உதவும் கரங்கள் உலகெங்கும்
உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பேக்ஸ்டருக்கு 15 வயது. சனிக்கிழமை பிற்பகல் பொழுதை அவன் எப்படி கழிக்கிறான்? அதைக் கேட்டால் உங்களுக்கே சுவாரஸ்யமாக இருக்கும்: முதியோர் இல்லம் போன்ற ஓய்வு விடுதிக்குப் போய் அங்குள்ள வயதானவர்களை சந்தித்து அவர்களுக்காக இசைக் கருவிகளை இசைக்கிறான், அவர்களோடு சேர்ந்து பாடுகிறான், அவர்களை சந்தோஷப்படுத்துகிறான். “அவன் வந்துவிட்டால் போதும், அவர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்” என்கிறார் பேக்ஸ்டரின் ஆசிரியர். 78 வயது மூதாட்டி லூசலும் இவனுக்குச் சளைத்தவர் இல்லை. இதே போன்ற கருணை உள்ளம் படைத்தவர்தான் இவரும். பசியாயிருப்பவர்களுக்கு உணவளிக்கிறார். ஆஸ்பத்திரியில் தனிமையில் வாடும் நோயாளிகளை சந்தித்து, அவர்களிடம் ஆறுதலாக நாலு வார்த்தை பேசுகிறார். “தன்னால் உதவ முடியுமென்றால் உதவி தேவைப்படும் இடத்திற்கு அவர் ஓடோடி வந்துவிடுவார்” என்று லூசலைப் பற்றி அவருடைய ஒரு சிநேகிதி கூறுகிறார்.
வாலண்டியர் சேவைக்கு விளக்கம்
“உதவி தேவைப்படும் இடத்தில் இரு” என்ற கொள்கையோடு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர் வாழ்ந்து வருகிறார்கள். கட்டுமான பணியில், அலுவலகங்களில், தொழிற்சாலைகளில், நர்சிங் ஹோம்களில், பயணிகள் விடுதிகளில், அகதிகள் முகாமில், வீடிழந்தவர்கள் முகாம்களில், தீ அணைப்பு இலாக்காக்களில், அவசர உதவி மையங்களில், விலங்கு காப்பகங்களில் என்று எல்லா இடங்களிலும் இவர்களைப் பார்க்கலாம்! ஒரு வீடு கட்டுவதில் உதவி செய்வதிலிருந்து நன்கொடை திரட்டுவது வரை, அனாதைக் குழந்தைகளை கொஞ்சி மகிழ்வதிலிருந்து சாகக் கிடப்பவர்களிடம் ஆறுதலாக பேசுவது வரை எல்லாவற்றையும் இவர்கள் திறமையாக செய்கிறார்கள். இவர்கள் சேவை மனம் படைத்த தொண்டர்கள்—தேவையில் இருப்பவர்களின் வாழ்வில் விளக்கேற்றுபவர்கள்.
“உயர்ந்த சிந்தனையை செயலாக மாற்றுவதே” வாலண்டியர் சேவை என்று விளக்கப்படுகிறது. இது ஒரு இலட்சியத்திற்காக அர்ப்பணிப்பதை, தியாக உணர்வை, லாபம் கருதாது செயல்படுவதை, பிறர் நலத்தில் அக்கறை காட்டுவதை உட்படுத்துகிறது. “வாலண்டியர் சேவை என்பது நம்முடைய நேரம், நம்முடைய கை கால்கள், நம்முடைய எண்ணங்கள், அடுத்தவருக்கு உதவுவதற்கு நமக்கிருக்கும் திறமை, பிரச்சினையைத் தீர்த்துவைக்கும் சாமர்த்தியம், நம்முடைய தொழில் திறன் என்று நம்மிடமிருக்கும் அனைத்தையும் வாரி வழங்குவதாகும்” என்கிறார்கள் நீண்ட காலமாக வாலண்டியர்களாக பணியாற்றும் இருவர். இப்படிக் கொடுப்பதால் வாலண்டியர்களுக்கும்கூட நன்மைகள் பல கிடைப்பது கவனிக்கத்தக்கது. “வாலண்டியர்களும் பயனடைகிறார்கள்” என்ற பெட்டியைக் காண்க.
எண்ணிக்கை அதிகரிக்கிறது —தேவை அதிகரிக்கிறது
ஐக்கிய மாகாணங்களில் 10 கோடி பேர் வாலண்டியர் சேவை செய்வதாகவும் இவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. “எங்கள் அமைப்பு மிகவும் வேகமாக வளர்ந்துகொண்டே வருகிறது” என அண்மையில் நியூ யார்க் கேர்ஸ் என்ற வாலண்டியர் அமைப்பின் செயல் இயக்குநர் கேத்லீன் பேரன்ஸ் விழித்தெழு!-விடம் கூறினார். “கடந்த ஆண்டு மட்டுமே 5,000-க்கும் அதிகமான புதிய வாலண்டியர்கள் எங்கள் இயக்கத்தில் சேர்ந்திருக்கிறார்கள்.” ஐரோப்பாவிலும் வாலண்டியர்களின் எண்ணிக்கை இதே வேகத்தில் கிடுகிடுவென வளர்ந்துவருகிறது. உதாரணமாக, பிரான்ஸில் கடந்த பத்தாண்டுகளில், ஆண்டுக்கு 6 சதவீதம் என்ற கணக்கில் வாலண்டியர்கள் அதிகரித்திருக்கிறார்கள். இன்னும் அதிக வாலண்டியர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் உலகம் முழுவதிலுமுள்ள நிலைமையை எடுத்துக்கொண்டால் “எப்போதும் இருந்ததைவிட இன்று கூடுதலான வாலண்டியர்களின் சேவை தேவை” என்று ஐக்கிய நாடுகளின் வாலண்டியர்கள் நிறுவனம் (ஐநா ஏஜென்ஸி) கூறுகிறது. மியூசியம் ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை பார்க்கும் ஒருவர் “மியூசியம் இயங்குவதற்கு வாலண்டியர்கள் மிகவும் அவசியம்” என்கிறார்.
ஆனால் இது ஒரு வேடிக்கையான முரண்பாடு. வாலண்டியர்களோடு சேர்ந்து வேலை செய்யும் இயக்குநர்களும் மேலாளர்களும் ஒருங்கமைப்பாளர்களும் இவர்களது சேவையை “விவரிக்க வார்த்தைகள் இல்லை” என்று சொன்னாலும் இவர்களின் சேவையை அந்தளவுக்கு ஒன்றும் அங்கீகரிப்பதில்லை. இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காக ஐக்கிய நாடுகள் 2001-ஆம் வருடத்தில் வாலண்டியர்களை கௌரவிக்க முடிவு செய்தது. “சர்வதேச வாலண்டியர்கள் ஆண்டு” என்ற பெட்டி ஐநா எட்ட விரும்பும் சில இலக்குகளை விவரிக்கிறது.
இதற்கிடையில் வாலண்டியர்களின் உலகில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இவை வாலண்டியர்களுக்கும் இவர்களுடைய மேற்பார்வையாளர்களுக்கும் சவாலாக இருக்கின்றன. இருந்தாலும் மற்றவர்கள் நன்மையடைவதற்காக தங்களையே அர்ப்பணிக்க மனமுள்ள ஏராளமானவர்கள் உலகம் முழுவதிலும் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி செய்ய அவர்களை தூண்டுவது எது? அவர்கள் எதை சாதிக்கிறார்கள்? அவர்கள் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கலாம்?(g01 7/22)
[பக்கம் 4-ன் பெட்டி/படம்]
வாலண்டியர்களுக்கும் நன்மை
“நான் மற்றவர்களுக்கு உதவ முன்வந்தபோது, என் மனதைவிட்டு நீங்காத, அர்த்தமுள்ள, இனிய பலன் எனக்குக் கிட்டியது. என்னுடைய வியாபாரத்திலேயே நான் எப்போதும் மூழ்கிக் கிடந்திருந்தால் இது எனக்குக் கிடைத்திருக்காது” என்கிறார் பகுதிநேர வாலண்டியர் சேவை செய்யும் மைக்கல். மைக்கலைப் போலவே இன்னும் எத்தனையோ பேர் உணருகிறார்கள். ஷேரன் கேப்லெங் அலாகீட்ஜா, ஐக்கிய நாடுகள் வாலண்டியர்களின் செயல் ஒருங்கமைப்பாளர் இவ்வாறு கூறுகிறார்: “உலகம் முழுவதிலும் . . . சேவை மனம் படைத்த வாலண்டியர்களுக்கு இதிலிருந்து எத்தனை கோடி நன்மைகள் கிடைக்கிறதென்பது நன்றாகவே தெரியும்.” “‘உதவுகிறவர்களின் பரவசநிலை’ என்று இது அழைக்கப்படும் அளவுக்கு, சில மணிநேரம் வாலண்டியர் சேவையில் செலவிடுகையில் ஒருவருடைய பொது நடத்தையும் மனநலமும் மிகவும் மேம்படுகிறது” என்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருப்பதை வாலண்டியர் சேவை நிபுணர் டாக்டர் டக்லஸ் எம். லாசன் உறுதிசெய்கிறார். சேவை செய்வதால் ஏற்படும் “உதவுகிறவர்களின் பரவசநிலை” கணநேரம் மட்டும் தோன்றி மறைந்துவிடுவதில்லை. ஐக்கிய மாகாணங்களில் கார்னல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் 30-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஒரு மக்கள் தொகுதியை வைத்து பல ஆய்வுகளை நடத்தி, “வாலண்டியர் சேவை செய்தவர்கள், செய்யாதவர்களைவிட ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை” கண்டுபிடித்தனர். ‘வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக மகிழ்ச்சி’ என்று பைபிள் சொல்வது எத்தனை உண்மை!—அப்போஸ்தலர் 20:35, NW; நீதிமொழிகள் 11:25.
[பக்கம் 5-ன் பெட்டி/படம்]
சர்வதேச வாலண்டியர்கள் ஆண்டு
நவம்பர் 20, 1997-ல் ஐக்கிய நாடுகள் சங்கத்தின் பொதுப் பேரவை, 2001-ஆம் ஆண்டை “சர்வதேச வாலண்டியர்கள் ஆண்டு” (IYV 2001) என்று அறிவித்தது. இந்த ஆண்டில் பின்வரும் நான்கு குறிக்கோள்களை எட்டுவதற்கு ஐநா திட்டமிட்டுள்ளது.
கூடுதல் அங்கீகாரம் அரசாங்கங்கள் வாலண்டியர்களின் முக்கியத்துவத்தை கவனித்து, அவர்களுடைய சாதனைகளைப் பதிவுசெய்து வைப்பதன்மூலம் அவர்களுக்கு அங்கீகாரம் அளித்து சிறப்பான வாலண்டியர் சேவைக்கு விருதுகள் வழங்க வேண்டும்.
வாலண்டியர் சேவையை ஊக்குவிக்கும் சட்டங்கள் உதாரணமாக, இராணுவ சேவைக்கு மாற்றாக வாலண்டியர் சேவையை ஏற்றுக்கொள்வதன் மூலமோ சில விரிவிலக்குகளை அளிப்பதன் மூலமோ தேசங்கள் அதை ஊக்குவிக்க வேண்டும்.
தகவல் பரிமாற்றம் வாலண்டியர் சேவையின் சாதனைகளை அதிகமதிகமாக பிரசுரித்து பிரபலப்படுத்த செய்தித்துறை முன்வர வேண்டும். இதனால் இதுபோன்ற திட்டங்களை எல்லாரும் பயன்படுத்த முடியும். “நேரத்தையும் முயற்சியையும் செலவழித்து ஒவ்வொரு சமுதாயமும் தனித்தனியே திட்டங்களை தீட்ட அவசியமிராது.”
முன்னேற்றுவித்தல் வாலண்டியர் சேவையிலிருந்து சமுதாயம் அடையும் பயன்களைப் பற்றி பொது மக்கள் தெரிந்துகொள்வதற்கு வசதியாக வாலண்டியர் அமைப்புகள் கண்காட்சிகளை நடத்த வேண்டும்.
IYV 2001-ன் விளைவாக வாலண்டியர்களின் சேவையை இன்னுமதிகம் பேர் நாடுவார்கள், இன்னுமதிகம் பேர் வாலண்டியர்களாக உதவிக்கரம் நீட்ட முன்வருவார்கள், வளர்ந்துவரும் சமுதாய தேவைகளைக் கையாள வாலண்டியர் அமைப்புகளுக்கு அதிக நிதி உதவிகளும் வசதிகளும் செய்து தரப்படும் என்று ஐநா நம்புகிறது. ஐநா-வின் இந்த குறிக்கோள்களை நிறைவேற்ற மொத்தம் 123 அரசாங்கங்கள் ஆதரவு கொடுக்க இசைந்துள்ளன.