பைபிளின் கருத்து
மனைவிக்குரிய கீழ்ப்படிதல்—எதை அர்த்தப்படுத்துகிறது?
கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள், எபேசியர் 5:22-ல் இவ்வாறு குறிப்பிடுகிறது: “மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல், உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்.” இது உண்மையிலேயே எதை அர்த்தப்படுத்துகிறது? கணவன் விரும்பும் எல்லாவற்றிற்கும், அது எதுவாயிருந்தாலும், மனைவி கீழ்ப்பட்டிருக்க வேண்டுமா? அவள் ஒருபோதும் சுயமாக முயற்சி எடுக்கவோ கணவனது கருத்துக்களுக்கு மாறுபடும் கருத்துக்களை உடையவளாய் இருக்கவோ முடியாதா?
அபிகாயிலைப் பற்றிய பைபிள் பதிவை கவனியுங்கள். அவள் ஞானமாக நடந்துகொண்டாள், ஆனால் அது அவளது செல்வமிக்க கணவனாகிய நாபாலின் விருப்பத்திற்கு மாறாக இருந்தது. இஸ்ரவேலின் ராஜாவாக கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த தாவீதின் ஊழியர்கள் நாபாலுக்கு தயவு காண்பித்தபோதிலும், நாபால் ‘அவர்கள்பேரில் சீறினான்.’ நாபாலின் நன்றிகெட்ட தன்மையால் கோபமடைந்த தாவீது, அவனைக் கொல்ல தயாரானார். தன் முழு குடும்பமும் ஆபத்திலிருக்கிறதென்பதை அபிகாயில் உணர்ந்தாள். அவள் தாவீதை சாந்தப்படுத்தினாள். எப்படி?—1 சாமுவேல் 25:2-35.
நாபால் “ஒன்றுக்கும் உதவாத மனுஷன்” (NW) என அபிகாயில் தாவீதிடம் சொல்லி, நாபால் தர மறுத்த பொருட்களை அவரிடம் கொடுத்தாள். பொதுவாக, தன் துணையின் தவறுகளை ஒரு கணவனோ மனைவியோ வெளியரங்கப்படுத்துவது தவறு. இந்த முறையில் பேசியதாலும் நடந்துகொண்டதாலும் அபிகாயில் கலகம் செய்தாளா? இல்லை. நாபாலின் உயிரையும் அவனது வீட்டாரின் உயிரையும் பாதுகாக்க அவள் முயன்றாள். அவமரியாதை காண்பிப்பதையோ சுயமாக செயல்படுவதையோ அவள் பழக்கமாக செய்துவந்தாள் என்பதற்கு எந்த அறிகுறியுமில்லை. பிரியப்படுத்துவதற்கு கடினமான நாபாலும்கூட அவள் அவனது பெரிய நிலத்தை நிர்வகித்த விதத்தைக் குறித்து எந்த அதிருப்தியையும் வெளிக்காட்டவில்லை. ஆனால் இந்த நெருக்கடியான சூழ்நிலையில், ஞானம், அவள் சொந்தமாக செயல்படும்படி தூண்டியது. மேலும், அபிகாயில் செய்ததை பைபிள் அங்கீகரிக்கிறது.—1 சாமுவேல் 25:3, 25, 32, 33.
அபிகாயிலின் நாட்களுக்கு வெகு காலத்திற்கு முன்பே, கோத்திரப் பிதாக்களின் மனைவிகள் தங்கள் கருத்துக்களை சொல்லி, தங்களது கணவர்களின் விருப்பத்திற்கு மாறான செயல்களை செய்த சமயங்கள் இருந்தன. ஆயினும், ‘தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகள்’ கிறிஸ்தவ மனைவிக்கு கீழ்ப்படிதலின் முன்மாதிரிகளாக காட்டப்படுகின்றனர். (1 பேதுரு 3:1-6) உதாரணத்திற்கு, ஆபிரகாமின் மகனாகிய இஸ்மவேல் தன் மகனாகிய ஈசாக்குக்கு அச்சுறுத்தலாக இருந்தான் என்பதை சாராள் உணர்ந்தபோது, இஸ்மவேலை அனுப்பிவிட வேண்டும் என்பதாக அவள் தீர்மானித்தாள். இது “ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது.” ஆனால் கடவுள் ஆபிரகாமிடம் இவ்வாறு சொன்னார்: “அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; . . . சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.”—ஆதியாகமம் 21:11, 12.
பகுத்தறிவு தேவை
ஆகையால், மிகவும் ஞானமற்றதாகவோ தெய்வீக நியமங்களுக்கு எதிர்மாறானதாகவோ இருக்கிறதென்பதை ஒரு மனைவி அறிந்திருந்தால், கீழ்ப்படிதல் என்ற பெயரில் அவற்றை செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாக உணர்வது நல்ல காரியமல்ல. அல்லது அபிகாயிலைப் போலவும் சாராளைப் போலவும் ஏதாவதொரு முக்கிய காரியத்தில் முதலாவதாக செயல்பட்டதைக் குறித்து அவள் குற்றமுள்ளவளாக உணரும்படி செய்யப்படவும்கூடாது.
மனைவிக்குரிய கீழ்ப்படிதல் என்பது ஒரு கணவன் விரும்பும் எல்லாவற்றோடும் மனைவி இணங்கிச்செல்ல வேண்டுமென்பதை அர்த்தப்படுத்துவதில்லை. எது வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது? நீதியான நியமங்களை மீற வேண்டியதாயிருந்தால், அவள் தன் கணவனோடு ஒத்துப்போகாமல் இருக்கலாம். எனினும், மொத்தத்தில், அவள் இன்னும் தெய்வீக கீழ்ப்படிதலின் ஆவியை காட்ட வேண்டும்.
சந்தேகமில்லாமல், பிடிவாதம், விரோதம் அல்லது மற்ற தவறான உள்நோக்கங்களின் காரணமாக மனைவி தனது கணவனின் விருப்பங்களைப் புறக்கணிக்காதபடி கவனமாயிருக்க வேண்டும். அபிகாயிலைப் போன்று அவள் பகுத்தறிபவளாய், ‘மகா புத்திசாலியாய்’ இருக்க வேண்டும்.—1 சாமுவேல் 25:3.
கணவன் பொறுப்பைப் புறக்கணிக்கும்போது
மனைவிக்குரிய தெய்வீக கீழ்ப்படிதலின் முக்கிய இலக்கும் நோக்கமும், கணவனோடு ஒத்துழைத்து அவரது தீர்மானங்களை ஆதரிப்பதன் மூலம் யெகோவாவை பிரியப்படுத்துவதாகும். கணவன் ஆவிக்குரிய விதத்தில் முதிர்ச்சியுள்ளவராய் இருந்தால், இது மிகவும் சுலபமானது. அவர் அவ்வாறு இல்லையென்றால், இது ஒரு சவாலாக இருக்கலாம்.
இந்தச் சூழ்நிலையை அவள் எவ்வாறு சமாளிக்கலாம்? மனப்பூர்வமாக அவள் ஒருவேளை கணவனிடம் வேண்டிக்கொள்ளலாம் அல்லது குடும்பத்துக்கு மிகவும் பலனளிக்கும் தீர்மானங்களைப் பற்றி சொல்லலாம். ‘கப்பலை ஓட்டும்படி’ அவள் அவனை அனுமதிக்கும்போது, அவன் ஒருவேளை அதில் இன்னும் திறமையை வளர்த்துக்கொள்ளலாம். கணவனை ஓயாது நச்சரிப்பது, கீழ்ப்படிதலின் சரியான உள்நோக்கத்தை மீறுகிறது. (நீதிமொழிகள் 21:19) ஆயினும், அவரது கொள்கை குடும்ப நலனுக்கு தெளிவாகவே ஆபத்து விளைவிப்பதாய் இருந்தால், சாராள் செய்த விதமாகவே சரியான போக்கை சிபாரிசு செய்யும்படி அவள் ஒருவேளை முடிவெடுக்கலாம்.
கணவன் அவிசுவாசியாக இருந்தால், மனைவிக்கு அது இன்னும் பெரிய சவாலாக இருக்கலாம். அப்போதும்கூட, பைபிள் சட்டங்களை மீறச்சொல்லாதவரை அவள் அவனுக்கு கீழ்ப்பட்டிருக்க வேண்டும். அவன் பைபிள் சட்டங்களை மீறச்சொன்னால், கடவுளுடைய கட்டளைகளை மீறும்படி ஒரு நீதிமன்றம் இயேசுவின் சீஷர்களை கேட்டபோது அவர்கள் பிரதிபலித்த வண்ணமாகவே அவளது பிரதிபலிப்பும் இருக்க வேண்டும்: “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.”—அப்போஸ்தலர் 5:29.
எனினும், அனுபவமில்லாத காரணத்தாலும் குறைந்த ஞானத்தாலும் நல்லெண்ணமுள்ள கணவன்மாரும் மனைவிமாரும்கூட அவர்களது பாகங்களை சரியாக செய்யாதிருக்கலாம். கணவன் தயை காண்பிக்காமல் இருக்கலாம்; மனைவி தன் விருப்பங்களையே தொடர்ந்து வற்புறுத்தலாம். எது உதவும்? இருவரும் நேர்மையோடு தங்களையே நோக்குவது முக்கியமானது, ஏனெனில் “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்.”—யாக்கோபு 3:2.
மனைவி விவேகத்தோடு செயல்பட்டால், அவள் எடுக்கும் நேர்மையான முயற்சியை அநேக ஆண்கள் போற்றுவர். தவறுகள் செய்யும்போது இருவருமே மன்னிப்புக் கேட்டால் ஒத்துழைப்பு மேம்படும். தினந்தோறும் நாம் செய்யும் தப்பிதங்களை யெகோவா மன்னிப்பதுபோல் நாம் மற்றவர்களை மன்னிக்க வேண்டும். “கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே. . . . உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.”—சங்கீதம் 130:3, 4.
‘ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருத்தல்’
ஆகவே, நமது பரஸ்பர நலனைக் கருதி, வேதவாக்கியம் நமக்கு இவ்வாறு புத்திமதி அளிக்கிறது: “தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.” ஒருவருக்கொருவர் அன்போடு பரஸ்பர மரியாதை செலுத்துங்கள்; தடை செய்யாமலும் போட்டிபோடாமலும் இருங்கள். வசனம் இவ்வாறு தொடர்கிறது: “மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல், உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்.”—எபேசியர் 5:21-23.
எபேசியர் 5:21, 22-ல் பவுல் பயன்படுத்திய கிரேக்க வார்த்தை, தன்னையே கீழ்ப்படுத்துவதை குறிக்கிறது, மற்றவரால் வற்புறுத்திக் கீழ்ப்படுத்தப்படுவதை குறிப்பதில்லை. மேலும் கீழ்ப்படிதல் கர்த்தரின் நிமித்தம் காட்டப்படுகிறது, திருமண ஒற்றுமைக்காக மட்டுமல்ல. கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட சபை, அவருக்கு மனப்பூர்வமாயும் சந்தோஷமாயும் கீழ்ப்பட்டிருக்கிறது. ஒரு மனைவி தன் கணவனுக்கு அதையே செய்யும்போது, திருமணம் பெரும்பாலும் சந்தோஷமாயும் வெற்றிகரமாயும் இருக்கும்.
வேதவசனங்கள் இவ்வாறும் சொல்கின்றன: “உங்களிலும் அவனவன் [கணவன்] தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் [அளவற்று] அன்புகூரக்கடவன்.” (எபேசியர் 5:33; 1 பேதுரு 3:7) கணவனும் தனக்குத் தலையாயிருப்பவருக்கு கீழ்ப்பட்டிருக்க வேண்டும் என்பதை நினைவில் வைக்க வேண்டும், ஏனெனில் பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறார்.’ ஆம், கிறிஸ்துவின் போதனைகளுக்கு ஆண் கீழ்ப்பட்டிருக்க வேண்டும். கிறிஸ்து, அவரது பங்கில், அவருக்கு தலையாயிருப்பவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார்: ‘கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறார்.’ இவ்வாறு, யெகோவாவைத் தவிர மற்ற அனைவருக்கும் தலைமை வகிப்போர் இருக்கிறார்கள். யெகோவாவும்கூட தமது சொந்த கட்டளைகளுக்கு தாமே கட்டுப்பட்டிருக்கிறார்.—1 கொரிந்தியர் 11:3; தீத்து 1:3; எபிரெயர் 6:18.
கிறிஸ்தவ கீழ்ப்படிதல் இரு பாலாருக்குமே சமநிலையுள்ளதாயும் பலனளிப்பதாயும் இருக்கிறது. நமது அன்பான சிருஷ்டிகரால் மாத்திரமே அளிக்கப்படும் ஒத்திசைவையும் மனதிருப்தியையும் திருமணத்தில் அது கொண்டுவருகிறது.—பிலிப்பியர் 4:7.