உலகை கவனித்தல்
தூய்மைக்கேடும் குழந்தைப்பருவ புற்றுநோயும்
இங்கிலாந்து நாட்டுப் பிள்ளைகள் 22,400 பேரை வைத்துச் செய்யப்பட்ட 27 ஆண்டு ஆய்வு ஒன்றை பகுப்பாய்வு செய்த பிறகு, தூய்மைக்கேடு தோன்றுவதற்கு காரணமான பகுதியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்திற்குள் பிறந்திருந்த பிள்ளைகள், மற்ற பிள்ளைகளைக் காட்டிலும் வெள்ளணுப்புற்று நோயாலும் (leukemia) மற்ற குழந்தைப்பருவ புற்றுநோயாலும் இறக்கும் அபாயம் 20 சதவீதம் அதிகமாக இருந்ததென கொள்ளைநோயியல் நிபுணர்களின் ஒரு குழு கண்டுபிடித்தது. காற்றில் பரவும் மாசுப்பொருட்களுக்கு தற்காப்பின்றி இருப்பதே குழந்தைப்பருவ புற்றுநோயாளிகள் அதிகரிப்பதற்கு “மிகவும் சாத்தியமான காரணம்” என்று லண்டனின் த டைம்ஸ் குறிப்பிடுகிறது. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், ஸ்டீல் தொழிற்சாலைகள், சிமென்ட் தொழிற்சாலைகள் போன்ற தொழில்துறை நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கேசோலின் புகையோ, மற்ற ஆவியாகிற கரிம வேதியல் பொருட்களோதான் இதற்கு காரணமான மாசுப்பொருட்களாக தோன்றுகிறது. நெடுஞ்சாலைகளும் ரயில் பாதைகளும் இருக்கும் இடத்திலிருந்து நாலு கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்திற்குள்ளே பிறந்த பிள்ளைகள் புற்றுநோயால் இறப்பது அதிகரித்து வருகிறது என்றும் அந்த ஆய்வு அறிக்கை செய்கிறது. கேசோலினும் டீசல் எரிபொருட்களுமே குற்றஞ்சாட்டப்பட வேண்டியவை என்று அந்த அறிக்கையின் எழுத்தாளர்கள் சொல்கின்றனர்.
பிரேஸிலில் மதம்
“99 சதவீத பிரேஸில் மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது” என்று ஒரு சமீபத்திய சுற்றாய்வு காட்டுகிறதென இஎன்ஐ புல்லட்டின் அறிக்கை செய்கிறது. கிட்டத்தட்ட 2,000 மக்களை வைத்து செய்யப்பட்ட சுற்றாய்வின்படி, 72 சதவீத மக்கள் தங்களை கத்தோலிக்கரென்று உரிமை பாராட்டினர்; 11 சதவீத மக்கள் தங்களை புராட்டஸ்டண்டினரென்று சொல்லிக் கொண்டனர்; 9 சதவீத மக்களோ குறிப்பிட்ட எந்த மதத்தையும் சேர்ந்தவர்களாக தங்களை சொல்லிக் கொள்ளவில்லை. இவர்களைத் தவிர மற்றவர்கள் பிரேஸில் நாட்டு மதங்களையும் வூடூ மதங்களையும் பின்பற்றினர். “கடந்த வாரயிறுதியில் சர்ச்சுக்கோ ஆராதனைக் கூடத்துக்கோ சென்றனரா என்று கேட்டபோது 57 சதவீத மக்கள் செல்லவில்லை என்பதாக பதிலளித்தனர்” என இஎன்ஐ சொல்கிறது. 44 சதவீத மக்கள் மட்டுமே நித்தியகால தண்டனையில் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். 69 சதவீத பிரேஸில் மக்கள் பரலோக வாழ்க்கையில் நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தபோதிலும், 32 சதவீதத்தினர் மட்டுமே அங்கு செல்வதை எதிர்பார்க்கின்றனர்.
ரிமோட் கண்ட்ரோல் யார் கையில்?
இத்தாலியில், EURISPES-ல் (சமூகம், அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக அறிவியல் ஆய்வு நிலையம்) உள்ள ஆராய்ச்சியாளர்கள் டிவி பார்க்கும் பழக்கத்தின்மீது செய்யப்பட்ட ஒரு ஆய்வின் முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டனர். கிட்டத்தட்ட 2,000 இத்தாலிய குடும்பங்கள் பேட்டிகாணப்பட்டன. அவர்களிடம் கேட்கப்பட்ட மற்ற கேள்விகளோடுகூட, குடும்பத்தில் டிவியின் ரிமோட் கண்ட்ரோலை பெரும்பாலும் யார் இயக்குவது என்ற கேள்வியும் கேட்கப்பட்டது; ரிமோட் கண்ட்ரோலை குடும்பத்தின் நவீன கால செங்கோல் என்பதாக ஒரு செய்தித்தாள் விவரித்திருந்தது. பெரும்பாலான வீடுகளில் தகப்பன் தான் இயக்குவார் என்பதாக சொல்லப்பட்டது. சேனல்களை மாற்றுவதற்கான முடிவுகளை செய்வதில் பிள்ளைகள் இரண்டாவது இடத்தை வகித்தனர். குடும்பத்தில் ரிமோட் கண்ட்ரோலை வைத்திருப்பதற்கான அதிகாரப் போட்டியில் தாய் கடைசி இடத்தைப் பெற்றார்.
பருவவயது பாலுறவு
வீக்என்ட் கன்கார்ட் என்ற நைஜீரிய நாட்டு செய்தித்தாளின்படி, “உலகிலேயே, பெருமளவு பாலுணர்வு வேட்கை மிக்கவர்கள் நைஜீரியாவிலுள்ள வளரிளமைப் பருவத்தினரே” என்று ஒரு சமீபத்திய ஆய்வு கண்டுபிடித்திருக்கிறது. 14-க்கும் 19-க்கும் இடைப்பட்ட வயதிலுள்ள பையன்களில் சுமார் 68 சதவீதத்தினரும் பெண்களில் 43 சதவீதத்தினரும் “பூப்புப் பருவம் தொடங்கிய கொஞ்ச காலத்திலேயே” உடலுறவில் ஈடுபட்டதாக ஒத்துக்கொண்டனர். இது அநேக தேவையற்ற கருத்தறித்தலுக்கு வழிநடத்தியிருக்கிறது. “நைஜீரியாவில் 19-க்கும் குறைவான வயதில் இறந்த இளம் பெண்களின் மொத்த எண்ணிக்கையில் 71 சதவீதம் கருக்கலைப்புச் சிக்கல்களோடு தொடர்புள்ளவை” என மற்றொரு ஆய்வு காட்டுவதாக கன்கார்ட் கூறுகிறது.
கை கழுவுவதில் பிரச்சினை
பிரெஞ்சு மருத்துவ செய்தித்தாளான லா கோட்டிட்யான் டியூ மேடாசன்-ல் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை, அதிகரிப்பதைப் போலத் தோன்றும் ஒரு கவலைக்கிடமான போக்கை கவனத்திற்கு கொண்டுவந்தது; அதாவது, சாப்பிடுவதற்கு முன்போ, கழிவறையைப் பயன்படுத்திய பின்போ கைகளை கழுவாமல் இருப்பதே. டாக்டர் ஃபிரேடேரிக் சால்ட்மான் சொல்வதன்படி, தனிப்பட்ட சுகாதாரத்தோடு சம்பந்தப்பட்ட இந்த எளிய செயலைச் செய்யத் தவறுவது உணவுசார்ந்த மிகப்பெரிய உடல்நலப் பிரச்சினையாக இருக்கிறது; இது, விரிவாகப் பரவியுள்ள பிரச்சினையாகவும் தோன்றலாம். அந்தக் கட்டுரை மேற்கோள் காட்டிய ஒரு ஆய்வறிக்கையின்படி, இங்கிலாந்து நாட்டு மது அருந்தகம் ஒன்றில் நிலக்கடலைகள் இருந்த கிண்ணங்களில் 12 வித்தியாசப்பட்ட ஆட்களின் சிறுநீர் சுவடுகள் இருந்ததாக கண்டறியப்பட்டது. அமெரிக்க பள்ளி ஒன்றில் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வு, பிள்ளைகள் ஒழுங்காக கை கழுவுவதை ஒரு ஆசிரியர் மேற்பார்வை செய்ததால் பள்ளிக்கு, செரிமானக் கோளாறுகளால் வராத பிள்ளைகளின் எண்ணிக்கையை 51 சதவீதமாகவும் சுவாசக் கோளாறுகளால் வராதவர்களின் எண்ணிக்கையை 23 சதவீதமாகவும் குறைத்தது என வெளிப்படுத்தியது. சுகாதாரத்தின் இத்தகைய அடிப்படை சட்டங்களை பிள்ளைகளுக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே கற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை அக்கட்டுரையின் முடிவுரை அழுத்திக் கூறுகிறது.
வளர்ந்துவரும் பொருளாதாரமும் வறுமையும்
உலகளாவிய பொருளாதாரம் 1975-ம் ஆண்டிலிருந்து 1985-ம் ஆண்டு வரையாக 40 சதவீதமாக வளர்ந்திருந்தபோதிலும், “உலகமுழுவதிலுமுள்ள ஏழை மக்களின் எண்ணிக்கை 17 சதவீதமாக அதிகரித்திருந்தது” என்பதாக மனித உரிமைக்கான ஹை கமிஷனரின் அலுவலகத்திலிருந்து வெளிவரும் செய்தி வெளியீடான HCHR நியூஸ் குறிப்பிடுகிறது. கடந்த பத்தாண்டுகளில் அல்லது அதற்கு முன்பிருந்த ஆண்டுகளைக் காட்டிலும் இன்று 89 நாடுகளில் மக்கள் மோசமான பொருளாதார நிலையில் இருக்கின்றனர். 70 வளரும் நாடுகளில், ஆட்களின் வருமான நிலை, இருபது வருடங்களுக்கோ சிலருடைய விஷயங்களில் முப்பது வருடங்களுக்கோ முன்பு இருந்ததைக் காட்டிலும்கூட குறைவாகவே இருக்கிறது. HCHR நியூஸ்-ன் முடிவுரை சொல்லுகிறபடி, பொருளாதார வளர்ச்சி “மிகக் குறைவான நாடுகளுக்கே” பயனளித்திருக்கிறது.
இத்தாலியில் பாதுகாப்பற்ற கட்டிட அமைப்புகள்
கடந்த நூற்றாண்டில், இத்தாலியில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி 1,20,000-க்கும் அதிகமான உயிர்களைப் பறித்துள்ளது. இருந்தபோதிலும், சுமார் 2.5 கோடி இத்தாலியர்கள் வாழும் பகுதிகளில் “64 சதவீத கட்டிடங்கள் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்படும் நிலையிலிருக்கின்றன” என்று கோரியரே டேல்லா சேரா அறிக்கை செய்கிறது. பேரழிவு ஏற்படுகையில் அவசரகால மையங்களாகும் இடங்களான மருத்துவமனைகள், தீயணைப்பு நிலையங்கள், இன்னும்பிற கட்டிடங்கள் பாதுகாப்பற்ற கட்டிட அமைப்பைக் கொண்டுள்ளன. பூமியின் அமைப்பியலாலும் தொழிற்சாலை பேரழிவுகளாலும் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 7,00,000 கோடி லையர் (400 கோடி டாலர், ஐ.மா.) செலவழிக்கப்படுகிறது. “பேரழிவுகளுக்கு பின்பு செலவழிக்கப்படும் இத்தகைய பெரும் தொகைகள் பெரும்பாலும் . . . இதேவிதமான பாதுகாப்பற்ற அமைப்பை [கட்டடங்களை] மீண்டும் கட்டுவதற்கும் அதுவும் அதே அபாயம் மிகுந்த இடங்களில் கட்டுவதற்குமே பயன்படுத்தப்படுகின்றன.”
இரத்தமும் ஹெச்ஐவி நோய்த்தொற்றும்
எய்ட்ஸை கொண்டுவரும் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 2.2 கோடி மக்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர். “வளரும் நாடுகளில் ஏற்படும் 10 சதவீதம் வரையான புதிய ஹெச்ஐவி நோய்த்தொற்றுக்கு இரத்தமேற்றுதலே காரணம்” என லண்டனை சார்ந்த செய்தி நிறுவனமான பானோஸ் அறிக்கை செய்கிறது. அநேக நாடுகளில், ஹெச்ஐவிக்கான ஆய்வக பரிசோதனைகள் முழுமையாக நம்பமுடியாதவையாக இருப்பதால், அளிக்கப்படும் இரத்தம் பாதுகாப்பானதாக இல்லை. உதாரணமாக, பாகிஸ்தானிலுள்ள அனைத்து இரத்தவங்கிகளிலும் பாதிக்கும் குறைவானவற்றிலேயே ஹெச்ஐவி ஸ்கிரீனிங் இயந்திரம் இருக்கிறது. அதன் விளைவாக, அங்கு ஏற்படும் 12 சதவீதமான அனைத்து ஹெச்ஐவி நோய்த்தொற்றுக்கும் இரத்தமேற்றுதலே காரணமாயிருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு எய்ட்ஸ் நோயாளி முதலில் கண்டறியப்பட்டது முதற்கொண்டு, உலகமுழுவதும் கிட்டத்தட்ட மூன்று கோடி மக்கள், இவ்வியாதியைத் தோற்றுவிக்கும் வைரஸான ஹெச்ஐவியைப் பெற்றிருக்கின்றனர்.
கடவுளென்றாலே நடுக்கம்
சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில், அழுத்தத்தால் அவதிப்படும் பிரேஸில் நாட்டு பிள்ளைகள் பேட்டி காணப்பட்டனர். இஎன்ஐ புல்லட்டின் குறிப்பிடுகிறபடி பெரும் சதவீதமான பிள்ளைகள் கடவுள் மீதுள்ள அதீத பயத்தின் காரணமாக வேதனையை அனுபவிக்கின்றனர் என்பதாக கண்டறியப்பட்டது. 25 சதவீத பிள்ளைகள் குடும்ப பிரச்சினையின் காரணத்தாலோ உறவினர் ஒருவருடைய இறப்பினாலோ மன அழுத்தத்தை அனுபவித்த போதிலும், 75 சதவீத பிள்ளைகள் தண்டிப்பதற்கென்றே உள்ள பழிவாங்கும் எண்ணமுள்ளவராக கடவுளை காண்பதால் வேதனைக்கான அறிகுறிகளை உடையோராய் இருந்தனர். அந்த ஆய்வு, “கடவுள் அவர்களுக்கு உதவி செய்வாரென்றும் அவர்களைப் புரிந்துகொள்வாரென்றும் தங்கள் பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டுமென்று பெற்றோர்களை துரிதப்படுத்தியது” என்று இஎன்ஐ அறிக்கை செய்கிறது.
யானை பரிபாஷை
யானையின் குரல் நாண்கள் அவ்வளவு பெரிதாக இருப்பதால், அவை பிளிறும் சத்தத்தின் அடிப்படை ஒலி அலைகள் நொடிக்கு இருபது அதிர்வுகளாகவோ அதற்கும் குறைவாகவோ இருக்கின்றன; இது மனிதர்களின் கேட்கும் திறனுக்கும் மிகக் குறைவுதான். இத்தகைய தாழ்வான தொனியிலான உறுமல்கள் வெகு தொலைவுக்கும்கூட எட்டுகின்றன; யானைகள் அவற்றை ஒன்றரைக் கிலோமீட்டர் தூரத்திலிருந்தும்கூட புரிந்துகொள்ளமுடியும். அவற்றால் வேறுபட்ட 150 யானைகளின் பிளிறல்களையும் அடையாளங்கண்டுகொள்ள முடியும்; அவை தங்களுடைய குடும்பத்தைச் சார்ந்த மற்றும் தங்கள் கூட்டத்தோடு நெருக்கமாக உள்ள மற்ற யானைகளின் பிளிறலைக் கேட்டு அதற்கேற்றவாறு செயல்படுகின்றன. சாதாரணமாக, யானைகள் அந்நிய யானைகளின் சத்தங்களை புறக்கணிக்கின்றன அல்லது அவற்றை கேட்டு கோபாவேசம் அடைகின்றன. பிரிட்டனைச் சேர்ந்த சசிக்ஸ் யுனிவர்சிட்டியின் மிருக குண ஆராய்ச்சியாளரான டாக்டர் கரன் மகோம், கென்யாவிலுள்ள அம்போசெல்லி தேசிய பூங்காவில் தன்னுடைய ஆராய்ச்சிகளை நடத்திய பிறகு “குரல்வளை பரிபாஷையின் இத்தகைய விரிவான தொடர்புமுறை மற்ற எந்தப் பாலூட்டிகளிடையேயும் காணப்படுவதில்லை” என்று விளக்கியதாக த டைம்ஸ் ஆஃப் லண்டன் அறிக்கை செய்கிறது.