பைபிளின் கருத்து
இயேசு உண்மையிலேயே கடவுளுடைய குமாரனா?
இயேசுவை கடவுளுடைய குமாரன் என்பதாக பேதுரு முழுமையாக நம்பினார், எனவேதான், “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று இயேசுவிடம் சொன்னார். (மத்தேயு 16:16) இயேசுவை கடவுளுடைய குமாரன் என்பதாக இந்த வசனம் மட்டுமல்ல, நிறைய வசனங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் இந்த விஷயம் மதப்பற்றுள்ளவர்கள் மத்தியில் வெவ்வேறு அபிப்பிராயங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
இயேசு கிறிஸ்துவே கடவுள் என்று நம்புகிற அநேகருக்கு, அவர் ஏன் கடவுளுடைய குமாரன் என அழைக்கப்படுகிறார் என்பதை விளக்க முடிவதில்லை. கடவுளும் இயேசுவே, கடவுளுடைய குமாரனும் இயேசுவே என்று சொல்வது நியாயமான சிந்தனைக்கு ஒத்துவருவதில்லையே? வேறு சிலர் இயேசுவை பிரபல சரித்திர புருஷர் என்கிறார்கள், இன்னும் சிலர் அவரை ஞானவான் என்கிறார்கள், ஏன், இன்னும் சிலர் அவரை கடவுளுடைய உண்மையான தூதராக மட்டுமே கருதுகிறார்கள். பைபிள் உண்மையிலேயே இயேசுவைப் பற்றி நமக்கு என்ன கற்பிக்கிறது? இயேசுவை யாராகக் கருதுகிறீர்கள் என்பது முக்கியமா?
கடவுளின் முதற்பேறானவர்
கடவுள் தன்னந்தனியாக இருந்த ஒரு காலத்தை பைபிள் குறிப்பிடுகிறது. அப்போது உயிரளிப்பதன் மூலம் தந்தையாக ஆகத் தீர்மானித்தார், ஆனால் மனிதர்கள் தந்தையாவதுபோல் அல்லாமல், தம்முடைய எல்லையற்ற படைக்கும் திறனைக் கொண்டு அறிவாற்றலுடைய ஓர் ஆவி ஆளை யெகோவா உருவாக்கினார். இவரே ‘தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியாயிருக்கிறார்.’ இவரையே நாம் இன்று இயேசு கிறிஸ்துவாக அறிந்திருக்கிறோம். (வெளிப்படுத்துதல் 3:14; நீதிமொழிகள் 8:22) கடவுள் தன்னந்தனியாக இருந்த சமயத்தில் நேரடியாக இயேசுவைப் படைத்ததால் ‘ஒரேபேறான குமாரன்’ என்றும் “சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்” என்றும் இயேசு சரியாகவே அழைக்கப்படுகிறார்.—யோவான் 1:14; கொலோசெயர் 1:15.
எனவே, கடவுளால் முதலாவதாக படைக்கப்பட்ட இயேசு, படைப்பாளராக இருக்க முடியாது, அதாவது, ‘ஒரே தேவனாக’ இருக்க முடியாது. (1 தீமோத்தேயு 1:17) அதற்கு மாறாக, கடவுள் தம் குமாரனுக்கு அநேக சிலாக்கியங்களைக் கொடுத்தார். உதாரணத்திற்கு, இயேசு மூலமாக கடவுள் ‘சகலத்தையும்’ சிருஷ்டித்தார். ஏன், தூதர்களைக்கூட அவர் மூலமாகத்தான் சிருஷ்டித்தார். இந்தத் தூதர்களோ “தேவபுத்திரர்” என அழைக்கப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கும் யெகோவாவே உயிர் கொடுத்திருக்கிறார்.—கொலோசெயர் 1:16; யோபு 1:6; 38:7.
பூமியை மனிதர்களின் குடியிருப்பிற்கு ஏற்றபடி அமைத்த பிறகு கடவுள் தம் முதற்பேறான குமாரனிடமே இவ்வாறு சொல்லியிருப்பதாகத் தெரிகிறது: “நமது சாயலாக . . . மனுஷனை உண்டாக்குவோமாக.” (ஆதியாகமம் 1:26; நீதிமொழிகள் 8:22-31) எனவே, தம் முதல் மானிட மகனான ஆதாமையும் யெகோவா இந்த ஆவி சிருஷ்டி மூலமாகத்தான் படைத்தார். இந்த ஆவி சிருஷ்டிதான் பிறகு இயேசுவாக வந்தார்.—லூக்கா 3:38.
இயேசு கடவுளுடைய மானிட மகனாக ஆகிறார்
ஆவி ரூபத்திலிருந்த கடவுளுடைய மகன், குறிக்கப்பட்ட காலத்தில் “மாம்சமாகி, . . . நமக்குள்ளே வாசம்பண்ணினார்” என்பதாக அப்போஸ்தலன் யோவான் வெளிப்படுத்துகிறார். (யோவான் 1:14) ஆவி ஆளாக இருந்த இயேசுவை மனிதனாக மாற்றுவதற்கு கடவுள் என்ன செய்தார்? பரலோகத்திலிருந்த இயேசுவின் உயிரை பூமியிலிருந்த யூத கன்னிகையான மரியாளின் கருப்பைக்கு அற்புதகரமாக மாற்றினார். எனவே இயேசு மனிதனாகப் பிறந்தபோதிலும் கடவுளுடைய குமாரனாகவே இருந்தார். அதோடு, மனிதன் அல்லாமல், கடவுளே அவருக்கு நேரடியாக உயிர் கொடுத்ததால், அவர் எந்தப் பாவமுமில்லாமல் பரிபூரணராகப் பிறந்தார். அதனால்தான், “உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்” என்று மரியாளிடம் காபிரியேல் தூதன் சொன்னார்.—லூக்கா 1:35; எபிரெயர் 7:26.
இயேசு மனிதராக இருந்தபோது, அவருடைய தந்தையே அவரை தம்முடைய குமாரனாக அடையாளம் காட்டினார். அவர் முழுக்காட்டுதல் பெற்ற சமயத்தில் வானம் திறக்கப்பட்டதை யோவான் பார்த்தார், “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்று வானத்திலிருந்து வந்த சத்தத்தையும் யோவான் கேட்டார். (மத்தேயு 3:16, 17) எனவே, “நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்துவருகிறேன்” என்று யோவான் தம் சீஷர்களிடம் சொன்னதில் ஆச்சரியமேதும் இல்லை.—யோவான் 1:34.
இயேசு பூமியில் ஊழியம் செய்தபோது தாம்தான் மேசியா என்றும், கடவுளுடைய குமாரன் என்றும் தம்பட்டம் அடிக்கவில்லை. (மாற்கு 8:29, 30) மாறாக தம் போதனைகளைக் கேட்பதன் மூலமாகவும், தாம் வாழ்ந்த விதத்தைக் கவனிப்பதன் மூலமாகவும், தாம் செய்த அற்புதங்களைப் பார்ப்பதன் மூலமாகவும் மக்கள் தம்மை யாரென்று தெரிந்துகொள்ளும்படி செய்தார். அனைவரின் கண்முன்னே பெரும்பாலான அற்புதங்களைச் செய்தார். உதாரணத்திற்கு, “பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும்” குணப்படுத்தினார். (மத்தேயு 4:24, 25; 7:28, 29; 12:15) அவரிடம் வந்த குருடர்கள், செவிடர்கள், சப்பாணிகள், நோயாளிகள் அனைவரையும் குணப்படுத்தினார், மரித்தோரையும் உயிர்த்தெழுப்பினார்! (மத்தேயு 11:4-6) இயேசு தம் சீஷர்களுக்கு முன்பாக அற்புதகரமாய் தண்ணீரின் மேல் நடந்துசென்று பலத்த காற்று அடித்துக்கொண்டிருந்த சமயத்தில் காற்றையும் அலைகளையும் அடக்கினார். இயேசுவின் இந்த மகத்தான வல்லமையைப் பார்த்து சீஷர்கள், “மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன்” என்று சொல்லும்படி தூண்டப்பட்டார்கள்.—மத்தேயு 14:24-33.
கடவுளுடைய மகன் மூலம் நீங்கள் எவ்வாறு பயனடையலாம்
யெகோவா தம் ஒரேபேறான மகனை பரலோகத்திலிருந்து பூமிக்கு அனுப்பி, பின்னர் கொடிய விதத்தில் சாகும்படி ஏன் அனுமதித்தார்? அவரை ‘விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளினார்.’ (யோவான் 3:16) ஆம், ‘அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுப்பதற்கு’ இயேசு மரித்தே ஆக வேண்டியிருந்தது. (மத்தேயு 20:28) உண்மையிலேயே, யெகோவாவையும் அவருடைய முதற்பேறான குமாரனையும் போல சரித்திரத்தில் இதுவரை யாருமே மனிதர்கள் மேல் இந்தளவு அன்பு காட்டியதில்லை.—ரோமர் 8:32.
இயேசு மரித்த பிறகு விசேஷித்த விதத்திலும் பலமான விதத்திலும் ‘தேவனுடைய குமாரனென்று’ நிரூபிக்கப்பட்டார். எப்படி? ‘மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டு’ மறுபடியும் தேவனுடைய ஆவி மகனாக ஆனார். (ரோமர் 1:5; 1 பேதுரு 3:18) கிட்டத்தட்ட 1900 வருடங்கள் தம் பிதாவின் அருகில் காத்திருந்த பிறகு கடவுளுடைய ராஜ்யத்தின் அரசராக சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டார். அவரது பரலோக அரசாங்கமே வெகு விரைவில் முழு பூமியையும் ஆளப்போகிறது.—சங்கீதம் 2:7, 8; தானியேல் 7:13, 14.
கடவுளுடைய இந்த வல்லமைமிகுந்த குமாரனின் தயவைப் பெற்றுக்கொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியென்றால் அவருடைய போதனைகளை ஆராய்ந்து அவற்றை உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்கும்படி உற்சாகப்படுத்துகிறோம். இயேசுதாமே இவ்வாறாகக் கூறினார்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.” (யோவான் 17:3) ஆம், கடவுளுடைய குமாரனை யாராக நம்புகிறோம் என்பது மிகமிக முக்கியம்!—யோவான் 3:18; 14:6; 1 தீமோத்தேயு 6:19.
நீங்கள் யோசித்ததுண்டா?
◼ இயேசு எவ்வாறு கடவுளுடைய ஒரேபேறான குமாரனாக இருக்கிறார்?—யோவான் 1:3, 14; வெளிப்படுத்துதல் 3:14.
◼ இயேசு கடவுளுடைய குமாரன் என்பதை நீங்கள் ஏன் நம்பலாம்?—மத்தேயு 3:16, 17.
◼ இயேசுவை நீங்கள் கடவுளுடைய குமாரனாக விசுவாசிப்பதனால் எவ்வாறு பயனடையலாம்?—யோவான் 3:16; 14:6; 17:3.
[பக்கம் 12, 13-ன் படங்கள்]
இயேசுவினுடைய ஞானமான போதனைகளும் வல்லமைவாய்ந்த அற்புதங்களும் அவர் சாதாரண மனிதரல்ல என்பதற்கு அத்தாட்சியளித்தன