பரிணாமத்திற்கு ஆதாரம் உண்டா?
டார்வினது பரிணாமக் கொள்கையின் சாராம்சம் என்ன? “உயிரியல் சம்பந்தமான முழுமையான கருத்தில், . . . பரிணாமம் என்பது உயிரற்ற பொருட்களிலிருந்து திடீரென உயிர் தோன்றி, அதன்பின் இயற்கையாகவே முழு வடிவம் பெறுவதைக் குறிக்கிறது” என்பதே. “கிட்டத்தட்ட அனைத்து உயிர்களுமே, அல்லது அவற்றின் பெரும்பான்மையான அக்கறைக்குரிய அம்சங்களாவது, அங்கொன்றும் இங்கொன்றுமென இயற்கையினால் தெரிவுசெய்யப்பட்டு மாற்றத்திற்குள்ளானதால் உண்டானவை” என டார்வினது கோட்பாடு சொல்கிறது.—டார்வினது விளங்கா கோட்பாடு—பரிணாமத்திற்கெதிராக உயிர்வேதியியல் விடுக்கும் சவால் a (ஆங்கிலம்); இப்புத்தகம், அ.ஐ.மா.-விலுள்ள பென்ஸில்வேனியாவைச் சேர்ந்த லீஹை பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியல் துணைப் பேராசிரியராய் பணியாற்றும் மைக்கேல் பீஹி என்பவரால் எழுதப்பட்டது.
வகுக்கப்படமுடியாத கடுஞ்சிக்கல்—பரிணாமத்திற்கு முட்டுக்கட்டையா?
டார்வினது கொள்கை உருவான அந்தச் சமயத்தில் உயிரணுவின் வியக்கத்தக்க சிக்கலைப் பற்றி அறிவியலாளர்கள் சிறிதும் அறிந்திருக்கவில்லை. மூலக்கூறு உயிரியலான நவீன உயிர்வேதியியல், அப்படிப்பட்ட நுணுக்கத்தைக் குறித்து சிறிது விளக்கமளித்திருக்கிறது. அது டார்வினின் கொள்கைக்கு எதிர்ப்புகளையும் சந்தேகங்களையும்கூட கிளப்பிவிட்டிருக்கிறது.
உயிரணுக்களின் வெவ்வேறு பாகங்கள் மூலக்கூறுகளால் உண்டாக்கப்பட்டிருக்கின்றன. எல்லா ஜீவராசிகளும் உயிரணுக்களால் உண்டாயிருக்கின்றன. பேராசிரியரான பீஹி ஒரு ரோமன் கத்தோலிக்கர்; மிருகங்களின் பிற்பட்ட வளர்ச்சியை விளக்குவதற்கு பரிணாமத்தைப் பயன்படுத்துபவர். ஆனாலும், உயிரணு தோன்றியிருப்பதன் பேரில் பரிணாமம் விளக்கமளிக்கிறதா என்பதைக் குறித்ததில் அவர் பெரும் சந்தேகங்களை எழுப்புகிறார். “உயிரணுக்களில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மற்ற மூலக்கூறுகளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ‘நெடுஞ்சாலைகள்’ வழியே சரக்கை இடமாற்றம் செய்யும்” மூலக்கூறு இயந்திரங்களைப் பற்றி அவர் சொல்கிறார். மேலும் அவர் சொல்வதாவது: “உயிரணுக்கள் இந்த இயந்திரங்களைக்கொண்டு நீந்துகின்றன, இதே இயந்திரங்களைக்கொண்டு விருத்தி செய்துகொள்கின்றன, இதே இயந்திரங்களைக்கொண்டு உணவருந்துகின்றன. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், மிக நுட்பமான மூலக்கூறு இயந்திரங்கள் உயிரணுக்களின் ஒவ்வொரு செயலையும் கட்டுப்படுத்துகின்றன. இவ்வாறு உயிர்ப்பின் நுணுக்கங்கள் நேர்த்தியாக செயல்படுமாறு செய்யப்படுகின்றன; உயிர் என்ற இயந்திரமும் கடுஞ்சிக்கல் வாய்ந்ததாகிறது.”
ஆனால் இந்த எல்லா செயல்களும் எந்த அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன? ஒரு உயிரணு வெறுமனே 3/100 மில்லிமீட்டர் அகலமுள்ளதுதான்! அந்த மிக நுண்ணிய இடத்தில் உயிருக்கு அத்தியாவசியமான சிக்கலான செயல்முறைகள் நடைபெறுகின்றன. (பக்கங்கள் 8-9-ல் உள்ள படத்தைக் காண்க.) “உயிருக்கு அடிப்படையான உயிரணு, நினைத்துப்பார்க்க முடியாதளவு சிக்கல்வாய்ந்தது என்பதே முக்கிய குறிப்பு” என சொல்லப்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லையே.
ஓர் உயிரணு, ஒரே முழுத்தொகுதியாகத்தான் செயல்பட முடியுமென பீஹி வாதாடுகிறார். ஆகவே, மெதுவான படிப்படியான மாற்றங்களால் உருமலர்ச்சி அடையும்போது அதனால் செயல்பட முடியாது. அவர் எலிப்பொறியின் உதாரணத்தை இதற்குப் பயன்படுத்துகிறார். எல்லா பாகங்களும் இணைக்கப்பட்டிருந்தால்தான் இந்த எளிய கருவியால் செயல்பட முடியும். அதன் ஒவ்வொரு பாகமும்—பலகை, ஸ்ப்ரிங், பிடி கம்பி, அடிக்கும் கம்பி, கவ்வும் பகுதி—தனித்து இயங்கும் எலிப்பொறியல்ல, அவை அதைப் போன்று செயல்படவும் முடியாது. எல்லா பாகங்களும் ஒரே நேரத்தில் இயங்க வேண்டும், மேலும் ஒரு பொறியாக செயல்பட அவை இணைக்கப்படவும் வேண்டும். அதேவிதமாய், எல்லா பாகங்களும் இணைக்கப்பட்டிருந்தால்தான் ஓர் உயிரணுவால் செயல்பட முடியும். இந்த உதாரணத்தைக் கொண்டு “கடுஞ்சிக்கல்” என அவர் பயன்படுத்தும் பதத்தை விளக்குகிறார். b
பயனுள்ள பண்புகள் படிப்படியாக தோன்றியது என்று உரிமைபாராட்டும் பரிணாமக் கொள்கைக்கு இது பெரும் பிரச்சினையை அளிக்கிறது. இயற்கைத் தெரிவினால் உண்டாகும் பரிணாம வளர்ச்சியைக் குறித்த தன் கொள்கை ஒரு பெரிய சவாலை எதிர்ப்பட்டதென்பதை டார்வின் அறிந்திருந்ததால் இவ்வாறு சொன்னார்: “அநேக, அடுத்தடுத்த, சிறு மாறுபாடுகளுக்கு உள்ளாவதால் உருவாக முடியாத ஏதாவதொரு சிக்கலான உறுப்பு இருப்பதாக காட்டப்பட்டால், அதுவே என் கொள்கைக்கு மரண அடியாயிருக்கும்.”—இனங்களின் தோற்றம், (ஆங்கிலம்).
டார்வினது கொள்கையில் நம்பிக்கை வைப்பதற்கு, கடுஞ்சிக்கல்வாய்ந்த உயிரணு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. முதலாவதாக, உயிரற்ற பொருட்களிலிருந்து திடீரென உயிர் தோன்றுவதை பரிணாமத்தால் விளக்க முடியவில்லை. அதன்பின், சிக்கலான முதல் உயிரணுவைக் குறித்த பிரச்சினை எழும்புகிறது; இந்த முதல் உயிரணு, ஒருங்கிணைந்த ஒரே தொகுதியாக திடீரென உருவாகியிருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் சொன்னால், உயிரணு (அல்லது, எலிப்பொறி), பாகங்கள் அனைத்தும் இணைக்கப்பட்ட நிலையிலும் செயல்படத்தக்க நிலையிலும் திடுதிப்பென மாயம்போல் தோன்ற வேண்டும்!
கடுஞ்சிக்கல்வாய்ந்த இரத்த உறைவு
கடுஞ்சிக்கலுக்கு மற்றுமொரு உதாரணம், காயம் ஏற்படுகையில் நாம் சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்ளும் காரியமான இரத்த உறைவாகும். பொதுவாக, துளையிடப்பட்ட எந்தப் பாத்திரத்திலிருந்தும் திரவம் உடனடியாக ஒழுகும், பாத்திரம் காலியாகும்வரை அது ஒழுகிக்கொண்டே இருக்கும். ஆனாலும், நம் சருமத்தை நாம் துளையிடுகையில் அல்லது வெட்டுகையில் ஏற்படும் இரத்த ஒழுக்கு விரைவில் உறைந்து, கட்டியாகி கசிவை நிறுத்துகிறது. ஆனாலும், டாக்டர்கள் அறிந்திருக்கும் வண்ணம், “இரத்த உறைவு என்பது, ஒன்றுக்கொன்று சார்புள்ள எண்ணற்ற புரதப் பொருட்களால் நுட்பமாக பின்னிப் பிணைக்கப்பட்ட மிகச் சிக்கலான அமைப்பாகும்.” இவை தொடர்ச்சியான மாறுபாடுகளால் உறைவை ஏற்படுத்துகின்றன. இந்த நுணுக்கமான புண் ஆற்றும் செயல், “வெவ்வேறு மாறுபாடுகள் நடைபெறும் சமயத்தின்பேரிலும் வேகத்தின்பேரிலும் மிக அதிகமாக சார்ந்திருக்கிறது.” இல்லையென்றால், ஒன்று, ஒருவரது எல்லா இரத்தமும் உறைந்து கட்டியாகிவிடும், இல்லையேல் இரத்தம் முழுவதும் வெளியேறி உயிரைப் பறிக்கும். நேரமும் வேகமும் முக்கிய காரணக்கூறுகள்.
உயிர்வேதியியல் ஆராய்ச்சி, இரத்த உறைவிற்கு அநேக காரணக்கூறுகள் இருப்பதாகவும் இவற்றில் எவையேனும் ஒன்று இல்லையென்றால் அந்தச் செயல் நடைபெறாதெனவும் காண்பித்திருக்கிறது. பீஹி இவ்வாறு கேட்கிறார்: “இரத்தம் உறைய ஆரம்பித்த பிறகு, எல்லா இரத்தமும் . . . உறைந்துபோவதைத் தடுப்பது எது?” இரத்தக் கட்டியின் “உருவாக்கம், கட்டுப்பாடு, வலுவாக்குதல், அகற்றுதல்” ஆகிய அனைத்தும், ஒன்றுசேர்ந்த ஒரே உயிரியல் அமைப்பாய் செயல்படுகின்றன என அவர் விளக்குகிறார். அவற்றில் ஏதாவதொன்று செயல்படவில்லையென்றாலும் முழு அமைப்பே செயலிழந்துபோகிறது.
பரிணாமவாதியும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் பேராசிரியருமான ரஸ்ஸல் டூலிட்டில் இவ்வாறு கேட்கிறார்: “இந்தச் சிக்கலான, அதிக சமநிலையான செயல்முறை எப்படித்தான் தோன்றியது? . . . முரண்பாடு என்னவெனில், ஒவ்வொரு புரதமும் செயல்படுவதற்கு மற்றொன்றின்மீது சார்ந்திருப்பதால், இந்த செயல்முறை எப்படித்தான் உருவாகியிருக்கும்? இந்த ஒழுங்கமைப்பின் எந்தப் பாகமும், அந்த முழு தொகுதியின்றி தனியே எந்த விதத்தில் பிரயோஜனமாய் இருக்கும்?” பரிணாம வாக்குவாதங்களைப் பயன்படுத்தி, இந்தச் செயல்முறை தோன்றிய விதத்தை டூலிட்டில் விளக்க முயற்சிக்கிறார். எனினும், “பேரதிர்ஷ்டத்தால்தான் சரியான மரபணுக்கள் சரியான இடத்தைப் பெற முடியும்” என பேராசிரியர் பீஹி குறிப்பிடுகிறார். டூலிட்டிலின் விளக்கத்திற்கும் எளிய சொல்லமைப்பிற்கும் பின்னால் ஏராளமான பிரச்சினைகள் மறைந்திருக்கின்றன என்பதை அவர் காண்பிக்கிறார்.
இவ்வாறு, பரிணாமத்திற்கு எதிரான மாபெரும் தடங்கல்களில் ஒன்று, மேற்கொள்ள முடியாத தடையான கடுஞ்சிக்கல் ஆகும். பீஹி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “டார்வினது பரிணாமக் கொள்கைக்கே அடிப்படையாக அமைந்திருக்கும் இயற்கைத் தெரிவு, தெரிவு செய்வதற்கு ஏதாவது இருக்குமானால்தான்—எதிர்காலத்தில் அல்ல ஆனால் இப்போதே பயனுள்ளதாய் இருக்கும் ஏதோவொன்று இருக்குமானால்தான்—செயல்படும் என்பதை நான் வலியுறுத்துகிறேன்.”
‘விசித்திரமாக முழு மௌனம் சாதிக்கிறது’
“பரிணாமத்திற்கான புள்ளியியல் மாதிரிகளை அல்லது வரிசையமைப்பின் பேரில் சேகரிக்கப்பட்டிருக்கும் தகவலை ஒப்பிட்டு விளக்குவதற்கான புதிய புள்ளியியல் வழிமுறைகளை” சில அறிவியலாளர்கள் ஆராய்ந்திருப்பதாக பேராசிரியர் பீஹி குறிப்பிடுகிறார். எனினும் அவர் இவ்வாறு முடிக்கிறார்: ‘நிஜ பரிணாமம் படிப்படியாகவும் தற்செயலாகவும் நடைபெறும் செயலாக புள்ளியியல் ஊகிக்கிறது; அது இதை மெய்ப்பித்துக் காண்பிக்கிறதில்லை (காண்பிக்கவும் முடியாது).’ அவர் இதற்கு முன்பு சொன்னதாவது: “பரிணாமத்தின்பேரிலான அறிவியல் புத்தகங்களை நீங்கள் ஆராய்ந்தால், உயிருக்கு அடிப்படையான மூலக்கூறு எவ்வாறு உருவானதென்ற கேள்விக்கு முழு கவனம் செலுத்தினால், அப்பிரசுரங்கள் விசித்திரமாக முழு மௌனம் சாதிப்பதை நீங்கள் காண்பீர்கள். உயிரின் அடிப்படையானது சிக்கலாக இருப்பதுதானே, அது உருவாகக் காரணமாயிருந்ததாக அறிவியல் பெருமைப்பட்டுக்கொள்வதற்கு தடை விதிக்கிறது; டார்வினது கொள்கை உலகளாவிய விதத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இந்நாள் வரைக்கும் பெரும் தடையாக இருந்திருப்பது மூலக்கூறு இயந்திரங்களாகும்.”
இது, உன்னிப்பான அறிவியலாளர்கள் சிந்திக்கத்தக்க தொடர்ச்சியான சில கேள்விகளை எழுப்புகிறது: “ஒளிச்சேர்க்கை எவ்வாறு உருவானது? மூலக்கூறின் உட்புற மாற்றமைப்பு எவ்வாறு ஆரம்பமானது? கொழுப்பு சத்து உயிரியச் சேர்க்கை எப்படி துவங்கியது? ரெட்டினல் வைட்டமின் எவ்வாறு பார்வைக்கு காரணமானது? பாஸ்ஃபோபுரோட்டீன் சிக்னேலிங் பாத்வேக்கள் எவ்வாறு தோன்றின?” c பீஹி மேலும் இவ்வாறு கூறுகிறார்: “இந்தப் பிரச்சினைகள் எவையும் தீர்க்கப்படாதது மட்டுமல்ல, கவனம்கூட செலுத்தப்படாத உண்மைதானே, சிக்கலான உயிர்வேதியியல் அமைப்புகளின் தோற்றத்தைப் புரிந்துகொள்வதைப் பொருத்தவரையில் டார்வினது கோட்பாடுகள் குறைபாடுள்ளவையாக இருக்கின்றன என்பதற்கு பலமான ஆதாரமாக இருக்கிறது.”
உயிரணுக்களின் சிக்கலான அடிப்படை மூலக்கூறுகளைக் குறித்து டார்வினது கோட்பாட்டால் விளக்க முடியாதபோது, இப்பூமியில் வாழும் லட்சக்கணக்கான உயிரினங்களைக் குறித்து அதனால் எவ்வாறு திருப்தியான பதிலளிக்க முடியும்? என்னயிருந்தாலும் ஒரு உயிரின குடும்பத்திற்கும் மற்றொரு உயிரின குடும்பத்திற்கும் உள்ள இடைவெளியை மூடி புதிய உயிரின குடும்பங்களைக்கூட பரிணாமத்தால் உண்டாக்க முடியாதே.—ஆதியாகமம் 1:11, 21, 24.
உயிரின் தோற்றத்தைக் குறித்த பிரச்சினைகள்
சில அறிவியலாளர்களுக்கு டார்வினது கோட்பாடு எவ்வளவு நியாயமாகத் தோன்றினாலும், முடிவில் அவர்கள் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்: இயற்கைத் தெரிவினால் பல்வேறு உயிரினங்கள் உருவாகின என நாம் ஊகித்துக்கொண்டாலும், உயிர் முதன்முதலில் எப்படித் தோன்றியது? வேறு வார்த்தைகளில் சொன்னால், பிரச்சினை, தக்கவை வாழ்தலில் (survival of the fittest) சார்ந்தில்லை, ஆனால் தக்கதும் முதலாவதுமான உயிர் தோன்றுவதிலேயே சார்ந்திருக்கிறது! எனினும், கண் தோன்றியதைக் குறித்ததில் டார்வின் சொன்ன குறிப்பு, அவர் உயிர் எவ்வாறு தோன்றியதென்பதைக் குறித்து அக்கறையுள்ளவராக இல்லை என்பதைக் காண்பிக்கிறது. அவர் இவ்வாறு எழுதினார்: “உயிர் எப்படித் தோன்றியது என்பது நமக்கு தேவையில்லாத விஷயமாய் இருப்பதுபோல்தான் ஒரு கண்நரம்பு எவ்வாறு ஒளிக்கு உணர்வுள்ளதாகிறது என்பதும் இருக்கிறது.”
பிரான்சு நாட்டைச் சேர்ந்த அறிவியல் எழுத்தாளரான ஃபிலிப் ஷான்பான் இவ்வாறு எழுதினார்: “உருவாகிக்கொண்டிருந்த, முழுமையாக செயல்படாத உயிர்வகைகளை எவ்வாறு இயற்கை தேர்ந்தெடுத்தது என்பது டார்வினுக்கே புரியவில்லை. பரிணாமம் அளிக்கும் புதிர்களுக்கு முடிவேயில்லை. எனவே, ‘புனையப்பட்ட பரிணாமக் கோட்பாட்டினால் சிக்கலான உறுப்புகளின் தோற்றத்தைக் குறித்து உடனடியாக விளக்க முடியாது’ என்று சொன்ன ஆர்ஸேயிலுள்ள தென் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஷான் ஷேனர்மோனுடைய கூற்றை இன்றைய உயிரியல் வல்லுநர்கள் தாழ்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும்.’ ”
இப்படிப்பட்ட எண்ணற்ற வகையைச் சேர்ந்த சிக்கலான உயிரினங்கள் பரிணாமத்தால் உண்டாயிருக்க முடியாது என்பதை மனதில்கொள்கையில், அனைத்து உயிரினங்களுமே தற்செயலாக சரியான விதத்தில் தோன்றிவிட்டன என நம்புவது உங்களுக்குக் கடினமாயிருக்கிறதா? தக்கவை வாழ்தலின் போராட்டத்தில், கண்களே முழுவதும் வளராதபோது அல்லது இன்னும் முதிர்ச்சியடையாத மனித உடலில் வளர்ச்சிகுன்றிய விரல்கள் உருவாகிக்கொண்டிருப்பதாய் எண்ணப்படும்போது எவ்வாறு ஜீவராசிகளால் தப்பிப்பிழைக்க முடிந்தது என நீங்கள் யோசிக்கிறீர்களா? முழுமையற்ற, குறைபாடுள்ள நிலையில் எவ்வாறு உயிரணுக்கள் தப்பிப்பிழைத்தன என நீங்கள் யோசிக்கிறீர்களா?
“பத்து லட்சம் டாலர் மதிப்புள்ள லாட்டரிப்பரிசு தொடர்ச்சியாக பத்து லட்சம் முறை நமக்கு கிடைத்ததுபோல், நம்மை உயிர்வாழவைப்பதற்கு ஏற்ற விதத்தில் வரிசையாக பல தற்செயலான சம்பவங்கள் நிகழ்ந்ததுதான்” பூமியிலுள்ள உயிரினங்கள் உருவாகக் காரணம் என பரிணாமவாதியும் வானியல் ஆங்கில பத்திரிகையின் எழுத்தாளருமான ராபர்ட் நேயை எழுதினார். இப்படிப்பட்ட நியாயங்காட்டுதல் இன்று உயிர்வாழும் ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒருவேளை பொருத்தப்படலாம். அதற்கு எதிரிடையான சாத்தியங்கள் குவிந்திருக்கின்றன. ஆனாலும், புதிய இனம் பெருகுவதற்காக ஆணும் பெண்ணும் தற்செயலாக ஒரேசமயத்தில் பரிணாமத்தால் உண்டாயின எனவும் நாம் நம்பவேண்டுமாம். அதுமட்டுமா, ஆணும் பெண்ணும் ஒரே சமயத்தில் மாத்திரமல்ல ஒரே இடத்திலும் உருவாயின என்பதையும் நாம் நம்ப வேண்டும்! இச்சந்திப்பு இல்லையேல், இனப்பெருக்கம் இல்லை!
நிச்சயமாகவே, லட்சக்கணக்கான குருட்டாம்போக்கு யோகங்களால் லட்சக்கணக்கான குறைபாடற்ற உயிரினங்கள் இப்போது இருக்கின்றன என்பதை நம்பும் நபர், சான்றில்லாமல் எதையும் சுலபத்தில் நம்பிவிடக்கூடியவராய் இருக்கிறார்.
ஏன் பெரும்பாலோர் நம்புகின்றனர்?
ஏன் பரிணாமம் அவ்வளவு பேர்பெற்றதாக, பூமியிலுள்ள உயிரினங்களின் தோற்றத்தை விளக்கும் ஒரே வழியாக அத்தனை அநேகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது? ஒரு காரணம் என்னவென்றால், அது பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் காலகாலமாக கற்பிக்கப்பட்டுவருகிறது; அதைக் குறித்து ஏதாவது கேள்வி எழுப்ப நினைத்தால் உங்கள் நிலைமை மோசமாகிவிடும். பீஹி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இவ்வுலகத்தை பரிணாமக் கண்களோடு எவ்வாறு பார்ப்பதென்பதை அநேக மாணாக்கர்கள் தங்களது பாடப் புத்தகங்களிலிருந்து கற்றுக்கொள்கின்றனர். ஆனாலும், அந்தப் புத்தகங்கள் விளக்கும் சிக்கலான உயிர்வேதியியல் அமைப்புகள் எவையேனும் எவ்வாறு டார்வின் சொல்லும் பரிணாமத்தால் உருவாகியிருக்க முடியும் என்பதை அவர்கள் கற்றுக்கொள்வதில்லை.” அவர் கூடுதலாக சொல்வதாவது: “மரபுவழி வந்ததென்பதில் டார்வினது கோட்பாடு பெற்றிருக்கும் வெற்றியையும், மூலக்கூறுகளின் அறிவியல் சம்பந்தமாக அது பெற்றிருக்கும் தோல்வியையும் நாம் புரிந்துகொள்ள வேண்டுமானால், வளர்ந்துவரும் அறிவியலாளர்களுக்கு கற்பிக்க பயன்படுத்தப்படும் பாடப் புத்தகங்களை நாம் ஆராய வேண்டும்.”
“உலகிலுள்ள எல்லா அறிவியலாளர்களையும் பேட்டிகண்டால், அவர்களில் பெரும்பான்மையோர் டார்வினது கோட்பாடு உண்மையெனச் சொல்வார்கள். ஆனால் எல்லாரையும்போலவே அறிவியலாளர்களும் மற்ற நபர்களது வார்த்தையை அடிப்படையாகக் கொண்டே தங்களது அபிப்பிராயங்களைத் தெரிவிக்கின்றனர். . . . மேலும், படைப்புக் கொள்கையாளர்களுக்கு சாதகமாகிவிடாதபடிக்கு, குற்றச்சாட்டுகள் அறிவியல் சமுதாயத்தால் அடிக்கடி புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன என்பது சோகமளிக்கிறது. அறிவியலைப் பாதுகாத்தல் என்ற சாக்கில் இயற்கைத் தெரிவின் நேரடியான அறிவியல் சார்ந்த குற்றச்சாட்டுகள் புறக்கணிக்கப்படுகின்றன என்பது நகைப்பிற்குரியது.” d
டார்வினது பரிணாமக் கோட்பாட்டிற்கு என்ன தகுதிவாய்ந்த, நம்பத்தகுந்த மாற்றீடு இருக்கிறது? இந்தத் தொடரின் கடைசிக் கட்டுரை அந்தக் கேள்விக்கு பதிலளிக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a இதுமுதற்கொண்டு இப்புத்தகம் டார்வினது விளங்கா கோட்பாடு என இக்கட்டுரையில் குறிப்பிடப்படும்.
b “கடுஞ்சிக்கல்” என்பது இவ்வாறு விளக்கப்படலாம்: “அடிப்படை செயலை விளைவிக்கும், ஒன்றுக்கொன்று நன்கு பொருந்தக்கூடியதும் தொடர்புடையதுமான அநேக பாகங்களைக் கொண்ட ஒரே அமைப்பைக் குறிக்கிறது; ஏதாவது ஒரு பாகத்தை எடுத்துவிட்டால் அந்த முழு அமைப்பே செயல்படாமல் போகிறது.” (டார்வினது விளங்கா கோட்பாடு) இவ்வாறு, இது ஒரு அமைப்பு செயல்படுவதற்கு தேவைப்படும் மிக அடிப்படையான நிலையாகும்.
c ஒளிச்சேர்க்கை என்பது, தாவர உயிரணுக்கள் ஒளியையும் பச்சையத்தையும் பயன்படுத்தி, கரியமில வாயுவாலும் தண்ணீராலும் கார்போஹைட்ரேடுகளை தயாரிக்கும் செயல்முறையாகும். இயற்கையில் நடைபெறுவதிலேயே மிக முக்கிய வேதியியல் வினைமாற்றம் என சிலர் இதை அழைக்கின்றனர். உயிரியச் சேர்க்கை என்பது உயிரணுக்கள் சிக்கலான வேதிப் பொருட்களை தயாரிக்கும் செயல்முறையாகும். ரெட்டினல் வைட்டமின் சிக்கலான கண்பார்வை ஆற்றலில் பங்குவகிக்கிறது. பாஸ்ஃபோபுரோட்டீன் சிக்னேலிங் பாத்வேக்கள் உயிரணுவின் முக்கிய செயல்களாகும்.
d படைப்புக் கோட்பாடு என்பது பூமி சொல்லர்த்தமாகவே ஆறு நாட்களில் படைக்கப்பட்டது என்றோ, பூமி வெறுமனே சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு படைக்கப்பட்டதென்றோ நம்புவதை உட்படுத்துகிறது. யெகோவாவின் சாட்சிகள் படைப்பில் நம்பிக்கையுள்ளவர்களாய் இருந்தாலும் அவர்கள் படைப்புக் கோட்பாட்டாளர்கள் அல்ல. பைபிளிலுள்ள ஆதியாகமப் பதிவின்படி பூமி கோடிக்கணக்கான வருடங்கள் பழமையானதாய் இருக்கக்கூடும் என அவர்கள் நம்புகிறார்கள்.
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
“அநேக, அடுத்தடுத்த, சிறு மாறுபாடுகளுக்கு உள்ளாவதால் உருவாக முடியாத ஏதாவதொரு சிக்கலான உறுப்பு இருப்பதாக காட்டப்பட்டால், அதுவே என் கொள்கைக்கு மரண அடியாயிருக்கும்.”
[பக்கம் 10-ன் சிறு குறிப்புகள்]
உயிரணுவின் உள்ளே “மிக உயர்ந்த நுட்பத்தையும் திகைக்கவைக்கும் சிக்கலையும்” காணலாம்.—பரிணாமம்: நெருக்கடியிலுள்ள ஒரு கோட்பாடு
உயிரணுவிலுள்ள டிஎன்ஏ-வில் இருக்கும் கட்டளைகளை “எழுதினால், ஆயிரம் 600-பக்க புத்தகங்கள் பிடிக்கும்.”—நேஷனல் ஜியோகிரஃபிக்
[பக்கம் 11-ன் சிறு குறிப்பு]
‘நிஜ பரிணாமம் படிப்படியாகவும் தற்செயலாகவும் நடைபெறும் செயலாக புள்ளியியல் ஊகிக்கிறது; அது இதை மெய்ப்பித்துக் காண்பிக்கிறதில்லை (காண்பிக்கவும் முடியாது).’
[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]
“அறிவியலைப் பாதுகாத்தல் என்ற சாக்கில் இயற்கைத் தெரிவின் நேரடியான அறிவியல் சார்ந்த குற்றச்சாட்டுகள் புறக்கணிக்கப்படுகின்றன என்பது நகைப்பிற்குரியது.”
[பக்கம் 8-ன் பெட்டி]
மூலக்கூறும் உயிரணுவும்
உயிர்வேதியியல்—“உயிரின் அடிப்படையைக் குறித்த—உணவு செரித்தல், ஒளிச்சேர்க்கை, நோய்த்தடுப்பு, இன்னும் பல வேதியியல் வினைகளை தூண்டுவதும் உயிரணுக்களையும் திசுக்களையும் உருவாக்குவதுமான மூலக்கூறுகளைக் குறித்த—ஆராய்ச்சி.”—டார்வினது விளங்கா கோட்பாடு.
மூலக்கூறு—“வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகள் மாற்றப்படாமலேயே பிரிக்கப்பட்ட ஒரு தனிமத்தின் அல்லது ஒரு கூட்டுப்பொருளின் மிகச் சிறிய துகள்; வேதியியல் ஆற்றல்களினால் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும் ஒரேவிதமான அல்லது வித்தியாசமான அணுக்களின் ஒரு தொகுதி.”—ஆங்கில மொழியின் அமெரிக்க பரம்பரைச் சொல்லகராதி, (ஆங்கிலம்).
உயிரணு—எல்லா உயிரினங்களின் அடிப்படைப் பொருள். “ஒவ்வொரு உயிரணுவும், ஓர் உயிரியின் உருவத்திற்கும் இயக்கத்திற்கும் காரணமாயுள்ள அதிக ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பாக இருக்கிறது.” வயதுவந்த ஒருவரது உடலில் எவ்வளவு உயிரணுக்கள் இருக்கின்றன? ஒரு கோடியே கோடிகள் (1,00,00,000,00,00,000)! நமது சருமத்தின் ஒவ்வொரு சதுர அங்குலத்திற்கும் சுமார் 10,00,000 உயிரணுக்கள் இருக்கின்றன; நமது மூளையில் 1,000 கோடியிலிருந்து 10,000 கோடி வரை நரம்பணுக்கள் உள்ளன. “உயிர்ப்புக்கு உயிர்நாடி உயிரணுவே; ஏனெனில் இந்த இடத்தில்தான் தண்ணீர், உப்புகள், பெருமூலக்கூறுகள், படலங்களின் சேகரிக்கப்பட்ட தொகுதி ஆகியவை உயிரை உருவாக்குகின்றன.”—உயிரியல்.
[பக்கம் 9-ன் பெட்டி]
உயிரணுவின் “ஒப்பற்ற சிக்கல்”
“மூலக்கூறு உயிரியல் காட்டும் உயிரின் உண்மைநிலையை நாம் புரிந்துகொள்ள வேண்டுமானால், ஓர் உயிரணுவை, அதன் விட்டம் 20 கிலோமீட்டராக ஆகும்வரையும், லண்டன் அல்லது நியூ யார்க் போன்ற பெரிய நகரத்தை மூடும் அளவுக்கு மாபெரும் விமானத்தைப் போன்று ஆகும்வரையும் 100 கோடி மடங்கு பெரிதாக்க வேண்டும். அப்போது நாம் ஒப்பற்ற சிக்கலும் தேவைக்கேற்றபடி மாற்றியமைக்கத்தக்க வடிவும் கொண்ட ஒரு பொருளைப் பார்ப்போம். அந்த உயிரணுவின் மேற்பரப்பில், மிகப் பெரிய விண்வெளிக் கப்பலின் ஜன்னல்கள்போலிருக்கும் லட்சக்கணக்கான துவாரங்களை நாம் பார்ப்போம்; தொடர்ந்து பொருட்கள் உள்ளேயும் வெளியேயும் சென்றுவருவதை அனுமதிப்பதற்கு அவ்வப்போது அவை திறந்து மூடுகின்றன. இப்படிப்பட்ட துவாரங்கள் ஒன்றினுள் நாம் நுழைந்தோமானால், மிக உயர்ந்த நுட்பமும் திகைக்கவைக்கும் சிக்கலும் நிறைந்த ஓர் உலகில் நம்மை நாமே காண்போம். அதிக ஒழுங்கமைக்கப்பட்ட முடிவற்ற பாதைகளும் குழாய்களும் உயிரணுவின் சுற்றளவிலிருந்து எல்லா திசைகளிலும் பிரிந்து செல்கின்றன; அவற்றில் சில, நியூக்ளியஸிலுள்ள நினைவாற்றல் மையத்திற்கு செல்கின்றன, மற்றவை ஒருங்கிணைப்பு இயந்திரங்களுக்கும் செயல்பாட்டு தொகுதிகளுக்கும் செல்கின்றன. நியூக்ளியஸ்தானே ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான விட்டத்தைக்கொண்ட ஒரு பெரிய வட்ட வடிவ அறையாய் இருக்கும்; பல்கோணக்கட்டங்களுள்ள கூண்டைப் போன்றிருக்கும் அதனுள் டிஎன்ஏ மூலக்கூறுகளின் மைல்கணக்கான சுருள் சங்கலிகள் சீரான வரிசைகளில் ஒழுங்காக ஒன்றுசேர குவிக்கப்பட்டிருப்பதைப் பார்ப்போம். அதிகமதிகமான விளைப்பொருட்களும் இயற்கைப்பொருட்களும் எண்ணிறைந்த குழாய்களில் மிக ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் முன்னும் பின்னும் துரிதமாகச் செல்கின்றன; அவை, உயிரணுவின் வெளிப் பகுதிகளிலுள்ள அநேக ஒருங்கிணைப்பு இயந்திரங்களுக்கு சென்று திரும்புகின்றன.
“முடிவற்றதாய்த் தோன்றும் இத்தனை அநேக குழாய்களில் வஸ்துக்கள் அனைத்தும் ஒரேவிதமாய் ஒத்திசைவுடன் அங்குமிங்கும் கட்டுப்பாட்டுடன் செல்வதைப் பார்த்து நாம் வியப்படைவோம். திரும்பும் திசையெல்லாம், நம்மைச் சுற்றி எல்லா வகையான ரோபோ-போன்ற இயந்திரங்களையும் நாம் பார்ப்போம். உயிரணுவிலுள்ள செயல்புரியும் பாகங்களிலேயே மிக எளியதான புரத மூலக்கூறுகள் வியக்கத்தக்க அளவில் சிக்கலாய் அமைந்துள்ள இயந்திரங்களாய் செயல்படுவதை நீங்கள் காண்பீர்கள்; அவை ஒவ்வொன்றும் அதிக ஒழுங்கமைக்கப்பட்ட 3-D உருவத்தில் சீரமைக்கப்பட்டிருக்கும் சுமார் மூவாயிரம் அணுக்களைக் கொண்டுள்ளன. இந்த விசித்திரமான மூலக்கூறு இயந்திரங்களின் அசாதாரண நோக்கமுள்ள செயல்களைக் கவனிக்கும்போது நாம் இன்னுமதிகமாக வியப்புக்குள்ளாவோம்; முக்கியமாக, இயற்பியல் மற்றும் வேதியியல் சம்பந்தமாக அதிக அறிவை நாம் திரட்டியிருந்தாலும் ஒரேவொரு மூலக்கூறு இயந்திரத்தை—அதாவது, செயல்புரியும் ஒரேவொரு புரத மூலக்கூறை—வடிவமைப்பது தற்போது நமது ஆற்றலுக்கு மிஞ்சியதாயிருக்கிறது; அடுத்த நூற்றாண்டின் ஆரம்பம்வரையாவது அச்சாதனை புரியமுடியாது. ஆனாலும் உயிரணுவிலுள்ள உயிர், ஆயிரக்கணக்கான, நிச்சயமாகவே பத்தாயிரக்கணக்கான, ஒருவேளை லட்சக்கணக்கான வித்தியாசமான புரத மூலக்கூறுகள் ஒன்றுசேர்ந்து செய்யும் செயல்களின்மீதே சார்ந்திருக்கிறது.”—பரிணாமம்: நெருக்கடியிலுள்ள ஒரு கோட்பாடு, (ஆங்கிலம்).
[பக்கம் 10-ன் பெட்டி]
உண்மைகளும் கட்டுக்கதைகளும்
“அநேக உயிர்வேதியியல் அமைப்புகள் வடிவமைக்கப்பட்டன என்பதே, புத்திக்கூர்மை வாய்ந்த காரணக்கூறுகளை திறந்த மனதுடன் ஆராய்ச்சி செய்ய விரும்புவோருக்கு அளிக்கப்படும் இறுதியான நேரடி பதிலாகும். அவை இயற்கையின் சட்டங்களாலோ தற்செயலாகவோ கட்டாய நிலையினாலோ வடிவமைக்கப்பட்டவை அல்ல; அதற்கு மாறாக, அவை திட்டமிடப்பட்டவை. . . . மிக முக்கிய அம்சங்களைக் கொண்ட, மிக அடிப்படையான நிலையைச் சேர்ந்த உயிர், பூமியில், புத்திக்கூர்மையான செயலின் விளைவாய் ஏற்பட்டது.”—டார்வினது விளங்கா கோட்பாடு.
“ஒரு நூற்றாண்டு காலமாக கடுமையாய் முயற்சியெடுத்த பின்னரும், உயிரியலாளர்கள் [டார்வினது பரிணாமக் கோட்பாட்டை] எந்தக் குறிப்பிடத்தக்க விதத்திலும் ஊர்ஜிதம் செய்யவில்லை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. டார்வினது கோட்பாடு சொல்கிறபடி நெருங்கிய தொடர்புடைய உயிரினங்களின் கோர்வையை இயற்கை காண்பிப்பதுமில்லை, உயிர் தற்செயலாக தோன்றியதென்ற கருத்து நிரூபிக்கப்படவும் இல்லை என்ற உண்மையை மறுக்கமுடியாது.”—பரிணாமம்: நெருக்கடியிலுள்ள ஒரு கோட்பாடு.
“உயிரியலுக்கு சம்பந்தமில்லாத மற்ற துறைகளில் பரிணாமக் கோட்பாடு செலுத்தியிருக்கும் செல்வாக்கானது, உண்மையிலேயே எந்தப் பலமான அறிவியல் அத்தாட்சியும் இல்லாமல் முழுக்க முழுக்க ஊகத்தை அடிப்படையாகக்கொண்ட ஒரு கருத்து எவ்வாறு முழு சமுதாயத்தின் சிந்தனையையும் பாதித்து ஒரு தலைமுறையின் மனப்பாங்கின்மீதே ஆதிக்கம் செலுத்தும் என்பதற்கு மனித சரித்திரத்தில் உள்ள உதாரணங்களிலேயே கவனத்தை ஈர்க்கும் ஒன்றாகும்.”—பரிணாமம்: நெருக்கடியிலுள்ள ஒரு கோட்பாடு.
“முற்காலத்து அறிவியல் எதுவாயினும் . . . வடிவமைப்பு அல்லது படைப்பின் சாத்தியத்தை மறுத்தால், அது சத்தியத்திற்கான தேடுதலாக இனியும் இருப்பதில்லை; அதற்கு மாறாக பிரச்சினையுண்டாக்கும் தத்துவ கோட்பாடான இயற்கைக் கோட்பாட்டின் பணியாளாக (அல்லது அடிமையாக) ஆகிறது.”—தோற்றங்களின் ஆராய்ச்சி, (ஆங்கிலம்).
“சார்ல்ஸ் டார்வின், சிக்கலான உயிரியலின் தோற்றத்தைக் குறித்த பிரச்சினையை தீர்த்தார் என்பது . . . கட்டுக்கதையாகும். உயிரின் தோற்றத்தைக் குறித்து நமக்கு போதியளவு அல்லது மிதமான புரிந்துகொள்ளுதல் இருக்கிறது என்ற கருத்தோ இயற்கைக் காரணக்கூறுகள் என அழைக்கப்படுபவையே சரியான விளக்கங்கள் என்ற கருத்தோ வெறும் கட்டுக்கதைகளே. உண்மையில், இயற்கைத் தத்துவ கோட்பாட்டைச் சேர்ந்த இவையும் மற்ற கட்டுக்கதைகளும் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்திருக்கின்றன. பண்பட்ட நபர்கள் நடுவே அவற்றை ஒருவர் மிகவும் மட்டம்தட்டி பேசுவதில்லை. ஆனால் அவற்றை குறைகூறாமல் ஏற்றுக்கொள்ளவும்கூடாது.”—தோற்றங்களின் ஆராய்ச்சி.
“அநேக அறிவியலாளர்கள், உயிரின் தோற்றத்திற்கு அறிவியல் விளக்கமளிப்பதில்லை என்பதை இரகசியமாக ஒப்புக்கொள்கின்றனர். . . . உயிரின் மிக அடிப்படை நிலைகளிலும்கூட கற்பனைக்கு மிஞ்சிய சிக்கல் காணப்படுகிறதென்பதை டார்வின் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்.”—டார்வினது விளங்கா கோட்பாடு.
“மூலக்கூறு சார்ந்த பரிணாமம், அறிவியலை அடிப்படையாகக் கொண்டில்லை. . . . அப்படிப்பட்ட பரிணாமம் நடந்ததென உறுதியாகச் சொல்லப்படுகிறது, ஆனால் அவை எவையுமே பொருத்தமான ஆராய்ச்சிகளாலோ கணக்கிடுதல்களாலோ ஆதரிக்கப்படுவதில்லை. மூலக்கூறு சார்ந்த பரிணாமத்தை எவரும் பார்த்ததில்லை என்ற காரணத்தாலும், இப்படிப்பட்ட அறிவிற்கு எந்த அடிப்படையும் இல்லாத காரணத்தாலும், உண்மையிலேயே இப்படிச் சொல்லலாம் . . . டார்வினது மூலக்கூறு பரிணாமக் கோட்பாடு வெறும் வெட்டிப் பேச்சுதான்.”—டார்வினது விளங்கா கோட்பாடு.
[பக்கம் 12-ன் பெட்டி]
பரிணாமம் “ஒரு சூதாட்டம்”
பரிணாமக் கோட்பாடானது சூதாட்டக்காரரது கனவிற்கு ஒப்பாயிருக்கிறது. ஏன்? ஏனெனில் பரிணாமக் கோட்பாட்டாளர்களின்படி, எண்ணற்ற எதிரிடையான சான்றுகள் இருக்கிறபோதிலும் பரிணாமம் வெற்றிகண்டிருக்கிறது.
ராபர்ட் நேயை இவ்வாறு எழுதுகிறார்: “பரிணாமம் அடிப்படையில் சூதாட்டம்போல் இருப்பதால், கடந்த காலத்து அற்ப சம்பவங்கள் ஏதோவொன்றில் கொஞ்சம் மாறுபாடு ஏற்பட்டிருந்தாலும், மனிதன் உருவாவதற்கு முன்பே பரிணாம வளர்ச்சி தடைபட்டிருக்கும்.” ஆனால் கோடிக்கணக்கான சூதாட்டங்களில் ஒவ்வொரு முறையும் வெற்றி கிடைத்ததாக நாம் நம்ப வேண்டுமாம். நேயை இவ்வாறு ஒப்புக்கொள்கிறார்: “புத்தியுள்ள உயிரினத்தின் தோற்றம் அறிவியலாளர்கள் ஒருகாலத்தில் நினைத்ததைக் காட்டிலும் அதிக சிக்கலானதென்பதை தொடர்ச்சியான எதிரிடை தடைகள் தெளிவுபடுத்துகின்றன. அறிவியலாளர்கள் இதுவரை எதிர்ப்படாத இன்னுமதிக தடைகளும் ஒருவேளை இருக்கின்றனவோ என்னவோ யாருக்குத் தெரியும்.”
[பக்கம் 8, 9-ன் அட்டவணை]
ஓர் உயிரணுவின் எளிய வரைபடம்
ரைபோசோம்கள்
புரதங்களை உண்டாக்கும் வடிவமைப்புகள்
ஸைட்டோபிளாசம்
நியூக்ளியஸ் மற்றும் புறச்சவ்வுக்கிடையே உள்ள பகுதி
என்டோபிளாச வலை
சவ்வின் பரப்புகள். அவற்றுடன் இணைந்துள்ள ரைபோசோம்களால் உற்பத்தி செய்யப்படும் புரதங்களை அவை சேமிக்கின்றன அல்லது கடத்துகின்றன
நியூக்ளியஸ்
உயிரணுவின் செயல்களை இயக்கும் கட்டுப்பாட்டு மையம்
நியூக்ளியோலஸ்
ரைபோசோம்கள் உண்டாக்கப்படும் இடம்
குரோமோசோம்கள்
அவற்றில் உயிரணுவின் மரபியல் மூல திட்டமான டிஎன்ஏ உள்ளது
நுண்குமிழி
தண்ணீர், உப்புகள், புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேடுகளை சேமிக்கிறது
லைசோசோம்
செரித்தலுக்கான நொதிகளை சேமித்து வைக்கிறது
கால்கி உறுப்பு (Golgi body)
சவ்வு பைகளின் ஒரு தொகுதி. அது உயிரணு உற்பத்தி செய்யும் புரதங்களை திரட்டிக் குவிக்கிறது மற்றும் வினியோகம் செய்கிறது
உயிரணு புறச்சவ்வு
உயிரணுவினுள் நுழைபவற்றையும் அதிலிருந்து வெளிச்செல்பவற்றையும் கட்டுப்படுத்தும் சவ்வு
சென்ட்ரியோல்
உயிரணுவின் இனப்பெருக்கத்திற்கு மிகவும் முக்கியமானவை
மைட்டோகாண்ட்ரியன்
உயிரணுவிற்கு சக்தியை கொடுக்கும் மூலக்கூறுகளான ATP-ன் உற்பத்தி மையம்
[பக்கம் 7-ன் படம்]
தனிப்பாகங்கள் ஒரு எலிப்பொறியை உண்டாக்க முடியாது—அனைத்தும் ஒன்றுசேர்ந்தால்தான் அது செயல்பட முடியும் (தொடர்ச்சி 10-ம் பக்கத்தில்)