போர் இளம் உயிர்களை கொன்றுகுவிக்கிறது
பிள்ளைப்பருவம் மகிழ்ச்சிக்குரிய காலமாக இருக்கவேண்டும். அது பேணிப் பாதுகாக்கப்படும் ஒரு பருவம். அறியாப் பருவம். இளம் பிள்ளைகள் விளையாட வேண்டும், படிக்க வேண்டும், பொறுப்புள்ள பெரியவர்களாவதற்கு உதவும் பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறார்கள். பிள்ளைகள் கொல்லப்படும்படி எதிர்பார்க்கப்படுவதில்லை; மேலும் அவர்கள் கொலைகாரர்களாக ஆகும்படியும் நிச்சயமாகவே எதிர்பார்க்கப்படுவதில்லை. இருப்பினும், போர்க்காலங்களில் நடக்கக்கூடாத பல சம்பவங்கள் நடந்துவிடுகின்றன.
விசனகரமாக, போர் உலகளாவிய அளவில் பெருகியிருக்கிறது; அது இளம் உயிர்களை கொன்றுகுவித்து, பிள்ளைகளையும் பிள்ளைப்பருவத்தையும் சீரழிக்கிறது. 1993-ல், 42 நாடுகளில் பெரும் போர்கள் உச்சத்தை அடைந்தன; அதே சமயத்தில் வேறு 37 நாடுகளில் அரசியல் வன்முறை வெடித்தது. இந்த 79 நாடுகளிலும் பிள்ளைகள் வாழ்ந்தார்கள்.
இன்றுள்ள இளம் பிள்ளைகள் அநேகருக்கு சமாதானம் என்றால் என்னவென்றே தெரியாது. 1995-ன் முடிவுவாக்கில், அங்கோலாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாகவும், ஆப்கானிஸ்தானத்தில் 17 ஆண்டுகளாகவும், இலங்கையில் 11 ஆண்டுகளாகவும் சோமாலியாவில் 7 ஆண்டுகளாகவும் சண்டைகள் தொடர்ந்துகொண்டிருந்தன. எல்லா இடங்களிலும் அரசியல்வாதிகள், “சமாதான நடவடிக்கைகளைக் குறித்து” நம்பிக்கையுடன் பேசினார்கள்; ஆனால் கடுமைதணியாமல் தொடர்ந்துகொண்டிருந்த போர் மனிதருடைய வாழ்க்கையை தொடர்ந்து சீரழித்துக் கொண்டிருந்தது.
போர், பிள்ளைகளுக்கு எப்பொழுதுமே தீங்குசெய்திருக்கிறது; ஆனால் சமீப காலங்களில் நடக்கும் மாறுபட்ட போர்முறைகளால், பிள்ளைகள் உட்பட, பொதுமக்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டுள்ளனர். 18-ம், 19-ம் நூற்றாண்டுகளிலும், இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலும் நடந்த போர்களுக்கு பலியானவர்களில் ஏறக்குறைய பாதிபேர் பொதுமக்களே. 1939-லிருந்து 1945 வரையிலுமாக நீடித்த இரண்டாம் உலகப் போரில் சரமாரியாக குண்டுகள் நகரங்களின்மேல் பொழிந்ததால், போரில் கொல்லப்பட்டவர்களைவிட பொதுமக்களின் இறப்பு மூன்றில் இரண்டு பங்கு என்ற விகிதத்தில் அதிகமாக இருந்தது.
1980-களின் முடிவுவாக்கில், போரில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 90 சதவீதமாக அதிகரித்தது! போர்கள் அதிக சிக்கலானவையாயிருப்பது, இதற்கு ஒரு காரணம். இனிமேலும் படைகள் போர்க்களத்தில் மட்டுமே நேருக்குநேர் சந்திப்பதில்லை. இன்றுள்ள போர்களில் அநேகம், நாடுகளுக்கு மத்தியில் அல்ல, ஆனால் உள்நாட்டுப் போர்களாகவே இருக்கின்றன. கூடுதலாக, நகரங்களிலோ கிராமங்களிலோ போர்கள் நடைபெறுகின்றன; அவ்விடங்களில், தங்களின் மூர்க்கத்தனத்தாலும் சந்தேகத்தாலும், கொன்றுகுவிப்பவர்களுக்கு எதிரிகள் யாரென்றும், ஒன்றும் அறியாத அப்பாவிமக்கள் யாரென்றும் வித்தியாசமே தெரிவதில்லை.
போர், ஏராளமான பிள்ளைகளின் உயிரைப் பறித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நல அமைப்பின்படி, கடந்த பத்தாண்டுகளில் மட்டுமே, போர்கள் 20 லட்சம் பிள்ளைகளைக் கொன்று, 40 லட்சத்திலிருந்து 50 லட்சம் பிள்ளைகளை ஊனமாக்கியிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. போர் 10 லட்சத்துக்கும் அதிகமான பிள்ளைகளை அனாதைகளாகவும், 1.2 கோடி பிள்ளைகளை வீடற்றவர்களாகவும் ஆக்கியிருக்கிறது. ஏறத்தாழ ஒரு கோடி பிள்ளைகள் மன அதிர்ச்சி அடைந்திருப்பதற்கு போர்தான் காரணம்.
நூலகங்கள் போர்களைப் பற்றிய ஏராளமான புத்தகங்களால் நிறைந்திருக்கின்றன. இவை போர்கள் எப்படி, எதனால் ஏற்பட்டன என்பதை கலந்தாராய்கின்றன; அவற்றில் பயன்படுத்தப்பட்ட போர்க்கருவிகளையும் இராணுவ தந்திரங்களையும் விவரிக்கின்றன; இத்தகைய படுகொலைகளுக்கு வழிகாட்டின ஜெனரல்களை நினைவுபடுத்துகின்றன. திரைப்படங்கள் போரின் கிளர்ச்சியை உச்ச அளவிலும், அது விளைவிக்கும் துன்பத்தை குறைந்த அளவிலும் சித்தரித்துக் காட்டுகின்றன. இத்தகைய புத்தகங்களும், திரைப்படங்களும் கள்ளங்கபடமில்லாத பலியாட்களைப் பற்றி சிறிதே சொல்லுகின்றன. பின்வரும் கட்டுரைகள், பிள்ளைகள் போர்வீரர்களாக எப்படி துர்ப்பிரயோகிக்கப்படுகிறார்கள், எப்படி மற்றவர்களைக் காட்டிலும் மிக எளிதாக பலியாட்களாகிறார்கள் என்பதையும், இன்றுள்ள பிள்ளைகள் உண்மையான ஒளிமயமான எதிர்காலத்தை அனுபவிப்பார்கள் என்று நாங்கள் ஏன் சொல்லுகிறோம் என்பதையும் சிந்திக்கும்.