புகைப்பதை ஏன் நிறுத்த வேண்டும்?
புகைபிடித்தல்—நீடூழி ஆனந்தமாக வாழ விரும்புவோருக்கு உரியதல்ல. இரண்டுக்கு ஒருவர் என்ற வீதத்தில் நெடுநாளாக புகைபிடிப்பவர்கள் மரிக்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) பொது இயக்குநர் இவ்வாறு குறிப்பிட்டார்: “சிகரெட் மிக சாமர்த்தியமாக தயாரிக்கப்பட்ட ஒரு பொருள் . . . அது ஒருவரை கொல்லுவதற்கு முன்பு வாழ்நாள் முழுக்க அடிமையாக்கும் விதத்தில் சரியான அளவு நிக்கோடினை கொடுக்கிறது.”
அப்படியானால், புகைப்பதை நிறுத்துவதற்கு ஒரு காரணம்: அது உடல்நலத்திற்கும் உயிருக்கும் உலைவைக்கிறது. புகைபிடிப்பது உயிரையே அச்சுறுத்தும் 25-க்கும் மேற்பட்ட நோய்களோடு சம்பந்தப்பட்டது. உதாரணமாக, மாரடைப்பு, ஸ்ட்ரோக், தீராத மூச்சுக் குழாய் வியாதி, காற்றேற்றம் (emphysema), பல்வகை புற்றுநோய்கள், முக்கியமாக நுரையீரல் புற்றுநோய் ஆகியவற்றிற்கு இதுவே முக்கிய காரணியாகும்.
ஒருவர் பல ஆண்டுகள் புகைபிடித்த பின்னரே இந்த நோய்களால் தாக்கப்படுகிறார் என்பது உண்மைதான். ஆனால் புகைபிடிப்பதால் மற்றவர்கள் முன்பு அவர் மதிப்பு கூடிவிடாது. புகைபிடிப்பவர்கள் விளம்பரங்களில் வசீகரமானவர்களாகவும் ஆரோக்கியமானவர்களாகவும் உலா வருகிறார்கள். ஆனால் நிஜவாழ்வில் அது வெறும் நிழலே. புகைப்பவருடைய சுவாசம் துர்நாற்றத்தை உண்டாக்குகிறது, பற்களை கறைபடுத்துகிறது, விரல்களை பழுப்பு-மஞ்சள் நிறமாக்குகிறது. ஆண்களுடைய ஆண்மையை இழக்கச் செய்கிறது. புகைப்பவருக்கு இருமல் உண்டாக்குகிறது, மேலும் அவரால் இயல்பாக சுவாசிக்க முடிவதில்லை. புகைபிடிப்பவர்களுக்கு சீக்கிரத்திலேயே முகத்தில் சுருக்கங்களும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் உண்டாகலாம்.
புகைபிடித்தல் பிறரை பாதிக்கிறது
பைபிள் இவ்வாறு சொல்கிறது: “உன்னைப் போல் உன் அயலானையும் நேசி.” (மத்தேயு 22:39, NW) உங்களுடைய குடும்ப அங்கத்தினர்களே உங்களுக்கு மிகவும் நெருக்கமான அயலார். இவர்களிடம் நீங்கள் காட்டும் அன்பு, அந்தப் பழக்கத்தை விட்டுவிடுவதற்கு ஒரு நல்ல காரணம்.
புகைபிடிப்பது பிறருக்கு தீங்கிழைக்கிறது. சமீபகாலம் வரை, புகைபிடிப்பவர் எங்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் எந்தத் தடையுமின்றி சிகரெட் பற்றவைக்கலாம். ஆனால் இப்பொழுது நிலைமை மாறிவருகிறது, மற்றவர்களுடைய சிகரெட்டுகளிலிருந்து வரும் புகையை சுவாசிப்பதால் உண்டாகும் அபாயங்களை இப்பொழுது மக்கள் புரிந்துகொள்கிறார்கள். உதாரணமாக, புகைபிடிப்பவரை மணமுடித்தவருக்கு புகைபிடிக்காதவரை மணமுடித்தவரைவிட நுரையீரல் புற்றுநோய் வரும் ஆபத்து 30 சதவீதம் அதிகம். புகைபிடிக்காதவர்களுடைய வீடுகளில் வசிக்கும் பிள்ளைகளைவிட புகைபிடிக்கிற பெற்றோரின் பிள்ளைகளுக்கு முதல் இரண்டு ஆண்டுகளில் நிமோனியா அல்லது மூச்சுக்குழல் சம்பந்தமான நோய் வரும் சாத்தியம் அதிகம்.
புகைபிடிக்கிற கர்ப்பிணிகள் தங்களுடைய குழந்தைகளை ஆபத்திற்குள்ளாக்குகிறார்கள். சிகரெட் புகையிலுள்ள நிக்கோடின், கார்பன் மோனாக்ஸைடு, இன்னும் பிற ஆபத்தான ரசாயனங்கள் தாயின் இரத்த நாளங்கள் வழியாக கருப்பையிலுள்ள குழந்தைக்கு நேரடியாக கடத்தப்படுகிறது. குறைப்பிரசவம், குழந்தை செத்து பிறப்பது, பிறந்தவுடன் சாவது இவையெல்லாம் ஏற்படும் சாத்தியம் இருக்கிறது. அதோடு, கருத்தரித்த காலத்தில் புகைபிடிக்கும் தாய்மாருடைய குழந்தைகளுக்கு ‘சிசுக்களின் திடீர் மரண நோய்’ (SIDS) ஏற்படும் அபாயம் மூன்று மடங்கு அதிகம்.
விலையோ அதிகம்
புகைப்பதை நிறுத்துவதற்கு மற்றொரு காரணம் அதன் விலை. புகைப்பதால் உண்டாகும் உடல்நல கேடுகளின் சிகிச்சைக்கு ஆகும் செலவோ ஆண்டுக்கு சுமார் 20,000 கோடி டாலர் என உவர்ல்டு பேங்க் ஆராய்ச்சி காட்டுகிறது. ஆனால் இந்தத் தொகை புகையிலையால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் படும் வேதனையையும் வலியையும் படம் பிடித்துக் காட்டுவதில்லை.
புகைபிடிப்பவருக்கு ஆகும் செலவை கணக்கிடுவது எளிது. நீங்கள் புகைபிடித்தால், சிகரெட்டுகளுக்கு என நாளொன்றுக்கு செலவழிக்கும் தொகையை 365 உடன் பெருக்கிக்கொள்ளுங்கள். ஒரு வருடத்தில் நீங்கள் சிகரெட்டுக்காக எவ்வளவு செலவழிக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அந்தத் தொகையை பத்தால் பெருக்கிக்கொள்ளுங்கள், இன்னும் பத்து ஆண்டுக்கு புகைபிடித்தால் எவ்வளவு செலவாகும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இந்தக் கணக்கு காட்டும் தொகை உங்களை கலங்க வைக்கலாம். அந்தத் தொகையை வைத்து நீங்கள் வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
மாற்றுவகை பாதுகாப்பானதா?
புகையிலை கம்பெனிகள் இப்பொழுது குறைந்த அளவு தாரும் (low tar) நிக்கோடினும் உள்ள சிகரெட்டுகளை விளம்பரம் செய்கின்றன. புகைபிடிப்பதால் வரும் உடல்நல பாதிப்பை குறைப்பதற்கு ஒரு வழியாக இந்த சிகரெட்டுகளை ஊக்குவிக்கின்றன. ஆனால், குறைந்தளவு தாரும் நிக்கோடினும் உள்ள சிகரெட்டுகளைப் பயன்படுத்துபவர்கள் முன்பிருந்த அளவு நிக்கோடினுக்கே ஏக்கம் கொள்கிறார்கள். இதனால், அதிக சிகரெட்டுகளை புகைப்பதனாலோ அடிக்கடி புகையை உள்ளிழுப்பதனாலோ அல்லது ஒவ்வொரு சிகரெட்டையும் கடைசிவரை உறிஞ்சுவதாலோ அதை ஈடுகட்டுகிறார்கள். இப்படி செய்யாவிட்டாலும், முழுமையாக விட்டுவிடுகிறவர்களுக்கு கிடைக்கும் நன்மையோடு ஒப்பிடுகையில் இப்படி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் மிக மிகக் குறைவே.
பைப் மற்றும் சுருட்டு பயன்படுத்துவதைப் பற்றியென்ன? இவற்றை அந்தஸ்தின் அடையாளமாக புகையிலை கம்பெனி வெகுநாட்களாகவே சித்தரித்துக் காட்டுகிறபோதிலும், சிகரெட்டுகளைப் போலவே இதன் புகையும் சாவுக்கேதுவானது. சுருட்டு அல்லது பைப் உபயோகிப்பவர்கள் அதன் புகையை உள்ளிழுக்காதபோதிலும், உதட்டிலும் வாயிலும் நாக்கிலும் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகம்.
புகையில்லா புகையிலை பாதுகாப்பானதா? இது இரண்டு விதங்களில் கிடைக்கிறது: பொடி, மெல்லக்கூடிய புகையிலை. பொடி என்பது பொடியாக்கப்பட்ட புகையிலை, பொதுவாக சிறிய டப்பாக்களில் அல்லது பாக்கெட்டுகளில் விற்கப்படுகிறது. இதைப் பயன்படுத்துகிறவர்கள் இதில் கொஞ்சத்தை கீழ் உதட்டிற்குள் அல்லது கடவாய்க்குள் வைத்து அதை சுவைக்கிறார்கள். மெல்லக்கூடிய புகையிலை இழைகளாக, பொதுவாக சிறுமட்டையில் விற்கப்படுகிறது. அந்தப் பெயரே சுட்டிக்காட்டுகிறபடி, அது மெல்லப்படுகிறது, உறிஞ்சப்படுவதில்லை. பொடியும் மெல்லக்கூடிய புகையிலையும் சுவாசத்தில் துர்நாற்றம் வீச செய்கிறது. பற்களை கறைபடுத்துகிறது, வாயிலும் தொண்டையிலும் புற்றுநோயை உண்டாக்குகிறது, நிக்கோடினுக்கு அடிமையாக்குகிறது, புற்றுநோயை உண்டுபண்ணும் வெள்ளை புண்களை வாயில் ஏற்படுத்துகிறது, பற்களின் ஈறுகளை சுருங்கச் செய்கிறது, பற்களை சுற்றியுள்ள எலும்புகளைப் பாதிக்கிறது. புகையிலையை உறிஞ்சுவதாக இருந்தாலும் மெல்லுவதாக இருந்தாலும் அது புகைபிடித்தலுக்கு மாற்றீடு அல்ல.
விட்டுவிடுவதால் வரும் நன்மைகள்
ஒருவேளை நீங்கள் நீண்ட காலம் புகைபிடிப்பவர் என வைத்துக்கொள்ளுங்கள். அதை விட்டுவிடும்போது என்ன ஏற்படுகிறது? நீங்கள் கடைசியாக சிகரெட் பிடித்த 20 நிமிடத்திற்குள், உங்களுடைய இரத்த அழுத்தம் இயல்பான நிலைக்கு திரும்பிவிடும். ஒரு வாரத்திற்குப் பின்பு உங்களுடைய உடல் நிக்கோடினிலிருந்து விடுதலை பெறும். ஒரு மாதத்திற்குப் பின்பு உங்களுடைய இருமல், சளி கட்டுதல், களைப்பு, குறுகிய சுவாசம் ஆகியவை குறைந்துவிடும். ஐந்து வருடங்களுக்குப் பின்பு நுரையீரல் புற்றுநோயால் இறக்கும் ஆபத்து 50 சதவீதம் குறைந்துவிடும். 15 வருடங்களுக்குப் பின்பு, ஒருபோதும் புகையே பிடிக்காத ஒருவரைப் போல, இருதய நோய் ஆபத்தும் குறைந்துவிடும்.
நீங்கள் சாப்பிடும் உணவு இப்போது நல்ல சுவையாக இருக்கும். உங்களுடைய சுவாசம், உடல், ஆடையின் மணம் நன்றாக இருக்கும். புகையிலையை வாங்க வேண்டிய பிரச்சினையோ செலவோ இனிமேலும் இருக்காது. சாதனை படைத்த உணர்வு உங்களுக்கு இருக்கும். உங்களுக்கு பிள்ளைகள் இருந்தால், அவர்கள் புகைபிடிப்பவர்களாக மாறும் சாத்தியமும் குறையும். நீங்கள் நீடூழி வாழலாம். மேலும், கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக செயல்படுகிறவர்களாக இருப்பீர்கள், ஏனெனில் பைபிள் இவ்வாறு சொல்கிறது: “மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொ[ள்ளக்] . . . கடவோம்.” (2 கொரிந்தியர் 7:1) கைவிட முடியாதளவுக்கு காலம் கடந்துவிட்டது என நினைக்காதீர்கள்; எந்தளவுக்கு சீக்கிரம் கைவிடுகிறீர்களோ அந்தளவுக்கு நல்லது.
கைவிடுவது ஏன் கடினம்
விட்டுவிட வேண்டும் என்ற முழு உறுதியோடு முயன்றாலும் புகைபிடிப்பதை கைவிடுவது கடினம். புகையிலையில் உள்ள நிக்கோடின் மிகவும் அடிமையாக்கும் போதைப்பொருள் என்பதே இதற்கு காரணம். மனதை பாதிக்கும் போதைப் பொருட்களை வகைப்படுத்துகையில், ஹெராயின் [மற்றும்] கொக்கைனைவிட நிக்கோடின் அதிகம் அடிமைப்படுத்தக்கூடியது என WHO குறிப்பிடுகிறது. ஹெராயின் மற்றும் கொக்கைனைப் போல் நிக்கோடின் போதையூட்டுகிறது என்பதற்கு வெளிப்படையான அத்தாட்சியில்லை. ஆகவே, அதன் வலிமையை குறைவாக மதிப்பிடுவது சுலபம். ஆனால், மிதப்பது போன்ற ஓர் உணர்வை இது ஏற்படுத்துவதால், அந்த அனுபவத்தைத் திரும்பத் திரும்ப பெற பெரும்பாலானோரை புகைக்கத் தூண்டுகிறது. நிக்கோடின் நிச்சயமாகவே உங்களுடைய மனநிலையை பாதிக்கிறது; அது கவலையை தணிக்கிறது, ஆனால் நிக்கோடினுக்கான வேட்கையே டென்ஷன் குறைவதற்கு ஓரளவு காரணமாக இருக்கலாம்.
புகைப்பது ஒரு பழக்கமாக இருப்பதால் அதை விடுவது கடினம். நிக்கோடினுக்கு அடிமைப்படுவதோடு, அடிக்கடி பற்றவைத்து இழுக்கும் செயலும் பழக்கமாகவே ஆகிவிடுகிறது. ‘நேரம் போகுது’ என சிலர் சொல்லலாம்.
கைவிடுவதை கடினமாக்கும் மூன்றாவது காரணி: அன்றாட வாழ்க்கையில் அந்தளவு பின்னிப் பிணைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விளம்பரத்திற்காக புகையிலை கம்பெனி ஏறக்குறைய 600 கோடி டாலர் செலவழிக்கிறது. அந்த விளம்பரங்கள் புகைபிடிப்பவர்களை வசீகரமானவர்களாக, சூட்டிப்பானவர்களாக, ஆரோக்கியமானவர்களாக, புத்திசாலிகளாக வர்ணிக்கிறது. குதிரையில் சவாரி செய்வதுபோல, நீந்துவதுபோல, டென்னிஸ் விளையாடுவதுபோல, அல்லது கவர்ச்சியான வேறெதாவது வேலையில் ஈடுபட்டிருப்பது போல அவர்களை காண்பிக்கிறார்கள். திரைப்படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் சாதாரண ஆட்கள் புகைபிடிப்பதை காண்பிக்கின்றன—வில்லன்கள் மட்டுமே புகைப்பதாக காட்டுவதில்லை. புகையிலை சட்டப்பூர்வமாக விற்கப்படுகிறது, சொல்லப்போனால் எல்லா இடங்களிலும் உடனடியாக கிடைக்கிறது. புகைபிடிப்பவர்கள் நம்மை சுற்றிலும் இருக்கிறார்கள். இந்தச் செல்வாக்கிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியாது.
தலைவலிக்கு ஆஸ்பிரின் மாதிரி, புகைபிடிக்கும் ஆசையை ஒழிப்பதற்கு எந்த மருந்து மாத்திரையோ கிடையாது என்பது வருத்தத்திற்குரியது. கைவிடும் கடினமான முயற்சியில் வெற்றிபெற அந்த நபருக்கே உள்ளார்ந்த விருப்பம் இருக்க வேண்டும். எடையை குறைக்க முயற்சி செய்வதைப் போல, கைவிட வேண்டும் என்ற உறுதியான மனக்கட்டுப்பாடு நெடுநாட்களுக்கு அவசியம். வெற்றி புகைபிடிப்பவர் கையில்தான்!
[பக்கம் -ன் பெட்டி5]
இளமையிலேயே சிகரெட் தூண்டிலில்
சிகரெட்டை புகைத்துப் பார்க்க முயன்ற நான்கு இளைஞரில் ஒருவர் கடைசியில் அதற்கு அடிமையாகிவிட்டதை ஐக்கிய மாகாணங்களில் செய்யப்பட்ட ஓர் ஆராய்ச்சி காட்டுகிறது. கொக்கையினுக்கும் ஹெராயினுக்கும் அடிமையானவர்களுடைய விஷயத்திலும் இதே விகிதம்தான். இந்தப் பழக்கத்தை ஆரம்பித்ததற்காக வயதுவந்தோரில் 70 சதவீதத்தினர் வருந்துகிறபோதிலும், விட்டுவிடுகிறவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவே.
[பக்கம் -ன் பெட்டி5]
சிகரெட் புகையில் என்ன இருக்கிறது?
சிகரெட் புகையில் தார் இருக்கிறது, இதில் 4,000-க்கும் அதிகமான ரசாயனங்கள் இருக்கின்றன. இந்த ரசாயனங்களில் 43 புற்றுநோயை உண்டாக்குபவை. அந்த ரசாயனங்களில் சில: சையனைடு, பென்ஸீன், மெத்தனால், அசிட்டிலின் (விளக்குகளில் பயன்படுத்தப்படும் எரிபொருள்). சிகரெட் புகையில் நைட்ரஜன் ஆக்ஸைடும் கார்பன் மோனாக்ஸைடும் இருக்கிறது, இவை இரண்டுமே விஷ வாயுக்கள். அதன் முக்கிய கூட்டுப்பொருள் நிக்கோடின்—மிகவும் அடிமைப்படுத்தும் போதைவஸ்து.
[பக்கம் -ன் பெட்டி6]
விட்டுவிட அன்பானவருக்கு உதவுதல்
நீங்கள் ஆபத்துகளை அறிந்து புகைபிடிக்காதிருக்கும் போது, உங்களுடைய அன்பர்களும் நண்பர்களும் தொடர்ந்து புகைபிடிப்பது உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம். அவர்கள் அதை விட்டுவிடுவதற்கு நீங்கள் எவ்வாறு உதவலாம்? சதா சொல்லிக்கொண்டே இருப்பது, கெஞ்சுவது, வற்புறுத்துவது, கிண்டல் கேலி செய்வது வெற்றியை தராது. குத்திக்காட்டும் விதமாக புத்திமதி சொல்வதும் பயனில்லை. அவர் இதை கைவிடுவதற்குப் பதிலாக, இப்படிப்பட்ட செயல்களால் வரும் உணர்ச்சிப்பூர்வ வேதனையை தணிப்பதற்கு இன்னொரு சிகரெட்டை பற்றவைக்கலாம். விட்டுவிடுவது எவ்வளவு கடினம் என்பதை புரிந்துகொள்ள முயலுங்கள், மற்றவர்களைவிட சிலருக்கு இன்னும் அதிக கடினமாக இருக்கலாம்.
உங்களால் ஒருவரை புகைபிடிப்பதை நிறுத்தும்படி செய்ய முடியாது. கைவிடுவதற்கான பலமும் உறுதியும் புகைபிடிப்பவரிடமிருந்து சுயமாய் வர வேண்டும். விட்டுவிடும் ஆசையைத் தூண்டுவதற்கு உதவும் அன்பான வழிகளை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
அதை நீங்கள் எப்படி செய்யலாம்? தக்க சமயத்தில், அந்த நபர்மீதுள்ள அன்பை தெரியப்படுத்துங்கள், அவர் அல்லது அவள் புகைபிடிப்பதைக் குறித்து நீங்கள் கவலைப்படுவதாக சொல்லுங்கள். கைவிடுவதற்கு அவர் எடுக்கும் எந்தத் தீர்மானத்தையும் நீங்கள் ஆதரிக்க தயார் என்பதை விளக்குங்கள். இந்த அணுகுமுறையை நீங்கள் அடிக்கடி பயன்படுத்தினால், இதன் வலிமையும் நோக்கமும் குறைந்துவிடும்.
உங்கள் அன்பானவர் புகைபிடிப்பதை விட்டுவிடுவதற்கு தீர்மானித்தால், நீங்கள் என்ன செய்யலாம்? எரிச்சல், மனச்சோர்வு போன்ற பின்விளைவுகள் வரலாம் என்பதை நினைவில் வையுங்கள். தலைவலி, தூக்கமின்மை ஆகிய பிரச்சினைகளும் இருக்கும். இந்தப் பிரச்சினைகள் எல்லாம் தற்காலிகமானவைதான்; இந்தப் புதிய, ஆரோக்கியமான நிலைக்கு உடல் தன்னை மாற்றிக்கொள்கிறது என்பதை அவருக்கு நினைப்பூட்டுங்கள். உற்சாகத்தோடும் நம்பிக்கையோடும் இருங்கள். அவர் இந்தப் பழக்கத்தை விட்டுவிடுவதில் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி என்பதை தெரியப்படுத்துங்கள். பின்வாங்கும் அறிகுறிகள் ஏற்படும் போதெல்லாம், மறுபடியும் அந்தப் பழக்கத்திற்குத் திரும்பும் சூழ்நிலைகளைத் தவிர்க்க உங்கள் அன்பானவருக்கு உதவுங்கள்.
மீண்டும் அந்தப் பழக்கத்திற்கு திரும்பிவிட்டால்? மனமொடிந்து விடாதீர்கள். புரிந்துகொள்பவராக இருங்கள். உங்கள் இருவருக்குமே அதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்த முறை வெற்றி நிச்சயம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
[பக்கம் 7-ன் படம்]
புகையிலை கம்பெனிகள் விளம்பரத்திற்காக வருடத்திற்கு சுமார் 600 கோடி செலவழிக்கின்றன