கவலையை—மேற்கொள்ள முடியுமே!
“வாழ்க்கை என்றால் எப்போதும் கவலை இருக்கத்தான் செய்யும். எப்படி கவலையை விரட்டியடிப்பது என்று முயலுவதைவிட, கவலை வரும்போது எவ்விதம் செயல்படுகிறோம் என்பதை நாம் உண்மையில் கவனிக்க வேண்டும்.”—பிரபல ஹெல்த் எழுத்தாளர் லியான் சைட்டாஃப்.
“கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று” பைபிள் முன்னறிவித்துள்ளது. நாம் அந்தக் கடைசி நாட்களில்தான் வாழ்கிறோம் என்பதை ஆதாரம் தெளிவாக காட்டுகிறது. ஏனென்றால் அந்தத் தீர்க்கதரிசனம் சொன்னதற்கு ஏற்ப மக்கள், “வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும்” இருக்கிறார்கள்.—2 தீமோத்தேயு 3:1-5.
எனவேதான், கொஞ்சமாவது அமைதியாக இருக்கலாம் என்றால் முடிவதில்லை! அமைதியாக வாழ முயற்சி செய்யும் ஆட்கள்கூட பாதிக்கப்படுகிறார்கள். ‘நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகம்’ என்று எழுதினார் சங்கீதக்காரன் தாவீது. (சங்கீதம் 34:19; ஒப்பிடுக: 2 தீமோத்தேயு 3:12.) ஆனாலும்கூட, கவலையில் ஒரேயடியாக மூழ்கிவிடாதபடி, அதிலிருந்து வெளிவர நீங்கள் நிறைய செய்யலாம். கீழ்க்காணும் ஆலோசனைகளை கவனிக்கவும்.
உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்
என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை கவனிக்கவும். புரோட்டீன்கள், பழங்கள், காய்கறிகள், தானிய வகைகள், பருப்புகள், பால் பொருட்கள் ஆகியவையே ஆரோக்கியமான உணவில் அடங்கும். தானியங்களை மாவாக அரைக்கும்போது சத்துக்கள் வீணாகாமல் பார்த்துக்கொள்ளவும். கொழுப்பு செரிந்துள்ள பொருட்களில் கவனம் தேவை. உப்பு, சர்க்கரை, மதுபானம், கேஃபின் ஆகியவற்றை எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதையும் கவனிக்க வேண்டும். நீங்கள் சாப்பிடும் உணவின் தரத்தை அதிகரித்து கொள்ளுங்கள், அப்போது டென்ஷன் தொல்லையும் உங்களை அவ்வளவாக பாதிக்காது.
உடற்பயிற்சி. “உடலுக்குப் பயிற்சி அளிப்பது நன்மைதரும்” என்று பைபிள் புத்திமதி அளிக்கிறது. (1 தீமோத்தேயு 4:8, NW) உண்மையில், மிதமாக உடற்பயிற்சி செய்யவேண்டும். ஆனால் தொடர்ந்து செய்வது முக்கியம். வாரத்திற்கு மூன்று தடவை பயிற்சி செய்யவேண்டும் என்று ஒருசிலர் பரிந்துரை செய்கிறார்கள். இவ்வாறு உடற்பயிற்சி செய்யும்போது இருதயம் பலம்பெறுகிறது, இரத்த ஓட்டம் சீரடைகிறது, கொழுப்புச்சத்து குறைகிறது, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளும் அவ்வளவாக இருக்காது. இவற்றையெல்லாம்விட, உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமாக இருக்கிறோம் என்ற உணர்வை வளர்க்கிறது. ஒருவேளை மும்முரமாக பயிற்சியில் ஈடுபடும்போது என்டார்பின்கள் சுரப்பதால் இத்தகைய உணர்வு ஏற்படலாம்.
போதுமான அளவுக்குத் தூங்கவும். தூக்கம் போதவில்லையென்றால் அதிக சோர்வு ஏற்பட்டு, டென்ஷனை சமாளிக்க உங்களிடமிருக்கும் திறனை குறைத்துவிடும். உங்களுக்கு தூங்குவதில் பிரச்சினை இருந்தால், இந்த நேரத்தில் படுக்கைக்குச் செல்லவேண்டும், காலையில் இந்த நேரத்தில் துயில் எழவேண்டும் என்று நேரத்தை ஒழுங்குபடுத்த முயற்சிசெய்யுங்கள். இரவுநேர தூக்கம் கெடாமலிருக்க, மதியவேளையில் அரைமணி நேரத்திற்குமேல் தூங்கவேண்டாம் என்று சிலர் சிபாரிசு செய்கிறார்கள்.
திட்டமிட்டு செயல்படுங்கள். தங்கள் நேரத்தை சரிவர திட்டமிட தெரிந்தவர்கள் கவலையை சமாளிப்பதில் சிறந்து விளங்குகின்றனர். திட்டமிடவேண்டுமென்றால் எந்தப் பொறுப்புக்கு முதலிடம் தரவேண்டும் என்பதை முதலில் நீங்கள் முடிவுசெய்து கொள்ளுங்கள். அடுத்ததாக, இவ்வாறு முடிவுசெய்யப்பட்ட பொறுப்புகளை மறக்காமல் செய்துமுடிக்க ஓர் அட்டவணையைத் தயாரித்துக்கொள்ளுங்கள்.—ஒப்பிடுக: 1 கொரிந்தியர் 14:33, 40 மற்றும் பிலிப்பியர் 1:10, NW.
மற்றவர்களிடம் நல்லவிதமாக நடந்துகொள்ளுங்கள்
உதவியை நாடுங்கள். கவலை நிறைந்த சந்தர்ப்பங்களில் யாருக்கெல்லாம் நண்பர்கள் இருக்கிறார்களோ அவர்களெல்லாம் ஒரேயடியாக கவலையில் மூழ்கிவிடாமல் ஓரளவுக்கு பாதுகாப்பாக உணர்கிறார்கள். நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரு நண்பரிடத்தில் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டித்தீர்த்தால் நிம்மதியாக இருக்கும். ஒரு பைபிள் பழமொழி இவ்வாறு சொல்கிறது: “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.”—நீதிமொழிகள் 17:17.
சண்டைகளை தீர்த்துவிடவும். “சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது” என்று எழுதினார் அப்போஸ்தலனாகிய பவுல். (எபேசியர் 4:26) ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்து தப்பிய 929 பேரைவைத்து ஒரு சுற்றாய்வு நடத்தப்பட்டது. கருத்து வேற்றுமைகள் வரும்போது கோபத்தை மனதுக்குள் பூட்டிவைப்பதைவிட அவற்றை உடனே சரிசெய்வது எவ்வளவு புத்திசாலித்தனம் என்ற உண்மை அந்தச் சுற்றாய்விலிருந்து தெரியவந்தது. பகைமையை அப்படியே நெஞ்சுக்குள் பூட்டிவைத்திருந்தவர்களுக்கு முதல் அட்டாக் வந்து பத்து வருடங்களுக்குள் இரண்டாம் அட்டாக் வந்து இறந்துவிடும் ஆபத்து, நிதானமாக இருப்பவர்களைவிட மூன்று மடங்கு அதிகம் இருந்தது. உண்மைதான், கோபம் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. இருந்தாலும்கூட, உணர்ச்சிசம்பந்தமாக எப்போதுமே எதையாவது எதிர்மறையாக நினைத்துக்கொண்டிருந்தால், அது உடம்பு முழுவதற்கும் டென்ஷன் ஹார்மோன்களை அனுப்புகிறது என்று இந்த ஆய்வை நடத்தியவர்கள் குறிப்பிட்டார்கள். “பொறாமையோ எலும்புருக்கி” என்கிறது நீதிமொழிகள் 14:30.
குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்குங்கள். சரியான கொள்கைகளை பிள்ளைகளின் மனங்களில் ஊன்றி வளர்ப்பதற்காக நேரத்தை ஒதுக்கவேண்டும் என்று இஸ்ரவேல பெற்றோர்களுக்கு கட்டளைக் கொடுக்கப்பட்டிருந்தது. (உபாகமம் 6:6, 7) இதன் விளைவாக உருவான பாசப்பிணைப்பு குடும்பத்தை பலப்படுத்த உதவியது. வருத்தகரமாக, அத்தகைய நிலைமையை இன்று காணமுடிவதில்லை. வேலைக்கு போகும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளோடு விளையாட ஒவ்வொரு நாளும் சராசரியாக 3.5 நிமிடங்களை மாத்திரம் செலவிடுகிறார்கள் என்று ஒரு சுற்றாய்வு காட்டியது. ஆனாலும், நீங்கள் கவலையில் இருக்கும்போது உங்கள் குடும்பத்திலிருந்து கிடைக்கும் உதவியும் ஆதரவும் இருக்கிறதே, அப்பப்பா, அவற்றை அளவிடவே முடியாது! “ஒருமித்த கருத்தும், உணர்ச்சி ரீதியில் பரஸ்பர ஆதரவும் உள்ள [குடும்பம் என்ற] ஒரு குழுவில், எந்தவித நிபந்தனையும் இன்றி உறுப்பினர் ஆகும் அரிய சந்தர்ப்பத்தை வழங்குவது குடும்பமே. இக்குழு உங்களை நன்றாக புரிந்துகொண்டுள்ளது, நீங்கள் எப்படி இருந்தாலும் உங்களை ஏற்றுக்கொள்கிறது. குழுவாக சேர்ந்து செயல்படுவது டென்ஷனை குறைப்பதற்கான சிறந்த வழியாகும்” என்று ஸ்ட்ரெஸைப் பற்றிய ஒரு புத்தகம் கூறுகிறது.
வாழ்க்கையில் சமநிலையோடு இருங்கள்
அளவோடு இருங்கள். ஒருவர் எப்போதுமே தன்னை உடல் ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் அளவுக்குமீறி வருத்திக்கொண்டால் ரொம்பவும் களைத்துபோய்விடுவார், ஒருவேளை மனச்சோர்வால் கஷ்டமும்படுவார். சமநிலையே இதற்கு ஓர் அளவுகோல். ‘பரத்திலிருந்து வரும் ஞானமோ . . . சாந்தம் [“நியாயமானதாக,” NW] உள்ளது” என்று சீஷனாகிய யாக்கோபு எழுதினார். (யாக்கோபு 3:17; ஒப்பிடுக: பிரசங்கி 7:16, 17 மற்றும் பிலிப்பியர் 4:5.) உங்கள் சக்திக்குமீறிய காரியங்களை செய்யும்படி வற்புறுத்தினால், முடியாது என்று சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்.
வேறொருவருடன் உங்களை ஒப்பிடாதீர்கள். கலாத்தியர் 6:4 இவ்வாறு குறிப்பிடுகிறது: “அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மை பாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்.” ஆம், வழிபாட்டு விஷயத்தில்கூட கடவுள் நம்மை சாதகமற்ற விதத்தில் ஒப்பிட்டுப்பார்த்து, நம்முடைய சக்திக்கு மிஞ்சி தரவேண்டும் என்று வற்புறுத்துவது கிடையாது. ‘நம்மிடத்தில் இல்லாததின்படியல்ல, நம்மிடத்தில் உள்ளவற்றிலிருந்து’ நாம் தரும் காணிக்கைகளையும், செய்யும் தியாகங்களையும் கடவுள் ஏற்றுக்கொள்கிறார்.—2 கொரிந்தியர் 8:12.
அக்கடா என்று ஓய்வெடுங்கள். இயேசு எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும், அவரும் அவருடைய சீஷர்களும் ஓய்வெடுக்க நேரத்தை ஒதுக்கினார். (மாற்கு 6:30-32) நிம்மதியாக ஓய்வெடுப்பது நல்லது என்பதை பிரசங்கி புத்தகத்தை தேவ ஆவியால் உந்தப்பட்டு எழுதியவரும் உணர்ந்தார். அவர் எழுதியதாவது: “நான் களிப்பைப் புகழ்ந்தேன்; புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை; சூரியனுக்குக்கீழே தேவன் அவனுக்குத் தந்த ஜீவகாலத்தில் அவன் பிரயாசத்தினால் அவனுக்கு நிலைக்கும் பலன் இதுவே.” (பிரசங்கி 8:15) சமநிலையோடு இன்பத்தை அனுபவிப்பது உடலுக்கு புத்துயிர் அளித்து, டென்ஷனை விரட்டியடிக்க உதவும்.
கவலையை சாதாரணமாய் நோக்குங்கள்
கவலைதரும் சூழ்நிலைகள் வரும்போது:
உங்களை கடவுள் நிராகரித்துவிட்டார் என்று உடனே முடிவுகட்டிவிடாதீர்கள். அன்னாள் என்ற விசுவாசமுள்ள ஒரு பெண்ணைப் பற்றி பைபிள் சொல்கிறது. அவர் பல வருடங்களாக மிகவும் “மனங்கசந்து” (“மிகவும் மனச்சோர்வுற்று,” ரிவைஸ்ட் ஸ்டாண்டர்ட் வர்ஷன்) இருந்தார். (1 சாமுவேல் 1:4-11) பவுல் மக்கெதோனியா வந்தபோது, “எல்லாப் பக்கங்களிலிருந்தும் மனவேதனை அடைந்தார்.” (2 கொரிந்தியர் 7:5, பையிங்டன்) இயேசு தம்முடைய மரணத்திற்கு முன், ‘மிகவும் வியாகுலப்பட்டார்.’ அவருக்கு அவ்வளவு அதிகமாக மன உளைச்சல் இருந்ததால், “அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.” a (லூக்கா 22:44) மேற்குறிப்பிட்ட இவர்கள் எல்லாரும் கடவுளின் உத்தம ஊழியர்களே. எனவே உங்களுக்கு துயரம் வரும்போது, கடவுள் உங்களை கைவிட்டுவிட்டார் என்ற உடனடி முடிவுக்கு வரவேண்டாம்.
உங்களது துயர்நிறைந்த சூழ்நிலைகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். பவுலுக்கு “மாம்சத்திலே ஒரு முள்” இருந்ததாகவும், அதை அவர் சகித்துக்கொண்டதாகவும் எழுதினார். உண்மைதான் அவருக்கு இருந்த உடல்நல பிரச்சினை மனத்துயரை தந்திருக்கும். (2 கொரிந்தியர் 12:7) ஆனாலும் சுமார் ஐந்து வருடங்கள் கழித்து அவரால் இப்படி சொல்ல முடிந்தது: “தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.” (பிலிப்பியர் 4:12, 13) பவுல் தன் ‘மாம்சத்தில் இருந்த முள்ளை’ விரும்பவில்லை. ஆனாலும் அதை பொறுத்துக்கொண்டதன் காரணமாக, கடவுள் அருளும் பலத்தின்பேரில் சார்ந்திருப்பது எப்படி என்ற பாடத்தைக் கற்றுக்கொண்டார்.—சங்கீதம் 55:22.
ஆன்மீகத்தை வளர்த்திடுங்கள்
கடவுளுடைய வார்த்தையை வாசித்து, மனதில் தியானம் செய்யுங்கள். “ஆவிக்குரியத் தேவையைக்குறித்து உணர்வுடையோர் மகிழ்ச்சியுள்ளவர்கள்” என்றார் இயேசு. (மத்தேயு 5:3, NW) கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதும் அதை மனதுக்குள் வைத்து ஆழமாக சிந்திப்பதும் முக்கியம். அநேக சந்தர்ப்பங்களில், வேதவாக்கியங்களை ஊக்கமாய் தேடும்போது, உற்சாகம் அளிக்கும் சரியான வார்த்தையை நாம் கண்டுபிடிப்போம். அதைக்கொண்டு அந்நாளை கடத்திவிடலாம். (நீதிமொழிகள் 2:1-6) “என் மனதில் கவலைகள் பெருகும்போது, என் உள்ளத்தை உமது [கடவுளின்] ஆறுதல் மகிழ்விக்கிறது” என்று சங்கீதக்காரன் எழுதினார்.—திருப்பாடல்கள் (சங்கீதம்) 94:19, பொது மொழிபெயர்ப்பு.
தவறாமல் ஜெபம் செய்யுங்கள். பவுல் இவ்வாறு எழுதினார்: “உங்கள் விண்ணப்பங்களை . . . தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும்.” (பிலிப்பியர் 4:6, 7) ஆம், சில நேரங்களில் “இயல்புக்கு மீறிய சக்தி” தேவைப்பட்டாலும்கூட, மனதை அலைக்கழிக்கும் நம் எண்ணங்களை, “தேவசமாதானம்” ஓர் எல்லைக்குள் கொண்டுவந்து, அவற்றை அமைதிப்படுத்தும்.—2 கொரிந்தியர் 4:7, NW.
கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் செல்லுங்கள். கிறிஸ்தவ கூட்டங்கள் நல் ஆதரவு கிடைக்கும் அமைப்புகளாக திகழ்கின்றன. “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரை ஒருவர் கவனித்து, . . . ஒருவருக்கொருவர் ஊக்கம் தாருங்கள்” என்று அங்குக் கூடிவருவோருக்கு அறிவுறுத்தப்படுகிறது. எனவே நல்ல காரணத்திற்காகவே ‘சபை கூடிவருதலை விட்டுவிடாமல்’ இருக்கும்படி முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு பவுல் கூறினார்.—எபிரெயர் 10:24, 25, NW.
அசைக்கமுடியாத நம்பிக்கை
ஏதோ ஓர் எளிய முறையை கையாண்டால் கவலை குறைந்துவிடும் என்று சொல்ல முடியாது. நிறைய சந்தர்ப்பங்களில் நம் சிந்திக்கும் முறையையே முதலில் அடியோடு மாற்ற வேண்டியிருக்கும். உதாரணத்திற்கு, ஒருவர் கவலைகளில் மூழ்கி திணராமல் இருக்க வேண்டுமென்றால், அத்தகைய கவலை தரக்கூடிய சந்தர்ப்பங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு புதிய வழிகளை அவர் கற்றுக்கொள்ள வேண்டும். சிலருடைய விஷயத்தில், கவலை எவ்வளவு அடிக்கடி வருகிறது, எந்த அளவுக்கு வருகிறது என்பதை பொருத்து சரியான மருத்துவ சிகிச்சையும் தேவைப்படலாம்.
தீமைதரும் கவலையே இல்லாத வாழ்க்கை இன்று யாருக்குமே கிடையாது என்பது உண்மையே. ஆனாலும், கடவுள் வெகுவிரைவில் தமது கவனத்தை மனிதர்களின் பக்கம் திருப்புவார் என்றும், என்ன நிலைமைகளால் அவர்களுக்கு தீமைதரும் கவலை உண்டாகிறது என்பதை பார்த்து அவற்றை நீக்கிவிடுவார் என்றும் பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. வெளிப்படுத்துதல் 21:4-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை.” அதன்பிறகு, உண்மையுள்ள மக்கள் பாதுகாப்போடு வாழ்வார்கள். மீகா என்ற தீர்க்கதரிசி இவ்வாறு முன்னுரைத்துள்ளார்: “அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.”—மீகா 4:4.
[அடிக்குறிப்புகள்]
a மன உளைச்சல் மிதமிஞ்சி இருக்கும்போது இரத்த வியர்வைகள் வரும் என்று அறிக்கை தெரிவிக்கிறது. உதாரணமாக ஹீமெட்டெட்ரோசிஸ் (hematidrosis) என்ற நிலையில் வியர்வையோடு கலந்து இரத்தமோ, இரத்த நிறமியோ அல்லது இரத்தம் கலந்த திரவமோ வரும். ஆனால், இவற்றுள் இதுதான் இயேசுவின் விஷயத்தில் நடந்தது என்று உறுதியாக கூற முடியாது.
[பக்கம் 10-ன் படம்]
ஆன்மீகத்தை வளர்த்துக்கொண்டால் அமைதியாக இருக்க உதவும்
[பக்கம் 11-ன் படம்]
உங்கள் உடம்பை பார்த்துக்கொண்டால் கவலை குறையும்
ஓய்வு
நல்ல உணவு
உடற்பயிற்சி