கோட்டைப் பாலம் லண்டனின் நுழைவாயில்
பிரிட்டனிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
இங்கிலாந்துக்கு ஒருபோதும் சென்றிராத நபரும்கூட அதை அடையாளம் கண்டுகொள்வார். வருடந்தோறும் ஆயிரக்கணக்கான உல்லாசப்பயணிகள் அதைப் பார்க்கச் செல்கின்றனர். ஒவ்வொரு நாளும் லண்டன்வாசிகள் அதைக் கடந்து செல்கிறார்கள். ஆனால், அதை திரும்பிப் பார்க்கவோ அதன் ஆரம்பத்தைப்பற்றி யோசித்துப் பார்க்கவோ பலருக்கு நேரம் இருப்பதில்லை. அதுதான், லண்டனின் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான கோட்டைப் பாலம்.
அருகிலுள்ள லண்டன் பாலத்தோடு இதைக் குழப்பிக் கொள்ளக்கூடாது. ஏனென்றால், இதன் அருகிலுள்ள லண்டன் கோட்டையோடுதான் இது சம்பந்தப்பட்டுள்ளது. இங்கிலாந்து பாராளுமன்றம் 1872-ல் தேம்ஸ் நதியின்மேல் ஒரு பாலம் அமைக்க அதிகாரம் வழங்கும் ஒரு மசோதாவை கொண்டுவந்தது. கோட்டை ஆளுநரின் எதிர்ப்புகள் மத்தியிலும் அத்திட்டத்தை நிறைவேற்ற பாராளுமன்றம் முடிவுசெய்தது; ஆனால், அதன் வடிவமைப்பு லண்டன் கோட்டையைப் போலவே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு இத்திட்டம் அமலுக்கு வந்தது. இந்த அதிகாரப்பூர்வ திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே கோட்டைப் பாலம்.
தேம்ஸ் நதியின் இரு கரைகளையும் இணைக்கும் நிறைய பாலங்கள் 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டன. அவற்றில், பழைய லண்டன் பாலம் மிகப் பிரசித்தி பெற்றதாகும். 1750வாக்கில் இந்தப் பாலத்தின் அஸ்திவாரங்கள் ஆட்டம் கண்டன. குறுகலான இந்தப் பாலம் போக்குவரத்துக்கும் இடைஞ்சலாக இருந்தது. அதற்குக் கீழே, நெரிசலாக இருந்த துறைமுகத்தில் இடம் பிடிப்பதற்காக உலகெங்கிலுமிருந்து வந்த கப்பல்கள் முண்டியடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அக்காலத்தில், ஏராளமான கப்பல்கள் நெருக்கமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், ஒருவர் கப்பல்களின் மேல் நடந்தே பல கிலோமீட்டர் தூரத்தை கடந்துவிடலாம் என்று சொல்வார்கள்.
லண்டன் மாநகராட்சியின் வேண்டுகோளுக்கு இணங்கி நகர கட்டிடக் கலைஞர் ஹாரஸ் ஜோன்ஸ் பாலத்தைக் கட்ட முன்வந்தார். லண்டன் பாலத்திற்கு அடுத்து ‘காதிக்’ பாணியில் தூக்குபாலம் அமைக்கும் திட்டத்தை முன்மொழிந்தார். இதன் மூலம் கப்பல்கள் தேம்ஸ் நதியின் மேற்கிலுள்ள கப்பல் கூடத்திற்கு தாராளமாகச் செல்ல முடியும். இந்தத் திட்டம் புதுமையாக இருப்பதாகவே அநேகர் கருதினர்.
தனிச்சிறப்பான திட்டமைப்பு
ஜோன்ஸ் பல இடங்களுக்கு பயணித்தவர். நெதர்லாந்தில், கால்வாய்களில் கட்டப்பட்டுள்ள சிறு தூக்குப் பாலங்களை அவர் கண்டார். அதைப் பார்த்ததும் நடுவே பிளந்து இரு புறமும் மேலெழும்பும் தூக்குப் பாலத்தை (bascule bridge) அமைக்கும் எண்ணம் அவருக்கு உதித்தது. அவருடைய குழு அந்தப் பாலத்திற்கான வடிவமைப்பை உருவாக்கியது. நவநாகரிக கட்டுமான முறைகளைப் பயன்படுத்தி, ஸ்டீல் கட்டமைப்பின்மீது சிமெண்ட் பூசி கட்டப்பட்டது. இப்படியாக இன்றைய புகழ்பெற்ற கோட்டைப் பாலம் உருவானது.
கோட்டைப் பாலம் இரண்டு பிரதான கோட்டைகளைக் கொண்டுள்ளது. இதன் மிக உயரமான இடத்தில் இரண்டு நடைபாதைகள் இக்கோட்டைகளை இணைக்கின்றன. இவை பாலத்திலிருந்து 34 மீட்டர் உயரத்திலும், நதியின் உயர்மட்ட அளவுக் குறியீட்டிலிருந்து சுமார் 42 மீட்டர் உயரத்திலும் உள்ளன. பாலத்தின் மையப்பகுதி இரண்டாகப் பிளந்து நகரும். பாலத்தின் இந்த இரு ராட்சஸ பகுதிகள் ஒவ்வொன்றும் சுமார் 1,200 டன் எடை கொண்டவை; இவ்விரண்டும் தனித்தனியே பிரிந்து 86 டிகிரி கோணத்தில் மேல்நோக்கி நிற்கும். அதனடியில் சுமார் 10,000 டன் எடையுள்ள கப்பல்கள்கூட பாதுகாப்பாக கடந்து செல்ல முடியும்.
பாலத்தை இயக்கும் சக்தி
பாலத்தின் இரு பகுதிகளும் நீர்சக்தியைப் பயன்படுத்தி உயர்த்தப்பட்டன. சாலையிலிருந்து மேலேயுள்ள நடைபாதைகளுக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் ‘லிப்ட்’களையும் போக்குவரத்து சிக்னல்களையும் இயக்குவதற்குகூட இதுவே பயன்படுத்தப்பட்டது. ஆம், இந்தப் பாலத்தை இயக்குவதற்கு தண்ணீர் பயன்படுத்தப்பட்டது! அது தேவைப்பட்டதைவிட இரண்டு மடங்கு அதிகமான சக்தியை அளித்தது.
பாலத்தினுடைய தெற்குமுனையின் அடியில் நிலக்கரியால் இயங்கும் நான்கு கொதிகலன்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவை ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 5-6 கிலோ அழுத்தத்தில் நீராவியை உற்பத்தி செய்தன. இந்த நீராவி இரண்டு பெரிய பம்புகளை இயக்கியது. இந்த பம்புகள் ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 60 கிலோ என்ற அழுத்தத்தில் தண்ணீரை அனுப்பின. பாலத்தின் இரு பகுதிகளையும் தூக்குவதற்குத் தேவையான சக்தி தொடர்ந்து கிடைப்பதற்காக, ஆறு பெரிய கொள்கலன்களில் அழுத்தம் கொடுக்கப்பட்ட தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டது. இவை அந்த இரு பகுதிகளை இயக்கிய மொத்தம் 8 என்ஜின்களுக்கு சக்தியைத் தந்தன. ஒருமுறை ஸ்விட்ச் போட்டவுடன், சம எடையுள்ள அந்த இரு பகுதிகளும் 21 அங்குல உருளைத்தண்டின் உதவியோடு மேல்நோக்கி உயர்ந்தன. அவை முழுமையாக மேலே செல்ல ஒரு நிமிடம் மட்டுமே எடுத்தது.
நவீன கோபுர பாலத்துக்கு ஒரு விஜயம்
தற்போது நீராவிக்குப் பதிலாக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. முந்தைய வருடங்களில் நடந்தது போல கோட்டைப் பாலம் திறக்கப்படும்போது சாலைப் போக்குவரத்து ஸ்தம்பித்துவிடும். பாதசாரிகளும் சுற்றுலாப்பயணிகளும் மற்ற பார்வையாளர்களும் பாலம் இயங்கும் விதத்தைப் பார்த்து மூக்கின்மேல் விரல் வைக்கிறார்கள்.
எச்சரிக்கை மணி ஒலித்தவுடன் சாலைக்கு குறுக்கே தடைப் போடப்படுகிறது. கடைசி வாகனம் கடந்து சென்றபின், பாலத்தின் கண்காணிப்பாளர்கள் பாலத்தில் வாகனங்கள் எதுவும் இல்லை என்று சிக்னல் தருகிறார்கள். சத்தமில்லாமல் பாலத்தின் இரு பகுதிகளை இணைத்திருக்கும் திருகணைகள் கழன்றதும், இரு பகுதிகளும் வானைநோக்கி உயருகின்றன. பிறகு எல்லாருடைய கண்களும் நதியை நோக்கி திரும்புகின்றன. அது விசைப்படகோ உல்லாசப்பயணிகளின் படகோ கப்பலோ எதுவாக இருந்தாலும், அது பாலத்தைக் கடக்கும் அழகை எல்லாரும் வைத்தகண் வாங்காமல் பார்க்கிறார்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு சிக்னல் மாறுகிறது. பாலத்தின் இரு பகுதிகளும் கீழே வருகின்றன; சாலையை அடைத்திருந்த தடை விலகுகிறது. காத்துக்கிடக்கும் வாகனங்களை முந்திக்கொண்டு சைக்கிள்காரர்கள் ஏவுகணையைப்போல புறப்படுகிறார்கள். வினாடிகளுக்குப் பிறகு, கோட்டைப் பாலம் எழும்புவதற்கு மற்றொரு அழைப்பு வரும்வரை அப்படியே தூங்குகிறது.
ஆர்வமுள்ள பார்வையாளர்கள் திரும்பத் திரும்ப நடக்கும் இந்த சம்பவத்தை பார்ப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்வதில்லை. மற்றவர்களோடு சேர்ந்து ‘லிப்ட்’டில் ஏறி வடக்கு கோட்டையின் மேல் பகுதிக்கு செல்கிறார்கள்; அங்கேயுள்ள “கோட்டைப் பால அனுபவங்கள்” கண்காட்சியில் இருக்கும் பாலத்தின் சரித்திர விவரங்களையும், மின்சாரத்தால் இயங்கும்படி வைக்கப்பட்டுள்ள மாதிரியைக் கண்டு வியப்புறுகிறார்கள். பொறியாளர்களின் சாகசங்களும் ஆடம்பரமான திறப்புவிழா நிகழ்ச்சியும் ஓவியமாய் தீட்டப்பட்டிருக்கின்றன. புள்ளிகளால் ஆன செம்பழுப்பு நிற புகைப்படங்களும் பலகைகளில் இருக்கும் காட்சிகளும் கோட்டைப் பாலத்தின் மலைக்கவைக்கும் கட்டமைப்பை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
உயரத்தில் இருக்கும் நடைபாதைகள், விண்ணைமுட்டும் லண்டன் கட்டிடங்களின் கம்பீரமான காட்சியை கண்டு பரவசமடைய வாய்ப்பளிக்கின்றன. மேற்கு நோக்கித் திரும்பினால், புனித பவுல் பேராலயமும் நிதி மாவட்டத்தின் வங்கிக் கட்டிடங்களும் கண்ணில் படுகின்றன, கொஞ்ச தூரத்தில் தபால் அலுவலக கோபுரமும் தெரிகிறது. கிழக்கு நோக்கித் திரும்பினால் சரக்குகளை ஏற்றியிறக்கும் கப்பல்துறையைக் காணலாம் என எதிர்பார்ப்போம், ஆனால் அது பெரிய நவீன நகரத்திலிருந்து ரொம்ப தூரத்திற்கு இடமாறியிருக்கிறது. அதற்குப் பதிலாக ‘டாக்லேண்ட்ஸ்,’ அதாவது புதுப்பிக்கப்படும் நகர்புற பகுதி, தனது புதுமையான கட்டிட வடிவமைப்புகளோடு வியப்படைய வைக்கிறது. புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான கோட்டைப் பாலத்திலிருந்து பார்க்கும்போது லண்டன் நம் கண்ணைக் கவருகிறது, மனதை மயக்குகிறது, ஆர்வத்தைக் கிளறுகிறது. ஆம், இந்த வார்த்தைகளெல்லாம் அவற்றை விவரிக்க பொருத்தமானவையே.
நீங்கள் லண்டனுக்குச் சென்றால் இந்த சரித்திர புகழ்பெற்ற கட்டமைப்பை ஏன் கண்டுவரக்கூடாது? அப்படி நீங்கள் கண்டால் தனிப்பெருமை வாய்ந்த இந்தப் பொறியியல் சாதனை உங்கள் மனதில் நீங்கா முத்திரை பதிப்பது நிச்சயம்.
[பக்கம் 15-ன் படக்குறிப்பு]
◀ © Brian Lawrence/SuperStock
[பக்கம் 16-ன் படக்குறிப்பு]
Copyright Tower Bridge Exhibition ▸
[பக்கம் 16-ன் படக்குறிப்பு]
நீராவியால் இயக்கப்பட்ட இரண்டு பம்புகளில் ஒன்று. என்ஜின்களை இயக்க இது பயன்படுத்தப்பட்டது
[பக்கம் 17-ன் படக்குறிப்பு]
©Alan Copson/Agency Jon Arnold Images/age fotostock
[பக்கம் 17-ன் படக்குறிப்பு]
ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் முழுமையாக மேலெழும்பி நிற்கும் பாலத்தின் இரு பகுதிகள்