அதற்கு உண்மையிலேயே ஆரம்பம் இருந்ததா?
நட்சத்திரங்கள் மின்னும் இரவுநேர வானத்தை அண்ணாந்து பார்த்து ஆண்டாண்டு காலமாக அநேகர் வியப்படைந்திருக்கின்றனர். நமது வியத்தகு அண்டத்தின் எல்லையற்ற பரப்பும் அதன் அழகும் நம் புலன்களை ஸ்தம்பிக்க வைத்திருக்கின்றன. இதற்கு யார் அல்லது எது நியாயமான விளக்கமளிக்க முடியும்? அது ஏன் இங்கே இருக்கிறது? அது எப்போதுமே இருந்திருக்கிறதா, அல்லது அதற்கு ஓர் ஆரம்பம் இருந்ததா?
வானியல் பேராசிரியர் டேவிட் எல். பிளாக் இவ்வாறு எழுதினார்: “இந்த அண்டம் இப்போது இருப்பது போல எப்போதுமே இருந்திருக்கவில்லை—இதற்கு ஓர் ஆரம்பம் இருந்தது—இந்த உண்மை எல்லா சந்தர்ப்பங்களிலும் விரும்பி ஏற்றுக்கொள்ளப்படவில்லை.” ஆனால் சமீபகால ஆராய்ச்சிகளில் கிடைத்த அத்தாட்சி, இதற்கு உண்மையிலேயே ஓர் ஆரம்பம் இருந்தது என்பதை அண்டத்தை ஆராயும் பெரும்பாலானோரை நம்ப வைத்திருக்கிறது. “பொருளை எல்லா திக்குகளிலும் வெளிப்புறமாக உந்தித்தள்ளும் ஒரு பெரும் வெடிப்பினால் (big bang) இந்த அண்டம் உண்டானது என்ற முடிவுக்கே கிட்டத்தட்ட எல்லா வானியல் ஆராய்ச்சியாளர்களும் வருகின்றனர்” என 1997-ம் ஆண்டு யூ.எஸ்.நியூஸ் & உவர்ல்டு ரிப்போர்ட் அறிக்கை செய்தது.
பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட இந்த முடிவை பற்றி கொலம்பியா பல்கலைக்கழக வானியல் மற்றும் புவியியல் பேராசிரியர் ராபர்ட் ஜஸ்ட்ரோ இவ்வாறு எழுதினார்: “இந்தச் சம்பவம்—அதாவது, இந்த அண்டத்தின் திடீர் தோற்றம், அல்லது பிறப்பு—நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானப்பூர்வ உண்மையாக ஆகும் என்பதை வானியல் ஆராய்ச்சியாளர்களில் அநேகர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் தொலைநோக்கி வாயிலாக கூர்ந்து ஆராய்ந்தது அவர்களை அந்த முடிவுக்கு வழிநடத்தியிருக்கிறது.”
“இந்த அண்டத்தின் திடீர் பிறப்பு” உண்மையிலேயே “நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானப்பூர்வ உண்மையா”? இது விஞ்ஞானப்பூர்வ உண்மையே என்ற முடிவுக்கு வழிநடத்திய வரலாற்று அத்தாட்சியை நாம் சற்று ஆராய்வோமாக.
ஆரம்பம் இருந்ததற்கு அத்தாட்சி
இந்த அண்டம் விரிவடைந்துகொண்டோ அல்லது சுருங்கிக்கொண்டோ வருகிறது என்பதை 1916-ல் பிரசுரிக்கப்பட்ட ஆல்பர்ட் ஐயன்ஸ்டீனின் சார்புக் கொள்கை (relativity) மறைமுகமாக குறிப்பிட்டது. ஆனால் இந்த அண்டம் எந்தவித மாற்றமுமின்றி எப்போதும் நிலையாக இருக்கிறது என ஏற்றுக்கொள்ளப்பட்ட அப்போதைய நோக்குநிலைக்கு முற்றிலும் முரணாக இக்கருத்து இருந்தது. இந்த அண்டம் நிலையாகத்தான் இருக்கிறது என ஐயன்ஸ்டீனும் அச்சமயத்தில் நம்பினார். ஆகவே, “அண்டப் படைப்புக் கோட்பாட்டு மாறிலி” (cosmological constant) என்றழைக்கப்படும் எண்ணை அவருடைய கணக்குகளில் அறிமுகப்படுத்தினார். அண்டம் நிலையானது, மாறாதது என்று அச்சமயம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நம்பிக்கையோடு தன்னுடைய கொள்கையை ஒத்திசைவிக்கும் முயற்சியில் இந்த மாற்றத்தை செய்தார்.
ஆனால், 1920-களில் அத்தாட்சிகள் குவிந்துகொண்டே வந்தன; அது, சார்புக் கொள்கையில் தான் செய்த மாற்றம் ‘மாபெரும் தவறு’ என ஐயன்ஸ்டீன் அறிக்கையிடும்படி செய்தது. கலிபோர்னியோவிலுள்ள மௌண்ட் வில்ஸனில் நிறுவப்பட்ட 254 சென்டி மீட்டர் தொலைநோக்கி இப்படிப்பட்ட அத்தாட்சிக்கு ஆதாரமாக அமைந்தது. 1920-களில், அந்தத் தொலைநோக்கியைப் பயன்படுத்தி செய்யப்பட்ட ஆராய்ச்சிகள், இந்த அண்டம் விரிவடைந்துகொண்டே வருகிறது என்பதை நிரூபித்தன!
முன்பு, மிகப் பெரிய தொலைநோக்கிகளால் நம்முடைய பால்வீதி மண்டலத்திலுள்ள (Milky Way galaxy) தனிப்பட்ட நட்சத்திரங்களை மட்டுமே அடையாளம் காண முடிந்தது. நெபுலாக்கள் என அறியப்பட்ட மங்கலான ஒளி திட்டுகளை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தது உண்மைதான். ஆனால் இவை நம்முடைய நட்சத்திர மண்டலத்திற்குள்ளேயே (galaxies) இருக்கும் சுழிகள் போன்ற வாயு பொருள்கள் என பொதுவாக கருதப்பட்டன. இருப்பினும், அதிக சக்திவாய்ந்த மௌண்ட் வில்ஸன் தொலைநோக்கியைப் பயன்படுத்தி, இந்த நெபுலாக்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட நட்சத்திரங்களை எட்வின் ஹப்பிள் அடையாளம் காட்டினார். நம்முடைய பால்வீதி மண்டலத்தைப் போன்ற நட்சத்திர மண்டலங்களே இந்த மங்கலான ஒளி திட்டுகள் என கடைசியில் அவை அடையாளம் கண்டுகொள்ளப்பட்டன. உண்மையில், 5,000 கோடி முதல் 12,500 கோடி வரையிலான நட்சத்திர மண்டலங்கள் இருப்பதாக இப்பொழுது கணக்கிடப்பட்டுள்ளது; ஒவ்வொரு நட்சத்திர மண்டலத்திலும் கோடானுகோடி நட்சத்திரங்கள் இருக்கின்றன!
இந்த நட்சத்திர மண்டலங்கள் நம்மைவிட்டு விலகிக்கொண்டே செல்கின்றன, அவை எந்தளவுக்கு அதிக தூரம் தள்ளி இருக்கின்றனவோ அந்தளவுக்கு வேகமாக விலகிச் செல்கின்றன என்பதையும் 1920-களின் பிற்பகுதியில் ஹப்பிள் கண்டுபிடித்தார். நிறமாலை காட்டியை (spectrograph) பயன்படுத்தி அவை விலகிச் செல்லும் வேகத்தை வானியல் ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள். இந்த நிறமாலை காட்டி நட்சத்திர கூட்டங்களிலிருந்து வரும் ஒளியின் நிறமாலையை கணக்கிடுகிறது. தூரமான நட்சத்திரங்களிலிருந்து வரும் ஒளி ஒரு முப்பட்டகம் வழியே செலுத்தப்படுகிறது; முப்பட்டகம் அந்த ஒளியை பல்வேறு நிறக் கூறுகளாக சிதறச்செய்கிறது.
காண்பவரிடமிருந்து விலகிச் செல்லும் பொருளிலிருந்து வரும் ஒளி சிவப்பாக (reddish) இருக்கிறது, அது சிகப்பொளியை நோக்கி இடப்பெயர்ச்சி செய்வது ரெட்ஷிப்ட் (redshift) என அழைக்கப்படுகிறது. மறுபட்சத்தில், நெருங்கிவரும் பொருளிலிருந்து வரும் ஒளி, நீலநிறத்தை நோக்கி இடப்பெயர்ச்சி செய்வது புளூஷிப்ட் (blueshift) என அழைக்கப்படுகிறது. அருகிலுள்ள சில நட்சத்திர மண்டலங்களைத் தவிர, அறியப்பட்ட அனைத்து நட்சத்திர மண்டலங்களிலிருந்து வரும் ஒளிக்கோடுகள் சிகப்பலையை நோக்கியே இடம் பெயருகின்றன (redshift) என்பது குறிப்பிடத்தக்கதாகும். சீரான விதத்தில் இந்த அண்டம் விரிவடைந்து வருகிறது என்பதை விஞ்ஞானிகள் இவ்வாறு உறுதிப்படுத்துகின்றனர். நிறமாலை காட்டியில் எந்தளவிற்கு ஒளிக்கோடுகள் சிகப்பொளியை நோக்கி இடப்பெயர்ச்சி செய்கின்றன என்பதை அளவிடுவதன் மூலம் விரிவடையும் வீதம் கணக்கிடப்படுகிறது.
அண்டம் விரிவடைந்துகொண்டே வருகிறது என்ற உண்மையிலிருந்து என்ன முடிவுக்கு வந்துள்ளனர்? அந்தச் செயல்முறை தலைகீழாக நடைபெறுவதைப் போல கற்பனை செய்துகொள்ளும்படி ஒரு விஞ்ஞானி மக்களிடம் கேட்டுக்கொள்கிறார். வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், விரிவடைந்து வரும் அண்டத்தின் படத்தை பின்னோக்கி ஓட்டுவதைப் போல கற்பனை செய்துகொள்ளுங்கள். இதன்மூலம் அதைப் பார்ப்பவர் அண்டத்தின் ஆரம்பகால சரித்திரத்தை காண்கிறார். இந்த முறையில் பார்த்தால், இந்த அண்டம் விரிவடைந்து வருவதற்குப் பதிலாக, சுருங்கிக்கொண்டு வருவதாக தோன்றும். இப்படியாக கடைசியில் இந்த அண்டம் ஓர் ஆரம்ப புள்ளிக்கு வந்துசேரும்.
1993-ல் பிரசுரிக்கப்பட்ட கரும்புள்ளிகளும் சிறு அண்டங்களும் வேறு கட்டுரைகளும் என்ற ஆங்கில நூலில் ஸ்டீபன் ஹாக்கிங் என்ற பிரபல இயற்பியல் ஆய்வாளர் இந்த முடிவுக்கு வந்தார்: “அண்டத்திற்கு ஓர் ஆரம்பம் இருந்திருக்க வேண்டும் என்பதை விஞ்ஞானத்தால் முன்னறிவிக்க முடிகிறது.”
ஆனால், சில வருடங்களுக்கு முன்னர், இந்த அண்டத்திற்கு ஆரம்பம் இருந்தது என்பதை பெரும்பாலானோர் ஒத்துக்கொள்ளவில்லை. ‘ஒரு பெரும் வெடிப்பால்’ இந்த அண்டம் தோன்றியது என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளாத புகழ்மிக்க ஒரு விஞ்ஞானிதான் ஃபிரெட் ஹாய்ல். ‘மகா பெரிய வெடிப்பு’ என இதை அவர் கேலியாக சொன்னார். இப்பேர்ப்பட்ட பேராற்றல்மிக்க ஆரம்பம் இருந்திருந்தால், இந்த நிகழ்ச்சியைப் பற்றி இந்த அண்டத்தில் எங்காவது பாதுகாத்து வைக்கப்பட்ட ஒரு தடயம் இருந்திருக்க வேண்டும் என ஹாய்ல் வாதாடினார். காணக்கூடிய ஏதாவது அடையாளம், வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், ஆகாயத்தில் மங்கிய ஒளிப்பிழம்பு ஏதாவது இருக்க வேண்டும். இப்படிப்பட்ட பின்னணி கதிரீவீச்சுக்கான தேடல் எதை வெளிப்படுத்தியது?
சுமார் 1965-ல், “வானியல் ஆராய்ச்சியாளர்களாகிய ஆர்னோ பென்ஷியாஸும் ராபர்ட் வில்ஸனும் பரவலாக காணப்படும் இந்தப் பின்னணி கதிர்வீச்சை, ஆதியில் ஏற்பட்ட வெடிப்பின் மீந்த ஒளியை கண்டுபிடித்தார்கள்” என மார்ச் 8, 1998 த நியூ யார்க் டைம்ஸ் அறிக்கை செய்தது. அந்தக் கட்டுரை மேலும் கூறியது: கடைசியாக “[பெரும் வெடிப்பு] கொள்கை மறுக்க முடியாததாக தோன்றுகிறது.”
ஆனால் பென்ஷியாஸ் மற்றும் ராபர்ட் வில்ஸன் கண்டுபிடிப்புக்குப் பின்வந்த வருடங்களில் இக்கேள்வி சிலரால் எழுப்பப்பட்டது: உண்மையில் பெரும் வெடிப்புக் கொள்கை சரியென்றால், கதிர்வீச்சு சிக்னலில் ஏன் சிறிய ஒழுங்கின்மையும் கண்டுபிடிக்கப்படவில்லை? நட்சத்திர மண்டலங்கள் உருவாவதற்கு, இந்த அண்டத்திற்கு குளிர்ச்சியான மற்றும் அடர்த்தியான இடங்கள் தேவைப்பட்டிருக்கும்; அங்கே அடிப்படை பருப்பொருள் கூட்டுக்கலவையாக ஒன்றுசேர்ந்திருக்கக் கூடும். ஆனால், பூமியின் மேற்பரப்பில் பென்ஷியாஸ் மற்றும் ராபர்ட் வில்ஸன் செய்த பரிசோதனைகள் இப்படிப்பட்ட ஒழுங்கின்மையை வெளிப்படுத்தவில்லை.
ஆகவே, 1989 நவம்பரில், வானியல் பின்னணி ஆய்வுகோள் (Cosmic Background Explorer [COBE]) என்ற துணைக்கோள் ஒன்றை அமெரிக்காவிலுள்ள நாஸா (NASA) அனுப்பியது. அதன் கண்டுபிடிப்புகள் பிரமாண்டமானவையாக வர்ணிக்கப்பட்டன. பேராசிரியர் பிளாக் இவ்வாறு விளக்கினார்: “COBE தளத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டும் நுண்ணலை கதிரியக்கச் செறிவுமானியால் (Differential Microwave Radiometer) பதிவு செய்யப்பட்ட அலைகள்தான் வானியல்மீது ஏற்ற இறக்கமான (fluctuation) முத்திரையைப் பதித்திருந்த அத்தாட்சிகளாகும்; அவை, நட்சத்திர மண்டலங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதை சுட்டிக்காட்டின.”
அத்தாட்சிகளுக்கு அறிகுறி
இந்த அண்டத்திற்கு ஆரம்பம் இருந்தது என்ற உண்மையிலிருந்து நாம் எதை அனுமானிக்கலாம்? ராபர்ட் ஜேஸ்ட்ரோ சொன்னார்: “அதை நீங்கள் பெரிய வெடிப்பு என அழைக்கலாம், ஆனால் அதை நீங்கள் துல்லியமாக குறிப்பிட விரும்பினால் படைப்பின் தருணம் என்றும் அழைக்கலாம்.” அண்டத்தில் பின்னணி கதிர்வீச்சை கண்டுபிடிப்பதில் பங்குகொண்ட பென்ஷியாஸ் இவ்வாறு கூறினார்: “வானியல் ஓர் ஒப்பற்ற நிகழ்ச்சிக்கு, வெறுமையிலிருந்து படைக்கப்பட்ட ஓர் அண்டத்திற்கு வழிநடத்துகிறது.” COBE குழுத் தலைவர் ஜார்ஜ் ஸ்மியூட் இவ்வாறு குறிப்பிட்டார்: “நாங்கள் கண்டுபிடித்திருப்பது இந்த அண்டத்தின் பிறப்பிற்கு அத்தாட்சி.”
இந்த அண்டத்திற்கு ஓர் ஆரம்பம் அல்லது படைப்பு இருந்திருந்தால், அதை ஆரம்பித்தவர் அல்லது அதை படைத்தவர் ஒருவர் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருவது நியாயமல்லவா? நியாயம்தான் என அநேகர் நினைக்கின்றனர். COBE கண்டுபிடிப்புகள் சம்பந்தமாக ஸ்மியூட் இவ்வாறு சொன்னார்: “அது கடவுளைப் பார்ப்பதைப் போலவே இருக்கிறது.”
நிச்சயமாகவே, சமீப பத்தாண்டுகளில் வெளிச்சத்திற்கு வந்த விஞ்ஞான அத்தாட்சியின்றி, பைபிளின் பின்வரும் ஆரம்ப வார்த்தைகளில் கோடிக்கணக்கானோர் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்: “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.”—ஆதியாகமம் 1:1.
இருப்பினும், பைபிளிலுள்ள இந்த எளிய கூற்றை எல்லாரும் ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. “இந்த அண்டத்திற்கு ஓர் ஆரம்பம் இருந்தது, அதுதான் படைப்பின் தருணம் என்ற கருத்தை விஞ்ஞானிகள் பலர் விரும்புவதில்லை” என குறிப்பிட்டார் இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங். “இந்தக் கோட்பாடு, விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட விளக்கங்களோடு இணைந்து செல்வதை அவர்கள் விரும்புவதில்லை. அதனால் மாற்றுக் கருத்துக்களை முன்னேற்றுவிப்பதற்கு பெருமுயற்சிகள் செய்யப்படுகின்றன” என எழுதினார் மைக்கேல் ஜே. பீஹீ.
ஆகவே, கேள்விகள் என்னவென்றால், இந்த அண்டம் தானாகவே வந்ததா? அது தற்செயலாக நிகழ்ந்ததா, அல்லது புத்திக்கூர்மையுள்ள படைப்பாளர் ஒருவரால் படைக்கப்பட்டதா? பின்வரும் அத்தாட்சி அறிவொளியூட்டுவதாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.
[பக்கம் 4-ன் படம்]
நமது அண்டத்திற்கு ஓர் ஆரம்பம் இருந்தது என்பதை நிரூபிக்க மெளண்ட் வில்ஸன் தொலைநோக்கி உதவியது
[படத்திற்கான நன்றி]
The Observatories of the Carnegie Institution of Washington