இருபதாம் நூற்றாண்டில் கொள்ளைநோய்
அநேகர் கணித்திருந்ததுபோல 14-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட ப்ளாக் டெத் உலக முடிவுக்கு வழிநடத்தவில்லை. ஆனால் நம்முடைய நாட்களைப் பற்றியென்ன? நம்முடைய நாட்களின் தொற்றுநோய்களும் வியாதிகளும் ‘கடைசிநாட்கள்’ என்று பைபிள் அழைக்கின்ற அந்தக் காலப்பகுதியில் நாம் வாழுகிறோமென்று சுட்டிக்காட்டுகின்றனவா?—2 தீமோத்தேயு 3:1.
‘நிச்சயமாகவே இல்லை’ என்று நீங்கள் நினைக்கலாம். மருத்துவ, விஞ்ஞான முன்னேற்றங்கள் மனித சரித்திரத்தின் எந்தக் காலப்பகுதியைக் காட்டிலும் இப்போது வியாதிகளைப் புரிந்துகொள்ளவும் மேற்கொள்ளவும் உதவியாக அதிகத்தைச் செய்திருக்கின்றன. மருத்துவ விஞ்ஞானிகள் நுண்ணுயிர் கொல்லிகளையும் (antibiotics) தடுப்பு மருந்துகளையும் (vaccines) ஏராளமான எண்ணிக்கையில் உருவாக்கியிருக்கிறார்கள். இவை வியாதிகளுக்கும் அவற்றை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளுக்கும் எதிராக பலமான ஆயுதங்களாக செயல்படுகின்றன. மருத்துவமனைகளில் கொடுக்கப்படும் பராமரிப்பிலும், தண்ணீர் சுத்திகரிப்பு முறையிலும், சுகாதாரத்திலும், உணவு தயாரிப்பிலும் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களும்கூட தொற்றக்கூடிய வியாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் உதவிசெய்திருக்கின்றன.
ஒருசில பத்தாண்டுகளுக்கு முன்பு, தொற்றுநோய்களுக்கு எதிரான போராட்டம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக அநேகர் நினைத்தார்கள். பெரியம்மை ஒழிக்கப்பட்டது; மற்ற வியாதிகள் ஒழிக்கப்படுவதற்கு குறிவைக்கப்பட்டன. மருந்துகள் எண்ணற்ற வியாதிகளின் தாக்குதலை வெற்றிகரமாக வலுவிழக்க வைத்தன. உடல்நலத்துறை நிபுணர்கள் எதிர்காலத்தை நம்பிக்கையான மனநிலையுடன் நோக்கினார்கள். தொற்றுநோய் கட்டுப்படுத்தப்பட்டுவிடும்; வெற்றிமீது வெற்றி தொடரும்; மருத்துவ விஞ்ஞானம் வெற்றிவாகை சூடும்.
ஆனால், அது வெற்றிவாகை சூடவில்லை. 1996-ல் மட்டுமே ஐந்து கோடிக்கும் அதிகமான மக்களைக் கொல்லுவதன் மூலமாக, இன்று தொற்றுநோய்கள் மரணத்தை ஏற்படுத்துவதில் முன்னணியில் நிற்கின்றன. கடந்தகாலத்திலிருந்த நம்பிக்கையான மனநிலைக்கு பதிலாக எதிர்காலத்தைப் பற்றிய கவலை ஏற்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பால் (WHO) தயாரிக்கப்பட்ட உலக சுகாதார அறிக்கை 1996 (ஆங்கிலம்) இவ்விதமாக எச்சரிக்கிறது: “மனித ஆரோக்கியத்தை முன்னேற்றுவிப்பதற்காக சமீப பத்தாண்டுகளில் அடையப்பட்ட முன்னேற்றங்களில் பெரும்பாலானவை இப்போது அபாயத்தில் இருக்கின்றன. தொற்றுநோய்கள் ஏற்படுத்தும் உலகளாவிய நெருக்கடியால், ஆபத்தின் வாயிலில் நாம் நிற்கிறோம், எந்த நாடும் பாதுகாப்பாக இல்லை.”
பழைய வியாதிகள் அதிக சாவுக்கேதுவானவையாகின்றன
முன்பு, ஒழிக்கப்பட்டுவிட்டதாக எண்ணப்பட்ட நன்கு அறியப்பட்ட வியாதிகள், அதிக சாவுக்கேதுவானவையாகவும், சுகப்படுத்துவதற்கு அதிக கடினமான நிலையிலும் திரும்ப தலை தூக்கியிருப்பதே கவலைப்படுவதற்குரிய ஒரு காரணமாக இருக்கிறது. முன்னேறிய நாடுகளில் ஒரு சமயத்தில் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதாக கருதப்பட்ட காசநோய் இதற்கு ஒரு உதாரணமாகும். ஆனால் காசநோய் ஒழிந்துபோகவில்லை; அது இன்று வருடத்திற்கு சுமார் 30 லட்சம் ஆட்களைக் கொல்லுகிறது. தடுப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்படவில்லையென்றால், 1990-களில் சுமார் ஒன்பது கோடி மக்கள் இந்நோயால் தாக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மருந்துகளை எதிர்க்கும் திறனுடைய காசநோய் அநேக நாடுகளில் பரவி வருகிறது.
மீண்டும் தலைதூக்கும் வியாதிக்கு மற்றொரு உதாரணம் மலேரியா. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, மலேரியாவை சீக்கிரமாக ஒழித்துவிடலாம் என்று மருத்துவர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். இன்று அந்நோய் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் மக்களைக் கொல்லுகிறது. 90-க்கும் அதிகமான நாடுகளில் மலேரியா குறிப்பிட்ட பகுதிகளில் பரவியுள்ளது அல்லது நிரந்தரமாக இருக்கின்றது; அது உலக மக்கள்தொகையில் 40 சதவீதத்தினரை அச்சுறுத்துகிறது. மலேரியா ஒட்டுண்ணிகளைச் சுமந்துசெல்லும் கொசுக்கள் பூச்சிக்கொல்லிகளை எதிர்க்கும் திறன் பெற்றவை; மேலும் இந்த ஒட்டுண்ணிகள்தாமே மருந்துகளை அந்தளவுக்கு எதிர்ப்பதால், சீக்கிரத்தில் மலேரியாவின் சில வகைகள் சுகப்படுத்த முடியாதவையாக போய்விடுமோ என்று மருத்துவர்கள் அஞ்சுகிறார்கள்.
வியாதியும் வறுமையும்
மற்ற வியாதிகள், அவற்றுக்கெதிராக கடும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறபோதிலும்கூட பேரளவில் அழிவைத்தான் கொண்டுவருகின்றன. உதாரணத்திற்கு, நரம்புத்தண்டு மூளை உறையழற்சியைக் (spinal meningitis) கவனியுங்கள். மூளை உறையழற்சியைத் தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளும் அதை சுகப்படுத்துவதற்கான மருந்துகளும் உள்ளன. 1996-ன் ஆரம்பத்தில், ஆப்பிரிக்காவில், சஹாராவுக்கு தெற்கேயுள்ள பகுதிகளில் இந்நோய் திடீரென்று பரவி தீவிரமடைந்தது. அதைக் குறித்து நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்; ஆனாலும், அது 15,000-க்கும் அதிகமான மக்களைக் கொன்றது. அதில் பெரும்பாலானோர் ஏழைகளும் பிள்ளைகளுமே.
நிமோனியா உட்பட, கீழ்மூச்சு மண்டலத்தில் ஏற்படும் தொற்றுநோய்கள் (Lower respiratory infections) ஒவ்வொரு ஆண்டும் 40 லட்சம் மக்களைக் கொல்லுகின்றன; அவற்றில் பெரும்பான்மையர் பிள்ளைகளே. மணல்வாரி ஆண்டுக்கு பத்து லட்சம் பிள்ளைகளையும், கக்குவான் இருமல் கூடுதலாக 3,55,000 பிள்ளைகளையும் கொல்கிறது. இத்தகைய இறப்புகளில் அநேகத்தை மலிவான தடுப்பு மருந்துகளால் தவிர்த்திருக்கலாம்.
ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ எட்டாயிரம் பிள்ளைகள் வயிற்றுப்போக்கு நீரிழப்பால் சாகிறார்கள். பெரும்பாலும் இந்த இறப்புகள் அனைத்தும் நல்ல சுகாதாரத்தாலோ, சுத்தமான குடிநீராலோ, சர்க்கரையும் உப்பும் கலந்த நீரைக் கொடுப்பதாலோ தவிர்த்திருக்கலாம்.
இத்தகைய இறப்புகளில் பெரும்பாலானவை வறுமை தலைவிரித்தாடுகின்ற வளரும் நாடுகளில் ஏற்படுகின்றன. சுமார் 80 கோடி மக்களுக்கு, அதாவது, உலக மக்கள் தொகையில் கணிசமான அளவினருக்கு மருத்துவ வசதிகளைப் பெறுவதற்கு வழியில்லை. உலக சுகாதார அறிக்கை 1995 (ஆங்கிலம்) இவ்வாறு குறிப்பிட்டது: “உலகின் மிகப்பெரிய கொலையாளியும், உலகமுழுவதிலுமுள்ள மோசமான ஆரோக்கியத்துக்கும் துன்பத்துக்குமான மிகப்பெரிய காரணியுமானது, உலகளாவிய வியாதிகளின் பிரிவுப்பட்டியலில் கிட்டத்தட்ட கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் குறியீட்டு எண் Z59.5. அதுதான் மிதமிஞ்சிய வறுமை.”
புதிதாக கண்டறியப்பட்டுள்ள வியாதிகள்
புதிதாக தோன்றிய இன்னும் பிற வியாதிகள் சமீபத்தில்தானே கண்டறியப்பட்டுள்ளன. WHO சமீபத்தில் இவ்வாறு குறிப்பிட்டது: “கடந்த 20 ஆண்டுகளில், கோடிக்கணக்கான மக்களின் ஆரோக்கியத்தை அச்சுறுத்துவதற்காக குறைந்தது 30 புதிய வியாதிகளாவது தோன்றியுள்ளன. இத்தகைய வியாதிகளில் பெரும்பாலானவற்றிற்கு எந்தச் சிகிச்சைமுறையும் இல்லை; சுகப்படுத்துதலோ தடுப்புமருந்தோ கிடையாது; அவற்றை தடுப்பதற்கோ கட்டுப்படுத்துவதற்கோ உள்ள வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கின்றன.”
உதாரணமாக, ஹெச்ஐவி-யையும் எய்ட்ஸ்-ஐயும் எடுத்துக்கொள்ளுங்கள். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு அறியப்படாதிருந்த இவ்வியாதிகள், இன்று எல்லா கண்டத்திலுமுள்ள மக்களையும் அல்லல்படுத்துகின்றன. தற்போது, வயதுவந்தோரில் சுமார் இரண்டு கோடியினர் ஹெச்ஐவி தொற்றப்பட்டிருக்கின்றனர்; மேலும் 45 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் எய்ட்ஸைப் பெற்றிருக்கின்றனர். மானிட முன்னேற்ற அறிக்கை 1996-ன்படி, (ஆங்கிலம்) ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் 45 வயதுக்கு கீழுள்ள வயதுவந்தோரின் மரணத்திற்கு எய்ட்ஸே முக்கிய காரணம். உலகமுழுவதும், ஒவ்வொரு நாளும் சுமார் 6,000 மக்கள் அதாவது, சராசரியாக ஒவ்வொரு 15 நொடிக்கும் ஒருவர் என்ற கணக்கில் இந்நோய் தொற்றப்படுகின்றனர். எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து வேகமாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்படுகிறது. ஐ.மா. ஏஜென்ஸி ஒன்றின்படி, 2010-ற்குள்ளாக, எய்ட்ஸால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஆப்பிரிக்காவிலும் ஆசிய நாடுகளிலும், ஆயுசுகாலம் 25 ஆண்டுகளாக குறைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரத்தியேகமாக எய்ட்ஸ் நோய் மட்டுமே இந்தளவுக்கு பேரழிவை ஏற்படுத்துகின்றதா, அல்லது அதைப் போன்றோ அல்லது அதைவிட இன்னும் கடுமையாகவோ பேரழிவை உண்டாக்கக்கூடிய மற்ற கொள்ளைநோய்களும் தோன்றக்கூடுமா? WHO இவ்வாறு பதிலளிக்கிறது: “சந்தேகமில்லாமல், இன்னும் கண்டறியப்படாத, ஆனால் எய்ட்ஸைப் போலவே அழிவை ஏற்படுத்தும் நாளைய எய்ட்ஸாக இருக்கப்போகும் வியாதிகள் இன்று மறைவில் பதுங்கியிருக்கலாம்.”
நுண்ணுயிரிகளுக்கு ஆதரவளிக்கும் அம்சங்கள்
உடல்நல நிபுணர்கள் ஏன் எதிர்கால கொள்ளைநோய்களைக் குறித்து கவலையடைகின்றனர்? இதற்கு ஒரு காரணம் நகரங்களின் வளர்ச்சியே. நூறு ஆண்டுகளுக்கு முன்பு, உலக மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதத்தினரே நகரங்களில் வாழ்ந்தனர். இருப்பினும், 2010-ற்குள்ளாக, உலக மக்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் நகர்ப்புறங்களில், அதிலும் குறிப்பாக, வளர்ச்சியடையாத நாடுகளிலுள்ள மாநகரங்களில் வாழ்வார்கள் என்று முன்கணிக்கப்பட்டுள்ளன.
தொற்றுக்கிருமிகள் மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் செழித்தோங்குகின்றன. ஒரு நகரத்தில் நல்ல வீட்டுவசதியும் அதோடுகூட போதுமான அளவு சாக்கடை வசதிகளும் தண்ணீர் வசதிகளும், நல்ல உடல்நலப் பராமரிப்பு வசதிகளும் இருந்தால், கொள்ளைநோயின் ஆபத்து குறையும். ஆனால் ஏழை நாடுகளிலுள்ள நகரங்களிலே ஜனத்தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. சில நகரங்களில் ஒவ்வொரு 750 பேருக்கும் அல்லது அதற்கும் அதிகமானவர்களுக்கும் சேர்த்து ஒரேயொரு கழிவறை மட்டுமே இருக்கிறது. அநேக நகர்ப்புறங்களில் நல்ல வீட்டுவசதி, சுத்தமான குடிநீரோடுகூட, மருத்துவ வசதிகளும் இல்லை. லட்சக்கணக்கான மக்கள் குப்பைக்கூளம் நிறைந்த பகுதிகளில் நெருக்கமாக வாழும்போது, வியாதிகள் பரவுவதற்கான வாய்ப்பு பெருமளவில் அதிகரிக்கிறது.
எதிர்காலத்தில் வரவிருக்கும் கொள்ளைநோய்கள், நெரிசல்மிகுந்த, வறுமை தலைவிரித்தாடுகின்ற மாநகரங்களில் மட்டுமே வரும் என்று இது அர்த்தப்படுத்துகிறதா? ஆர்கய்வ்ஸ் ஆஃப் இன்டர்நல் மெடிசின் என்ற பத்திரிகை இவ்வாறு பதிலளிக்கிறது: “மிதமிஞ்சிய வறுமை, நிலையற்ற பொருளாதாரம் மற்றும் அவற்றின் பாதிப்புகளை உடைய சிறுசிறு துண்டுப்பகுதிகள், தொற்றுநோய்கள் செழித்தோங்குவதற்கு மிகவும் சாதகமான சூழ்நிலைகளை அளிக்கின்றன; அதோடு மீதமுள்ள மனிதவர்க்கத்தின் தொழில்நுட்பத்தையும் நசுக்கிவிடுகின்றன என்பதை நாம் உண்மையில் புரிந்துகொள்ள வேண்டும்.”
வியாதிகளை ஒரு பகுதியில் மட்டுமே கட்டுப்படுத்திவைப்பது எளிதல்ல. பெரும்பாலான மக்கள் எப்போதுமே இடம்விட்டு இடம் பயணம் செய்கின்றனர். ஒவ்வொரு நாளும் சுமார் பத்து லட்சம் ஆட்கள் சர்வதேச எல்லைகளை கடந்து செல்கின்றனர். ஒவ்வொரு வாரமும் பத்து லட்சம் ஆட்கள் செல்வந்த நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்குமிடையே பயணம் செய்கின்றனர். மக்கள் இடம்விட்டு இடம் மாறும்போது, சாவுக்கேதுவான நுண்ணுயிரிகளும் அவர்களோடுகூட பின்செல்லுகின்றன. த ஜெர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிகல் அசோஸியேஷன் குறிப்பிடுகிறபடி: “ஒரு நோய் திடீரென்று எந்த இடத்தில் தழைத்தோங்கினாலும்சரி, அது அநேக நாடுகளுக்கு, அதிலும் குறிப்பாக, சர்வதேச போக்குவரத்துக்கான பிரதான மையங்களாக இருக்கும் நாடுகளுக்கு, ஒரு அச்சுறுத்தலாக இப்போது கருதப்படவேண்டும்.”
இவ்விதமாக, 20-ம் நூற்றாண்டின் மருத்துவ முன்னேற்றங்களுக்கு மத்தியிலும்கூட, கொள்ளைநோய்கள் மனித உயிர்களை பெருவாரியாக காவு கொள்வது தொடர்கிறது; மேலும் அநேகர் இதைவிட மோசமானவை எதிர்காலத்தில் வருமென்று பயப்படுகிறார்கள். ஆனால் எதிர்காலத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது?
[பக்கம் 6-ன் படம்]
நுண்ணுயிர் கொல்லியை எதிர்க்கும் திறன்
அநேக தொற்றுநோய்கள் நுண்ணுயிர் கொல்லியை எதிர்க்கும் திறன் பெற்றிருப்பதால் அவற்றை சுகப்படுத்துவது மிகவும் கடினமானதாகி வருகிறது. இதுதான் நடக்கிறது: நுண்ணுயிரிகள் ஒரு நபரைத் தொற்றும்போது, அவை தொடர்ந்து பெருகுகின்றன, தங்களுடைய மரபுப் பண்புகளை தங்கள் சந்ததிகளுக்கும் கடத்துகின்றன. ஒவ்வொரு புதிய நுண்ணுயிரியின் உற்பத்தியிலும், திடீர்மாற்றத்திற்கான (mutation) வாய்ப்பு இருக்கிறது, அதாவது, அதன் இனப்பெருக்கத்தில் ஒரு இலேசான பிழை ஏற்பட்டு அந்தப் புதிய நுண்ணுயிரிக்கு ஒரு புதிய தனித்துவத்தை கொடுக்கிறது. அந்த நுண்ணுயிரி அது உற்பத்தியான அந்த மாறுபட்ட தன்மையால் தடுப்பு மருந்தை எதிர்ப்பதற்கான திறனை கொண்டிருப்பது மிகவும் குறைவே. ஆனால் நுண்ணுயிரிகள் நூறுகோடிக்கணக்கில் உற்பத்தி செய்கின்றன; சிலசமயங்களில், ஒரு மணிநேரத்திற்குள் மூன்று சந்ததியைப் பிறப்பித்துவிடுகின்றன. இதன் காரணமாக, நடக்கக்கூடாதது நடந்துவிடுகிறது; நுண்ணுயிர் கொல்லியால் கொல்லப்பட முடியாத ஒரு நுண்ணுயிரி தோன்றுகிறது.
எனவே நோய் தொற்றப்பட்ட நபர் ஒரு நுண்ணுயிர் கொல்லியை உட்கொள்ளும்போது, அதை எதிர்க்கமுடியாத நுண்ணுயிரிகள் துடைத்தழிக்கப்படுகின்றன, அந்த நபரும் நிச்சயமாகவே நன்றாக உணருகிறார். இருந்தபோதிலும் அந்த மருந்தை எதிர்க்கும் திறனுடைய நுண்ணுயிரிகள் தொடர்ந்து வாழ்கின்றன. ஆனால் இப்போது அவை இனிமேலும் தங்களுடைய உடன் நுண்ணுயிரிகளுடன் ஊட்டச்சத்துக்காகவோ இடத்திற்காகவோ போட்டியிடவேண்டிய அவசியம் இல்லை. அவை தடையில்லாமல் உற்பத்தியாகின்றன. ஒரேயொரு நுண்ணுயிரி மட்டுமே ஒரு நாளுக்குள்ளே 1.6 கோடிக்கும் அதிகமான நுண்ணுயிரிகளாக பெருகமுடிவதால், அந்த நபர் மீண்டும் வியாதிப்படுவதற்கு அதிக நேரம் ஆகாது. இருப்பினும், இப்போது, அந்த நுண்ணுயிர் கொல்லி பயனில்லாமல் போவதால், எதிர்ப்புத் திறனுடைய நுண்ணுயிரிகளின் சந்ததியால் அவனோ அவளோ தொற்றப்பட்டிருக்கிறார். இந்த நுண்ணுயிரிகள் மற்ற நபர்களையும்கூட தொற்றுகின்றன; காலப்போக்கில் மீண்டும் திடீர்மாற்றமடைந்து மற்ற நுண்ணுயிர் கொல்லிகளை எதிர்க்கத்தக்கதாகின்றன.
ஆர்கய்வ்ஸ் ஆஃப் இன்டர்நல் மெடிசின் என்ற பத்திரிகை அதன் தலையங்கக் கட்டுரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறது: “நுண்ணுயிரிகள், வைரஸ்கள், காளான்கள், ஒட்டுண்ணிகள் ஆகியவை நம்முடைய தற்போதைய நோயைத் தீர்க்கவல்ல மருத்துவ முறைகளை எதிர்ப்பதில் தீவிரமாக வளர்ந்துவருகின்றன; அதனால் மனிதர்கள் நுண்ணுயிர் உலகத்திற்கெதிரான போராட்டத்தில் தோல்வியடைந்துவிடுவார்களோ என்பதாக அல்ல, ஆனால் எப்போது தோல்வியடைவார்கள் என்பதையே சிந்திக்கவைக்கின்றன.”—சாய்வெழுத்துக்கள் எங்களுடையவை.
[பக்கம் 7-ன் படம்]
1976-லிருந்து இருக்கும் சில புதிய தொற்றுநோய்கள்
நோய்கள் முதலில்
வருடம் தோன்றியது அல்லது
கண்டறியப்பட்டது நோயின் பெயர் கண்டுபிடிக்கப்பட்ட இடம்
1976. படைவீரர்களின் நோய் (Legionnaires’ disease). ஐக்கிய மாகாணங்கள்
1976. கிரிப்டோஸ்போரிடியோஸிஸ். ஐக்கிய மாகாணங்கள்
1976. இபோலா இரத்தப்போக்கு காய்ச்சல் (Ebola hemorrhagic fever). ஜயர்
1977. ஹான்டா வைரஸ் (Hantaan virus). கொரியா
1980. ஹெப்படைட்டஸ் டி (டெல்டா). இத்தாலி
1980. ஹியூமன் டி-செல் லிம்போடிராபிக் வைரஸ் 1
Human T-cell lymphotropic virus . ஜப்பான்
1981. எய்ட்ஸ். ஐக்கிய மாகாணங்கள்
1982. இ. கோலி O157:H7 (E. coli O157:H7). ஐக்கிய மாகாணங்கள்
1986. கால்நடை சார்ந்த உள்துளை மூளை வீக்கம்*
(Bovine spongiform encephalopathy). ஐக்கிய அரசு
1988 சால்மொனெல்லா என்டெரிடிடிஸ் PT4
(Salmonella enteritidis PT4) ஐக்கிய அரசு
1989. ஹெப்படைட்டஸ் சி. ஐக்கிய மாகாணங்கள்
1991. வெனிசுவேல இரத்தப்போக்கு காய்ச்சல். வெனிசுவேலா
1992. விப்ரியோ காலரா O139 (Vibrio cholerae O139). இந்தியா
1994. பிரேஸிலிய இரத்தப்போக்கு காய்ச்சல். பிரேஸில்
1994. ஹியூமன் அண்ட் எகிய்ன் மார்பிலிவைரஸ்
(Human and equine morbillivirus). ஆஸ்திரேலியா
*மிருகங்களில் மட்டுமே. மூலம்: WHO
[பக்கம் 8-ன் படம்]
பழைய வியாதிகள் திரும்பி வருகின்றன
காசநோய்: இந்தப் பத்தாண்டுகளில் மூன்று கோடிக்கும் மேலான மக்கள் காசநோயால் இறப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் இந்நோய்க்கு அளிக்கப்பட்ட திறனற்ற சிகிச்சைமுறையால், மருந்தை எதிர்க்கும் காசநோய் இப்போது உலக அளவில் அச்சுறுத்தலாக இருக்கிறது. ஒரு சமயத்தில் இந்த நுண்ணுயிரிகளை அறவே அழித்த மருந்துகளை இதன் சில வகைகள் தற்போது எதிர்க்கின்றன.
மலேரியா: ஒவ்வொரு ஆண்டும் 50 கோடி ஆட்கள் வரைக்கும் அல்லல்படுத்தும் இந்நோய், 20 லட்சம் ஆட்களைக் கொல்லுகிறது. மருந்துகளை பயன்படுத்த தவறுவதோ துர்ப்பிரயோகிப்பதோ இதை கட்டுப்படுத்துவதற்கு முட்டுக்கட்டையாய் உள்ளது. இதன் விளைவாக, ஒரு சமயத்தில் மருந்துகளால் கொல்லப்பட்ட மலேரியா ஒட்டுண்ணிகள் இன்று எதிர்க்கும் சக்தி பெற்று திகழ்கின்றன. கொசுக்கள் பூச்சிக்கொல்லிகளை எதிர்க்கும் திறன் பெற்று உலவுவதால் இந்தப் பிரச்சினை இன்னும் சிக்கலாகியுள்ளது.
காலரா: காலரா ஒவ்வொரு ஆண்டும் 1,20,000 மக்களை பெரும்பாலும் ஆப்பிரிக்காவில் உள்ளவர்களைக் கொல்லுகிறது; அங்கு கொள்ளைநோய்கள் அதிக பரவலாகவும் மிக அடிக்கடியும் ஏற்படுகின்றன. தென் அமெரிக்காவில் பத்தாண்டுகளாக அறியப்படாதிருந்த காலரா 1991-ல் பெருவைத் தாக்கி, அதுமுதற்கொண்டு அந்தக் கண்டம் முழுவதுமாக பரவியுள்ளது.
டெங்கு: கொசுக்களால் பரவும் இந்த வைரஸ் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி மக்களை அல்லல்படுத்துகிறது என்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. 1995-ல் லத்தீன் அமெரிக்காவிலும் கரிபியனிலும் 15 ஆண்டுகளில் ஏற்பட்டவற்றிலே மிக மோசமான டெங்கு கொள்ளைநோய் அங்குள்ள குறைந்தபட்சம் 14 நாடுகளை பீடித்தது. நகரங்களில், ஜனத்தொகை பெருகுவதாலும் டெங்கு நோய் கிருமிகளை கொண்டுசெல்லும் கொசுக்கள் பரவுவதாலும், நோய் தொற்றியுள்ள திரளான மக்களின் நடமாட்டத்தாலும் டெங்கு கொள்ளைநோய் அதிகரிக்கிறது.
டிப்தீரியா: 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான நோய்தடுப்பு திட்டங்கள் தொழில்வளமிக்க நாடுகளில் இந்நோயை அரிதான ஒன்றாக ஆக்கின. இருப்பினும், 1990 முதற்கொண்டு, டிப்தீரியா கொள்ளைநோய் கிழக்கு ஐரோப்பாவிலுள்ள 15 நாடுகளிலும் முன்னாள் சோவியத் மக்களிலும் மேலோங்கியிருக்கிறது. இந்த நோய் தொற்றியவர்களில் நான்கு பேருக்கு ஒருவர் என்ற கணக்கில் இறந்து போனார்கள். 1995-ன் முதற்பாதியில், சுமார் 25,000 நோயாளிகள் இருப்பதாக அறிக்கை செய்யப்பட்டது.
நெறிகட்டு பிளேக்: 1995-ல் இந்த பிளேக்கால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கை குறைந்தது 1,400 பேர்களாவது இருந்திருப்பார்கள் என்று உலக சுகாதார அமைப்புக்கு (WHO) அறிக்கை செய்யப்பட்டது. ஐக்கிய மாகாணங்களிலும் மற்ற இடங்களிலும், பத்தாண்டுகளாக பிளேக் நோய் இல்லாத பகுதிகளிலும்கூட இந்நோய் பரவியுள்ளது.
[படத்திற்கான நன்றி]
மூலம்: WHO
[பக்கம் 5-ன் படம்]
உடல்நலப் பராமரிப்புகளில் இருக்கும் முன்னேற்றங்களின் மத்தியிலும்கூட, தொற்றுநோய்கள் பரவுவதை மருத்துவ விஞ்ஞானத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை
[பக்கம் 7-ன் படம்]
மக்கள் குப்பைக்கூளம் நிறைந்த பகுதிகளில் நெருக்கமாக வாழும்போது நோய்கள் எளிதாக பரவுகின்றன
[பக்கம் 8-ன் படம்]
வளரும் நாடுகளிலுள்ள சுமார் 80 கோடி மக்களுக்கு உடல்நலத்தை பராமரிப்பதற்கு எந்த வழியும் இல்லை
[பக்கம் 19-ன் சிறு குறிப்பு]
தொற்றுநோய்கள் 1996-ல் மட்டும் ஐந்து கோடிக்கு மேற்பட்ட மக்களைக் கொல்லுவதன்மூலம், உலக முழுவதிலுமுள்ள இறப்புக்கு முக்கியக் காரணமாக விளங்குகின்றன
[படத்திற்கான நன்றி]
WHO போட்டோ J. Abcede