இளைஞர் கேட்கின்றனர் . . .
பணம் சம்பாதிப்பதில் என்ன தவறு?
பணம்தான் உலகத்திலேயே மிகவும் முக்கியமான ஒன்று.” இவ்வாறு பிரிட்டனைச் சேர்ந்த நாடக ஆசிரியரான ஜார்ஜ் பர்னார்ட் ஷா உரிமை பாராட்டினார். நீங்கள் அவர் சொல்வதை ஒத்துக்கொள்கிறீர்களா? “நான் பணக்காரியா ஆவதையல்ல, ஆனால் போதுமான பொருளாதார பாதுகாப்பை பெறவே விரும்புறேன்” என்று சொல்லும் 17-வயதான டாண்யாவைப்போல நீங்கள் ஒருவேளை பெரும்பாலும் உணரலாம். அவ்வாறே இளம் ஏவ்யனும்கூட பணத்தை உலகத்திலேயே மிக முக்கியமான ஒன்று என்றல்ல, ஆனால் சில இலக்குகளை அடைய உதவும் பயனுள்ள ஒன்று என்றுதான் நினைக்கிறான். “டிரஸ், போக்குவரத்து போன்ற என்னோட தேவைகளுக்கு பணம் அவசியம்” என்று அவன் சொல்கிறான்.
பைபிளும்கூட இதேபோன்ற ஒரு கருத்தைத்தான் கொடுக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? பிரசங்கி 7:12-ல் அது இவ்வாறு சொல்கிறது: “திரவியமும் கேடகம்.” ஏழ்மையானது “மனித சந்தோஷத்தின் ஒரு மிகப்பெரிய எதிரி” என்பதாக விளக்கப்பட்டிருக்கிறது. போதுமான பணமுள்ளவராக இருப்பது, ஏழ்மை அடிக்கடி கொண்டுவரும் பிரச்சினைகளிலிருந்து உங்களுக்கு பாதுகாப்பை—ஓரளவுக்காவது பாதுகாப்பை—கொடுக்கும். எதிர்பாராத பேரழிவுகளின் துன்பத்தையும் பணம் குறைக்கும். “ ‘சமயமும் எதிர்பாரா சம்பவமும் நம் எல்லாருக்கும் நேரிடும்’னு பைபிள் சொல்லுது. நமக்கு துன்பங்கள் எப்ப வரும்ன்னு தெரியவே தெரியாது, அதனால பணத்த சேத்து வைக்கிறது அவசியம்” என்று இளம் ஃபிலஸ் கூறுகிறாள். (பிரசங்கி 9:11, NW) பணம் இப்போதே உங்களுக்கு முக்கியமாக தோன்றினாலும், அது உங்கள் எதிர்காலத்தில் அதிக முக்கியமாக இருக்கலாம்.
“பொருளாசையென்ற பேரலை”
போதுமான பணத்தை கொண்டிருப்பது பற்றிய ஓரளவான கவலை இயல்பானதும் நியாயமானதுமாக இருந்தபோதிலும், சில இளைஞர்களுக்கு பணமானது ஏறக்குறைய ஆட்டிப்படைக்கும் ஒரு பொருளாகவே ஆகிவிட்டிருக்கிறது. 1,60,000-க்கும் அதிகமான இளைஞர்களிடம் “வாழ்க்கையில் உங்களுக்கு எது அதிக முக்கியம்?” என்று கேட்கப்பட்டபோது, 22 சதவீதத்தினர் “பணக்காரராக வேண்டும்” என்று பதிலளித்தனர்.
சந்தேகமில்லாமல் பணத்திற்கான இந்த பேரவா, நியூஸ்வீக் என்ற பத்திரிகை சொன்னதுபோல இந்த உலகை ஆட்கொண்டிருக்கும் “பொருளாசையென்ற பேரலையால்” வளர்க்கப்பட்டிருக்கிறது. “நான் ரொம்ப பொருளாசை உள்ளவன்; பிரபலமான தயாரிப்பாளர்களின் தயாரிப்புகளையே வாங்குறதுல அதிக ஆர்வம் காட்டுவேன். அதிகமா செலவழிச்சாதான் அதிக தரமான பொருள் கிடைக்கும்ன்னு நான் உறுதியாக நம்புறேன். அதனால எனக்கு வேண்டிய பொருட்களை வாங்க நான் அதிகமா பணம் செலவழிக்கிறேன்” என்று 18-வயதான மார்ட்டின் கூறுகிறான். ‘அதிகமாக பணம் செலவுசெய்வது’ மார்ட்டின் மட்டுமல்ல. யூ.எஸ்.நியூஸ் & உவர்ல்ட் ரிப்போர்ட் அறிவிக்கிறது: “சென்றவருடம் [ஐக்கிய மாகாணங்களில்] 12 முதல் 19 வயதுடையவர்கள் பொருட்களை வாங்குவதில் இதுவரை செய்திராத அளவு அதிகம் செலவிட்டிருக்கிறார்கள்—மொத்தமாக 10,900 கோடி டாலர்; 1990-ல் இருந்ததைவிட 38 சதவீத அதிகரிப்பு.”
ஆனால் இந்த எல்லா புதிய உடைகளுக்கும், காம்பாக்ட் டிஸ்குகளுக்கும் கம்ப்யூட்டர் சாதனங்களுக்கும் தேவையான பணம் இளைஞர்களுக்கு எப்படி கிடைக்கிறது? யூ.எஸ்.நியூஸ் & உவர்ல்ட் ரிப்போர்ட்-ன்படி: “16 முதல் 19 வயதானவர்களில் ஏறக்குறைய பாதிபேர் பகுதிநேர வேலை உடையவர்களாக இருக்கின்றனர்.” சமநிலையில் வைக்கப்படும்போது பள்ளி நேரத்திற்குபின் செய்யும் வேலையானது, ஒரு இளைஞனுக்கு பொறுப்பை கற்றுக்கொடுப்பது போன்ற நன்மைகளை கொண்டிருக்க முடியும். என்றபோதிலும், இந்த விஷயத்தில் சில இளைஞர்கள் தெளிவாகவே எல்லைகளை கடந்துவிடுகின்றனர். நியூஸ்வீக் பத்திரிகை இவ்வாறு கூறுகிறது: “[வேலை செய்யும்] இளைஞர்கள்மீது வரும் அழுத்தத்தை உளவியல் நிபுணர்களும் ஆசிரியர்களும் கவனிக்கிறார்கள். வீட்டுப்பாடம் செய்வதற்கு அவர்களுக்கு குறைவான நேரமே இருக்கிறது; சோர்ந்துபோன மாணவர்கள் விழித்திருப்பதற்கே கஷ்டப்படுவதை அடிக்கடி பார்க்கும் ஆசிரியர்கள், வருத்தகரமாக அநேக சமயங்களில் அவர்கள் எடுக்கவேண்டிய குறைந்தளவு மதிப்பெண்ணை குறைத்துவிடுவதன் மூலம் பிரதிபலிக்கின்றனர்.”
என்றபோதிலும், வேலைசெய்யும் இளைஞர்களில் எவருமே தங்கள் வருமானத்தை விட்டுவிட மனமுள்ளவர்களாக இல்லை. “பள்ளி முக்கியம்தான், ஆனா பணமும் முக்கியம்தானே. வீட்டுப்பாடம் பணம் சம்பாதித்து கொடுக்காதே” என்று இளம் வனெசா கூறுகிறாள். பணம் சம்பாதிப்பது உங்களுக்கு எவ்வளவு முக்கியம்? மிகவும் அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே உங்கள் வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளா?
“ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள்”
இத்தகைய கேள்விகளையே பைபிள் கலந்தாலோசிக்கிறது. அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.”—1 தீமோத்தேயு 6:9, 10.
தான் எதை பற்றி பேசிக்கொண்டிருந்தார் என்று பவுல் நன்றாகவே அறிந்திருந்தார். கிறிஸ்தவராவதற்குமுன், ‘பொருளாசைக்காரர்’ என்று பைபிள் விவரிக்கும் ‘பரிசேயர்’ என்று அழைக்கப்பட்ட மதத்தலைவர்களில் ஒருவராக அவர் இருந்தார். (லூக்கா 16:14) அப்படியிருந்தும், அந்த அப்போஸ்தலன் பணம் சம்பாதிப்பதையே தவறு என்று கூறவில்லை. மாறாக, “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்க[ளுக்கு]” அல்லது மற்றொரு மொழிபெயர்ப்பு கூறுகிறவிதமாக “பணக்காரராக வேண்டுமென்பதில் தங்கள் இருதயத்தை ஊன்றவைக்கும்” ஆட்களுக்கு எச்சரிப்பு கொடுத்தார். (பிலிப்ஸ்) ஆனால் அவ்வாறு செய்வதில் அப்படியென்ன தவறு இருக்கிறது?
பவுல் விளக்கின விதமாக, அப்படிப்பட்டவர்கள் “சோதனையிலும் கண்ணியிலும் . . . விழுகிறார்கள்.” நீதிமொழிகள் 28:20 (NW) இவ்வாறு சொல்லும்போது அதேபோன்ற ஒரு கருத்தை கொடுக்கிறது: “ஐசுவரியத்தை சம்பாதிக்க தீவிரிக்கிறவனோ குற்றமற்றவனாக நிலைத்திருக்க மாட்டான்.” தங்களுக்கு போதுமானது இல்லை என்று நினைத்த சில இளைஞர்கள் திருட ஆரம்பித்திருக்கிறார்கள்.
பெரும்பாலான இளைஞர்கள் திருட நினைக்கமாட்டார்கள் என்பது உண்மையே. ஆனால் சிலர் அதைப்போன்ற அபாயமிக்க மற்ற காரியங்களில் ஈடுபடலாம். கிறிஸ்டியானிட்டி டுடே அறிவிக்கிறது: “மிதமிஞ்சிய சூதாட்டம்தான் பருவ வயதினர் மத்தியில் படுவேகமாக வளர்ந்துவருகிற அடிமைப்படுத்தும் பழக்கமாகியிருக்கிறது என்று சில வல்லுநர்கள் நம்புகின்றனர்.” ஐ.மா.விலுள்ள ஓரிடத்தில், “தங்கள் உயர்நிலை பள்ளிப்படிப்பை முடிப்பதற்குள் ஏறக்குறைய 90 சதவீதமான பருவ வயதினர் சட்டவிரோதமாக லாட்டரி டிக்கட்டுகளை வாங்கியிருந்தனர்.” சில இளைஞர்கள் இன்னும் மோசமான வழிவகைகளை நாடுகின்றனர். “நல்ல வேலைகள் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அதனால வியாபாரம் செய்வதன் மூலமும் பொருட்களை விற்பதன் மூலமும் நான் அதிகமான பணத்தை பெறுகிறேன். . . . சில சமயங்களில் நான் [போதைபொருட்கள்] விற்று [வந்தேன்]” என்று 16-வயதான மாத்யூ கூறுகிறான்.
‘அழிவில் அமிழ்த்துகிறது’
பணம் வைத்திருப்பது ஒருவருக்கு சுதந்திர உணர்வை கொடுக்கலாம் என்பது உண்மையே. ஆனால் பவுல் விளக்கும் வண்ணம், பணத்தை பின்தொடர்வது ஒருவரை கடைசியில் “மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைக[ளுக்கு]ம்” உண்மையில் அடிமையாக்கிவிடும். ஆம், ஒருமுறை நீங்கள் பண ஆசையின் பிடியில் வீழ்ந்துவிட்டால், பொருளாசையும் கொலைக்கேதுவான பொறாமையும் இன்னும் மற்ற துர்இச்சைகளும் மேலோங்கலாம். (கொலோசெயர் 3:5-ஐ ஒப்பிடுக.) சில பருவ வயதினர் மற்ற இளைஞர்கள் வைத்துள்ள கார்கள், துணிகள் போன்றவற்றை கண்டு அவ்வளவு அதிகம் பொறாமை கொள்வதால் “அவர்கள் கவலையில் மூழ்கிவிடுகின்றனர்” என்று டீன் என்ற ஆங்கில பத்திரிகையில் ஒரு கட்டுரை கூறியது. சில சமயங்களில் அப்படிப்பட்ட பொறாமை “சுயவெறுப்பில் விளைவடைந்து, [அவனிடம் அல்லது] அவளிடம் இல்லாததை தவிர வேறு எதை பற்றியும் சிந்திக்கமுடியாத நிலைக்கு ஒரு பருவ வயதினரை ஆளாக்குகிறது” என்று அந்த கட்டுரை தொடர்ந்து கூறுகிறது.
பண ஆசையானது ஒருவரை ‘சோதனையில் விழவைப்பது’ மட்டுமல்லாமல் அவரை ‘கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிறது’ என்பதையும் கவனியுங்கள். பைபிள் விரிவுரையாளரான ஆல்பர்ட் பார்ன்ஸ் இவ்வாறு கூறுகிறார்: “மனதில் ஏற்படும் காட்சி, ஒரு கப்பல் அதிலுள்ள எல்லாவற்றோடும் சேர்ந்து மூழ்கிவிடும் ஒரு முழுமையான கப்பற்சேதம் போன்றதாகும். முற்றிலுமான அழிவு. சந்தோஷம், நற்பண்பு, நற்பெயர், ஆத்துமா ஆகியவற்றின் முழு அழிவாகும்.”—1 தீமோத்தேயு 1:19-ஐ ஒப்பிடுக.
ஆகவேதான், ஒருவருடைய முழு கவனத்தையும் கவருகிற “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது” என்று பவுல் சொல்கிறார். அதன் விளைவாக அநேகர் “விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.” ரோரி என்ற ஒரு வாலிபனை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். 12-வயதில் அவன் சூதாட ஆரம்பித்தான். “எந்த வேலையும் செய்யாம பணம் சம்பாதிக்கிறதுக்கு அது ஒரு வழி” என்று அவன் நினைவுபடுத்திப் பார்க்கிறான். சீக்கிரத்தில் அவன் பல நூற்றுக்கணக்கான டாலர் கடன்பட்டு, தன்னுடைய நண்பர்கள், குடும்பம், பள்ளிப்படிப்பு ஆகியவற்றை உதாசீனப்படுத்த ஆரம்பித்தான். “அதை விட்டுவிட நான் முயற்சித்தேன்” என்று அவன் ஒப்புக்கொள்கிறான், ஆனால் அவன் தொடர்ந்து தோற்றுப்போனான். 19-வயதில் உதவி தேடும்வரை அவன் ‘தன்னையே அநேக வேதனைகளாலே உருவக் குத்திக்கொண்டிருந்தான்.’ பணத்தை நாடித்தேடுவதை “ஒரு வேதனை உண்டாக்கும் அனுபவம்” என்று காசுதெய்வத்தை பின்தொடர்தல் (ஆங்கிலம்) என்ற தன்னுடைய புத்தகத்தில் எழுத்தாளர் டக்லஸ் கென்னடி சொன்னபோது அவர் நிச்சயமாகவே மிகைப்படுத்தி சொல்லவில்லை.
சமநிலையை கண்டடைதல்
ஆகவே, சாலொமோனின் அறிவுரை நூற்றாண்டுகளுக்கு முன்பு எவ்வளவு பொருத்தமாக இருந்ததோ, அதேயளவு இன்றும் பொருந்துகிறது: “ஐசுவரியவானாக வேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே. இல்லாமற்போகும் பொருள்மேல் உன் கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம்.” (நீதிமொழிகள் 23:4, 5) பொருளாதார செல்வங்கள் நிலையற்றவை, ஆகவே செல்வத்தை தேடுவதையே உங்கள் வாழ்க்கையின் முக்கிய இலக்காக வைப்பது முட்டாள்தனமாகும். மௌரீன் என்ற கிறிஸ்தவ இளம்பெண் இவ்வாறு சொல்கிறாள்: “முழுக்கமுழுக்க பொருளாசைக்குரிய இலட்சியங்கள்ல மாட்டிக்கொள்ள எனக்கு விருப்பமில்ல. நான் பணம் சம்பாதிப்பதிலேயே முழுவதுமாக மூழ்கிட்டேன்னா என்னோட ஆவிக்குரிய தன்மையை இழந்துடுவேன்னு எனக்கு நல்லா தெரியும்” என்று அவள் கூறுகிறாள்.
பணம் தேவைதான் என்பது உண்மையே. மேலும், போதுமான வருமானத்தை கொண்டிருப்பது உங்கள் தனிப்பட்ட தேவைகளை கவனித்துக்கொள்ள உதவும்—அதோடு அவ்வப்போது மற்றவர்களுக்கும் பொருளாதார விதத்தில் உதவி செய்யலாம். (எபேசியர் 4:28) நேர்மையாக பணம் சம்பாதிப்பதற்கு கடினமாக வேலைசெய்ய கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பணத்தை எவ்வாறு சேமிப்பது, திட்டமிடுவது மேலும் ஞானமாக செலவுசெய்வது போன்றவற்றையும் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் ஒருபோதும் பணத்தை உங்கள் வாழ்க்கையில் அதிமுக்கியமானதாக ஆக்கிவிடாதீர்கள். நீதிமொழிகள் 30:8-ஐ எழுதியவர் வெளிப்படுத்திய சமநிலையான கருத்தை கொண்டிருக்க முயலுங்கள்; அவர் இவ்வாறு ஜெபித்தார்: “தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக.” ஆவிக்குரிய அக்கறைகளை முதலிடத்தில் வைப்பதன்மூலம் உங்களால் மிகச்சிறந்த வகையான ஐசுவரியங்களை பெற்றுக்கொள்ள முடியும். நீதிமொழிகள் 10:22 சொல்லுகிறது, “கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.”
[பக்கம் 13-ன் படம்]
தங்கள் சகாக்களைப்போன்ற அந்தஸ்தைக் காத்துக்கொள்ள அநேக இளைஞர்களுக்கு பணம் வேண்டும்