உரசி பார்த்தால் உண்மை தெரியும்
தேவதைகள் அல்லது தேவதூதர்கள் பல்வேறு வழிகளில் உதவியதாக அல்லது சந்தித்ததாக சொல்லப்படுகிற இன்றைய கதைகளில் மக்களுக்கு அதிக ஆர்வம். இதுபோன்ற கதைகள் ஏராளமாக உள்ளன. அதோடு பரவலாக வேறு உள்ளன. ஆகவே இவை உண்மையாக இருக்கும் என்பது வாதிடும் மக்கள் ஒருவகை. இவர்கள் இக்கதைகளை அப்படியே நம்புகிறார்கள். ஆனால், இதை மறுக்கும் மக்கள் இன்னொரு வகை. இக்கதைகளை நிரூபிக்க தகுந்த ஆதாரத்தை முன்வைக்கும்படி வலியுறுத்துகிறார்கள். பரவலாக நம்பப்படும் எதுவும் உண்மையாகிவிடாது என்பது இவர்கள் தரப்பு வாதம். உதாரணத்திற்கு, ஒருகாலத்தில் கடற்(மச்சக்)கன்னிகள் இருப்பதாக பரவலாக நம்பத்தான் செய்தார்கள். அது உண்மையா? ஆனால் இந்த விஷயத்தில் இரண்டுங்கெட்டான் நிலைமை வகிக்கும் ஆட்களும் உண்டு. இவர்கள் மூன்றாம் வகை. இவர்களது கருத்துக்களைப் பற்றி, தேவதூதர்கள்—நேருக்குமாறான கருத்துக்கள் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “தேவதூதர்களை பார்த்ததாக பலர் சொல்கிறார்கள். ஆனால் பார்த்ததை நிரூபிக்க முடியவில்லை. ஏதோ நம்பிக்கையின் காரணமாக நம்புகிறார்கள். அதேசமயம், இவை உண்மை அல்ல என்று சந்தேகவாதிகளாலும் நிரூபிக்க முடியவில்லை. அப்படியும் ஒருசிலர் முயன்று பார்க்கிறார்கள்.”
தேவதூதர்கள் வாழும் லோகத்தைப் பற்றி அறிந்துகொள்ள பைபிளே நம்பகமானது என்று பலர் ஒத்துக்கொள்கிறார்கள். a தேவதூதர்களைப் பற்றி தற்போது எழுந்துள்ள கதைகள் உண்மைதானா என்பதை உரசி பார்க்க பைபிள் உதவும். நிஜத்தில் வாழ்கிற, பலமுள்ள, மகிமையான ஆவி சிருஷ்டிகளே தேவதூதர்கள் என்று பைபிள் கூறுகிறது. ஒருவேளை உங்களுக்கு இது தெரிந்திருக்கலாம். கடவுளுக்காக தூது வந்து செய்தி சொன்ன சம்பவங்களும், கடவுளுடைய ஊழியர்கள் ஆபத்திலிருந்தபோது தூதர்கள் வந்து காப்பாற்றிய சம்பவங்களும் பைபிளில் உண்டு.—சங்கீதம் 104:1, 4; லூக்கா 1:26-33; அப்போஸ்தலர் 12:6-11.
தீய தேவதூதர்கள் இருப்பதையும் பைபிள் எடுத்துரைக்கிறது. ஆவிகளாக இருக்கும் இத்தூதர்கள் மக்களை ஏமாற்றி, தவறான வழியில் நடத்தி, கடவுளிடம் அவர்களை நெருங்கவிடாமல் பார்த்துக்கொள்கின்றன. (2 கொரிந்தியர் 11:14) காரண காரியத்தோடுதான் பைபிள் நம்மை பின்வருமாறு எச்சரிக்கிறது: “தூய ஆவியின் தூண்டுதல் தமக்கு இருப்பதாக சொல்லிக்கொள்ளும் எல்லாரையுமே நம்பிவிடாதீர்கள்; அந்தத் தூண்டுதல் கடவுளிடமிருந்து வருகிறதா எனச் சோதித்தறியுங்கள்.” (1 யோவான் 4:1, பொது மொழிபெயர்ப்பு.) உதாரணத்திற்கு, ஒருவர் தன்னை தீர்க்கதரிசி என்று அறிமுகம்செய்து, பின்னால் நடப்பதையெல்லாம் முன்கூட்டியே சொல்வதாக சொன்னால் நாம் உடனே ஏற்றுக்கொள்ளக்கூடாது. ஒருவேளை கடவுளுடைய வார்த்தையிலிருந்து எடுத்துக்கூறுவதாக அவர் சொன்னாலும்கூட நம்பக்கூடாது. மாறாக அவர் சொல்லும் விஷயங்கள் கடவுளுடைய வார்த்தைக்கு விரோதமாக இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும். இப்படி செய்வது புத்திசாலித்தனம். அப்படியென்றால், தேவதூதர்களைப் பற்றி தற்போது சொல்லப்படும் கதைகளையும் பைபிளோடு உரசி பார்த்து உண்மைகளை அறிய வேண்டும். சரி, தேவதூதர்களை பார்த்ததாக கதை கட்டுவோர், பைபிளோடு எப்படி ஆராய்வார்கள்?
தேவதூதர்கள்—பலர் நினைப்பது போல் இல்லை
தேவதூதர்களைப் பற்றி இரண்டு தவறான கருத்துக்கள் பரவலாக உள்ளன. முதலில் அவற்றை நீக்க வேண்டும். பலர் நினைப்பதுபோல், முதலில் மனிதர்களாக இருந்து, பிறகு தேவதூதர்களாக ஆகவில்லை. பூமியில் கடவுள் உயிரினங்களை உண்டாக்குவதற்கு முன்பே பரலோகத்தில் தேவதூதர்கள் இருந்தார்கள். கடவுள் ‘பூமிக்கு அஸ்திபாரம் இட்டப்போது, தேவபுத்திரர் [தேவதூதர்கள்] எல்லாரும் கெம்பீரித்தார்கள்’ என்று பைபிள் கூறுகிறது.—யோபு 38:4-7.
நாம் எதை செய்தாலும் தேவதூதர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்; தவறு செய்தாலும் பொறுத்துக்கொள்வார்கள் என்று இன்னொரு தவறான கருத்து நிலவுகிறது. இது உண்மை அல்ல. கடவுளுக்கு உண்மையாக இருக்கும் தேவதூதர்கள் கடவுளுடைய நீதியான தராதரங்களின்படி வாழ்கிறார்கள். அவர் காட்டும் வழியில் செயல்படுகிறார்கள். கடவுளுக்கே சேவை செய்கிறார்கள். மனிதர்களுக்கு அல்ல.—சங்கீதம் 103:20.
தேவதூதர்களுக்கு நம் ஆன்மீக நலனில் அக்கறை உண்டு
தேவதூதர்களைப் பற்றி சமீபத்தில் வெளிவந்த கதைப் புத்தகங்களில், அவை மனிதர்களை காப்பாற்றியதை சித்தரிக்கும் சம்பவங்களே நிறைய இடம்பிடித்துள்ளன. எரிந்துகொண்டிருந்த வீட்டில் மாட்டிக்கொண்ட சிறுமியை, கண்ணுக்கு தெரியாத ஒரு கை மென்மையாக பற்றி வெளியே கொண்டுவந்ததாம். இது, சிறந்த விற்பனையில் இடம்பிடித்த ஒரு புத்தகத்தில் வெளிவந்த கதை. காரில் வந்துகொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் இரண்டுபேர், பனிப்புயலில் மாட்டிக்கொண்டார்களாம். அப்போது திடீரென்று ஒரு லாரி தோன்றி, அவர்களது காரை பாதுகாப்பான இடத்திற்கு இழுத்துக்கொண்டுபோய் சேர்த்ததாம். ஆனால் அந்த வண்டி எந்தவித தடயத்தையும் விடவில்லையாம்! இதுவும் ஒருபுத்தகத்தில் வெளியிட்டிருந்தார்கள். எங்கோ ஒரு இடத்தில் நடந்த, அன் என்ற பெண்ணைப் பற்றி ஒரு கதை சொல்கிறார்கள். அப்பெண்ணுக்கு புற்றுநோய். அதற்காக அவள் மருத்துவமனைக்கு போய், ஆப்ரேஷன் செய்வதற்கு இன்னும் மூன்று நாட்கள் இருந்தன. அப்போது அவள் வீட்டிற்கு ஒரு அந்நியர் வந்தார். பார்க்க ரொம்ப உயரமாக இருந்தார். தன்னுடைய பெயர் தாமஸ் என்றார். தன்னை கடவுள் அனுப்பி வைத்ததாக கூறினார். உடனே தாமஸ் தன் கைகளை உயர்த்துகிறார், பிரகாச ஒளி சூடாக தன் உடலுக்குள் பாய்வதை அன் உணருகிறாள். பிறகு அவள் ஆப்ரேஷனுக்காக மருத்துவமனைக்கு வந்தபோது, டாக்டர்களுக்கு ஒரே ஆச்சரியம். அவளுடைய புற்றுநோய் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டிருந்தது!
இந்தக் கதைகளால் எதார்த்தமான கேள்விகள் எழுவதை மறுக்க முடியாது. எல்லாருக்கும் ஒவ்வொரு காவல் தேவதூதன் இருந்தால், ஏன் சிலர் மட்டும் காப்பாற்றப்படுகிறார்கள்? வியாதிகளுக்கும், போர்களுக்கும், பஞ்சங்களுக்கும், இயற்கை சேதங்களுக்கும் கணக்கு வழக்கின்றி, கோடிக்கணக்கில் மக்கள் பலியாகியுள்ளார்களே! இவர்களில் பலர் உதவிநாடி, உருக்கமாக வேண்டுதல் செய்யாமலா இருந்திருப்பார்கள்? ஆனால், இவர்கள் எல்லோரையும் ஏன் காவல் தேவதூதன் காப்பாற்றவில்லை?
இதற்கான விடையை பைபிள் தருகிறது. கடவுள் ஓரவஞ்சனை காட்டுவதில்லை என்று பைபிள் சுட்டிக்காட்டுகிறது. (அப்போஸ்தலர் 10:34) கடவுளுக்கு உண்மையாக இருக்கும் தேவதூதர்கள் நம்முடைய நலனில் அக்கறையோடு இருக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனாலும் நம்முடைய ஆன்மீக நலனில்தான் அவர்களுக்கு அதிக அக்கறை. தேவதூதர்களுக்கு நம் ஆன்மீக நலனில் அக்கறை இருப்பதை அப்போஸ்தலன் பவுல் கேள்வி வடிவில் சுட்டிக்காட்டுகிறார்: “அவர்கள் [தேவதூதர்கள்] அனைவரும் ஊழியம் புரியும் ஆவிகள் அல்லவா? மீட்பை உரிமைப்பேறாகப் பெறவிருப்போருக்குத் தொண்டாற்ற அனுப்பப்பட்டவர்கள் அல்லவா?” (எபிரேயர் 1:14, பொ.மொ.) அவ்வப்போது செய்யப்படும் உதவி தற்காலிகமானது. ஆனால் ஆன்மீக உதவியோ நிரந்தரமானது.
தேவதூதர்களைப் பற்றி வெளிவரும் பல கதைகள் சிறுப்பிள்ளைத் தனமாக உள்ளன. தேவதூதர்கள், களைத்துப்போன அம்மாவுக்கு படுக்கை விரிப்புகளை போட உதவிய கதை, சாமான்கள் வாங்குவதற்கு கடைக்கு சென்றவருக்கு தீப்பெட்டி வாங்க ஞாபகப்படுத்திய கதை, டிரைவர்களுக்கு வாகனம் நிறுத்தும் இடத்தை கண்டுபிடிக்க உதவிய கதை என்று கதைகளின் பட்டியல் நீள்கின்றது. ஸ்காட்லாந்தை சேர்ந்த இளம் பெண் ‘க்ளுக்’ சிரிப்புடன் கூறினார்: “செயின்ட் மேரிஸ் சாலையில், மஞ்சள் கோட்டில் என் காரை நிறுத்துகிறேன். கடந்த மூன்று வாரங்களாக இப்படி செய்துவருகிறேன். என் காரை சுற்றி அன்பும், கருணையும் சூழ்ந்திருக்க வேண்டும் என்று என் தேவதூதனிடம் கேட்டேன். அதனால், ட்ராஃபிக் போலீஸ்காரர்கள் என் காரிடம் வந்தால், அங்கு சூழ்ந்திருக்கும் அன்பால் திக்குமுக்காடி, அபராதம் ஏதும் விதிக்க மாட்டார்கள். நான் இதுவரை அபராதம் கட்டியதே இல்லை.” ஆகவேதான், இப்படி சிறுப்பிள்ளைத் தனமாக உதவும் நவீன காவல் தேவதூதர்களை கதைகளில் வரும் தாய் தேவதைக்கு ஒப்பிடுகிறார்கள் போலும். இத்தேவதூதர்களை பெரியவர்களின் சாண்டாகிளாஸ் என்றும் கூறுகிறார்கள்!
உண்மை தேவதூதர்கள் கடவுள் வார்த்தைக்கு முரண்படுவதில்லை
தேவதூதர்களைப் பற்றிய புத்தகங்களில் தேவலோகத்திலிருந்து வந்ததாக கூறப்படும் பொன் மொழிகளும், அறிவுரைகளும் நிரம்பி வழிகின்றன. உதாரணத்திற்கு, கொலராடோவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு தலைமை தேவதூதன் மைக்கேல் கூறிய போதனைகள் அடங்கியிருப்பதாக கூறும் புத்தகம் ஒன்று உலாவருகிறது. மைக்கேல் “கூறிய” பல போதனைகளில் இதோ ஒன்று: “அனைத்து பாதைகளும் இறைவனிடமே செல்கின்றன. அனைத்து நம்பிக்கைகளும், அனைத்து சத்திய ஜோதிகளும் இறைவனிடமே வழிநடத்துகின்றன.” ஆனால், இந்தப் போதனையும் இயேசு கூறிய கூற்றும் முரண்படுகின்றன. மதத்தை பொருத்தவரை இரண்டே பாதைகள் உள்ளன என்றார் இயேசு. ஒன்று இறைவனுடைய கருணைக்கும், மரணமே இல்லாத வாழ்வுக்கும் வழிநடத்தும் என்றும், மற்றொன்று இறைவனுடைய கோபத்திற்கும், நிரந்தர அழிவுக்கும் வழிநடத்தும் என்றும் கூறினார். (மத்தேயு 7:13, 14) ஆகவே, ஒன்று புத்தகம் கூறியது உண்மையாக இருக்க வேண்டும் அல்லது இயேசு கூறியது உண்மையாக இருக்க வேண்டும். கண்டிப்பாக, இரண்டும் உண்மையாக இருக்க முடியாது.
“புதிய ஆன்மீகத்தில்” “தேவதூதர்கள்” தரும் ஆலோசனை குடும்பத்திற்கும், ஒழுக்கத்திற்கும் பொருந்துகிறதா? ரோஜான் என்னும் பெண்ணைப் பற்றி ஒரு புத்தகம் கூறுகிறது. அவளிடத்தில் “தேவதூதன்” வந்து, “நீ பலரை சந்தித்தாக வேண்டும், உன் ஜீவ பாதையில் இனி [உன் கணவனுக்கு] இடமில்லை. நீ அவரை நேசிக்கிறாய், அவரும் உன்னை நேசிக்கிறார். ஆனால் பிரியும் நேரம் வந்துவிட்டது” என்று கூறினாராம். அவள் உடனே கணவனை விவாகரத்து செய்துவிட்டாள். ஆனால், இதுபோன்ற அற்ப விஷயங்களுக்கு விவாகரத்து செய்வதை கடவுள் வெறுக்கிறார் என்பதை பைபிளில் காணலாம். (மல்கியா 2:16) இதோ இன்னொரு கதை: கள்ளத்தொடர்புடைய ஒரு ஆணும் பெண்ணும் தகாத உறவில் ஈடுபடுகிறார்கள். இவர்களது செயலை தேவதூதர்கள் சூழ்ந்திருந்து, சந்தோஷமாக பார்த்ததை இவர்கள் உணர்ந்ததாக கூறினார்கள். ஆனால் பைபிளோ இவ்வாறு கூறுகிறது: “விபசாரம் [கள்ளக் காதல்] செய்யாதிருப்பாயாக.”—யாத்திராகமம் 20:14.
இதுபோன்ற நவீன நாளையை செய்திகளுக்கு தோதாக பைபிளும் மாறவேண்டுமா? அவசியம் இல்லை. அதோடு, கடவுளுடைய வார்த்தை மாறவே மாறாது. முதல் நூற்றாண்டை சேர்ந்த சிலருக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: ‘உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.’—கலாத்தியர் 1:6-8.
“எல்லா தேவதூதர்களையும் அழைக்கலாம்”
நம் வாழ்க்கையில் பிரச்சினைகளும் ஆபத்துகளும் சூழும்போது, தேவதூதர்களை உதவிக்காக அழைக்கலாமா? தேவதூதர்களை அழைப்பதை மையமாக வைத்து நிறைய புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இரண்டை உதாரணங்களாக எடுத்துக்கொள்வோம். ‘தேவதூதர்களிடமிருந்து எப்படி சக்தியை பெற்று, அதை நமக்குள் மறைந்திருக்கும் நம் உணர்வுகளோடு இணைத்து, வாழ்க்கை லட்சியங்களை அடையலாம்’ என்று உங்கள் தேவதூதரிடம் கேளுங்கள் என்ற ஆங்கில புத்தகம் வாசகர்களுக்கு எடுத்துரைப்பதாக சொல்கிறார்கள். மற்றொரு ஆங்கில புத்தகத்தின் தலைப்பு: எல்லா தேவதூதர்களையும் அழைக்கலாம்! தேவதூதரை அழைக்க 57 வழிகள்.
ஆனால், நாம் தேவதூதர்களை அழைப்பதை பைபிள் ஒருநாளும் வரவேற்பதில்லை. இதில் சந்தேகமே வேண்டாம். நாம் ஜெபிக்க வேண்டிய விதத்தை இயேசு கற்றுக்கொடுத்தபோது, இவ்வாறு கற்றுக்கொடுத்தார்: ‘நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, . . . ’ (மத்தேயு 6:9) ஆகவே, தேவதூதர்களை அழைக்கவேண்டியதில்லை என்பதை இயேசுவே தெளிவாக்கிவிட்டார். அதே கருத்தை அப்போஸ்தலன் பவுலும் இவ்விதம் எழுதினார்: ‘நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள்.’—பிலிப்பியர் 4:6, பொ.மொ.
தேவதூதர்களை பெயரிட்டு அழைத்தல்
தேவதூதர்களின் பெயர்களை தெரிந்துகொள்வது மிகமிக முக்கியம் என்று “புதிய ஆன்மீகம்” வலியுறுத்துகிறது. பிரபல புத்தகங்கள், ஆயிரக்கணக்கான தேவதூதர்களின் பெயர்களை ஊகித்து வெளியிடுகின்றன. ஏன்? ஏதோ தேவதூதர்களின் பெயர்களை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை தணிப்பதற்காக அல்ல. அவர்களை பெயரிட்டு அழைக்கவே. தேவதூதர்களை அழைப்பதற்கும் மாயாஜால வித்தைக்கும் நெருக்கிய தொடர்பு உண்டு. பூஜை, மாந்திரீக பொருட்கள், வேண்டுதல்கள் முதலியவற்றோடு, “ ‘அமானுஷ்ய சக்தியின் பெயர்களை’ அல்லது குறிப்பிட்ட ஆவிகளின் பெயர்களை சேர்த்து அழைத்தால், பயங்கரமான நடுக்கம் ஏற்பட்டு, மனித உலகிற்கும், ஆவிகளின் உலகிற்கும் இடையே இருக்கும் கதவு திறக்கும். அப்போது மந்திரவாதியால். . . ஆவிகளோடு பேச முடியும்” என்று என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ஏன்ஞ்ஜல்ஸ் குறிப்பிடுகிறது. ஆனால் “நீங்கள் மாயவித்தையை செய்ய வேண்டாம்” என்று பைபிள் தெளிவாக எடுத்துரைக்கிறது.—லேவியராகமம் 19:26, NW.
உத்தம தேவதூதர்கள் இருவரின் பெயர்களை மாத்திரம் பைபிள் தெரிவிக்கிறது. ஒன்று மிகாவேல் [ஆங்கிலத்தில் மைக்கேல்], மன்றொன்று காபிரியேல். (தானியேல் 12:1; லூக்கா 1.26) இந்தப் பெயர்களை பைபிள் தெரிவிக்கும்போது, தேவதூதர்கள் தனித்தன்மையுள்ள ஆவி சிருஷ்டிகள் என்பதை சுட்டிக்காட்டுகிறது. ஏன் நிறைய பெயர்களை வெளியிடவில்லை? ஒருவேளை மக்கள் தேவதூதர்களை அளவுக்கு அதிகமாக உயர்த்தி, தேவையில்லாமல் உயரிய இடத்தை தந்துவிட்டால்? இதைத் தவிர்ப்பதற்காக வெளியிடவில்லை போலும். தங்களை உயர்த்த வேண்டும், தங்களுக்கு உயரிய ஸ்தானம் தரவேண்டும் என்ற ஆசை தேவதூதர்களுக்கும் கிடையாது. ஆகவேதான், ஒரு தேவதூதனிடத்தில் அவரது பெயர் என்ன என்று யாக்கோபு கேட்டபோது, அவர் சொல்ல மறுத்துவிட்டார். (ஆதியாகமம் 32:29) பிறகு, யோசுவாவுக்கு முன் ஒரு தூதன் தோன்றினார். அவரும் தன்னுடைய பெயரை வெளியிடவில்லை. மாறாக, தன்னை, “கர்த்தருடைய சேனையின் அதிபதி” என்று அறிமுகம் செய்துகொண்டார். (யோசுவா 5:14) இதேபோல், சிம்சோனின் தந்தை தேவதூதனின் பெயரை கேட்டார். அப்போது அத்தூதன், “எனது பெயரை ஏன் கேட்கிறாய்? அது வியப்புக்கு உரியது” என்று அவரிடம் கூறினார். (நியாயாதிபதிகள் 13:17, 18, பொ.மொ.) தங்களை அழைப்பதை அல்ல, அதற்குமாறாக நாம் கடவுளுக்கு மாத்திரம் மேன்மையை தரவேண்டும், அவரையே அழைக்கவேண்டும் என்பது உண்மை தேவதூதர்களின் விருப்பம்.
[அடிக்குறிப்புகள்]
a பைபிள் சொல்லும் விஷயங்கள் நம்பகமானவை என்பதற்கு, எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்ற புரோஷரை காண்க. இது உவாட்ச் டவர் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
“கடவுளையும், அவரது சட்டங்களையும் கால்கட்டாக நினைக்கும் மனிதர்களுக்கு, . . . கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பது [நவீன கால] தேவதூதர்களே . . . [தேவதூதர்கள்] கனிவோடு இருக்கிறார்கள், [ஆனால்] கண்டிப்பதில்லை. எளிதாக வாங்கக்கூடிய ஆஸ்பிரின் மாத்திரை போல், தேவதூதர்களை எல்லா மக்களும் எளிதில் அணுக முடியும்.” —டைம் பத்திரிகை
[பக்கம் 5-ன் பெட்டி]
நவீன நாளில் தேவதூதர்களோடு, வேற்று கிரக மனிதர்களோடு “சந்திப்பு”
இப்போதெல்லாம், நிறையப்பேர், தேவதூதர்களை சந்தித்து பேசியதாக கூறுகிறார்கள். வேறுசிலர், தங்களுக்கு வேற்று கிரக மனிதர்களோடு தொடர்பு இருப்பதாக கூறுகிறார்கள். இவ்வாறு தேவதூதர்களையும், வேற்று கிரக மனிதர்களையும் சந்தித்தாக கூறும் கூற்றுகளில் உள்ள ஒற்றுமைகளை தேவதூதர்கள்—அழிந்துவரும் உயிரினம் என்ற ஆங்கில புத்தகம் பட்டியலிடுகிறது. இவை இரண்டிற்கும் “பொது விளக்கம்” b இருக்கலாம் என்றும் கூறுகிறது. அப்புத்தகத்திலிருந்து இதோ சுருக்கமாக ஒருசில ஒற்றுமைகள்:
1. தேவதூதர்களும் வேற்று கிரக மனிதர்களும் வேறு கோள்களிலிருந்து வந்தவர்கள்.
2. ஆன்மீக ரீதியில் அல்லது தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறிய வாழ்க்கை பாணி உடையவர்கள்.
3. தேவதூதர்களிலும், வேற்று கிரக மனிதர்களிலும் நட்போடு பழகும் வகையினர் உண்டு. இவர்கள் அபார பொலிவோடு, இளமை பொங்கும் அழகோடு இருப்பார்கள். கனிவும், கருணையும் நிறைந்தவர்கள்.
4. இந்த இருசாராருக்கும் மொழி பிரச்சினையே இல்லை. இவர்கள் யாரிடம் பேசுகிறார்களோ அவர் மொழியில் விஷயத்தை தெளிவாக எடுத்துரைப்பார்கள்.
5. இருசாராரும் பறப்பதில் சூரர்கள்.
6. தேவதூதர்களும், வேற்று கிரக மனிதர்களும் தோன்றும்போது கூடவே பிரகாசமான ஒளியும் தோன்றும்.
7. இருசாராரும் முழுமையாக உடை அணிந்திருப்பார்கள். தொளதொள அங்கியை அல்லது டைட்டான கவச உடையை அணிந்திருப்பார்கள். பிடித்தமான நிறம் வெள்ளை அல்லது நீலம்.
8. இருசாராரின் உயரமும் மனிதர்களின் உயரமே.
9. இருசாராரும், மனித குலத்தின், பூமியின் இன்னலை பார்த்து பரிதாபப்படுகிறார்கள்.
10. இவர்களை சந்தித்ததாக கூறும் மக்களின் சாட்சியத்தை வைத்துத்தான் தேவதூதர்கள் அல்லது வேற்று கிரக மனிதர்கள் இருப்பது உண்மையா, இல்லையா என்பதை முடிவு செய்கிறார்கள்.
[அடிக்குறிப்பு]
b “பொது விளக்கம்” என்னவென்றால், இத்தகைய “சந்திப்புகளுக்கு” பின்னால் கண்டிப்பாக, தீய ஆவிகள் அல்லது பேய்கள் இருக்க வேண்டும். ஆம், பைபிள் இவ்வாறு கூறுகிறது: “சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.” (2 கொரிந்தியர் 11:14)—1996, ஜூலை 8, விழித்தெழு!-ஐக் காண்க.
[பக்கம் 7-ன் படம்]
மக்கள் முன் தேவதூதர்கள் தோன்றிய உண்மை பதிவுகள் பைபிளில் உண்டு