும்பான்மைப் பதிவு நிறுவனங்களையும், மொத்த விற்பனை உத்திகளையும் வேண்டுமென்றே தவிர்த்தனர். மேலும், மிகவும் பிரசித்தி பெற்ற 40 பாடல்களின் பொருள்களில் அரிதாகப் பயன்படுத்தப்பட்டவற்றைப் பற்றி அவர்கள் எழுதினர்.
ஹெவி மெட்டல் அல்லது ராப் இசையைப் போலன்றி, மாற்றுவகை ராக் இசை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எளிதாகக் கண்டுகொள்ளப்படவோ, அல்லது வகைப்படுத்தப்படவோ முடிவதில்லை. மாற்றுவகை ராக் இசை என்பதுதான் என்ன என்பதைப் பொறுத்தமட்டில், இசைத் துறையைச் சேர்ந்த வல்லுநர்களும்கூட கருத்து வேறுபாட்டைக் கொண்டுள்ளனர். இது ஏனெனில், அதன் பெயர் குறிப்பிட்டுக் காட்டுவதன்படி, ஒலிகள், மனோநிலைகள், உணர்வுகள் ஆகியவற்றின் பல்வேறு வகைகளை அது உள்ளடக்குகிறது. ஓர் இளைஞன் இவ்வாறு கூறினார்: “அதை வகைப்படுத்துவது மிகவும் கடினம். அது இன்றைய இசையின் பல்வேறு வகைகளை உள்ளடக்குகிறது.” ஏற்றுக்கொள்ளப்படுவதையோ மறுக்கப்படுவதையோ பொருட்படுத்தாமல், மற்றொரு இளைஞன் இவ்வாறு விளக்கமளித்தார்: “அது எப்பொழுதுமே கடூரமானதாக அல்லது மென்மையாகவோ, வேகமாக அல்லது மெதுவாகவோ, மகிழ்ச்சிகரமாக அல்லது விசனகரமாகவோ இருப்பதில்லை.” ஓர் இளைஞன் இவ்வாறு ஒத்துக்கொள்ளவும் செய்தார்: “மாற்றுவகை ராக் இசையில் எனக்கு விருப்பம் இருப்பதாய்ச் சொல்வதில் நான் நிச்சயமாயில்லை, ஏனெனில் அது என்னதான் என்று நிச்சயமாய் எனக்குத் தெரியாது.”
எப்படியாயினும், மிகப் பிரசித்தி பெற்ற கலைஞர்களில் பலர், மாற்றுவகை ராக் இசையை, புகழ்பெற்ற இசையாகவே இப்போது கருதும் அளவுக்கு அதன் பிரபலம் அதிகரித்திருக்கிறது. மேலும் பெற்றோர், ஹெவி மெட்டல் அல்லது காதைப் பிளக்கும் ராக் இசை வகைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதைக் காட்டிலும், மாற்றுவகை ராக் இசைக்கு குறைவாகவே எதிர்ப்பு தெரிவிக்கும் மனச்சாய்வு கொண்டுள்ளனர். உண்மையில், எப்பேர்ப்பட்ட பிரிவுகள் அல்லது ஆல்பத்தின் தலைப்புகள் மாற்றுவகை என்று அழைக்கப்படுகின்றன என்று ஒருசில பெற்றோரே அறிந்துள்ளனர். இருந்தபோதிலும், இந்த வகை இசையில் ஓரளவு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தேவை உங்களுக்கு இருக்கிறது.
கவர்ச்சியூட்டுவது எது?
ஏன் பல இளைஞர்கள் இந்த இசையிடம் கவரப்படுகின்றனர் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். பலருக்கு, அது வெறுமனே ஒருவருடைய நண்பர்களின் நோக்குநிலையோடு ஒத்துப்போவதைக் குறிக்கிறது. அது சம்பாஷிப்பதற்கு, அல்லது டேப்புகள் மற்றும் CD-க்களைப் பரிமாறிக்கொள்வதைப் போன்ற நடவடிக்கைகளுக்கு பொதுப்படையான ஆர்வத்தை அளிக்கவும் செய்கிறது.
என்றபோதிலும், மிகப் பெரும்பாலான இளைஞருக்கு, மாற்றுவகை இசையின் தொனியும் அது தெரிவிக்கும் செய்தியுமே அவ்வளவு கவர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது. குறிப்பாக, பாடலை இயற்றுபவர்களின் அனுபவங்களும் உணர்வுகளும் தங்களுடைய அனுபவங்களையும் உணர்வுகளையுமே பிரதிபலிப்பதாக இளைஞர் பலர் காண்கின்றனர். டைம் பத்திரிகையின் அட்டைப்படத் தொடர் கட்டுரை, இவ் விஷயத்தை இவ்வாறு விளக்கியது: “பாப் இசைப் பாடல்கள் அடிக்கடி காதல் சம்பந்தப்பட்டதாய் இருக்கும் அதே சமயத்தில், மாற்றுவகை இசைப் பாடல்கள் பொதுவாக மனமுறிவு, மோக இச்சை, குழப்பம் போன்ற மென்மைத் தன்மையற்ற உணர்வுகளோடு சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றன. . . . உங்கள் பருவவயதிலோ 20-களிலோ நீங்கள் இருந்தால், உங்கள் குடும்பம் மணவிலக்குக்கும் உள்ளாகியிருக்கலாம். மாற்றுவகை இசை, கைவிடப்படுவது மற்றும் நேர்மை தவறுவது போன்ற தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு கவனத்தைத் திருப்புவதாய், உணர்ச்சி சம்பந்தப்பட்ட ஒலி வரியாய் ஆகிவிட்டது.” இவ்வாறு, ஓர் 21-வயது கல்லூரி வானொலி இசைநிகழ்ச்சியின் இடையுரையாற்றுநர் பின்வருமாறு கூறுகிறார்: “எங்கள் தலைமுறை உலகைப்பற்றி கவலை கொள்ளாமல் மரத்துப்போயிருப்பதால், எனக்கும் என் நண்பர்களுக்கும் அது கவர்ச்சியூட்டுவதாய் இருந்தது. பள்ளிப்படிப்பை முடிக்கையில் எங்களுக்கென்று நல்ல எதிர்பார்ப்புகள் இருப்பதில்லை.”
சில கிறிஸ்தவ இளைஞர் அதேபோன்று மாற்றுவகை ராக் இசையில் விருப்பம் கொள்பவர்களாய் ஆகியிருக்கின்றனர். பெரும்பாலானோர் முரட்டுத்தனமான, மிகவும் கலகத்தனமான, வன்முறையான, அல்லது ஒழுக்கங்கெட்ட பாடல்களைத் தவிர்த்திருப்பது இயல்பாய் இருக்கிறது. அப்படி தவிர்த்திருக்கிறபோதிலும், இந்த இளம் கிறிஸ்தவர்களில் சிலர், தீங்கு விளைவிக்கும் சாத்தியம் குறைவாய் இருப்பதைப் போன்று தோன்றும் பாடல்களுக்குக் குறிப்பாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இளம் டாண் இவ்வாறு கூறினார்: “பாடகர்களில் சிலர் ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடும் ஆண்களாகவோ பெண்களாகவோ, அல்லது போதைப்பொருள் உபயோகிப்பவர்களாகவோ இருக்கின்றனர்; அவர்களின் இசைப்பாடல்களும் அவர்களுடைய வாழ்க்கைப்பாணியைப் பிரதிபலிக்கின்றன.” ஜாக் என்ற பெயருடைய மற்றொரு இளைஞன் இவ்வாறு கூறுகிறார்: “சில இசைக் குழுவினர், அவர்களைப் பற்றியோ, அவர்களுடைய பிரச்சினைகளைப் பற்றியோ, அல்லது இன்றைய இளைஞரின் எதிர்காலத்தைப்பற்றியோ எவருமே கரிசனையுள்ளவர்களாய் இல்லாததால் இதை அவர்களுடைய பாடல்களில் தெரிவிக்கின்றனர் என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றனர். பலருக்கு தூண்டுதலோ, நம்பிக்கையோ இல்லை.”
ஓர் எச்சரிக்கை
“உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது” என்று பைபிள் கூறுகிறது. அவனே பிசாசான சாத்தான். (1 யோவான் 5:19) அப்படியானால், இளைஞர்களைத் தவறாக வழிநடத்துவதற்கு இசையை ஒரு கருவியாக சாத்தான் பயன்படுத்துகிறான் என்பது உங்களை ஆச்சரியப்படுத்த வேண்டியதில்லை. இப் பத்திரிகையிலும், இதன் கூட்டுப் பத்திரிகையான காவற்கோபுரத்திலும் வந்திருந்த முந்தைய கட்டுரைகள் இவ்வுண்மையை அடிக்கடி விளக்கிக் காட்டியிருக்கின்றன. b ஹெவி மெட்டல் மற்றும் ராப் இசையைப் பொறுத்தமட்டில் கொடுக்கப்பட்டுள்ள அதே எச்சரிக்கைகளே மாற்றுவகை ராக் இசைக்கும் பொருத்தமாயுள்ளன. ஏனெனில், “விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்” என்று பைபிள் கூறுகிறது.—நீதிமொழிகள் 14:15.
ஒரேயொரு உதாரணம், இசையில் உங்களின் தனிப்பட்ட விருப்பத்தைப் பற்றித் தீர்மானிக்கையில், பெரும்பாலானோரின் தீர்மானத்தையே நீங்களும் பின்பற்றுவது அர்த்தமற்றது. உங்களுக்காக மற்றவர்கள் தீர்மானிக்கும்படி செய்வதற்குப் பொருந்தக்கூடிய பின்வரும் பைபிள் நியமத்தைக் கவனியுங்கள்: “எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?” (ரோமர் 6:16) ஒரு கிறிஸ்தவ இளைஞனுக்கு, எது ஒருவரின் ஒத்த வயதினருக்குள்ளே பிரியமானது என்பதல்லாமல், எது “கர்த்தருக்குப் பிரியமானது” என்பதே கேள்வியாய் இருக்கிறது. (எபேசியர் 5:10) மேலும், எப்படிப்பட்ட இளைஞர் மாற்றுவகை ராக் இசையினிடம் கவர்ந்திழுக்கப்படுகின்றனர்? மகிழ்ச்சியுள்ளவர்களாயும், சமநிலையுள்ளவர்களாயும், ஆவிக்குரிய விஷயங்களில் அக்கறையுள்ளவர்களாயும் தோன்றுகிற இளைஞரா? அல்லது இளைஞர்களிடையே திருப்தியற்ற, மகிழ்ச்சியற்ற, அல்லது கோபமாயுமுள்ளவர்களே அதன் முக்கிய ரசிகர்களாகத் தோன்றுகிறதா?
மகிழ்ச்சியான, உடன்பாடான பண்புகளைக் கொண்ட இளைஞரில் சிலரும் மாற்றுவகை ராக் இசையால் கவர்ந்திழுக்கப்படலாம் என்பது மெய்யே. ஆனால் இதைச் சிந்தித்துப் பாருங்கள்: இளைஞரும் முதியவருமான கிறிஸ்தவர்களுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. (2 பேதுரு 3:13) “எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன்” என்று கூறுவதன் மூலம் கடவுளுடைய வாக்குகள் நிறைவேற்றமடைவதன் நிச்சயத்தை அப்போஸ்தலன் பவுல் நமக்கு நினைப்பூட்டுகிறார். (எபிரெயர் 6:18) அப்படியானால், எதிர்காலத்தைப் பற்றி சில மாற்றுவகை ராக் இசைப்பாடல்கள் தெரிவிப்பதைப் போன்ற இருண்ட, எதிர்மறையான நோக்குநிலையைப் பற்றி நீங்கள் கேட்கும்படி உங்களை வைத்துக்கொள்வதில் என்ன நன்மை உள்ளது? பயம், ஏமாற்றம், நம்பிக்கையற்ற நிலை ஆகியவற்றைத் தெரிவிக்கும் இசையில் லயித்திருப்பவர்களாய் ஆவது உங்கள் விசுவாசத்தைப் பலவீனப்படுத்தக் கூடுமா? மேலுமாக, அப்படிப்பட்ட இசையைக் கேட்பதையே ஒரு நிலையான பழக்கமாக்கிக்கொள்வது உங்களுடைய உணர்ச்சிப்பூர்வ நோக்குநிலையின்மீது என்ன பாதிப்பைக் கொண்டிருக்கலாம்?
தெரிந்தெடுப்பவர்களாய் இருங்கள்
“மாற்றுவகை” என்று பெயரிடப்பட்ட எல்லாவகையான இசையும் தீங்கிழைப்பதாகவே, அல்லது தவறானதாகவே இருக்க வேண்டும் என்று கூறுவதற்கில்லை. ஆனால் எவரோ ஒருவர் உங்களுக்கு விஷத்தைக் கொடுக்க முயலுகிறார் என்பது உங்களுக்குத் தெரிந்துவிட்டதாக வைத்துக் கொள்ளுவோம். நீங்கள் உண்ணுவதையே நிறுத்திவிட மாட்டீர்கள் என்றாலும், உங்கள் உணவைக் கவனத்துடன் பரிசோதித்துப் பார்ப்பீர்கள் அல்லவா? உங்கள் நோக்குநிலையையும், மனநிலையையும் கேட்டிற்கு வழிநடத்தும் அளவுக்கு சாத்தான் முயலுகிறான் என்பதை அறிவதும், அதேபோல நீங்கள் தெரிவு செய்யும் இசையைக் குறித்து உங்களைக் கவனமுள்ளவர்களாக்க வேண்டும். பைபிள் கூறுவதைப் போன்று, “வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கும்.” (யோபு 34:3) கண்மூடித்தனமாகப் பெரும்பான்மையோரைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, நீங்கள் விரும்பும் இசையைப் பரிசோதித்துப் பாருங்கள்.
நீங்கள் அதை எவ்வாறு செய்ய முடியும்? “இசையைத் தெரிந்தெடுப்பதற்கு ஒரு வழிகாட்டி” என்று தலைப்பிடப்பட்ட அந்தப் பெட்டியில், நீங்கள் முயன்றுபார்ப்பதற்கு சில உபயோகமான ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், உங்கள் இசையைப் பற்றி உங்கள் கிறிஸ்தவ பெற்றோர் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டுப்பார்க்க முயலுங்கள். (நீதிமொழிகள் 4:1) அவர்கள் அளிக்கும் விடைகளைக் குறித்து நீங்கள் ஆச்சரியமடையக்கூடும்! நிச்சயமாகவே, உங்கள் பெற்றோர் உங்களைவிட வயதில் பெரியவர்கள். ஆகவே இசையில் உங்களுக்கிருக்கும் விருப்பத்தைப் போன்றே அவர்களுக்கு இராமல் இருக்கக்கூடும் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. ஆனால் அது தவறானதாய், தரக்குறைவானதாய், அல்லது வெறுக்கத்தக்கதாய் இருப்பதாகக் காணும் அளவுக்கு அவர்கள் உங்கள் இசையில் விருப்பமின்றி இருந்தால், அவர்கள் சொல்வதை நீங்கள் புறக்கணிக்க முடியுமா? பைபிள் இவ்வாறு கூறுகிறது: “புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்.”—நீதிமொழிகள் 1:5.
அந்த இசை உங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள். அது உங்களைக் கோபமுள்ளவராக, கலகத்தனமுள்ளவராக, அல்லது மனச்சோர்வுள்ளவராக ஆக்குகிறதா? அப்படியானால், இவை நீங்கள் புறக்கணிக்க முடியாத எச்சரிக்கை அறிகுறிகளாக உள்ளன! உங்களின் சோர்வை அகற்றும், உங்களைத் தேற்றும், அல்லது உங்களை மகிழ்விக்கும் இசையை ஏன் கண்டுபிடிக்கக்கூடாது?
இசையின் போக்கு தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. சீக்கிரத்தில், இசையின் வேறொரு பாங்கு, வெகுசமீப காலத்திய பாணியாய் இருக்கும். ஆனால் இப்படிப்பட்ட மாறிவரும் பொதுஜன அபிப்பிராயங்களோடு இசைந்து செல்லாதேயுங்கள். உங்கள் இசையைப் பற்றி தீர்மானிக்கையில், பகுத்துணர்வுள்ளவர்களாயும் தெரிந்தெடுப்பவர்களாயும் இருங்கள். நீங்கள் கேட்கும் இசை ஆரோக்கியமானதாயும், உற்சாகமூட்டுவதாயும் இருக்கிறதா என்று நிச்சயமாய் இருங்கள். (பிலிப்பியர் 4:8) அப்போது இசை, உங்கள் வாழ்க்கையின் ஒரு மதிப்புமிக்க, மற்றும் அனுபவிக்கத்தக்க பாகமாய் இருக்கலாம்!
[அடிக்குறிப்புகள்]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
b பிப்ரவரி 8, பிப்ரவரி 22, மற்றும் மார்ச் 22, 1993 விழித்தெழு! (ஆங்கில) இதழ்களில் “இளைஞர் கேட்கின்றனர் . . .” கட்டுரைகளைக் காண்க. மேலும் ஏப்ரல் 15, 1993 காவற்கோபுரம் (தமிழில், sbr (Skip Study Articles Brochure) பக்கம் 36) இதழில் வந்திருந்த “ஆரோக்கியமற்ற இசைக்கு எதிராகக் காத்துக்கொள்ளுங்கள்!” என்ற கட்டுரையையும் காண்க.
[பக்கம் 22-ன் சிறு குறிப்பு]
“பாப் இசைப் பாடல்கள் அடிக்கடி காதல் சம்பந்தப்பட்டதாய் இருக்கும் அதே சமயத்தில், மாற்று வகை இசைப் பாடல்கள் பொதுவாக மனமுறிவு, மோக இச்சை, குழப்பம் போன்ற மென்மைத் தன்மையற்ற உணர்வுகளோடு சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றன.”—டைம் பத்திரிகை
[பக்கம் 23-ன் பெட்டி]
இசையைத் தெரிந்தெடுப்பதற்கு ஒரு வழிகாட்டி
◆ ஆல்பத்தின் பேக்கேஜை பரிசோதியுங்கள். அந்த இசையைப் பற்றியும் இசைக்கலைஞர்களைப் பற்றியுமே இது பெரும்பாலும் அதிகத்தைக் கூறும். வன்முறை, பேய்த்தன அடையாளங்கள், இயல்புமீறிய வகையிலான உடை மற்றும் சிகை அலங்காரம், அல்லது நிர்வாணம் ஆகியவற்றை முக்கியப்படுத்திக் காட்டும் ஆல்பத்தின் வெளிப்புற அட்டைகளைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்.
◆ பாடல்வரிகள் கூறும் செய்தியை கவனியுங்கள். இவை இசைக்கலைஞர்களின் சிந்தனைகளையும் வாழ்க்கைப்பாணிகளையும் அடையாளப்படுத்திக் காட்டுகின்றன. நீங்கள் எப்படிப்பட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும்படி அவை விரும்புகின்றன?
◆ அந்த இசையின் ஒட்டுமொத்த ஒலி உங்களுக்கு இருக்கவேண்டியதாக இசைக்கலைஞர்கள் விரும்பும் மனோநிலையையும் உணர்வுகளையும்—வருத்தம், குதூகலம், எதிர்ப்பு, பாலின தூண்டுதல், அமைதி, அல்லது மனமுறிவு—குறிப்பிட்டுக் காட்டுகிறது.
◆ அந்த இசைக்குழுவினரிடமாய்க் கவரப்படும் பொது ரசிகர்களை எண்ணிப்பாருங்கள். நீங்கள் அப்படிப்பட்ட தொகுதியிலுள்ள மக்களைப் போலவும் உங்கள் மனநிலை அவர்களுடைய மனநிலைகளைப் போலவும் இருக்க விரும்புவீர்களா?
[பக்கம் 23-ன் படம்]
இன்றைய பாடல்வரிகள் தங்களுடைய உணர்வுகளையே பிரதிபலிப்பதாக
இளைஞர் பலர் உணருகின்றனர்