அணு ஆயுத அச்சுறுத்தல்—இப்போதைக்கு ஓயாது!
“இந்தக் கோளத்தையே இப்போது எதிர்நோக்கி இருக்கும் மிகப் பெரிய ஆபத்து, சக்திவாய்ந்த அணு ஆயுதங்கள் பெருகிக்கொண்டே போவதுதான்.”—க்ரிடிகல் மாஸ், வில்லியம் இ. பர்ஓஸ், ராபர்ட் வின்ட்ரம் எழுதியது.
ஜனவரி 25, 1995. வடக்கு ரஷ்யாவின் ஆராய்ச்சி நிலைய ரடார் திரையில் திடீரென ஆபத்துக்கான எச்சரிக்கை குறிகள் தோன்றின. நார்வேயின் வடக்கு கரையில் எங்கிருந்தோ ஒரு ராக்கெட் ஏவப்பட்டது! அது ஏவுகணைகளை சுமந்துவரும் ராக்கெட்டாக இருக்கலாம் என ரடாரை இயக்குபவர்கள் மாஸ்கோவை எச்சரித்தனர். எச்சரிப்பு செய்தி எட்டியதுதான் தாமதம், அடுத்த நிமிடம் எலக்ட்ரானிக் கருவிகள் உள்ள ஒரு சூட்கேஸ் ரஷ்யத் தலைவரின் கைக்கு வந்தது. அணு ஆயுத எதிர்தாக்குதலுக்கான ஆணையை அவர் எப்போதுவேண்டுமானாலும் பிறப்பிக்கலாம் என்ற நிலை இருந்தது. மாபெரும் அணு ஆயுத யுத்தம் எந்த வினாடியிலும் ஆரம்பித்துவிடும் போல் இருந்தது.
நல்லவேளை, அந்த ராக்கெட்டால் ரஷ்யாவின் அமைதிக்கு எந்தவிதத்திலும் பங்கம் ஏற்படவில்லை. உண்மையில் அந்த ராக்கெட் ஏவுகணைகளையல்ல, வானிலை ஆராய்ச்சிக்கான சாதனங்களையே சுமந்து சென்றதென பின்னர் தெரியவந்தது. என்றபோதிலும், “அணு ஆயுத சகாப்தத்தின் மிக ஆபத்தான வினாடிகள் இவை. பனிப்போரில் பயன்படுத்துவதற்காக அணு ஆயுதங்கள் தயார்நிலையில் இருந்ததை காட்டுகின்றன. அவை இன்றும் தயார்நிலையில் இருக்கின்றன. எனவே, வல்லரசுகளுக்கு இடையே உள்ள போட்டி முடிவடைந்தபோதிலும் ஏதாவது ஒரு சிறுபிழை ஏற்பட்டாலும் பேரழிவை உண்டாக்கலாம் என்பதை காட்டுகிறது” என தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை குறிப்பிடுகிறது.
உடனடி எச்சரிக்கை
மியூசுவல் அஷ்யூர்ட் டிஸ்ட்ரக்ஷன் (MAD) என்பதன் அடிப்படையில்தான், முன்னாள் சோவியத் யூனியனும், ஐக்கிய மாகாணங்களும் பல பத்தாண்டுகளாக அணு ஆயுதங்களை பயன்படுத்தும் திறமை உடையவையாய் இருந்திருக்கின்றன. எச்சரிக்கை வந்ததும் உடனடியாக ஏவுவதே எம்ஏடி-ன் முக்கிய திட்டம். தாங்கள் தாக்கினால், தங்களுடைய ஏவுகணைகள் எதிரியின் இலக்கை தாக்குவதற்கு முன்னமே, எதிரிகளுடைய ஏவுகணைகள் தங்களை தாக்கிவிடும் என்பதை இருசாராருமே தெரிந்திருந்தனர். தாக்குதல் வந்ததும் உடனடியாக ஏவுதல் என்பதே இதன் இரண்டாம் திட்டம். எதிரி ஏவுகணைகள் தாக்கிய பிறகும்கூட, எதிர் தாக்குதல் செய்வதையே இது குறிக்கிறது.
பனிப்போர் முடிவடைந்த பிறகும்கூட, எம்ஏடி தாக்குதல் ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் இன்னும் மனிதகுலத்தை ஆட்டிப்படைக்கிறது. ஆம், ஐக்கிய மாகாணங்களாலும் ரஷ்யாவாலும் சேகரித்து வைக்கப்பட்ட அணு ஆயுதங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. பாதிக்கு பாதி குறைக்கப்பட்டுவிட்டது என சிலர் சொல்கின்றனர். ஆனால், இன்னும் ஆயிரக்கணக்கான அணு ஆயுதங்கள் இருக்கின்றன. இந்த ஆயுதங்களை அதிகாரப்பூர்வமில்லாமலோ அல்லது தற்செயலாகவோ ஏவிவிடும் சாத்தியம் இருக்கிறது. இன்னொருவர் முதலில் தாக்கிவிடுவாரோ என்ற பயம் இன்னும் இரண்டு நாடுகளையுமே ஆட்டிவைக்கிறது. அதனால்தான், உடனே தாக்குதல் நடத்த நிறைய ஏவுகணைகளை தயார்நிலையில் இந்த நாடுகள் வைத்திருக்கின்றன.
ஆம். 1994-ல், ஐக்கிய மாகாணங்களும் ரஷ்யாவும் ஒன்றுக்கெதிராக மற்றொன்று ஏவுகணைகளை குறிவைப்பதில்லை என ஒத்துக்கொண்டன. “இந்த மாற்றம், வரவேற்புக்குரியதாக இருந்தாலும் மிகக் குறைந்த அளவே ராணுவ முக்கியத்துவம் உடையது” என சையன்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகை குறிப்பிடுகிறது. “ஏவுகணை அதிகாரிகள், கம்ப்யூட்டரின் உதவியால் ஒருசில நொடிகளில் மீண்டும் ஏவுகணைகளை குறிவைக்க முடியும்.”
விரைவில் புது ஆயுதங்கள்?
அணு ஆயுதங்களைப் பற்றிய ஆராய்ச்சியும் வளர்ச்சியும் தொடருகிறது என்ற உண்மை மறுக்கமுடியாதது. உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களில், அணு ஆயுதங்களுக்காக ஒரு வருடத்திற்கு ஒதுக்கப்படும் தொகை 450 கோடி டாலர்! 1997-ல், தி டோரன்டோ ஸ்டார் பத்திரிகை பின்வருமாறு அறிக்கையிட்டது: “பனிப்போரின்போது அணு ஆயுதங்களைப் பாதுகாக்க செலவழித்ததைவிட, ஐக்கிய மாகாணங்கள் இப்போது அதிகம் செலவழிக்கிறது. இந்தத் தொகையின் ஒரு பகுதி, சந்தேகத்திற்குரிய திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறதென்றும் இது உலகளாவிய ஒரு புதிய ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்கும் என்றும் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.”
உதாரணமாக, ஸ்டாக்பைல் ஸ்டூவர்ட்ஷிப் அண்ட் மேனேஜ்மென்ட் புரோகிராம் என்றழைக்கப்படும் ஐக்கிய மாகாணங்களின் பல கோடி டாலர் அரசு திட்டத்தைப் பற்றி அதிக விவாதம் எழுந்தது. ஏற்கெனவே இருக்கும் அணு ஆயுதங்களை பராமரித்தலே இந்தத் திட்டத்தின் வெளிப்படையான நோக்கம் என்றாலும், இது தீமையான ஒரு நோக்கத்தையும் நிறைவேற்றுகிறது என விமர்சகர்கள் சொல்கின்றனர். “மாற்றங்களுக்கும், திருத்தங்களுக்கும், புதுப்புது தகவல்களுக்கும், மாற்றீடுகளுக்கும் திட்டங்கள் இருக்கின்றன—அணு ஆயுதங்களின் பயனை நீட்டிப்பது மட்டுமல்ல. . . அதை ‘மேம்படுத்துவதும்’ இதில் அடங்கும்” என தி புல்லடின் ஆஃப் தி அடாமிக் சையன்டிஸ்ட் பத்திரிகை குறிப்பிடுகிறது.
1997-ல், B-61 என்றழைக்கப்படும் அணுகுண்டு தயாரிக்கப்பட்டதைக் குறித்து மிகச் சூடான விவாதம் எழுந்தது. பூமிக்குள் பாய்ந்து சென்று வெடிக்கும் சக்திமிக்கது இந்த அணுகுண்டு. பூமிக்கடியில் இருக்கும் ரகசிய ராணுவ மையங்களையும், தொழிற்சாலைகளையும், ஆய்வுக்கூடங்களையும் இது அழித்துவிடும். பழைய அணுகுண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட புதுவடிவமே இது என இத்திட்டத்தை ஆதரிப்பவர்கள் உரிமை பாராட்டுகின்றனர். ஆனால், இதை எதிர்ப்பவர்களோ இது புதிய ஒரு அணுகுண்டுதான் என ஆணித்தரமாக சொல்கின்றனர். புதிய அணு ஆயுதங்களை இனி உருவாக்க மாட்டோம் என்ற ஐக்கிய மாகாண அரசின் வாக்கை இது மீறுவதாகும் என்றும் சொல்கின்றனர்.
எது எப்படியிருந்தாலும், “இப்போது (ஐக்கிய மாகாணங்களில்) மேற்கொள்ளப்படுகிற ஆராய்ச்சி, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, மற்றும் பல இடங்களில் நடத்தப்படுகிறது என நான் நம்புகிறேன். இந்தத் திட்டங்களில் சில, உலகையே ஒரு புதிய ஆயுதப் போட்டிக்கு வழிநடத்துகிறதென்றே நம்புகிறேன்” என பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் அணுவியல் ஆராய்ச்சியாளர் டெட் டெய்லர் கருத்து தெரிவிக்கிறார். புதிய ஆயுதங்களைப் பற்றிய ஆராய்ச்சி, வளர்ச்சி, வடிவமைத்தல் போன்றவை இந்த ஆயுத வடிவமைப்பாளர்களால்தான் முன்னேற்றுவிக்கப்படுகிறது என விமர்சகர்கள் சொல்கின்றனர். ‘தான் என்கிற’ அகம்பாவம் புண்படுத்தப்படுவது, கௌரவம் சரிந்துகொண்டே போவது, பண நெருக்கடி போன்ற காரணங்களால் திறமைமிக்க விஞ்ஞானிகள், அணு ஆயுத ஆராய்ச்சிக்கு புத்துயிர் அளிக்கின்றனர்.
அணு ஆயுதப் போர்க்களத்தில் புதிய வல்லரசுகள்
உலக வல்லரசுகளின் வரிசையிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பல ஆண்டுகளாக, அணு ஆயுத நாடுகளின் குழுவில் இருக்கும் நாடுகள், பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷ்யா, ஐக்கிய மாகாணங்கள் ஆகிய ஐந்தே. இருந்தாலும், மற்ற நாடுகளும் அணு ஆயுதங்களை தயாரிக்கின்றன. உதாரணமாக, இந்தியாவும் பாகிஸ்தானும் சமீபத்தில் அணுகுண்டு சோதனைகள் நடத்தின. இது, தென்கிழக்கு ஆசியாவில் மும்முரமான அணு ஆயுதப் போட்டியின் அச்சம் என்னும் தீப்பொறியை பறக்கவிட்டன. இப்படிப்பட்ட அணு ஆயுத திட்டங்களைக் கொண்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் மற்ற நாடுகள் அல்ஜீரியா, இரான், இராக், வட கொரியா போன்றவை. அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையில் 180-க்கும் அதிகமான நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இது 1970-ல் அமலுக்கு வந்தது. ஆனால், இதுவரை, மறைமுகமாக அணு ஆயுதங்களை தயாரிக்கும் நோக்கமுடைய அநேக நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றே பரவலாக நம்பப்படுகிறது.
“அதிகமதிகமான நாடுகளின் தலைவர்கள் இன்னும் அணு ஆயுதங்களை இயக்கும் பட்டனைத் தட்டுவதில் விருப்பம் உள்ளவர்களாய் இருப்பதே மிகப் பெரிய அச்சுறுத்தல் என அணு ஆயுதங்களின் பெருக்கத்தை கண்காணிக்கும் நிபுணர்கள் நம்புவதாக” ஏசியாவீக் பத்திரிகை அறிவிக்கிறது. அநேக நாடுகள் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதை, அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கை மட்டுமே தடுத்துவிட முடியாது. ஏனென்றால், இந்த நாடுகள் அணு ஆயுதங்களை உருவாக்கத் தீர்மானமாய் இருக்கின்றன. அபராதங்கள் விதித்தாலும், இவை இதற்கு தேவையான தொழில்நுட்பத்தையும் மூலப்பொருட்களையும் இரகசியமாகப் பெறுகின்றன. ஐக்கிய மாகாணங்களின் பாதுகாப்பு புலனாய்வு ஏஜென்ஸியின் இயக்குநர் ஜேம்ஸ் க்லேப்பர் பின்வருமாறு முன்னறிவித்தார்: “இந்த நூற்றாண்டின் முடிவில், அநேக நாடுகள் [இரசாயன, உயிரியல் அல்லது அணு] ஆயுதங்களை தாங்களாகவே உற்பத்தி செய்து, ஏவுகணைகளோடு இணைக்கும் திறமை பெற்றவைகளாக இருக்கும்.”
அணு ஆயுத சோதனையை தடைசெய்யும் கட்டாயத்திற்கு எல்லா நாடுகளும் அடிபணியும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. 1996-ல், விரிவான சோதனைத் தடை ஒப்பந்தத்தில் அநேக நாடுகள் கையெழுத்திட முன்வருவதைக் குறித்து ஏசியாவீக் பத்திரிகையில் வெளிவந்த பதிப்பாசிரியரின் குறிப்பு பின்வருமாறு விவரிக்கிறது: “சோதனைத் தடைச் சட்டங்களைப் பற்றி பிரசங்கிப்பது, அமெரிக்கர்களுக்கோ அல்லது ஐரோப்பியர்களுக்கோ பிரச்சினையே இல்லை. ஏனென்றால், அவர்கள் ஏற்கெனவே அநேக அணுச் சோதனைகளை செய்து, தகவல்களை சேமித்து வைத்திருப்பதால் இந்தச் சோதனைகளை தடைசெய்துவிடுவர்.”
அணு ஆயுதக் கடத்தலும் தீவிரவாதமும்
இன்று இருக்கும் மாபெரும் அச்சுறுத்தல் தீவிரவாத குழுக்களே. இவை, அணு ஆயுதங்களை தன்வசமாக்கிக் கொண்டு, தங்களுடைய அரசியல் திட்டங்களை சாதித்துக்கொள்ள அவற்றை வெடிக்கவோ அல்லது வெடித்துவிடப்போவதாக அச்சுறுத்தவோ செய்கின்றன. குற்றச்செயல்களில் ஈடுபடும் அமைப்புகளும்கூட, கதிரியக்கம் நிறைந்த பொருட்களை தங்கள் கைவசம் வைத்துக்கொண்டு, அரசாங்கத்தையோ அல்லது ஒரு நிறுவனத்தையோ அச்சுறுத்தி பெரிய அளவில் பணம் பறிக்க முயற்சி செய்யலாம் என்கிற அச்சமும் இருக்கிறது. “அணு ஆயுதங்களைத் தன் கைவசம் வைத்துக்கொண்டு பிளாக்மெயில் செய்யும் ஒருவன், தன்னுடைய ஆயுதங்களின் தரத்தை காட்ட அதில் ஒரு சாம்பிளை விட்டுச்செல்வது மிக சுலபம். அதைத் தொடர்ந்து, ஒரு சிறிய அணு ஆயுதத்தை வெடிக்கச் செய்யவோ அல்லது காற்று, தண்ணீரை கெடுத்துவிடுவதாக பயமுறுத்தவோ அவனுக்கு அதிக வாய்ப்பைத் தருகிறது.” அணு ஆயுத தளவாடங்களை கடத்த எடுக்கும் முயற்சிகளை சட்டம்-ஒழுங்கு ஏஜென்ஸிகள் ஏற்கெனவே முறியடித்திருக்கின்றன. கயவர்கள் கூட்டம், தாங்களாகவே அணு ஆயுத தளவாடங்களை தயாரிக்க முயல்வது மேலும் அச்சத்தை அதிகரிக்கிறது.
அணு ஆயுதக் கடத்தல் அப்படியொன்றும் பெரிய அச்சுறுத்தல் அல்ல என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுவது உண்மையே. மிகச் சிறிய அளவு மூலப்பொருளே கைமாறி போயிருக்கிறது என்றும் அவற்றில் பெரும்பாலானவை தரமான அணு ஆயுதங்களை உருவாக்க முடியாதவையே என்றும் அவர்கள் சொல்லுகிறார்கள். இருந்தாலும், “கள்ளச்சந்தை எனும் திரைக்குப்பின் நடக்கும் எல்லா விஷயங்களும் பொதுமக்களின் கண்களுக்கு புலப்படுவதில்லை. அதனால், அணு ஆயுதங்களில் கள்ளச்சந்தை இருப்பது அப்படி ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. . . . இந்தக் கள்ளச்சந்தையில் 80 சதவீதத்திற்கும் அதிகமான ஆயுதங்களை அதிகாரிகள் தடுக்கின்றனர் என்பதை நம்புவது முட்டாள்தனமானது. மேலும், சிறிதளவு கசிவுகூட, மகா கேடை வரவழைத்துவிடும்” என சையன்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகை வாசகர்களுக்கு நினைப்பூட்டுகிறது.
ஓர் அணுகுண்டு செய்ய எவ்வளவு யுரேனியமும் புளூடோனியமும் தேவை என்பது ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும், ஓர் அணுகுண்டு செய்ய 3 முதல் 25 கிலோகிராம் யுரேனியமும் 1 முதல் 8 கிலோகிராம் ஆயுதங்கள் தயாரிக்கும் தரம் உடைய புளூடோனியமும் தேவை. 7 கிலோகிராம் புளூடோனியத்தை சராசரி அளவு அலுமினிய குளிர்பான கேன்களில் அடைத்துவிடலாம். இதனால் கடத்தல்காரர்களுக்கு கொண்டாட்டம்தான். அணு உலையில் பயன்படுத்தப்படும் புளூடோனியம், அணு ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் புளூடோனியத்தைவிட எளிதில் கிடைக்கக்கூடியது. இதைக் கொண்டு கச்சாநிலை அணுகுண்டைத்தான் தயாரிக்க முடியும். ஆனால், அதுவே நாசகரமான விளைவை உண்டாக்கக்கூடியது. கதிரியக்கம் உள்ள பொருட்களை சரியாக பாதுகாக்கவில்லை என்றால், அநேகர் நினைப்பதற்கு மாறாக, திருடப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என அநேக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். “இன்று கதிரியக்க பொருட்களைவிட உருளைக்கிழங்குகளுக்கே அதிகம் பாதுகாப்பு கிடைக்கிறது” என ரஷ்ய அதிகாரி மிகைய்ல் க்யூலீக் நிந்திக்கிறார்.
டேமக்ளிஸ் என்பவனுடைய தலைக்கு மேல் ஒரு நூல் இழையில் தொங்க விடப்பட்டிருந்த கத்தியைப் போலவே, இன்று அணு யுத்த ஆபத்து எனும் கத்தி மனிதகுலத்தின் தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆபத்து என்றென்றுமாக நீக்கப்படும் நம்பிக்கை இருக்கிறதா?
[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]
“அதிகமதிகமான நாடுகளின் தலைவர்கள் இன்னும் அணு ஆயுதங்களை இயக்கும் பட்டனைத் தட்டுவதில் விருப்பம் உள்ளவர்களாய் இருப்பதே மிகப் பெரிய அச்சுறுத்தல் என அணு ஆயுதங்களின் பெருக்கத்தை கண்காணிக்கும் நிபுணர்கள் நம்புகின்றனர்”—ஏசியாவீக்
[பக்கம் 6-ன் பெட்டி/படங்கள்]
உயிரியல், இரசாயன அச்சுறுத்தல்கள்
அணு ஆயுத தளவாடங்களை உற்பத்தி செய்ய முடியாத நிலையில் சில ஏழை நாடுகள் இருக்கின்றன. ஆனால், இவை போரிடுவதில் ஆக்ரோஷமாய் இருக்கின்றன. எனவே, விஷவாயு அல்லது உயிரியல் சார்ந்த ஆயுதங்களை உடைய நடுத்தர ஏவுகணைகளின் தயவையே இவை நாடுகின்றன. ஏழைகளின் ஆயுதங்கள் என இவை அழைக்கப்படுகின்றன. இவை தீவிரவாத கும்பல்களின் சாதனங்களாகி விடலாம் என அநேக ஆராய்ச்சியாளர்கள் பயப்படுகின்றனர்.
இருப்பினும், உயர் தொழில்நுட்ப ஏவும் சாதனம் இல்லாமலே உயிரியல், இரசாயன ஆயுதங்கள் பேரளவில் நாசத்தை ஏற்படுத்தக்கூடும். 1997, நவம்பரில், ஐக்கிய மாகாணங்களின் பாதுகாப்புத் துறை செயலாளர் வில்லியம் கோஹன் பின்வருமாறு குறிப்பிட்டார்: “தொழில்நுட்ப வளர்ச்சியும் எளிதில் நுழையக்கூடிய எல்லைகளை உடைய சின்னஞ்சிறிய நாடுகளும், பெருவாரியான நோய், மரணம், அழிவு ஆகியவற்றை பேரளவில் கட்டவிழ்த்துவிடுகின்றன. தீவிரவாத குழுக்களும், ஏன் ஒரு பைத்தியம்கூட கையில் ஒரு இரசாயன பாட்டிலையோ, நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களையோ, அல்லது கொடிய அணுகுண்டையோ வைத்துக்கொண்டு, ஒரே ஒரு கெட்ட செயலால் ஒரே வினாடியில் ஆயிரக்கணக்கான மக்களை கொன்றுவிடலாம் அல்லது கொன்றுவிடுவதாக பயமுறுத்தலாம்.” இப்படிப்பட்ட அச்சுறுத்தல்கள் உண்மையே என்றும் நிரூபிக்கப்பட்டு விட்டன. ஒரு மத தீவிரவாதப் பிரிவு, நரம்புகளை பாதிக்கும் சாரின் என்ற விஷவாயுவை உபயோகித்தனர். 1995, மார்ச் மாதம், டோக்கியோ சுரங்க ரயில்பாதையில் பிரயாணிகளை தாக்க பயன்படுத்தினர். பன்னிரண்டு பேர் கொல்லப்பட்டனர். 5,500 பேர் காயமடைந்தனர்.
“இரசாயன தாக்குதல் அச்சுறுத்துகிறதென்றால், உயிரியல் ஆயுதம் அதைவிட பயங்கரமான அச்சுறுத்தல்களை உண்டாக்குகிறது” என ஆட்சியியல் பேராசிரியர் லியோனார்ட் கோல் குறிப்பிடுகிறார். “இரசாயன இயக்கிகள் சடப்பொருட்கள். ஆனால், பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்ற மற்ற உயிருள்ள இயக்கிகள் தொற்றக்கூடியவை, இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. இவை காற்றோடு கலந்து, பல மடங்காக பெருகிக்கொண்டே போகக்கூடியவை. மற்றெந்த ஆயுதங்களைவிட, இவை மிக மிக ஆபத்தானவை.”
இரசாயன, உயிரியல் ஆயுதங்களின் அதிகரிப்பை கட்டுப்படுத்த, 1972 உயிரியல், விஷவாயு ஆயுதங்கள் மாநாடும் 1993 இரசாயன ஆயுதங்கள் மாநாடும் நடத்தப்பட்டன. இப்படிப்பட்ட நல்ல நோக்கங்கள் இருந்தபோதிலும், “எந்த ஆயுதங்கள் கட்டுப்பாட்டு முறையும் நிறைவானதல்ல. . . . எல்லா பிழைகளையும் அவர்கள் கண்டுபிடிக்க முடியாது” என தி எகானமிஸ்ட் சுட்டிக்காட்டுகிறது. “மோசடி செய்பவன் உண்மையிலேயே எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் ஒத்துவரமாட்டான்” என அதே பத்திரிகை தெரிவிக்கிறது.
[படங்கள்]
இரசாயன, உயிரியல் ஆயுதங்களை தீவிரவாதிகள் எளிதில் பயன்படுத்தலாம் என சட்டம்-ஒழுங்கு அதிகாரிகள் அஞ்சுகின்றனர்
[பக்கம் 7-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
அணு ஆயுத சக்தியுடைய நாடுகள்
பிரிட்டன்
சீனா
பிரான்ஸ்
ரஷ்யா
ஐக்கிய மாகாணங்கள்
அணு ஆயுத சோதனைகளை நடத்தியதாக கூறப்படும் நாடுகள்
இந்தியா
இஸ்ரேல்
பாகிஸ்தான்
அணு ஆயுதங்களை தயாரிப்பதாக நம்பப்படும் நாடுகள்
அல்ஜீரியா
இரான்
இராக்
வட கொரியா
[பக்கம் 4, 5-ன் படம்]
பூமிக்கடியில் இருக்கும் சாதனங்களையும் அழிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் B-61 அணுகுண்டை போடும் காட்சி
[படத்திற்கான நன்றி]
U.S. Air Force Photo
[பக்கம் 4-ன் படத்திற்கான நன்றி]
U.S. Air Force Photo