“பெரிய பணம்” உள்ள நாடு
குவாம் தீவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
பரந்து விரிந்து கிடக்கும் பசிபிக் பெருங்கடலில், யாப் தீவுகளை உங்களால் பார்க்க முடியும். வெப்ப மண்டலத்திற்கே உரிய அழகு அவற்றை அலங்கரிக்கிறது, ரம்மியமான சீதோஷ்ண நிலை அங்கு நிலவுகிறது; எனவே, ஏகாந்தத்தை விரும்பும் பயணிகளுக்கு இத்தீவுகள் அருமையான இடங்களாக இருக்கின்றன. ஆனால், அப்படி அங்குச் செல்வோருக்கு ஒரு விஷயம் மட்டும் பெரிய ஆச்சரியத்தை அளிக்கிறது, ஆம், அந்தத் தீவுவாசிகள் தங்கள் பணத்தை வீதியில் சேமித்து வைக்கிறார்கள்! அதுவும் ‘பெரி . . . ய’ தொகைகளை!
இந்தத் தீவுகளிலுள்ள கட்டிடங்களுக்கு முன் தட்டையான வட்ட வட்ட கற்கள் வைக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்; அங்கு மட்டுமல்ல, போகிற வருகிற வழிகளில்கூட அவற்றை பார்ப்பீர்கள். அந்த ஜனங்களுடைய பாஷையில் அவற்றிற்கு ராயி என்று பெயர்; யாப் தீவுவாசிகளின் பணம் அவை. சிலர் அந்தப் பணக்கற்களைத் தங்கள் வீட்டிலே வைத்துக் கொள்கிறார்கள், ஆனால் பெரும்பாலோர் தங்கள் கிராமங்களிலுள்ள சில இடங்களை “வங்கிகள்” போல பயன்படுத்துகிறார்கள். இந்த “வங்கிகளில்” வாட்ச்மேன்களும் இல்லை, வாடிக்கையாளர்களுக்கு உதவ ஊழியர்களும் இல்லை. அதற்கென ஒரு கட்டிடமும் இல்லை. பணத்தைப் பெட்டகங்களில் வைப்பதற்குப் பதிலாக, இந்த “வங்கிகள்” அதன் சொத்துக்களைத் திறந்தவெளியில் வைக்கின்றன. அதோ, தென்னை மரங்கள் மீதும், சுவர்கள் மீதும் ஏராளமான வட்ட வட்ட கற்கள் சாய்த்து வைக்கப்பட்டிருக்கின்றன, அவை ஒவ்வொன்றிலும் நடுவே ஒரு துளை இருக்கிறது. சுமார் 12 அடி குறுக்களவு வரை வெவ்வேறு அளவுகளில் அவை உள்ளன; ஐந்து டன்னுக்கும் அதிக எடையுள்ளதாக இருக்கலாம்.
உங்கள் ஊரில் பொதுவாக நீங்கள் சில்லரைக் காசுகளைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு செல்லலாம், ஆனால் இங்கு விஷயமே வேறு, ஒரு காருக்குள் வைக்க முடியாதளவு அந்தக் காசுகள் அவ்வளவு பெரிதானவை. இத்தகைய பணக்கற்கள் 1931 முதற்கொண்டு புதிதாக உருவாக்கப்படவில்லை. என்றாலும், இந்தத் தீவுகளில் இன்னமும் அவை சட்டப்படி செல்லும் பணமாகவே உள்ளன. விசித்திரமான இந்தப் பணம் எப்படிப் புழக்கத்தில் வர ஆரம்பித்தது?
கஷ்டப்பட்டுப் பெற்ற பொருள்
வெகு காலத்திற்கு முன், யாப் தீவுவாசிகள் சிலர் தங்கள் கடற்பயணத்தின்போது பலுவா என்ற தீவை அடைந்ததாகவும் அங்கே சில அழகிய கற்களைக் கண்டெடுத்ததாகவும் பழங்கதைகள் சொல்கின்றன. அவற்றை தங்கள் ஊருக்கே எடுத்து வந்து பணமாகப் பயன்படுத்த அவர்கள் முடிவு செய்தார்களாம். அந்தக் கற்களைத் தட்டையாக முழு நிலா வடிவில் செதுக்கினார்கள், நடுவிலே துளையிட்டார்கள்.
இக்கற்களைத் தேர்ந்தெடுப்பதில் அந்தத் தீவுவாசிகள் ரொம்பவே கவனம் செலுத்தினார்கள். இன்று நாம் அறிந்துள்ள ஆரகொனைட், கால்சைட் ஆகிய கனிமப் பொருட்களையே அவர்கள் பெரிதும் விரும்பினார்கள். மண்ணின் படிமங்களிலுள்ள ஆரகொனைட் என்ற கனிமம் முத்துக்களிலும் காணப்படுகிறது; கால்சைட் என்பது பளிங்குக் கற்களின் முக்கிய கூறாகும். கலைநயத்தோடு செதுக்கப்பட்டால், இவ்விரு கனிமப் பொருட்களுமே வெகு வசீகரமாக இருக்கும், ஆனால் இவை இரண்டுமே யாப் தீவுகளில் கிடைப்பதில்லை. அதனால் அத்தகைய கற்களை எடுத்து வருவதற்காக அத்தீவு வாசிகள் பலுவா தீவுக்குத் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தார்கள். யாப் தீவின் தென் மேற்குப் பகுதியில் பலுவா தீவு ஏறக்குறைய 400 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது; ஆபத்தான கடலிலே முனைப்பான அமைப்புகொண்ட தோணிகளில் ஐந்து நாட்கள் பயணம் செய்தால்தான் அத்தீவை அடைய முடியும்.
யாப் வாசிகள், பலுவா தீவினுடைய தலைவரின் அனுமதியோடு உறுதியான பாறைகளைத் தோண்டியெடுக்கும் வேலையில் இறங்கினார்கள். அந்தக் காலத்திலிருந்த கருவிகளைப் பயன்படுத்தி, பாதாள குகைகளிலிருந்து தட்டையான கற்களைக் கைகளினாலேயே வெட்டியெடுத்து, பிறகு அவற்றை வட்ட வடிவில் செதுக்கினார்கள். ஒரேவொரு பணக்கல்லை உருவாக்க—சம்மட்டியால் அடித்து, உளியால் செதுக்கி உருவாக்க—மாதக்கணக்கு, ஏன் சில சமயம் வருடக்கணக்கே ஆனது!
அந்தக் கற்களை கரையோரம் வரை சுமந்து செல்வதற்காக அவற்றின் நடுவே துளை போடப்பட்டு அதன் வழியே உறுதியான கட்டைகள் நுழைக்கப்பட்டன. புதிதாய் செதுக்கப்பட்ட பணம் கரையோரத்திலிருந்த தோணிகளில் அல்லது மூங்கில் கட்டுமரங்களில் ஏற்றப்பட்டது. அது மிகப் பெரிதாக இருந்தால், ஆட்கள் அதைத் தண்ணீருக்குள் நெட்டுக்குத்தாக வைத்து, அதைச் சுற்றி பெரிய ஒரு கட்டுமரத்தை கட்டினார்கள். காற்று கைகொடுக்க துடுப்பின் வேகம் அதிகரிக்க புறப்பட்ட தோணியில், புதிய பணம் வைக்கப்பட்டிருந்த அந்தக் கட்டுமரத்தை இணைத்து யாப் தீவுகளுக்கு அவர்கள் இழுத்துச் சென்றார்கள்.
இந்த எல்லா வேலையும் வெறும் கைகளால் செய்யப்பட்டன; இதை உருவாக்குவதற்கான முறைகள் படு ஆபத்தானவை. ஆம், பிரமாண்டமான பாறைகளை வெட்டியெடுக்கையிலும், அவற்றை நிலத்தில் நகர்த்தி வைக்கையிலும் அநேகர் படுகாயமடைந்தார்கள் அல்லது உயிரையே இழந்தார்கள். அது போதாதென்று, யாப் தீவுகளுக்கு அவற்றை கடல் வழியாக எடுத்துச் செல்லும்போதும் ஆபத்துகள் இருந்தன. யாப், பலுவா ஆகிய தீவுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடலுக்கடியில் அந்தப் பணக்கற்கள் இருப்பதைக் காண முடிகிறது; செதுக்கப்பட்ட எல்லாப் பணமும் அவற்றை எடுத்துச் சென்ற எல்லா ஆட்களும் பத்திரமாக யாப் தீவை அடையவில்லை என்பதற்கு அவையே மெளன சாட்சிகள். என்றாலும், மூழ்கிக் கிடக்கிற அந்தப் பணம் யாப் தீவு வாசி ஒருவருக்குச் சொந்தமானதே. தீவிலிருக்கும் பணக்கற்களுக்கு என்ன மதிப்போ அதே மதிப்புதான் கடலுக்கடியில் கிடப்பவற்றிற்கும் உள்ளது.
எந்தளவு மதிப்பு வாய்ந்தது?
ஏதோவொன்றிற்காக வியாபாரப் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, ராயி பணம் வேறொரு நபருக்குக் கைமாறுகிறது, ஆனாலும் அதன் புதிய சொந்தக்காரர் பொதுவாக அந்தப் பணக்கல்லை அது இருக்கிற இடத்திலேயே விட்டுவிடுகிறார். ஏராளமான பணக்கற்கள் பல பத்தாண்டுகளாக ஒரே இடத்திலேயே இருக்கின்றன, அவற்றின் புதிய சொந்தக்காரர்களின் வீடுகளிலிருந்து வெகு தூரத்தில் இருக்கின்றன. அவை எங்கே களவாடப்பட்டு விடுமோ என்ற பயமே இல்லை.
அத்தகைய பணக்கல்லின் மீது ஒரு திருடனுக்குக் கண் இருந்தால், முதலாவது அதைச் சுமந்து செல்ல அவனுக்குச் சக்தி வேண்டும், அடுத்தது அப்படிச் செய்ய அவனுக்குத் துணிவும் வேண்டும். இவற்றில், திருடும் அளவுக்கு துணிச்சல் வருவதுதான் வெகு சிரமம், ஏனென்றால் ஒவ்வொரு பணக்கல்லும் யார் யாருக்குச் சொந்தம் என அக்கம்பக்கத்தாருக்கு நன்றாகவே தெரியும், அதோடு பிறருடைய சொத்துரிமைகளுக்கு அவர்கள் ஆழ்ந்த மரியாதையும் வைத்திருக்கிறார்கள்.
சரி, இந்தப் பணக்கல்லின் பெறுமானத்தை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுவீர்கள்? முதலாவது, அதன் அளவு, அதன் இயற்கை அழகு, அதன் சிற்ப வேலைப்பாட்டின் தரம் ஆகியவற்றை நீங்கள் ஆராய வேண்டும். அடுத்து அதன் சரித்திரத்தைக் கவனிக்க வேண்டும். அது எத்தனை பழமையானது? அதைத் தோண்டியெடுப்பதற்கும் செதுக்குவதற்கும் எந்தளவுக்கு சிரமம் ஏற்பட்டது? யாப் தீவுகளுக்கு அவற்றை எடுத்து வரும் கடற்பயணத்தில் யாருக்காவது ஆபத்து ஏற்பட்டதா அல்லது ஏதாவது உயிர்ச்சேதம் ஏற்பட்டதா? கொடுக்கல் வாங்கலில் உட்பட்ட நபர்களின் சமூக அந்தஸ்து என்ன என்பதும் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம். சாதாரண ஒரு குடிமகனுக்குச் சொந்தமான பணக்கல்லைவிட ஒரு தலைவருக்குச் சொந்தமான பணக்கல் அதிக மதிப்பு வாய்ந்தது.
1960-ல், வெளிநாட்டு வங்கி ஒன்று 5 அடி விட்டமுள்ள ஒரு பணக்கல்லை விலைக்கு வாங்கியபோது, அதன் சரித்திரம் உலகெங்குமே பிரபலமானது. அது 1880-களிலிருந்து புழக்கத்தில் இருந்து வந்திருப்பதாக தெரிகிறது. ஒரு காலத்தில், வீட்டு கட்டுமானப் பணியாளர்களுக்கு அது கூலியாகக் கொடுக்கப்பட்டது. மற்றொரு சமயம், ஒரு விசேஷ நடன நிகழ்ச்சியை நடத்தியதற்காக ஒரு கிராமத்தார் பக்கத்து கிராமத்தாருக்கு அதை வழங்கினார்கள். பிற்பாடு, வீட்டுக்காரர் ஒருவர் தகர கூரைகளை வாங்குவதற்காக அதைக் கைமாற்றினார். இந்தக் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களிலெல்லாம் அந்தப் பணக்கல் ஆரம்பத்தில் வைக்கப்பட்டிருந்த இடத்தைவிட்டு நகரவே இல்லை, அதுமட்டுமல்ல, எழுத்துமுறையில் எதுவும் பதிவு செய்யப்படவும் இல்லை. அந்தப் பணக்கல் யாருக்குச் சொந்தம், அதன் பூர்வீகம் என்ன ஆகிய விஷயங்கள் யாப் வாசிகளுக்கு அத்துப்படி.
பெரியது என்பதற்காகப் பெருமதிப்பு பெறாது
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், ராயி புழக்கத்திற்கு வந்தபோது அந்தப் பணக்கற்கள் வெகு அபூர்வமானவையாகவும் அதிக மதிப்பு வாய்ந்தவையாகவும் இருந்ததால் பெரிய பெரிய தலைவர்களால் மட்டுமே அவற்றை சொந்தம் கொண்டாட முடிந்தது. பிறகு, 19-ம் நூற்றாண்டின் இறுதியில், இரும்புக் கருவிகளின் உதவியோடு இன்னுமதிகப் பணக்கற்கள் செதுக்கப்பட்டன, அதோடு சரக்குக் கப்பல்களின் வரவால் பெரிய பணக்கற்கள் உட்பட, ஏராளமானவை எடுத்துச் செல்லப்பட்டன. புதிய பணக்கற்கள் பழையவற்றைவிட அளவில் பெரிதாக இருந்தாலும், மதிப்பில் சற்று குறைவுபடுகின்றன; பழங்கால முறைப்படி, அதிக சிரமப்பட்டு அவை உருவாக்கப்படாததே இதற்குக் காரணம்.
1929-ம் ஆண்டின்போது, 13,281 பணக்கற்கள் இருந்ததாக அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பு ஒன்று காட்டியது; அது அந்தத் தீவின் ஜனத்தொகையைவிட அதிகமாக இருந்தது. இரண்டாம் உலகப் போர் அந்த எண்ணிக்கையை மாற்றியது. ஏகப்பட்ட பணக்கற்கள் படைவீரர்களால் பறிமுதல் செய்யப்பட்டன; சில உடைக்கப்பட்டு தற்காலிக விமான இறங்கு தளத்தை அமைப்பதற்கும் பாதுகாப்பு அரண்களைக் கட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டன. கடைசியாக மொத்த எண்ணிக்கையில் பாதி கற்கள் மட்டுமே மீந்திருந்தன. பிற்பாடு, நினைவுப் பொருட்களைத் தேடி அலைந்தவர்களாலும் அபூர்வப் பொருட்களைச் சேகரித்தவர்களாலும் இன்னும் பல பணக்கற்கள் எடுத்துச் செல்லப்பட்டன. இன்று, அரசாங்கம் அவற்றை கலாச்சாரப் பொக்கிஷங்களாகக் கருதி, அவற்றிற்குச் சட்டப்படி பாதுகாப்பையும் அளிக்கிறது.
யாப் தீவுகளில், பணம் மரத்தில் காய்த்துத் தொங்குவதுமில்லை, தங்கத்தால் சாலைகள் அமைக்கப்படுவதுமில்லை. என்றாலும், அங்குள்ள ஜனங்கள் தங்களுடைய செல்வத்தை எல்லாரும் பார்க்கட்டுமென்று இன்னமும் வீதிகளில் அப்படியே விட்டுவிட்டிருக்கிறார்கள்! (g05 1/8)
[பக்கம் 20-ன் தேசப்படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ஜப்பான்
பசிபிக் பெருங்கடல்
பிலிப்பைன்ஸ்
சைபான்
குவாம்
யாப்
பலுவா
[படத்திற்கான நன்றி]
குளோப்: Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.
[பக்கம் 21-ன் படம்]
பணக்கல் “வங்கி”
[பக்கம் 22-ன் படம்]
யாப் தீவுகளிலுள்ள சில காசுகள் ஐந்து டன்னுக்கும் அதிக எடையுள்ளதாக இருக்கலாம்